விமானத்தில் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் எவ்வாறு இயங்கும்? காணொளிக் குறிப்பு, எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் என்றால் என்ன?விமானத்தில் எரிபொருள் கட்ஆஃப் சுவிட்ச் எவ்வாறு இயங்கும்?

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த மாதம் ஆமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தின் விசாரணையின் முதற்கட்ட அறிக்கை வெளியாகி இருக்கிறது. 15 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கையில் பல தகவல்கள் இடம்பெற்றுள்ள நிலையில், எரிபொருள் எஞ்ஜினுக்குச் செல்வதை கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் தொடர்பாக விமானிகள் இடையே நடந்த கடைசி நேர உரையாடல் கவனம் பெற்றிருக்கிறது.

சரி, Fuel cut-off switch என்றால் என்ன? அதன் வேலை என்ன என்பதை பார்க்கலாம்.

இவை விமானிகள் அறையின் மையப் பகுதியில் உள்ள இரண்டு சுவிட்சுகள். விமானம் தரையில் இருக்கும்போது என்ஜின்களை ஆன் செய்யவும், தரையிறங்கிய பின் ஆஃப் செய்யவும் பயன்படுத்தப்படும்.

பொதுவாக பறக்கும்போது இவை பயன்படுத்தப்படாது. ஆனால், சில விதிவிலக்கு உண்டு. உதாரணமாக, எஞ்ஜின் கோளாறு அல்லது தீ விபத்து ஏற்பட்டால், எஞ்ஜினுக்கு எரிபொருள் விநியோகத்தை நிறுத்த பயன்படுத்தப்படும். ஆனால் அது போன்ற சந்தர்ப்பம் அரிதானதே.

Fuel cut-off சுவிட்சுகள் தனி power system மற்றும் வயரிங் கொண்டுள்ளன, fuel valve இந்த சுவிட்சுகளால் கட்டுப்படுத்தப்படும். அதில் ஏதேனும் தவறு நடந்தால், அதன் விளைவு உடனடியாகத் தெரியும். engine power துண்டிக்கப்படும் என அமெரிக்க விமானப் பாதுகாப்பு நிபுணர் ஜான் காக்ஸ் ராய்ட்டர்ஸ் செய்தி முகமையிடம் தெரிவித்தார்.

விமானிகள் தற்செயலாக இந்த சுவிட்சை அணைக்க முடியாது, தவறுதலாக அணைக்க கூடிய வகையில் அது வடிவமைக்கப்படவில்லை என விமான நிபுணர்கள் கூறுகின்றனர்.

தற்போது வெளியாகி இருப்பது முதல் கட்ட அறிக்கைதான். எனவே ஏன் இது நடந்தது என்பது இன்னும் தெளிவாக தெரியவில்லை. விசாரணை முகமைகளின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பை வழங்குவதாக ஏர் இந்தியா தெரிவித்திருக்கிறது.

ஆமதாபாத் விமான விபத்தின் முதற்கட்ட விசாரணை அறிக்கை தொடர்பாக பிபிசி தமிழ் மேலும் பல முக்கிய செய்திகளை வெளியிட்டுள்ளது. அதனை இந்த இணைப்புகளில் நீங்கள் படிக்கலாம்

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு