கபில்தேவை முந்திய பும்ரா: வழக்கமான பலவீனம் மீண்டும் வெளிப்பட்டதால் நெருக்கடியில் இந்தியா

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ரா எழுதியவர், தினேஷ் குமார். எஸ்பதவி, கிரிக்கெட் விமர்சகர்43 நிமிடங்களுக்கு முன்னர்

பிரிட்டனின் லார்ட்ஸ் மைதானத்தில் இந்தியா – இங்கிலாந்து கிரிக்கெட் அணியினருக்கு இடையே மூன்றாவது டெஸ்ட் போட்டி நடைபெற்று வருகிறது. போட்டியின் இரண்டாம் நாளான நேற்று நடந்தது என்ன? இந்த போட்டியில் வெற்றியை நோக்கிச் செல்கிறதா இந்திய அணி! ஒரு அலசல்.

கிட்டத்தட்ட நான்கரை ஆண்டுகளுக்கு பிறகு டெஸ்ட் கிரிக்கெட்டுக்கு திரும்பிய ஜோப்ரா ஆர்ச்சர், தன்னுடைய மூன்றாவது பந்திலேயே அபாயகரமான பேட்ஸ்மேன் ஜெய்ஸ்வாலின் விக்கெட்டை எடுத்து லார்ட்ஸ் மைதானத்தையே அதிரவைத்தார்.

டெஸ்ட் கிரிக்கெட்டில் தரமான வேகப்பந்து வீச்சாளர்கள் விக்கெட் வீழ்த்துவதை பார்ப்பதை விட மகிழ்ச்சியான விஷயம் வேறு ஒன்றுமில்லை.

ஸ்விங் பந்துவீச்சுக்கு பெயர் போன பிரிட்டன் மண்ணில், ஆர்ச்சர் போன்ற முழுமையான வேகப்பந்து வீச்சாளரை ரசிகர்கள் ஆரவாரத்துடன் கொண்டாடுவது கண்கொள்ளா காட்சி. மெதுவான வேகம் கொண்ட மைதானம் என்பதால் லார்ட்ஸ் டெஸ்டின் இரண்டாம் நாள் ஆட்டமும் மந்தமாக தொடங்கி மந்தமாகவே முடிந்தது.

கீழ்வரிசை பேட்ஸ்மேன்களின் விக்கெட்களை எடுக்க முடியாமல் தடுமாறுவது இந்தியாவுக்கு ஒன்றும் புதிதல்ல. நல்ல டெக்னிக் தெரிந்த பேட்ஸ்மேன்களை ஆட்டமிழக்க வைக்கத் தெரிந்த இந்திய பந்துவீச்சாளர்கள் கடைசிக்கட்ட விக்கெட்டுகளை கைப்பற்ற முடியாமல் தவிப்பது ஆச்சர்யம்தான்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சதம் அடித்த ஜோ ரூட்கபில் தேவ் சாதனையை தகர்த்த பும்ரா

ஸ்டோக்ஸ், ரூட், வோக்ஸ் என மூன்று முக்கிய விக்கெட்களை பும்ரா கைப்பற்றிய பிறகு, ஒருகட்டத்தில் 271 ரன்களுக்கு 7 விக்கெட்டுகள் இழந்து இக்கட்டான நிலையில் இங்கிலாந்து அணி இருந்தது.

எட்டாவது விக்கெட்டுக்கு விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஜேமி ஸ்மித்–கார்ஸ் இணைந்து 84 ரன்கள் சேர்த்து இந்திய பந்துவீச்சாளர்களுக்கு தலைவலியை உண்டாக்கினர். சிராஜ் பந்துவீச்சில் ஜேமி ஸ்மித் கொடுத்த சுலபமான கேட்ச்சை ராகுல் தவறிவிட்டது ஆட்டத்தின் போக்கை மாற்றியது எனலாம். 387 ரன்கள் என்ற வலுவான ஸ்கோரை இங்கிலாந்து பதிவு செய்ததற்கு ராகுல் செய்த தவறவிட்ட வாய்ப்புதான் முக்கிய காரணம்.

முதல் நாளில் புரூக் விக்கெட்டை கைப்பற்றிய பும்ரா, நேற்று ஆட்டம் தொடங்கிய மூன்றாவது ஓவரிலேயே ஸ்டோக்ஸ் விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ரா பந்தில் ஜோ ரூட் கிளீன் போல்டான காட்சிபும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன. ஸ்டோக்ஸ் பவுண்டரி அடிப்பார் என்று தெரிந்தும் ஷார்ட் & வைடாக முந்தைய பந்தை வீசி செட் செய்த பும்ரா, அடுத்த பந்தை அரவுண்ட் த விக்கெட்டில் இருந்து உள்ளே கொண்டு வந்து இங்கிலாந்து கேப்டனின் ஆஃப் ஸ்டம்ப் தலையை பதம்பார்த்தார்.

அடுத்த ஓவரில் சதமடித்து பெரிய இன்னிங்ஸ் ஒன்றுக்கு தயாராகி கொண்டிருந்த ரூட்டின் மிடில் ஸ்டம்ப்பை தகர்த்தார். அடுத்த பந்திலேயே வோக்ஸ் விக்கெட்டையும் காவு வாங்கினார். 5 விக்கெட்டுகளை கைப்பற்றிய பும்ரா lord’s honours board இல் தன் பெயரை பதிவுசெய்தார்.

அயல் மண்ணில் அதிகமுறை 5 அல்லது அதற்கு மேல் விக்கெட்டுகள் (Five wicket haul) கைப்பற்றிய இந்திய வீரர் என்ற பெருமைக்கு சொந்தக்காரராக இருந்த கபில்தேவை(12) பும்ரா முந்தினார். பும்ரா இதுவரை 13 முறை வெளிநாட்டு மண்ணில் 5 அல்லது அதற்கும் மேல் விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார். பும்ரா போட்டுக் கொடுத்த அடித்தளத்தை பிற வேகப்பந்து வீச்சாளர்கள் சரியாகப் பயன்படுத்திக்கொள்ளவில்லை என்றுதான் சொல்லவேண்டும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பும்ராவின் வியூகங்கள், பொறி வைப்பு முறைகள் மறைந்த ஆஸ்திரேலிய ஜாம்பவான் வார்னை நினைவுட்டுகின்றன கருண் நாயர் – ராகுல் அமைத்துக் கொடுத்த நல்ல ‘ஓப்பனிங்’

முதல் நாள் போலவே ஆகாஷ் தீப்பின் லைன் & லென்த் நேற்றும் சரியாக இல்லை. சிராஜ் ஒருபக்கம் கட்டுக்கோப்பாக பந்து வீசினாலும் அவருக்கு நேற்றும் அதிர்ஷ்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். கடைசியாக ஜேமி ஸ்மித்–கார்ஸ் விக்கெட்டுகளை அவர் கைப்பற்றியது ஆறுதலாக அமைந்தது.

இந்திய அணி இங்கிலாந்து இன்னிங்ஸில் ஒட்டுமொத்தமாக 5 பந்துகளை பயன்படுத்தியது. Bazball யுகத்தில் Dukes பந்தின் தரம் குறித்து விவாதங்கள் எழுந்து வரும் நிலையில், புதிய பந்துக்காக அம்பயர்களிடம் கேப்டன் கில் போராடியது கவனம் பெற்றுள்ளது.

10 ஓவர்களில் பஞ்சு போல மாறிவிடும் Dukes பந்துகளில் Swing & Seam செய்து விக்கெட் வீழ்த்துவது சாதாரண விஷயமல்ல. நாசர் ஹுசைன், ஹார்மிசன் போன்றவர்கள் அடிக்கடி பந்தை மாற்றும் இந்திய அணியின் அணுகுமுறையை விமர்சித்த நிலையில், இங்கிலாந்து ஜாம்பவான் ஸ்டூவர்ட் பிராட், Dukes பந்துகளின் தரம் குறித்து வெளிப்படையாக விமர்சித்திருப்பது பாராட்டுக்குரியது.

கருண் நாயர், தனது மறுவருகையில் நம்பிக்கை அளிக்கும்விதமாக விளையாடினாலும் பெரிய இன்னிங்ஸ் எதையும் பதிவுசெய்யவில்லை. ஆஃப் ஸ்டம்ப் லைனில் வெளியே செல்லும் பந்துகளுக்கு அவருக்கு இருக்கும் பலவீனம் நேற்றும் வெளிப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆர்ச்சரின் பந்தை எதிர்கொள்ளும் கருண் நாயர் ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்த பிறகு மூன்றாவது விக்கெட்டுக்கு ராகுலுடன் இணைந்த கருண், பிரமாதமான டைமிங்குடன் (Timing) விளையாடி தனது அனுபவத்தையும் திறமையையும் வெளிப்படுத்தினார். அலாதியான கால்பாடம் (Footwork) இல்லையென்ற போதும், எடையை முன்னும் பின்னும் இலகுவாக மடைமாற்றி சில அழகான டிரைவ்களை கவர், ஸ்கொயர் திசைகளில் அடித்தார்.

கர்நாடக மண்ணின் மைந்தர்களான ராகுல், கருண் இருவரின் நேர்த்தியான ஆட்டமும் அழகிய லார்ட்ஸ் மைதானத்தில் கண்களுக்கு விருந்தளித்தது. முதலிரு டெஸ்ட்களை போலவே நல்லபடியாக செட் ஆனபிறகு, விக்கெட்டை தாரைவார்த்தது அவருக்கு நிச்சயம் வருத்தம் ஏற்படுத்திருக்கும்.

சாதனை படைத்த ரூட்

கருண் நாயர் கேட்ச்சின் மூலம், டெஸ்டில் அதிக கேட்ச்கள் பிடித்தவர் (210) என்ற சாதனையை ரூட் படைத்தார். உலகின் தலைசிறந்த ஸ்லிப் பீல்டர்கள் அனைவரும் Ball sense கொண்டவர்களாக இருப்பார்கள்.

கேட்ச்சிங்கின் போது மட்டுமில்லாமல் அவர்களுடைய பேட்டிங்கிலும் அந்த ball sense எதிரொலிக்கும். மார்க் வாஹ், டிராவிட், ஜெயவர்த்தனே என நிறைய பேரை உதாரணமாக சொல்லலாம். இந்திய அணியினர் தொடர்ச்சியாக ஸ்லிப் பிராந்தியத்தில் கேட்ச்களை கோட்டைவிடும் நிலையில், எப்படி ஸ்லிப்பில் செயல்பட வேண்டுமென ரூட் பாடமெடுத்தது போல அந்தக் கேட்ச் அமைந்தது. ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியுடன் திரும்பி வந்து, முக்கிய விக்கெட்டான கருண் நாயர் விக்கெட்டை எடுத்துள்ளது இங்கிலாந்துக்கு சாதகமான விஷயம்.

பட மூலாதாரம், Getty Images

இந்த தொடரில் எதிர்பார்த்த அளவுக்கு சோபிக்காத வோக்ஸ், தன்னுடைய டிரேட் மார்க் wobble seam பந்தின் மூலம் கில் விக்கெட்டை கைப்பற்றி, கடைசி நேரத்தில் ஆட்டத்தை இங்கிலாந்தின் பக்கம் திருப்பியுள்ளார்.

உள்ளே வரும் பந்துகளுக்கு கவனத்தை குவித்த கில், பிட்ச் ஆகி எந்தப் பக்கம் செல்லும் என்று பந்துவீச்சாளருக்கு கூட தெரியாத, wobble seam பந்தில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் எட்ஜ் கொடுத்து ஆட்டமிழந்தார்.

கடந்த 5 ஆண்டுகளில் உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களின் பேட்டிங் சராசரி அடிவாங்கியதில் wobble seam பாணி பந்துவீச்சுக்கு ஒரு முக்கிய பங்குண்டு. இந்தியாவின் சிராஜ் இதே பாணியில் பந்துவீசியும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்த முடியாததற்கு ஆடுகளத்தின் மெதுவான தன்மையும் ஒரு காரணம். மெதுவான வேகம் கொண்ட மைதானத்தில் வோக்ஸ் போல வேகத்தை குறைத்து வீசுவதும் பலனளிக்கும்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த தொடரின் மிகச் சிறந்த பேட்ஸ்மேன் என்றால் அது ராகுல்தான். கில் அளவுக்கு ரன்கள் குவிக்கவில்லை என்றாலும் தொழில்நுட்ப ரீதியாக ராகுலின் பேட்டிங் உச்சத்தில் இருக்கிறது.

கடந்த இங்கிலாந்து சுற்றுப்பயணத்திலும் ராகுல் ரோஹித்துடன் சேர்ந்து பிரமாதமான தொடக்கம் ஏற்படுத்திக் கொடுத்ததை மறக்க முடியாது. 145 கிமீ வேகத்துக்கு மேல் வீசப்படும் பந்துகளையும் முன்னங்காலுக்கு சென்று ராகுல் நேர்த்தியாக தற்காப்பு ஆட்டம் விளையாடுகிறார்.

இந்திய அணி கில் விக்கெட்டை விரைவாக இழந்த நிலையில், இன்று பெரிய இன்னிங்ஸ் விளையாட வேண்டிய பொறுப்பு ராகுலுக்கு உள்ளது.

முதல் நாளில் விரலில் காயமடைந்த பந்த், கடுமையான சிரமத்துடன் பேட்டிங் செய்து வருகிறார். இந்திய அணி 242 ரன்கள் பின்தங்கியுள்ள நிலையில், ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராகுலுடன் சேர்ந்து மூன்றாம் நாளில் பந்த் எப்படி இன்னிங்ஸை தொடங்குகிறார் என்பது ஆட்டத்தின் முடிவை தீர்மானிக்கும்.விரலில் காயமடைந்துள்ள பந்த்துக்கு சவால் அளிக்கும் விதமாக இங்கிலாந்து அணி ஆர்ச்சரை கொண்டு வந்து தாக்குதல் பாணி ஆட்டம் ஆடாதது ஏன் என புரியவில்லை.

பந்துவீச்சில் 50-60 ரன்களை கூடுதலாக இந்தியா விட்டுக்கொடுத்த நிலையில், மூன்றாம் நாள் முழுவதும் பேட் செய்து ரன் சேர்க்க வேண்டிய நெருக்கடியில் இந்தியா உள்ளது. முதல் நாளில் இரு அணிகளுக்கும் சம பலத்தில் முடிந்த ஆட்டம், இரண்டாம் நாளில் இங்கிலாந்தின் கைகளுக்கு சென்றுள்ளது.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு