எம்எஸ் விஸ்வநாதனின் மறக்க முடியாத பாடல்களும் கண்ணதாசனுடனான சுவாரஸ்ய தருணங்களும்

படக்குறிப்பு, எம்.எஸ்.விஸ்வநாதன்எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

தமிழ்த் திரையுலகில் நீண்ட காலம் கோலோச்சிய இசையமைப்பாளர்களில் ஒருவர் எம்.எஸ். விஸ்வநாதன். டி.கே. ராமமூர்த்தியுடன் இணைந்தும், தனியாகவும் பல நூறு மறக்க முடியாத பாடல்களைக் கொடுத்திருக்கிறார் எம்.எஸ். விஸ்வநாதன். ஆரம்ப காலத்தில் இசையமைப்பாளர் சுப்பையா நாயுடுவுடன் இணைந்து பணியாற்றிய போது, சில பாடல்களுக்கு இவர் இசையமைத்திருந்தாலும், திரையில் இவரது பெயர் இடம்பெறவில்லை.

முதல் முறையாக ‘பணம்’ திரைப்படத்தில் விஸ்வநாதன் – ராமமூர்த்தி என்ற பெயருடன் இருவரும் அறிமுகமானார்கள். ராமமூர்த்தியுடன் இணைந்தும் தனித்தும் எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்த 15 மறக்க முடியாத பாடல்கள் இங்கே.

கண் மூடும் வேளையிலும் கலை என்ன?

சுந்தர் ராவ் நட்கர்னி இயக்கத்தில் எம்.ஜி. ராமச்சந்திரன் – சாவித்ரி நடித்து வெளிவந்த மகாதேவி (1957) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலை ஏ.எம். ராஜாவும் பி. சுசீலாவும் இணைந்து பாடியிருந்தனர்.

“பண் பாடும் நெறியோடு வளர்கின்ற உறவில் அன்பாகும் துணையாலே பொன் வண்ணம் தோன்றும் எண்ணி எண்ணி பார்க்கும் போதும் இன்ப ராகம் பாடும் கொஞ்ச நேரம் பிரிந்த போதும் எங்கே என்று தேடும்” என்ற அற்புதமான பாடல் வரிகளோடு, பாடலுக்கான இசையும் மிகச் சிறப்பாக அமைந்து காலத்தால் அழியாத பாடலாக அமைந்தது இந்தப் பாடல்.

செந்தமிழ் தேன்மொழியாள்

கவிஞர் கண்ணதாசன் தயாரித்த படமான மாலையிட்ட மங்கை (1958) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தின் பெரும்பாலான பாடல்கள், முதலில் எழுதப்பட்டு பிறகு இசையமைக்கப்பட்டன. இந்தப் படத்தில் ஏகப்பட்ட பாடல்கள். அதில் பல பாடல்களை டி.ஆர். மகாலிங்கம் பாடியிருந்தார். அதில் ஒரு பாடல்தான் ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடல்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

‘விளையாட்டுப் பொம்மை’ திரைப்படத்திற்குப் பிறகு, படங்களில் நடிக்காமல் இருந்த டி.ஆர். மகாலிங்கத்திற்கு இந்தப் படம் ஒரு ‘பிரேக்’ கொடுத்தது. அதற்கு முக்கியக் காரணமாக இந்த ‘செந்தமிழ் தேன்மொழியாள்’ பாடல் அமைந்தது. இந்தப் படத்திற்கு விஸ்வநாதனும் ராமமூர்த்தியும் இணைந்து இசையமைத்திருந்தனர்.

அத்தான்.. என்னத்தான்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசனும் சாவித்திரியும் நடித்த பாவ மன்னிப்பு (1961) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. புதுச்சேரியில் தேர்தல் பிரசாரத்திற்காக கவிஞர் கண்ணதாசனும் முன்னாள் முதல்வர் சி.என். அண்ணாதுரையும் காரில் பயணம் செய்த போது, வழியில் உணவுகளை வாங்கினர். அதனைக் கட்டிக்கொடுத்த காகிதத்தில் ‘கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தான்…’ என்ற கவிதை வரிகள் அச்சாகியிருந்தன.

அதை அடிப்படையாக வைத்து இந்தப் பாடல் வரிகளை எழுதியிருந்தார் கண்ணதாசன். அந்தப் பாடலை பல இசையமைப்பாளர்களிடம் கொடுத்து இசையமைக்கச் சொல்லியும், அவர்களால் முடியாத நிலையில், எம்.எஸ்.வி – ராமமூர்த்தி ஜோடியிடம் பாடலைக் கொடுத்தார் கண்ணதாசன். அதற்கு பத்தே நிமிடத்தில் இசையமைத்தார்கள் இந்த இரட்டையர்கள். இதனை தனது அனுபவ நூலான ‘நான் ஒரு ரசிகன்’ நூலில் சுவாரஸ்யமாக விவரித்திருக்கிறார் எம்.எஸ். விஸ்வநாதன்.

ஆலய மணியின் ஓசையை நான் கேட்டேன்

ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசனும் சரோஜா தேவியும் நடித்திருந்த பாலும் பழமும் (1961) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. விஸ்வநாதன் – ராமமூர்த்தி இரட்டையர்கள் இசையமைத்திருந்தனர். இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களையும் கண்ணதாசனே எழுதியிருந்தார். எல்லா பாடல்களும் ஹிட்.

பி. சுசீலா பாடிய இந்தப் பாடலுக்கு படத்தில் சரோஜாதேவி நடித்திருப்பார். இசை, பாடல் வரிகள், சரோஜாதேவியின் நடிப்பு, பி. சுசீலாவின் குரல் எல்லாம் சேர்ந்து இந்தப் பாடலுக்கு ஒரு அழியாத் தன்மையை கொடுத்தன.

பட மூலாதாரம், Raj 4K Songs

படக்குறிப்பு, கர்ணன் (1964) திரைப்படத்தில் இடம்பெற்ற உள்ளத்தில் நல்ல உள்ளம் பாடல்நினைக்கத் தெரிந்த மனமே , உனக்கு மறக்கத் தெரியாதா?

தேவிகாவும் எம்.ஜி.ஆரும் ஜோடியாக நடித்த ஒரே திரைப்படம் ஆனந்த ஜோதி (1963). இந்தப் படத்திற்கு இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தி. இந்தப் படத்தில், நாயகன் ஆனந்தாக வரும் எம்.ஜி.ஆரை, நாயகி பிரியும் சூழல் ஏற்பட்டுவிடும். அந்தத் தருணத்தில் நாயகனை நினைத்து தேவிகா தனிமையில் பாடுவதைப் போல அமைந்த பாடல் இது.

இந்தப் படத்தில் இடம்பெற்ற ‘பனியில்லாத மார்கழியா’, ‘பொய்யிலே பிறந்து’ ஆகிய பாடல்களும் பிரபலம் என்றாலும்கூட, இந்தப் பாடல் எட்டிய உயரமே வேறு.

உள்ளத்தில் நல்ல உள்ளம்

பி.ஆர். பந்துலு இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்த கர்ணன் (1964) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. படத்திற்கு இசை விஸ்வநாதன் – ராமமூர்த்தி. இந்தப் படத்தில் சுமார் 15 பாடல்கள் இடம்பெற்றிருந்தன. இவற்றில் ‘உள்ளத்தில் நல்ல உள்ளம்’ பாடலும் ‘ஆயிரம் கரங்கள்’ பாடலையும் கண்ணதாசன் முதலில் எழுதிவிட, அதற்கு ஏற்றபடி பிறகு மெட்டமைக்கப்பட்டது.

இந்தப் படத்தின் பாடல்கள் உருவான தருணத்தில் தமிழ்நாட்டில் பல அரசியல் மாற்றங்கள் நடந்துகொண்டிருந்தன. காமராஜர் முதல் பதவியிலிருந்து விலகியிருந்தார். அந்தப் பின்னணியில், காமராஜரை மனதில் வைத்து இந்தப் பாடலை கண்ணதாசன் எழுதியதாக குறிப்பிடுகிறார் எம்.எஸ். விஸ்வநாதன்.

தங்கரதம் வந்தது வீதியிலே

ஸ்ரீதர் இயக்கிய கலைக்கோவில் (1964) என்ற படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்திற்கு விஸ்வநாதன் – ராமமூர்த்தி இசையமைத்திருந்தனர். படத்தை எம்.எஸ்.விஸ்வநாதனே தயாரித்திருந்தார். பாடல்களை கண்ணதாசன் எழுதியிருந்தார். ஒரு வீணை இசைக் கலைஞனின் வாழ்வை அடிப்படையாகக் கொண்ட படம் இது.

சினிமாவில் அரிதாகவே பாடிய சாஸ்த்ரீய இசைக் கலைஞர் எம். பாலமுரளிகிருஷ்ணா, பி. சுசீலாவுடன் இணைந்து இந்தப் பாடலைப் பாடியிருந்தார். ‘காதலிக்க நேரமில்லை’ என்ற வெற்றிப் படத்திற்கு அடுத்ததாக ஸ்ரீதர் இயக்கிய இந்தப் படம், வர்த்தக ரீதியாக வெற்றிபெறவில்லை. ஆனால், பாடல் நிலைத்துவிட்டது.

யார் அந்த நிலவு?

ஏ. பீம்சிங் இயக்கத்தில் சிவாஜி கணேசன் நடித்து வெளியான சாந்தி (1965) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மேலை இசையின் சாயல் நிறைந்த இந்தப் பாடலின் ட்யூன், அந்தக் காலகட்டத்தில் மிகப் புதுமையாக இருந்தது. மெட்டுப் போட்டு, பாடல் எழுதி, ஒலிப்பதிவும் முடிந்த நிலையில், இந்தப் பாடலை படமாக்குவதை சிவாஜி கணேசன் தள்ளிப்போட்டுக் கொண்டே வந்ததாக எம்.எஸ். விஸ்வநாதன் குறிப்பிடுகிறார்.

இந்தப் பாடலை எப்படி நடிப்பது என்று யோசிப்பதற்காகவே அவ்வளவு காலம் எடுத்துக்கொண்டதாகச் சொல்கிறார் எம்.எஸ்.வி. பிறகு, கையில் சிகரெட்டுடன் அட்டகாசமாக இந்த பாடலில் அவர் நடித்துத் தந்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.நாளை இந்த நேரம் பார்த்து

சிவாஜி கணேசனும் வாணி ஸ்ரீயும் நடித்த உயர்ந்த மனிதன் (1968) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பி. சுசீலா இந்தப் பாடலைப் பாடியிருந்தார்.

‘பால் போலவே வான் மீதிலே யார் காணவே நீ காய்கிறாய்’ என்று இசையில்லாமல் துவங்கி, ‘நாளை இந்த வேளை பார்த்து’ என்று செல்லும் இந்தப் பாடலை வாலி எழுதியிருந்தார். அக்கார்டியன் இசைக் கருவியை இந்தப் பாடலில் மிக அற்புதமாகப் பயன்படுத்தியிருந்தார் எம்.எம். விஸ்வநாதன்.

அழகிய தமிழ் மகள் இவள்

எம்.ஜி.ஆரும் மஞ்சுளாவும் நடித்து வெளியான ரிக்ஷாக்காரன் (1971) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் படத்தில் எல்லாப் பாடல்களுமே ஹிட் என்றாலும், இந்தப் பாடல் கூடுதலாகக் கவனிக்கப்பட்டது. சாருகேசி ராகத்தில் பாடலை அமைத்திருந்தார் எம்.எஸ்.வி. பாடலை எழுதியவர் வாலி. தமிழ்த் திரையுலகில் பாடல் துவங்குவதற்கு முன்பாக, தொகையறா பாணியில் முன்னொட்டு வரிகள் இடம்பெறுவது அரிது. இந்தப் பாடலில் அப்படி ஒரு தொகையறா இடம்பெற்றிருந்தது.

“ஆனிப் பொன் தேர் கொண்டு…மாணிக்க சிலை என்று…வந்தாய் நின்றாய் இங்கே… காணிக்கை பொருளாகும்…காதல் என் உயிராகும்…நெஞ்சை தந்தேன் அங்கே…” என்ற தொகையறாவும் அது முடிந்ததும் பல்லவி துவங்குவதும் மிக சிறப்பாக அமைந்திருந்தது.

அல்லா.. அல்லா

சோ இயக்கத்தில் வெளிவந்த முகமது பின் துக்ளக் (1971) திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் இது. பாடலை வாலி எழுதியிருந்தார். இந்தப் பாடல் உருவான பிறகு, யார் பாடுவது என நீண்ட விவாதம் நடந்தது.

சீர்காழி கோவிந்தராஜனா, பித்துக்குளி முருகதாஸா என்று பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன. முகமது ரஃபியைக் கேட்கலாம் எனவும் யோசிக்கப்பட்டது. ஆனால், நேர நெருக்கடியின் காரணமாக, முடிவில் எம்.எஸ். விஸ்வநாதனே இந்தப் பாடலைப் பாட வேண்டியிருந்தது. எம்.எஸ். விஸ்வநாதன் இசையமைத்துப் பாடிய பாடல்களில் ஹிட்டான மற்றுமொரு பாடல் இது.

சொல்லத்தான் நினைக்கிறேன்

கே. பாலச்சந்தர் இயக்கிய சொல்லத்தான் நினைக்கிறேன் (1973) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. மூன்று நாயகிகளும் நாயகனைக் காதலிக்கிறார்கள். நாயகனோ, அவர்களில் ஒருத்தியை விரும்புகிறான். இந்தப் பின்னணியில் நான்கு பேரையும் வைத்து இடம்பெறும் பாடல் இது. பாடலை வாலி எழுதியிருந்தார்.

பாடலின் வரிகள், படமாக்கப்பட்ட விதம், வித்தியாசமான இசை எல்லாம் சேர்ந்து பாடலை எங்கோ கொண்டுசென்றன.

பட மூலாதாரம், pyramid music

படக்குறிப்பு, ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980) படத்தில் இடம் பெற்ற சிப்பி இருக்குது…முத்தும் இருக்குது பாடல்அன்பு நடமாடும் கலைக்கூடமே

ஏ.சி. திருலோகச்சந்தர் இயக்கி சிவாஜி கணேசனும் மஞ்சுளாவும் நடித்த அவன்தான் மனிதன் (1975) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடல் முழுக்க சிங்கப்பூரில் படமாக்கப்பட்டிருந்தது.

மே மாதத்தில் சிங்கப்பூரில் கொண்டாடப்படும் ஒரு பண்டிகையின் பின்னணியில் ஒரு பாடல் வேண்டுமென கேட்க, கண்ணதாசன் எழுதிக் கொடுத்த பாடல் என எம்.எஸ். விஸ்வநாதன் குறிப்பிடுகிறார். ஆனால், பாடல் காட்சிகள் நாயகனும் நாயகியும் மட்டும் பூங்காக்களில் பாடுவதைப்போல மட்டுமே எடுக்கப்பட்டிருக்கும். 70களின் மத்தியில் படம் வெளிவந்தாலும் சிவாஜி கணேசன் நடித்து 60களில் வெளிவந்த படங்களைப் பார்க்கும் உணர்வை ஏற்படுத்திய பாடல் இது.

வான் நிலா நிலா அல்ல, உன் வாலிபம் நிலா

கே. பாலச்சந்தர் இயக்கிய பட்டினப் பிரவேசம் (1977) படத்தில் இடம்பெற்ற பாடல் இது. இந்தப் பாடலுக்கு எம்.எஸ். விஸ்வநாதன் அளித்த ‘ந… நந்நா… நந்நா…நந்நா.. நந்நாநநாநநா’ என்ற மெட்டைப் பார்த்து கண்ணதாசன் கோபமடைந்து, “இப்படி ‘நாநாநாநா’ என ஒரு மெட்டைப் போட்டுக்கொடுத்தால், எப்படி எழுத முடியும். வேற ட்யூனைப் போடு” எனச் சொல்லிவிட்டு வெளியில் சென்றுவிட்டதாக எம்.எஸ். விஸ்வநாதன் ‘நான் ஒரு ரசிகன்’ நூலில் குறிப்பிடுகிறார். ஆனால், இயக்குநரான பாலச்சந்தருக்கு மெட்டு மிகவும் பிடித்துவிட, எப்படியாவது கண்ணதாசனிடமிருந்து இந்த மெட்டிற்கு ஏற்ற பாடலைப் பெற்றுவிடும்படி சொன்னார்.

ஒரு வழியாக கண்ணதாசனை சம்மதிக்கச் செய்து ட்யூனை மீண்டும் பாடும்போது, “ந… நந்நா… நந்நா…நந்நா’ என்று சொல்வதற்குப் பதிலாக, ‘லா லல்லா… லல்லா… லல்லா… லல்லா… லல்லா… லல்லா…’ என்று வாசித்துக் காட்டினார் எம்.எஸ்.வி. கண்ணதாசனும் அந்த ‘லா’வை அடிப்படையாக வைத்து எழுதிய பாடல்இது. இந்தப் படத்தைவிட, பாடல் மிகப் பிரபலம்.

சிப்பி இருக்குது…முத்தும் இருக்குது

கே. பாலச்சந்தர் இயக்கத்தில் கமல் – ஸ்ரீதேவி நடித்து வெளியான ‘வறுமையின் நிறம் சிவப்பு’ (1980) படத்தில் இடம் பெற்ற பாடல் இது. ஒரு மெட்டை எம்.எஸ். விஸ்வநாதன் உருவாக்கிக் கொடுத்ததும், அதற்கான பாடல் வரிகளை கண்ணதாசன் எழுதுவார். இடையில் இருவரும் விவாதிப்பார்கள், சண்டை போடுவார்கள். இதனைப் பார்த்த இயக்குநர் பாலச்சந்தர், அதே பாணியில் இந்தப் பாடலை உருவாக்கியதாகச் சொல்கிறார் எம்.எஸ். விஸ்வநாதன்.

இந்தப் பாடலில் காதலிதான் இசையமைப்பாளர். காதலன் கவிஞர். “தந்தன தத்தன தையன தத்தன தனன தத்தன தான தையன தந்தானா…” என்று துவங்கும் இந்தப் பாடல், காதலன் தன் காதலைச் சொல்வதுபோல முடியும். பாடலும் காட்சியமைப்பும் மிக சிறப்பாக அமைந்திருந்தன. பாடலை எழுதியவர் கண்ணதாசன்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு