Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
நிலாந்தன்
அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது.போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார்.அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துள் இயங்கும் ஓர் அலுவலகமானது இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து வருகிறது.அந்த அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருப்பதன்மூலம் அணையா விளக்கு போராட்டமானது மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறையையும் நிபுணத்துவத்தையும் கோரி நிற்கின்றது.அதாவது, உள்நாட்டு பொறிமுறையை நம்பவில்லை என்று பொருள்.
ஐநாவில் 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அந்த அலுவலகம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் “ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP) இதன்படி சான்றுகளையும் சாட்சிகளையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வருகைக்குப்பின் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுமா ?
ஆனால் தன்னுடைய இலங்கை வருகையின் இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடகங்கள் மத்தியில் ஆற்றிய உரையில் என்ன சொன்னவர் தெரியமா? “இறுதியிலும் இறுதியாக இது இலங்கை அரசின் பொறுப்பாகும், அதோடு,இந்த முன்னெடுப்பு இலங்கையின் தேசிய உடமை என்பது முக்கியம்.மேலும் இது சர்வதேச வழிமுறைகளால்,உதவிகளால் பூர்த்தி செய்யப்படலாம்,”அதாவது அவருடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில்,அவர் உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவது பற்றியே பேசுகிறார்.அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இயங்கிவரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அந்த அலுவலகத்தின் பொருள் என்ன?அது உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றா?ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வர விசா இல்லையே?
சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்த அலுவலகத்தில் அடிப்படைப் பலவீனங்கள் உண்டு.இப்படி ஒரு பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது என்பதனை ஊகிகித்து 2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்தன.மூன்று கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் 2021 ஜனவரி மாதம் ஐநாவுக்கு எழுதப்பட்டது.
அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கேட்கப்பட்டன.ஒன்று, பொறுப்புக் கூறலை ஐநா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து ஐநா பொதுச் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதைப் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.இரண்டாவது கோரிக்கை, மேற்சொன்ன பொறிமுறையானது குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அதன் செயற்பாடுகளை முடிக்கும் விதத்தில் வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.அந்த பொறிமுறைக்குரிய செயற்படு காலத்தை 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டாகக் குறைக்கும்படி கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.அக்கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்ட பின் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது குற்றஞ்சாட்டியது.
அக்கூட்டத் தொடரின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன்படி ஒரு பொறிமுறை அதுதான் மேற்படி அலுவலகம்(OSLAP)உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ்த் தரப்பு கேட்டிருந்த ஒரு பொறிமுறை அல்ல.அதில் பின்வரும் அடிப்படைப் பலவீனங்கள் இருந்தன. முதலாவதாக,அது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உள்ளே இயங்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம்தான். அதாவது கூட்டுக் கடிதத்தில் கேட்டதுபோல பொறுப்புக்கூறலை அவர்கள் மனிதஉரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவில்லை.இரண்டாவது அதற்கு ஆறு மாத அல்லது ஒரு வருட கால நிர்ணயம் செய்து அதன் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படவில்லை.பதிலாக இன்றுவரை அது இயங்குகின்றது.இப்படித்தான் இருக்கிறது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஐநாவின் பதில் வினை. அது தமிழ் மக்கள் கேட்டதை விட,எதிர்பார்த்ததைவிட பலவீனமான ஒரு பொறிமுறை என்ற போதிலும் அப்பொறிமுறையைச் சேர்ந்த அலுவலர்கள் நாட்டுக்குள் வந்து சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை.
இப்படிப்பட்டதோர் அரசியல் மற்றும் ராஜதந்திர பின்னணிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது அழுத்தங்களளைப் பிரயோகிக்கும் விதத்தில் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் விட்டது,அவருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் அந்தப் பொறிமுறையை அவரே பலவீனப்படுத்துவதாக அமையுமா?
அது ஒரு பலவீனமான கட்டமைப்புத்தான். எனினும் அந்த அலுவலகமானது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது இப்பொழுது ஓர் அனைத்துலக நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயத்தில் தமிழ்மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துலக நிலைமைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமாக உள்ளன.
மேலும் அந்த அலுவலகம் சேகரித்துவரும் சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிட்ட சில படைப் பிரதானிகளுக்கும் படை அலுவலர்களுக்கும் எதிராகப் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன.
இங்கேயும் தமிழ்த் தரப்பு நோக்கு நிலையில் இருந்து ஒரு கேள்வி உண்டு. அந்தப் படைப்பிரதானிகள் தாங்களாக அதைச் செய்யவில்லை அவர்களுக்கு உத்தரவிட்ட,அதற்கு வேண்டிய அரசியல் தீர்மானத்தை எடுத்த,அரசுக் கட்டமைப்பு உண்டு.அந்தக் கட்டமைப்பைக் குற்றஞ்சாட்டும் ஒரு நிலை இன்று வரை ஐநாவிலோ அல்லது மேற்கு நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. அதாவது இனப்படுகொலையைச் செய்தது ஒரு அரசுக் கட்டமைப்பு.இன அழிப்பு என்பது அந்த அரசுக் கட்டமைப்பின் கொள்கையாக இருந்தது என்ற அடிப்படையில் அந்த அரசுக் கட்டமைப்பைத் தான் விசாரிக்க வேண்டும்.அதற்கு எதிராகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கேட்கின்றது.ஆனால் அப்படி ஒரு வளர்ச்சி ஐநாவிலும் ஏற்படவில்லை,மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை.
எனினும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு அது தமிழ் மக்கள் கேட்டதை விடப் பலவீனமானது என்ற போதிலும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு முன்னேற்றம்தான்.
இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான்,செம்மணியும் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தமிழ்மக்கள் தமது சக்திக்கேற்ப சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.செம்மணி தொடர்பில் மட்டுமல்ல தமிழ் மக்களிடம் பெரும்பாலான விடயங்களில் விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் உண்டா? தன்னை பலிகடா ஆக்கிய தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு ராணுவ சார்ஜன் சொன்ன சாட்சியத்தை வைத்துதான் செம்மணியில் நானூறுக்கும் குறையாத உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த விடயத்தில் செம்மணியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்பதனை அதற்குரிய துறைசார் நிபுணர்கள் கண்டுபிடிக்கட்டும்.அதேசமயம்,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டவேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு.அவ்வாறான தரவுகளைத் திரட்டும் கட்டமைப்புகள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு?
ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும், மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தைக் கொண்டிருந்த போதிலும், தமிழர்களால் ஏன் அவ்வாறான தரவுகளைத் திரட்டும் பொதுக் கட்டமைப்புக்களை உருவாக்க முடியாதிருக்கிறது?குறைந்தபட்சம் டிஜிட்டல் பரப்பிலாவது அவ்வாறு ஒரு பொதுவான தகவல்திரட்டும் வேலையைத் தொடங்கலாம்.இதுவிடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனிதஉரிமைகள் தகவல் பகுப்பாய்வு அமைப்பின் (Human Rights Data Analysis Group: HRDAG) நிபுணத்துவ உதவியைக் கேட்கலாம்.
இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டம் என்று கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.நீதிக்கான போராட்டத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்? குற்றச் செயல்களை, குற்றவாளிகளை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் அதைத் தொடங்கவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகள் எத்தனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு ?
போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை இப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உறவினர்கள் கிராமங்கள் தோறும் உண்டு. அவ்வாறு உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் செம்மணிக்கு அருகே நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24தமிழரர்களுக்கு நீதி கேட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் விளைவாகத்தான் அந்த வழக்கைத் தொடுத்த சட்டவாளர் கலாநிதி குருபரனுக்கு எதிராக நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முடிவில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கினார். நாட்டை விட்டும் சிறிது காலம் விலகியிருந்தார்.இப்பொழுது அந்த வழக்கு ஒரு தென்னிலங்கை சட்டவாளரால் முன்னெடுக்கப்படுகின்றது. நிலைமாறு கால நீதியின் கீழ் உள்நாட்டு நிதியின் விரிவை பரிசோதிக்க முற்படும் வழக்குகளில் அதுவும் ஒன்று.
உள்நாட்டுப் பொறி முறையே பொருத்தமானது என்று கூறும் அரசாங்கத்துக்கும் உள்நாட்டுப் பொதுமுறையை அனைத்துலக தராதரத்துக்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா அதிகாரிகளுக்கும் உள்நாட்டுப் பொறிமுறையின் இயலாமையை நிரூபிக்கத் தேவையான வழக்குகளைத் தமிழ் மக்கள் தொடுக்கலாம். கிரிசாந்தியின் விடயத்தில் அப்போது இருந்த அரசாங்கம் தான் நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவாக,அதனால் தண்டிக்கப்பட்ட ஒரு படை ஆள் அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த வாக்குமூலம்தான் செம்மணியை வெளியே கொண்டு வந்தது. எனவே உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிப்பதற்கும் உள்நாட்டு நீதியின் போதாமைகளை உணர்த்துவதற்கும் வழக்குகளைத் தொடுப்பதற்கு சட்டச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு தேவையான எத்தனை சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உண்டு?
தமிழ் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.அரசியல் செயல்பாட்டாளர்களாக மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் சட்டச் செயற்பாட்டு மையங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. கொழும்பை மையமாகக் கொண்ட சட்டவாளர் ரட்ணவேலும் அவருடைய அணியும் செம்மணியில் நிற்கிறார்கள்.இந்த விவகாரத்தில் மட்டுமல்ல சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகளையும் பெருமளவுக்கு ரட்ணவேல்தான் கையாண்டு வருகிறார்.அவருடைய மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள போற்றுதலுக்குரிய சட்டச் செயற்பாட்டு அமைப்பாகும்.
அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் சந்திப்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டது சட்டத்தரணி ரட்ணவேல்தான்.ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.பொது வேட்பாளருக்காக உழைத்த மக்கள் அமைப்போடு சிவில்சமூக செயற்பாட்டாளராகிய சட்டத்தரணி புவிதரன் இணைந்து வேலை செய்தார். குருபரன் சில குறிப்பிட்ட உதவிகளைச் செய்தார்.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சட்ட உதவி மையங்கள்,சட்டச் செயற்பாட்டு மையங்கள் எத்தனை உண்டு?
இத்தனைக்கும் நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம். நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதன்மூலம் முதற்கட்டமாக உள்நாட்டு நீதியின் விரிவை பரிசோதிப்பதற்கான வழக்குகளைத் தொடுக்கலாம்.உள்நாட்டு நீதியின் போதாமை நிருபிக்கப்படும்போது அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கான தேவை மேலும் நிரூபிக்கப்படும்.அனைத்துலக அளவில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம்-அது பலவீனமானது என்ற போதிலும்-ஓர் அனைத்துலக யதார்த்தமாக மாறியிருக்கிறது.அது தமிழ் மக்களுக்குப் பலமானது.
தமிழ் மக்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு கற்பனையில் திளைக்காமல் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்க வேண்டும்.முதலில் விஞ்ஞானபூர்வமாகத் தகவல்களைத் திரட்டும் தளங்களைத் திறக்க வேண்டும். இரண்டாவதாக,சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் கட்டமைப்புச் சார்ந்து சிந்திக்க வேண்டும்.கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதாவது தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டமைப்புகள்.