Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த அமைப்பின் பிற தலைவர்களால் பயன்படுத்தப்பட்டதாக சந்தேகிக்கப்படும் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மந்துவில் பகுதியில் உள்ள நிலத்தடி பதுங்கு குழியில் ஆயுதங்களைத் தேடி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திலிருந்து பெறப்பட்ட உத்தரவின் பேரில், காவற்துறையினர் மற்றும் விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் பிரிவால் நேற்று (10.07.25) இந்த அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.
புதுக்குடியிருப்பு காவல் நிலைய பொறுப்பதிகாரிக்கு கிடைத்த புலனாய்வு தகவலுக்கு அமைய முல்லைத்தீவு நீதவான் நீதிமன்றத்திற்கு சமர்ப்பணங்களை முன்வைத்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கடந்த போரின் போது பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களால் சுமார் 20 அடி ஆழம் கொண்ட இந்த நிலத்தடி பதுங்கு குழியின் நுழைவாயில்கள் அழிக்கப்பட்டன.
2009ஆம் ஆண்டில், விடுதலை புலிகள் அமைப்பின் பிரதான முகாமாக இந்த இடம் பயன்படுத்தப்பட்டுள்ளதுடன், முகாமின் அளவு இரண்டு ஏக்கருக்கும் அதிகமாகும் என காவற்துறையினர் தெரிவித்தனர்.
பொது மக்களுக்குச் சொந்தமான நிலத்தில் கட்டப்பட்ட இந்த முகாம் பாதுகாப்புப் படையினரால் கையகப்படுத்தப்பட்ட பிறகு, கண்ணி வெடிகள் அகற்றப்பட்டு அசல் உரிமையாளர்களிடம் ஒப்படைக்கப்பட்டதுடன், வெளியாட்கள் உள்ளே நுழைய முடியாதபடி பாதுகாப்புப் படையினர் நிலத்தடி பதுங்கு குழியை மண்ணால் மூடிவிட்டனர்.
அந்த நேரத்தில், விடுதலை புலிகள் அமைப்பால் பொதுமக்களிடமிருந்து பறிக்கப்பட்ட தங்கத்தை மறைத்து வைத்திருந்ததாக சந்தேகத்தின் பேரில் பல்வேறு குழுக்களும் நிலத்தடி பதுங்கு குழியை தோண்ட முயன்றதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
விசேட அதிரடிப் படையின் வெடிகுண்டு செயலிழப்புப் வழிகாட்டுதலின் கீழ் பெக்கோ இயந்திரங்களைப் பயன்படுத்தி அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படும் அதே நேரத்தில் தொல்பொருள் அதிகாரிகள் மற்றும் நீதித்துறை அதிகாரிகள் பணிகளை கண்காணித்து வருகின்றனர்.