சிங்கள் தேசத்தின் நான்கு பிரதான கட்சிகளையும் இழுத்து வீழ்த்திவிட்டு, அறகலய வழியாக ஆட்சிக் கட்டிலில் ஏறியவர் அநுர குமர திஸ்ஸநாயக்க. ஆர்ப்பாட்டமற்ற செயற்பாடு, கவர்ச்சியான நடையுடை, ஒவ்வொருவரையும் சுண்டித் தம்பக்கம் இழுக்கும் பேச்சாற்றல் என்பவை அநுரவுக்கு இயற்கையாகக் கிடைத்த கொடை. அதனை மூலாதாரமாக வைத்து நீண்ட காலத்துக்கு மக்களை ஏமாற்ற முடியுமா?

தோழர் ஜனாதிபதி அநுர குமர திஸ்ஸநாயக்க அவர்களுக்கு! ஊடகப் பயணத்தில் அறுபது ஆண்டுகளைப் பூர்த்தி செய்யவுள்ள ஒருவன் தங்களுக்கு எழுதும் கடிதம் இது. 

இக்கடிதத்தை இன்னமும் இரண்டு மாதங்கள் கழித்து – தங்களின் ஜனாதிபதி பதவி ஒரு வருட முடிவின்போதே எழுத எண்ணியிருந்தேன். ஆனால், காலத்தின் தேவை இப்போது எழுத வைத்துள்ளது. 

ஷகாலத்தின்| என்று இங்கு குறிப்பிடுவதன் அர்த்தம், தமிழராய்ப் பிறந்த குற்றத்துக்காக காரணம் ஏதுமின்றி காலமாக்கப்பட்டு புதைகுழிக்குள் மூடப்பட்ட அறுபத்தைந்து (இதுவரை) அப்பாவிகள் எலும்புக்கூடுகளாகவும், எச்சங்களாகவும் மீட்கப்பட்டுள்ளதானது, இன்னமும் இரண்டு மாதங்கள்வரை பொறுத்திருக்க எனக்கு இடம் தரவில்லை. 

ஆணா பெண்ணா என்று அடையாளம் காணமுடியாதவர்கள், பாடசாலை மாணவர்கள், குழந்தைகள், அவர்களின் புத்தகப் பைகள், ஆடைகள், விளையாட்டுப் பொம்மைகள், காலணிகள், கண்ணாடி வளையல்கள் என்று இரண்டு வாரமாக புதைகுழிக்குள்ளிருந்து மீட்கப்பட்டுள்ளன. குழிகளைத் தோண்டியவர்களுக்கு ஓய்வு வழங்குவதற்காக சில நாட்களுக்கு மேலும் குழிகளைத் தோண்டுவது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. 

நான் பிறந்தது இலங்கையின் யாழ்ப்பாணத்தில். 1972ல் சிறிமாவோ பண்டாரநாயக்கவின் புதிய அரசியலமைப்பின் பின்னர் இத்தீவு சிறீலங்கா என மாற்றப்பட்டபோது நான் விரும்பாமலே சிறீலங்கா பிரஜையானேன். 1983 இனப்படுகொலையில் அகப்பட்டு உயிர் தப்பி கொழும்பிலிருந்து பிறந்த மண்ணுக்கு வந்த பின்னர் தமிழீழ பிரஜையானேன். ஆக, இந்தக் குட்டித்தீவில் இலங்கை, சிறீலங்கா, தமிழீழம் ஆகியவற்றின் பிரஜையான வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. இது இலங்கையின் அரசியல் சீர்கேட்டை எடுத்துக் காட்டும் அறிகுறி. 

இலங்கையில் இரண்டு தடவை ஆயுதப் புரட்சி மேற்கொண்டு ஆட்சியைக் கைப்பற்ற முயன்ற உங்களின் மூலஅமைப்பான ஜே.வி.பி., 1971 ஏப்ரல் ஐந்தில் முதலாவது புரட்சியை மேற்கொண்டபோது நீங்கள் மூன்று வயதுப் பாலகன். அப்போது நீங்கள் மாத்தளையின் தெவகுவாவில் இருந்தீர்களோ அல்லது அநுராதபுர மாவட்டத்தின் தம்புத்தேகமவில் மகாவலி அபிவிருத்திக் காணியில் வசித்தீர்களோ தெரியாது. 

1971 புரட்சியின்போது அப்போதைய பிரதமர் சிறிமாவோவை உயிருடன் அல்லது சடலமாக பிடிப்பதும், இரவோடிரவாக ஆட்சியைக் கைப்பற்றுவதும் ஜே.வி.பி.யின் இலக்காக இருந்தது. ஆனால், சிறீமாவோவை காப்பாற்ற அன்றைய இந்திய பிரதமர் இந்திரா காந்தி தமது ராணுவத்தையும், உலங்கு வானூர்திகளையும் இரவோடிரவாக அனுப்பி, சிறிமாவோவை நடுக்கடலில் நின்ற இந்திய கடற்படைக் கப்பலில் பௌத்திரமாக ஏற்றியது மட்டுமன்றி, ஒன்றரை டசின் ராணுவ உலங்கு வானூர்திகள் மூலம் களுத்துறை முதல் கதிர்காமம் வரையான காடுகளை ரசாயனத் தாக்குதல் மூலம் எரித்து ஆயிரக்கணக்கான உங்கள் மூத்த தோழர்களை காணாமலாக்கிய வரலாற்றை இலகுவாக மறந்துவிட முடியாது. (காலம்தான் எல்லாவற்றையும் மறக்கப் பண்ணி விடுமே! நீங்கள் ஜனாதிபதியானதும் உங்களது முதல் பயணம் இந்தியாவாகத்தானே அமைந்தது).

இலங்கையின் முதலாவது ஆயுதப் புரட்சியை விசாரிக்க முதற்தடவையாக குற்றவியல் விசாரணைக் கமி~ன் நியமிக்கப்பட்டு 1972 யூன் 12ல் விசாரணைகள் ஆரம்பமாகின. இரண்டரை வருட விசாரணையின் பின்னர் ஜே.வி.பி. தலைவர் ரோகண விஜேவீர உட்பட நூற்றுக்கணக்கான உங்கள் தோழர்களுக்கு ஆயுட்தண்டனை வழங்கப்பட்டது. இவ்வாறு தண்டனை பெற்றவர்களில் ஒருவர் சிறிமாவோவின் உறவினரான ஹம்பகா தொகுதி எம்.பி.யாகவிருந்த எஸ்.டி.பண்டாரநாயக்க. 

இரண்டரை வருட கால இந்த விசாரணையை நூற்றுக்கணக்கான ஊடகங்களின் செய்தியாளர்கள் வரிக்கு வரி தங்கள் ஊடகங்களில் பதிவு செய்தனர். அப்போது லேக்ஹவுஸ் பத்திரிகை நிறுவனத்தின் செய்தியாளர்கள் குழுவில் இடம்பெற்ற நானும், தற்போது இங்கிலாந்தில் வசிக்கும் 94 வயதான பொன்.பாலசுந்தரம் அவர்களுமே இப்போது வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் என்று நினைக்கிறேன். உங்கள் ஆரம்பகால தலைவர் றோகண விஜேவீரவை இரு தடவைகள் நேரடியாகச் சந்தித்து உரையாடும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது என்பதை இங்கு குறிப்பிட விரும்புகிறேன். 

1987 – 1989 கால உங்களது ஜே.வி.பி.யின் அரசுக்கு எதிரான இரண்டாவது போராட்டம் பற்றி உங்களுக்கு நினைவூட்டத் தேவையில்லை. அப்போது நீங்கள் பல்கலைக்கழக மாணவனாக, தீவிர மார்க்சிஸ சித்தாந்த இளைஞனாக துடிப்போடு இருந்தீர்கள். சில காலம் தலைமறைவு வாழ்க்கையையும் மேற்கொண்டீர்கள். அவ்வேளையில் உங்கள் பெயரை அரவிந் எனவும் மாற்றிக் கொண்டீர்கள். இலங்கை அரசும் இந்தியாவும் இணைந்து தமிழருக்கு ஏதோ வழங்கப் போவதாகக் கூறி ஜே.ஆர்.ஜெயவர்த்தனவும், ராஜிவ் காந்தியும் ஒப்பந்தம் செய்தபோது அவ்வேளையில் அதனை பகிரங்கமாக எதிர்த்தவர்கள் உங்கள் தரப்பினர். தமிழ் கடவுள் முருகனுடன் போர் புரிந்த சூரன் அவ்வப்போது தனது வேசங்களை மாற்றியதுபோல 1987 – 1989 காலத்தில் உங்கள் அமைப்பையும் தேசப்பிரிய ஜனதா வியாபாரய என மாற்றிக் கொண்டது ஒருவகை அரசியல். 

இந்திய எதிர்ப்புக் கொள்கையை முன்னிறுத்தி இடம்பெற்ற போராட்டத்தின்போது அப்பாவித் தமிழர்களான பலர், லட்சாதிபதியான தமிழ் வணிகர்கள் இலக்கு வைத்து உங்கள் தரப்பினால் கொல்லப்பட்டனர். சிங்கள திரைப்படங்களை பெருமளவில் தயாரித்த சினிமாஸ் அதிபர் குணரட்ணம் ஏன் கொல்லப்பட்டார் என்பது இதுவரை தெரியவில்லை. 

சில மாதங்களுக்கு முன்னர் உங்கள் தாயார் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியில், நீங்கள் மாணவராக இருந்த காலத்தில் ரொஸ்கி, மார்க்ஸ், லெனின், காஸ்ரோ போன்றவர்களின் நூல்களோடு மகாத்மா காந்தியின் ஆளுமையால் ஆகர்சிக்கப்பட்டு அவரின் நூல்களையும் ஆர்வத்துடன் படித்ததாக குறிப்பிட்டிருந்தார். அதனாற்தான் போலும், 1987 – 1989 காலத்தில் உங்கள் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களுக்கும், கொலைகளுக்கும் மன்னிப்பு கேட்டு உங்கள் மனப்போக்கை வெளிப்படுத்தினீர்;கள். குற்றம் புரிந்தவர்களுக்கு மன்னிப்பு வழங்க எந்தத் தடையும் இல்லை. ஆனால், அதனை மறந்துவிட முடியாது. நினைவுகள்தானே மனிதனின் உயிர்நாடி. 

இவைகள் ஒருபுறமிருக்கட்டும். நிகழ்காலத்துக்கு வருவோம். கடந்த வருட ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னர் நீங்கள் மாணவர் குழுத்தலைவராக,. மார்க்சிஸ சிந்தனைக் குழாம் அமைப்பாளராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, ஜே.வி.பி.யின் நம்பிக்கைக்குரிய தலைவராக, நாடாளுமன்ற உறுப்பினராக, சந்திரிகா குமாரதுங்கவின் அரசில் சில வருடங்கள் பல்துறை அமைச்சராக என்று படிமுறையாக ஜனாதிபதியானவர். 

ஆற்றொழுக்கான உங்கள் பேச்சாற்றல் – இதனை பேச்சு என்று சொல்ல முடியாது, பெரும் கூட்டத்தின் முன்னால் மேடையில் நின்றவாறு ஒவ்வொருவருடனும் உரையாடுவது போன்று கண் இமைகளை உயர்த்தி, கைகளை விரித்து, அணைத்து, தேவைப்படும்போது முன்னங்கால்களில் எழுந்து ஆற்றிய உரைகளை கடந்த மூன்று தேர்தல்களிலும் காண முடிந்தது. அந்தக் கவர்ச்சியே மக்களை உங்கள் பக்கம் இழுத்தது. அதன் அறுவடையை கடந்த மூன்று தேர்தல்களிலும் காணமுடிந்தது. 

சொல்லப்போனால் இன்றைய ஆட்சியை, ஜே.வி.பி. ஆட்சியாக எவரும் பார்க்கக் கூடாது என்பதற்காகவே தேர்தல்களின்போது தேசிய மக்கள் சக்தி (என்.பி.பி) என மாற்றிக் கொண்டீர்கள். கடந்த ஐம்பதாண்டுகளில் ஜே.வி.பி. தனக்கு இட்டுக் கொண்ட மூன்றாவது பெயர் இது. எனினும் இன்றைய ஆட்சியை அநுரவின் அரசு என்றே அனேகமானவர்கள் கூறுவதில் தவறிருப்பதாகத் தெரியவில்லை. ஆனால், உங்களின் பின்னால் உங்கள் தாய்க் கட்சியான ஜே.வி.பி.யும் அதன் செயலாளர் ரில்வின் சில்வாவும் காய்களை நகர்த்துபவர்களாக இருப்பதே உண்மை. 

தேர்தல் காலங்களில் தமிழர் தாயகத்தில் இடம்பெற்ற பரப்புரைக் கூட்டங்களில் நீங்கள் என்னவெல்லாம் சொன்னீர்கள் என்பது உங்களுக்கு நினைவிருக்கிறதா? நிச்சயமாக இருக்கும். எனினும், உங்கள் நினைவுக்காக முக்கியமான ஒரு சிலவற்றை இங்கு குறிப்பிட வேண்டியுள்ளது. 

• ரணிலின் ஆட்சிக்காலத்தில் உங்கள் ஷஆட்கள்| மது விற்பனை பர்மிட் பெற்றுள்ளார்களாமே! இது உங்களுக்குத் தெரியுமா என்று நீங்கள் கேட்க, ஓம் என்று பொதுமக்கள் குரல் எழுப்பி, உங்கள் ஆட்சியில் இவைகளை கவனிக்க வேண்டுமென்ற எதிர்பார்ப்பை வெளிப்படுத்தினர். 

• கீரிமலையில் ஜனாதிபதி மாளிகை ஒன்றை மகிந்த கட்டினார். கமலஹாசனின் தசாவதாரம் போல நாடு முழுவதும் தனக்கான மாளிகைகளை அவர் நிறுவினார். இந்த மாளிகை எனக்கு வேண்டாம். கீரிமலை மாளிகை உங்களுக்கு வேண்டுமா என்று திரண்டிருந்த மக்களைப் பார்த்து கேட்டீர்கள். இந்த வினாவுக்கு தங்கள் மகிழ்ச்சியால் ஆர்ப்பரித்து வானதிர மக்கள் குரல் எழுப்பினர். 

• 13ம் திருத்தத்தை செயற்படுத்துவேன் என்றும், கூட்டாட்சி முறையை தருகிறேன் என்றும் உங்களுக்கு உறுதி கூறி உங்கள் வாக்குகளைக் கேட்க நான் இங்கு வரவில்லையென்றும் அடித்துக் கூறினீர்கள்.

• சில தமிழ் அரசியல்வாதிகளை அதன் பிறகு சந்தித்த பின்னர் மாகாண சபைகள் தொடர்ந்து செயற்படும் என்று சொன்னீர்கள். 

• பயங்கரவாத தடைச்சட்டம் நிச்சயமாக நீக்கப்படுமென்று பகிரங்கமாகத் தெரிவித்தீர்கள். 

உங்கள் நெஞ்சைத் தொட்டு சொல்லுங்கள். நீங்கள் கூறியவற்றில் எதனையாவது இந்தப் பத்து மாதத்தில் நிறைவேற்றியுள்ளீர்களா? குறைந்தது இவைகளுக்கான ஆரம்பப் பணிகளையாவது தொடக்கியுள்ளீர்களா?

இங்கு எழுத விரும்பிய விடயம் செம்மணி பற்றியது. நீங்கள் அமைச்சர் பதவி வகித்த சந்திரிகாவின் ஆட்சிக்காலத்தில் செம்மணியில் ஆரம்பமான புதைகுழி இப்பேர்து அதன் அருகாமையிலுள்ள சித்துப்பாத்தி வரை நீட்சி பெற்று தமிழ் மக்களை சில்லிட வைத்துள்ளது. 

நாடாளுமன்றத் தேர்தலில் தங்கள் கட்சிக்கு தமிழர்களும் வாக்களித்து பிரதிநிதிகளை தந்தவர்கள் என்ற வகையிலும் நாட்டின் ஜனாதிபதி என்ற வகையிலும் இது தொடர்பாக ஒரு வார்த்தையாவது உங்களால் கூற முடிந்ததா? ஏன் முடியவில்லை?

இது தொடர்பாகவும் மேலும் பல விடயங்களுடனும் அடுத்த வாரம் மீண்டும் சந்திப்பேன்.