ஆமதாபாத் விமான விபத்துக்கு காரணம் என்ன? முதல் கட்ட விசாரணை அறிக்கை வெளியீடு

பட மூலாதாரம், Getty Images

16 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த மாதம் குஜராத்தின் ஆமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு செல்ல வேண்டிய விமானம் விபத்துக்குள்ளானது. விபத்திற்கான காரணங்கள் குறித்து நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையின் அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. விமான விபத்திற்கான முக்கிய காரணம் என்பதை வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளது இந்த அறிக்கை.

இந்தியாவின் விமான விபத்து விசாரணை முகமையான ஏ.ஏ.ஐ.பி. இந்த விசாரணை அறிக்கையை தற்போது வெளியிட்டுள்ளது.

அறிக்கையின் படி விமானம் இயங்க ஆரம்பித்த சில நொடிகளிலேயே எரிபொருளை கட்டுப்படுத்தும் இரண்டு சுவிட்சுகளும் ‘கட்-ஆஃப்’ நிலைக்கு சென்றுவிட்டது. இந்த இரண்டு சுவிட்சுகள் தான் என்ஜினை நிறுத்தும் பணிக்காக பயன்படுத்தப்படுகிறது.

விமானத்தை இயக்கும் முன்பகுதியில் ஒரு விமானி மற்றவரிடம், “ஏன் அது கட்-ஆஃப் நிலையில் இருக்கிறது?” என்ற கேள்வியை எழுப்பியது பதிவாகியுள்ளது.

அந்த கேள்விக்கு பதில் அளித்த மற்ற விமானி, அதை தான் செய்ய வில்லை என்று தெரிவிக்கிறார். இதில் கேள்வி கேட்டது யார்? பதில் கூறியது யார் என்பதில் தெளிவில்லை.

விமானத்தை இயக்கும் போது, இணை – விமானி விமானத்தை இயக்கியுள்ளார். கேப்டன் அதனை மேற்பார்வை செய்துள்ளார்.

இந்த விசாரணைக்கு முழுமையான ஒத்துழைப்பை நல்குவதாக ஏர் இந்தியாவின் செய்தித் தொடர்பாளார் கூறியுள்ளார்.

விபத்திற்கு முன்பு நடந்தது என்ன?

பட மூலாதாரம், Getty Images

15 பக்கங்கள் கொண்ட முதல் கட்ட அறிக்கை, ஏர் இந்தியா விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் என்ன நடந்தது என்பதை விவரிக்கிறது.

அந்த அறிக்கையின்படி, “விமானம் அதன் அதிகபட்ச பதிவு செய்யப்பட்ட வேகமான 180 நாட்ஸ் என்ற அளவை பிற்பகல் 1:38:42 மணிக்கு எட்டியது, அதன் பிறகு சிறிது நேரத்திலேயே, என்ஜின் 1 மற்றும் எஞ்சின் 2 க்கான எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சுகள் ஒரு வினாடி இடைவெளியில் ஓட்டத்திலிருந்து கட்-ஆஃப் நிலைக்கு நகர்ந்தன.”

அடுத்தபடியாக, “ஒரு காக்பிட் குரல் பதிவில், ஒரு விமானி மற்றவரிடம் ஏன் கட்-ஆஃப் செய்தீர்கள் என்று கேட்பது கேட்கிறது. மற்றொரு விமானி தாம் கட்-ஆஃப் செய்யவில்லை என்று பதிலளித்தார்.”

சுமார் 10 வினாடிகள் கழித்து, என்ஜின் 1 இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்ச் ‘கட் ஆஃப்’ இலிருந்து ‘ரன்’ ஆக மாறியது. பின்னர் நான்கு வினாடிகள் கழித்து, எஞ்சின் 2 இன் எரிபொருள் கட்-ஆஃப் சுவிட்சும் ‘கட் ஆஃப்’ என்பதிலிருந்து ‘ரன்’ ஆக மாறியது. ” நேரம் இப்போது பிற்பகல் 1:38:56.

பிற்பகல் 1:39:05 மணிக்கு, அதாவது 9 வினாடிகள் கழித்து, விமானிகளில் ஒருவர் தரையில் இருந்த விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டு அதிகாரிகளுக்கு “மேடே, மேடே, மேடே” என்று ஒரு செய்தியை அனுப்பினார். அவருக்கு எந்த பதிலும் கிடைக்கவில்லை, சிறிது நேரத்திற்குப் பிறகு அவர் விமானம் விபத்துக்குள்ளாவதை கண்டார்.

இயந்திரங்கள் வேலை செய்வதை நிறுத்தியபோது, ரேம் ஏர் டர்பைன் (ஒரு சிறிய ப்ரொபல்லர் போன்ற சாதனம்) அவசர ஹைட்ராலிக் சக்தியை வழங்க தானாகவே செயல்படுத்தப்பட்டது.

விமான நிலையத்திலிருந்து வந்த சிசிடிவி காட்சிகள், விமானம் மேலே பறக்கத் தொடங்கிய போது, அதாவது விமானம் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரேம் ஏர் டர்பைன் (RAT) செயல்படுத்தப்பட்டதைக் காட்டியது. விமானப் பாதையில் பறவைகளின் நடமாட்டம் எதுவும் பெரியளவில் பதிவாகவில்லை. விமான நிலைய ஓடுபாதை எல்லையைக் கடப்பதற்கு முன்பே விமானம் உயரத்தை இழக்கத் தொடங்கியது.” என்கிறது அந்த அறிக்கை.

‘விமானியும் விமானக் குழுவினரும் தகுதியானவர்கள்’

ஏர் இந்தியா விமானத்தில் ஏறுவதற்கு முன், விமானிகள் மற்றும் விமானக் குழுவினர் விமானத்தை ஓட்டத் தகுதியானவர்களா என்பதை உறுதிப்படுத்த சோதனை செய்யப்பட்டன.

அறிக்கையின்படி, 2விமானிகளும் மும்பையைச் சேர்ந்தவர்கள், விமானம் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பு ஆமதாபாத்தை அடைந்த அவர்களுக்கு போதுமான ஓய்வு கிடைத்தது.

அனைத்து விமானிகளும் விமானக் குழுவினரும் உள்ளூர் நேரப்படி காலை 06:25 மணிக்கு சுவாசப் பகுப்பாய்வு சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர், அவர்கள் ‘விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள்’ என்று கண்டறியப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

எரிபொருள் மாதிரிகள் திருப்திகரமாக உள்ளன: அறிக்கை

அறிக்கையின்படி, ஏர் இந்தியா விமானத்திற்கு எரிபொருள் டேங்கில் இருந்து எடுக்கப்பட்ட எரிபொருள் மாதிரிகள் “திருப்திகரமானவை” என்று கண்டறியப்பட்டுள்ளது.

விபத்துக்கு எரிபொருள் பிரச்னை ஒரு காரணமாக இருக்கலாம் என்று விமான நிபுணர்கள் முன்பு பிபிசியிடம் கூறியிருந்தனர். எரிபொருள் பிரச்னை அல்லது அடைப்பு இரண்டு என்ஜின்களும் செயலிழக்க காரணமாக இருக்கலாம் என்பது அவர்களின் கருத்தாக இருந்தது.

விமான இயந்திரங்கள் துல்லியமான எரிபொருள் அளவீட்டு முறையைச் சார்ந்துள்ளன. இந்த அமைப்பு செயலிழந்தால், எரிபொருள் விநியோகம் துண்டிக்கப்பட்டு இயந்திரம் நிறுத்தப்படலாம்.

ஏபியூ (APU) வடிகட்டி மற்றும் இடது இறக்கை எரிபொருள்/ஜெடிசன் வால்விலிருந்து ‘மிகக் குறைந்த அளவிலான எரிபொருள் மாதிரிகள்’ சேகரிக்கப்பட்டதாக அறிக்கை கூறியது.

‘மிகச்சிறிய அளவில் கூட மாதிரிகளை எடுத்து சோதனை செய்யும் திறன் கொண்ட ஆய்வகத்தில் இந்த மாதிரிகள் பரிசோதனை செய்யப்படும்’ என்று அறிக்கை கூறுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு