ஐஎன்எஸ் அர்னாலா: இந்திய கடற்படையின் புதிய போர்க் கப்பல் எதிரிகளை முறியடிக்க எவ்வாறு உதவும்?

பட மூலாதாரம், Indian Navy

எழுதியவர், ஜுஹல் ப்ரோஹித் பதவி, பிபிசி செய்தியாளர், விசாகப்பட்டினம்23 நிமிடங்களுக்கு முன்னர்

இந்திய கடற்படையில் ஐ.என்.எஸ். அர்னாலா கப்பல் இணைக்கப்பட்டுள்ளது. உள்நாட்டிலேயே உருவாக்கப்பட்ட இந்த கப்பல் நீருக்கடியில் செல்லும் நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்குதல் நடத்தும் திறன் கொண்டது. இந்திய கடற்படைக்கு மேலும் பலம் சேர்த்துள்ளது இக்கப்பல்.

இந்த கப்பல் குறித்து செய்தி சேகரிக்க பிபிசி இந்திக்கு அனுமதி கிடைத்தது. இருப்பினும், பாதுகாப்பு காரணங்களுக்காக கப்பலின் சில பகுதிகளுக்குள் எங்களுக்கு அனுமதி வழங்கவில்லை. இந்திய கடற்பாதுகாப்பு அமைப்பில் இந்த கப்பல் எத்தகைய பங்காற்றப் போகிறது என்பதை அறிந்து கொள்ள பிபிசி முயன்றது.

இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. அரபிக் கடல், வங்கக் கடல் மற்றும் இந்தியப் பெருங்கடல் வழியாகவே இந்த வர்த்தகம் நடைபெறுகிறது. சர்வதேச போட்டி இந்த பகுதிகளில் அதிகரித்து வருகிறது. இந்தியாவின் பொருளாதாரம் இந்த கடல் மார்க்கத்தை எவ்வளவு தூரம் நம்பியுள்ளது என்பதையும் இது காட்டுகிறது.

பாதுகாப்பு அம்சத்தை அடிப்படையாகக் கொண்டு பார்த்தால் இந்தியாவின் கடல் எல்லையானது 11 ஆயிரம் கிலோ மீட்டர் நீளம் கொண்டது. 200க்கும் மேற்பட்ட துறைமுகங்களும், பல கடற்கரை நகரங்களும் இந்த எல்லைகளில் அமைந்துள்ளன.

சீனா மற்றும் பாகிஸ்தான் போன்ற நாடுகளின் கடற்படைகள் இந்திய பெருங்கடலில் தங்களது பலத்தை அதிகரித்து வருகின்ற சூழலில், கடற்பாதுகாப்பு உத்தியானது இந்தியாவுக்கு மிகவும் முக்கியமானதாக மாறியுள்ளது. இவை அனைத்தையும் கருத்தில் கொண்டு இந்தியா தன்னுடைய நீர்மூழ்கிக் கப்பல்களின் எண்ணிக்கையையும் கடற்படையின் திறனையும் அதிகரிக்கிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதன் ஒரு பகுதியாக சமீபத்தில் இந்தியா ஐ.என்.எஸ். அர்னாலாவை அறிமுகம் செய்துள்ளது. ஆந்திராவின் விசாகப்பட்டினத்தில் இக்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இந்தியாவின் சர்வதேச வர்த்தகத்தில் 95% கடல் மார்க்கமாகவே நடைபெறுகிறது என்று புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றனஅர்னாலாவின் சிறப்பம்சங்கள் என்ன?

நீர்மூழ்கிகளின் தாக்குதலை எதிர்க்கும் (anti-submarine) போர்க்கப்பலான ஐ.என்.எஸ். அர்னாலா பல வகைகளில் மிகவும் சிறப்பான போர்க்கப்பலாகும். இதன் திறன் என்னவென்றால், குறைவான ஆழத்தில், அதாவது கடற்கரையை ஒட்டியுள்ள பகுதிகளில் மறைந்திருக்கும் நீர்மூழ்கிகளைக் கூட கண்டுபிடிக்க முடியும் என்பதாகும்.

ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற கப்பல்கள் ஏன் கடற்படைக்கு தேவை என்பதை வருங்காலத்தில் நம்மால் புரிந்து கொள்ள இயலும். இது போன்று மேலும் 15 புதிய போர்க்கப்பல்களை இணைக்க இந்திய கடற்படை தீர்மானித்துள்ளது.

பாதுகாப்புத்துறை அளித்த தகவலின் படி, இந்த 16 போர் கப்பல்களை உருவாக்குவதற்கு 12 ஆயிரம் கோடி ரூபாய் செலவாகும்.

அரசு மற்றும் தனியார் கூட்டு முயற்சியில் இந்த கப்பல்கள் கொல்கத்தாவில் உள்ள கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் என்ஜினியர்ஸ் லிமிடெட் கப்பல் கட்டும் தளத்திலும், கொச்சியில் அமைந்திருக்கும் கொச்சின் கப்பல் கட்டும் தளத்திலும் உருவாக்கப்படும்.

பிபிசி இந்தி குழு ஐ.என்.எஸ். அர்னாலா கப்பலுக்கு சென்ற அந்த நாள் கடற்படை அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் எப்போதும் போல் ஒரு வழக்கமான நாள். கப்பலுக்கு தேவையான பல பொருட்களை அவர்கள் உள்ளே எடுத்து வந்தனர். நாங்கள் உள்ளே சென்ற போது வேலைகள் மும்முரமாக நடைபெற்றுக் கொண்டிருந்தது.

எந்த ஒரு போர்க்கப்பலும் உணரிகள், ஆயுதங்கள், என்ஜின்கள் மற்றும் தொலைத்தொடர்புக்கு தேவையான உபகரணங்களை உள்ளடக்கியிருக்கும். எனவே உள்ளே நடமாடுவதற்கு போதுமான இடம் இருக்காது. ஐ.என்.எஸ். அர்னாலாவிலும் அதே நிலை இருந்தது.

6 அடுக்குகளைக் கொண்ட அர்னாலாவில் மேலும் கீழும் செல்ல அங்குள்ள பணியாளர்கள் படிகளை பயன்படுத்துகின்றனர்.

படக்குறிப்பு, அர்னாலாவில் செய்தி சேகரிக்க பிபிசி இந்தி ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டது ஐ.என்.எஸ் அர்னாலாவின் கமாண்டிங் அலுவலர் கூறுவது என்ன?

எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிக்க இந்த போர்க்கப்பலில் பல சோனார் அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இது ஒரு சிறப்பு தொழில்நுட்பம். இதனை பயன்படுத்தி ஒலி அலைகளின் உதவியோடு நீருக்குள் இருக்கும் கப்பல்களைக் கண்டறிய இயலும். எதிரிகளின் கப்பல்கள் எங்கே இருக்கிறது என்று அறிந்தால் மட்டுமே தாக்குதல் நடத்த இயலும் என்பதால் இது மிகவும் முக்கியமானது.

இந்த போர்க்கப்பலின் திறன் குறித்து புரிந்து கொள்வதற்காக நாம் ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவரிடம் பேசினோம்.

“நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்கி அழிக்க தேவையான பல ஆயுதங்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது. இதில் ராக்கெட் லாஞ்சர்கள் உள்ளன. இது நீர்மூழ்கிக் கப்பல்களை தாக்க உதவும்,” என்று கூறினார்.

“இந்த கப்பலில் டர்பிடோ ட்யூப்கள் உள்ளன. டர்பிடோ என்பது நீருக்குள்ளே தாக்குதல் நடத்த பயன்படுத்தப்படும் ஆயுதமாகும். எதிரி நீர்மூழ்கிக் கப்பல்களைத் தாக்க இந்த ட்யூப்கள் வழியாக டர்பிடோக்களை ஏவ இயலும். அதேநேரத்தில் டர்பிடோக்களின் தாக்குதல்களில் இருந்து தப்பித்துக் கொள்வதற்கான ‘ஆன்டி-டர்பிடோ டெகாய் சிஸ்டமும்’ இந்த கப்பலில் பொருத்தப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் தளபதி அங்கித் க்ரோவர் அர்னாலாவில் வேறென்ன உள்ளது?

இந்த போர்க்கப்பல் 77 மீட்டர் நீளம் கொண்டது. அதாவது 26 அடுக்கு மாடி கட்டடத்தின் உயரத்திற்கு இணையானது.

கடற்படை அளித்த தகவலின் படி, இதில் 30 எம்.எம். சர்ஃபேஸ் துப்பாக்கி உள்ளது. இது தரை மற்றும் வான்வழி தாக்குதல்களுக்கு எதிராக பதிலடி கொடுக்கும் திறன் கொண்டது.

கண்ணி வெடிகளை புதைக்கும் திறன் கொண்டது இந்த கப்பல். இது எதிரிகளின் போர்கப்பல்களை அழிக்க உதவும். ஐ.என்.எஸ். அர்னாலாவின் மற்றொரு சிறப்பம்சம் இதன் என்ஜினாகும்.

கடற்படை அளித்த தகவலின் படி, டீசல் இயந்திரம் மற்றும் வாட்டர்ஜெட் தொழில்நுட்பத்தில் இயங்கும் மிகப்பெரிய போர்க்கப்பல் இதுவாகும்.

என்ஜின் அறையை பார்வையிட்ட நாங்கள் அங்கே முலாயம் சிங்கை பார்த்தோம். அவர் ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் அதிகாரி.

“இந்த என்ஜின் மூன்று ‘அட்வான்டேஜ்களைக்’ கொண்டுள்ளது. ஒன்று, இதுபோன்ற என்ஜின் போர்க்கப்பலுக்கு அதிக வேகத்தைத் தரும். இரண்டாவதாக என்ஜின் கப்பலின் திசையை வேகமாக மாற்றும் திறன் கொண்டது. மூன்றாவது, இது மிகவும் குறைவாகவே இரைச்சலை ஏற்படுத்தும்,” என்று முலாயம் சிங் கூறுகிறார்.

படக்குறிப்பு, ஐ.என்.எஸ். அர்னாலாவின் என்ஜின் அறையில் பணியாற்றும் முலாயம் சிங் “மிகவும் அமைதியாக இயங்கும் என்ஜினைக் கொண்டிருப்பதால், நம்முடைய கப்பலுக்கு அருகிலேயே எதிரிகளின் போர்க்கப்பல் இருந்தாலும் அதனால் அர்னாலாவை கண்டுபிடிக்க இயலாது,” என்றும் அவர் கூறுகிறார்.

நூற்றுக்கும் மேற்பட்ட அதிகாரிகள் மற்றும் வீரர்களைக் கொண்டுள்ளது அர்னாலா.இங்கே பணியாற்றும் நபர்களுக்கு வழங்கப்படும் தங்குமிடம், உணவு மற்றும் பொழுதுபோக்கு உள்ளிட்ட வசதிகள் குறித்து பிபிசி கேட்டறிந்தது.

மூத்த கடற்படை அதிகாரியான கமோடோர் ரஜ்னீஷ் ஷர்மா ஆந்திர பிரதேசத்தின் கடற்படை பகுதி பொறுப்பாளராக உள்ளார். விசாகப்பட்டினத்தில் பிபிசி குழுவிடம் பேசிய அவர், “வருங்காலத்தில் பயன்பாட்டிற்கு வரவிருக்கும் 15 போர்க்கப்பல்களையும் கணக்கில் கொண்டால், 16 கப்பல்களில் 8 மேற்கு கடற்கரைப் பகுதிகளிலும், 8 கிழக்குக் கடற்கரைப் பகுதிகளிலும் பணியமர்த்தப்படும்,” என்று தெரிவித்தார்.

“கடலுக்கடியில் கண்காணிப்பு மற்றும் எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டுபிடிப்பதற்கு தேவையான அனைத்து வசதிகளையும் இந்த கப்பல் கொண்டுள்ளது.” என்றும் அவர் கூறினார்.

படக்குறிப்பு, அர்னாலா கப்பலின் தோற்றம் பெயர்க் காரணம் என்ன?

இந்த போர்க்கப்பல் விசாகப்பட்டினத்தில் துவங்கி வைக்கப்பட்டாலும் மும்பையின் வசாய் பகுதியோடு தொடர்பு கொண்டுள்ளது இதன் பெயர். இந்தியாவின் வர்த்தக தலைநகரான மும்பையின் கடற்கரை பகுதியான வசாய்க்கு அருகே கோட்டை ஒன்று உள்ளது. அதன் பெயர் அர்னாலா.

கடற்படையினர் அளித்த தகவலின் படி, இந்த கோட்டை மராத்தா சாம்ராஜ்ஜியத்தால் எதிரிகளின் தாக்குதல்களை தடுக்க 1737-ஆம் ஆண்டு கட்டப்பட்டது.

உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது. ஆனால் பல ஆண்டுகளுக்கு முன்பே அது சேவையில் இருந்து விலக்கிக் கொள்ளப்பட்டது.

பட மூலாதாரம், Indian Navy

படக்குறிப்பு, உண்மையில் அர்னாலா என்ற பெயரில் இந்திய கடற்படை ஏற்கனவே போர்க்கப்பல் ஒன்றை வைத்திருந்தது சீனா, பாகிஸ்தான் கடற்படை எத்தகைய வலிமை கொண்டது?

கடந்த ஆண்டு அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், அளவைப் பொருத்தவரை சீன கடற்படை தான் உலகிலேயே மிகப்பெரிய கடற்படை என்று குறிப்பிட்டுள்ளது. அந்த அறிக்கையின் படி, சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது.

அதே அறிக்கையில் பாகிஸ்தானின் கடற்படை வலுப்பெற சீனாவின் பங்கு முக்கியமானது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பாகிஸ்தான் 8 நீர்மூழ்கிக் கப்பல்களை வாங்க 2015-ஆம் ஆண்டு சீனாவுடன் ஒப்பந்தம் ஒன்றில் கையெழுத்திட்டது. இந்த ஒப்பந்தத்தின் மொத்த மதிப்பு மூன்று பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் அதிகமானது என்று கூறப்பட்டது.

2024-ஆம் ஆண்டு இந்திய கடற்படையின் தலைமை அட்மிரல் தினேஷ் திரிபாதி பாகிஸ்தான் கடற்படையின் திறன்களை பார்த்து ஆச்சர்யத்தை வெளிப்படுத்தினார்.

இதுபோன்ற சூழலில் ஐ.என்.எஸ். அர்னாலா போன்ற போர்க்கப்பல்கள் இந்தியாவுக்கு ஒரு முக்கிய பங்காற்றும் என்று பாதுகாப்பு நிபுணர்கள் கூறுகின்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க பாதுகாப்புத்துறை அறிக்கையின் படி சீனா 370-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கிக் கப்பல்களைக் கொண்டுள்ளது நிபுணர்கள் கூறுவது என்ன?

ஓய்வு பெற்ற கேப்டன் சரப்ஜீத் எஸ். பார்மரிடம் பேசியது பிபிசி இந்தி. இந்திய கடற்படையில் ஹெலிகாப்டர் விமானியாக பணியாற்றிய அவர் நீர்மூழ்கிக் கப்பல்கள் (தாக்குதல்) எதிர்ப்பு உத்திகளில் நிபுணராவார்.

“1971-ஆம் ஆண்டு போரின் போது பாகிஸ்தானின் காஸி நீர்மூழ்கிக் கப்பல் விசாகப்பட்டினம் துறைமுகத்திற்கு வெளியே நடமாடியது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த கால மற்றும் வருங்கால மோதல்களின் போது இந்திய துறைமுகங்களும், கப்பல்களும் எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களின் தாக்குதல் இலக்குகளாக இருக்கக் கூடும் என்பதை இது காட்டுகிறது,”என்று கூறினார் அவர்.

நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று என்று அவர் கருதுகிறார்.

“எதிரிகளின் நீர்மூழ்கிக் கப்பல்கள் உங்களின் கடற்கரைக்கு அருகே இருக்கிறது என்றால், கடற்படை முன்னேறுவதற்கு முன்பு அந்த அச்சுறுத்தலைச் சமாளிக்க வேண்டியிருக்கும். இது கடற்படையின் செயல்பாடுகளைப் பாதிக்கும். இதுபோன்ற சூழலில் முன்னேறிச் சென்று எதிரிகளை தாக்குவது கடினமானதாகும். துறைமுகங்களின் இயல்பான செயல்பாடுகளும், சரக்குக் கப்பல்களின் போக்குவரத்தும் கூட இதனால் பாதிக்கப்படக் கூடும்,” என்று அவர் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Indian Navy

படக்குறிப்பு, நீர்மூழ்கிக் கப்பல்களுக்கு எதிரான போர் என்பது மிகவும் சிக்கலான போர்களில் ஒன்று “ஆனால் அர்னாலா போன்ற நீர்மூழ்கி தாக்குதலை தடுக்கும் பிரத்யேகமான போர்க்கப்பல் இருந்தால், எதிரிகளின் கப்பல்களை தேடிக் கண்டுபிடித்து அழிக்க இயலும்,” என்று சரப்ஜீத் கூறுகிறார்.

“இதன் மூலமாக, கடற்படை, குறிப்பாக பெரிய கப்பல்கள், அதன் இலக்கை நோக்கி நகர இயலும். இத்தகைய போர்க்கப்பல்களின் இருப்பானது துறைமுகங்கள் வழக்கமாக இயங்குவதை உறுதி செய்யும். இந்திய கடற்படை இந்த வகையில் 16 கப்பல்களை உருவாக்க (அர்னாலாவையும் சேர்த்து) உத்தரவிட்டுள்ளது. ஒரே நேரத்தில் இவ்வளவு பெரிய எண்ணிக்கையில் உருவாக்க உத்தரவிட்டிருப்பது இதுவே முதல்முறை. கடற்படை தொடர்ச்சியாக இத்தகைய கப்பல்களை உருவாக்க வேண்டும். இந்த கப்பல்களின் இருப்பு அனைத்து நேரத்திலும் இருப்பதையும் கடற்படை உறுதி செய்ய வேண்டும்.” என்று அவர் கூறினார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு