கிரிந்த மீன்பிடி துறைமுகத்தில் மணல் அகழ்வு திட்டத்தை கொரிய நிறுவனத்திற்கு சட்ட நடைமுறைகளை மீறி வழங்கியதன் ஊடாக அரசாங்கத்திற்கு 2.62 பில்லியன் ரூபாவிற்கு மேல் இழப்பு ஏற்படுத்திய வழக்கில் சந்தேகநபராக பெயரிடப்பட்டுள்ள முன்னாள் கடற்றொழில், நீரகவளமூலங்கள் அபிவிருத்தி அமைச்சர் ராஜித சேனாரத்ன, தனது தொலைபேசி இணைப்பை துண்டித்துவிட்டு வீட்டை விட்டு வெளியேறியுள்ளதாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு நேற்று (11) கொழும்பு நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.

இந்த விசாரணை தொடர்பாக வாக்குமூலம் அளிக்குமாறு பலமுறை அவருக்கு அறிவிக்கப்பட்டிருந்தாலும், பல்வேறு பொய்யான காரணிகளை முன்வைத்து, வாக்குமூலம் வழங்குவதை அவர் தொடர்ந்து புறக்கணித்து வருவதாக ஆணைக்குழுவின் அதிகாரிகள் நீதிமன்றத்தில் குற்றம் சாட்டினர்.

ராஜித சேனாரத்ன உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறும் மருத்துவ அறிக்கை, சட்டத்தரணி ஒருவரின் ஊடாக இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த அறிக்கையை ஏற்றுக்கொள்வதற்கான எந்தவொரு சட்ட ரீதியான அடிப்படையும் இல்லையெனவும் அவர்கள் நீதிமன்றில் குறிப்பிட்டனர்.

சந்தேக நபர் நாட்டிற்கு வெளியே இருப்பதாக தெரிவித்துள்ளதாகவும், பல்வேறு பொய்யான காரணிகளை கூறி ஆணைக்குழுவில் முன்னிலையாவதை தவிர்த்து வருவதாக தெரிவித்த இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகள், அவரைக் கைது செய்ய பிடியாணை பிறப்பிக்குமாறு நீதிமன்றத்தை கோரினர்.

சந்தேக நபர் ஏதேனும் மருத்துவ அறிக்கைகளை சமர்ப்பித்தாரா என்று இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிடம் நீதவான் கேள்வி எழுப்பினார்.  அதற்கு பதிலளித்த அதிகாரிகள், அந்த ஆவணங்கள் இலஞ்ச ஒழிப்பு ஆணையத்தின் கோப்பில் இருப்பதாகக் குறிப்பிட்டனர்.

சந்தேக நபருக்கு பிடியாணை பிறப்பிக்க, தொடர்புடைய ஆவணங்களை நீதிமன்றத்தின் கவனத்திற்குக் கொண்டுவருவது அவசியம் என்று நீதவான் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழு அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டினார்.

எனினும், இந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்வதற்கு இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவிற்கு அதிகாரம் உள்ளதாக நீதவான் சுட்டிக்காட்டினார்.

எனவே, சந்தேக நபரைக் கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த அதிகாரங்களைப் பயன்படுத்துமாறும் இலஞ்ச ஒழிப்பு ஆணைக்குழுவுக்கு நீதவான் உத்தரவிட்டார்.