ஆசியாவை நிலைகுலைய வைக்கும் டிரம்பின் வரி விதிப்பு, கவலையில் உற்பத்தியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, வரி பேச்சுவார்த்தைகளுக்கான காலக்கெடுவை அதிபர் டிரம்ப் மீண்டும் நீட்டித்துள்ளார்எழுதியவர், ஆஸ்மண்ட் சியாபதவி, வணிக நிருபர், பிபிசி நியூஸ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

ஜப்பானிய பொருட்களுக்கு 25% வரி விதிப்பதாகக் கூறி, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் சமீபத்தில் அச்சுறுத்தியதை, ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா “மிகவும் வருந்தத்தக்கது” என்று விவரித்தார்.

அமெரிக்காவின் நீண்டகால நட்பு நாடான ஜப்பான், இதைத் தவிர்க்க கடுமையாக முயல்கிறது. தனது கார் தயாரிப்பு நிறுவனங்களுக்கு சலுகைகள் கோரும் அதேவேளையில், அமெரிக்க அரிசிக்கு சந்தையைத் திறக்க வேண்டும் என்றும் அழுத்தம் தரப்படுவதை அந்நாடு எதிர்க்கிறது.

இதற்காகப் பல சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளன.

ஏப்ரல் 2025 முதல், டிரம்ப் நட்பு மற்றும் எதிரி நாடுகளுக்கு எதிராக கடுமையான வரிகளை அறிவித்த பிறகு, ஜப்பானின் வர்த்தக அமைச்சர் ஏழு முறை வாஷிங்டனுக்கு சென்றுள்ளார். ஆனால், இந்த பயணங்கள் எதிர்பார்த்த பலனைத் தரவில்லை. பேச்சுவார்த்தைகள் தொடர்ந்ததால், ​முன்பு ஜப்பானை “கடினமானது” என்று கூறிய டிரம்ப், தற்போது அதை “மோசமானது” என்று அழைக்கத் தொடங்கினார்.

இந்த வாரம், 23 நாடுகளுக்கு அனுப்பப்பட்ட வரிக் கடிதங்களின் பட்டியலில் ஜப்பான் இடம்பெற்றது, இதில் 14 ஆசிய நாடுகள் உள்ளன. தென் கொரியா முதல் இலங்கை வரை, பல நாடுகள் ஏற்றுமதி சார்ந்த உற்பத்தி மையங்களாக உள்ளன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

வெள்ளிக்கிழமை, கனடாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 35% வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். மேலும், பெரும்பாலான வர்த்தகப் பங்காளிகளுக்கு 10% முதல் 20% வரை மொத்த வரிகளை உயர்த்த திட்டமிட்டு இருப்பதாகவும், இவை பணவீக்கத்தை அதிகரிக்கும் என்ற கவலைகளையும் டிரம்ப் நிராகரித்தார்.

“மீதமுள்ள அனைத்து நாடுகளும் 15% அல்லது 20% வரி செலுத்த வேண்டும். அதை இப்போது முடிவு செய்வோம்,” என்று அவர் என்பிசியிடம் கூறினார்.

ஆகஸ்ட் 1, 2025-க்குள் உலக நாடுகள் அமெரிக்காவுடன் ஒப்பந்தம் செய்ய வேண்டும். ஆனால், ஜப்பான் போன்ற நட்பு நாடு, ஒப்பந்தத்திற்கு முயன்றும் கடுமையான வரிகளை எதிர்கொள்வதால், மற்ற நாடுகள் தங்களது வாய்ப்புகள் குறித்துக் கவலைப்படலாம்.

இந்த நிலையில், டிரம்ப் மீண்டும் வரி விதிப்பு முறையை மாற்றியுள்ளார். அப்படியானால், இதில் வெற்றியும் தோல்வியும் யார் பக்கம் உள்ளது?

அமெரிக்க-சீன பதற்றங்களில் சிக்கிய பிற நாடுகள்

பட மூலாதாரம், Getty Images

ஒரு வகையில், இந்த ஆண்டின் தொடக்கத்தில் டிரம்ப் குறிவைத்த அனைத்து நாடுகளும் (கிட்டத்தட்ட) காலக்கெடு நீட்டிப்பால் பயனடைகின்றன. இப்போது ஒப்பந்தங்களைச் செய்ய அவர்களுக்கு இன்னும் மூன்று வாரங்கள் உள்ளன.

“ஆகஸ்ட் 1 காலக்கெடுவுக்கு முன் அடுத்தகட்ட பேச்சுவார்த்தைகளை மேற்கொள்ள அழுத்தம் இருப்பது நம்பிக்கை அளிக்கிறது,” என யுனைடெட் ஓவர்சீஸ் வங்கியின் ஆராய்ச்சித் தலைவர் சுவான் டெக் கின் கூறினார்.

இந்த வாரம் வரி தொடர்பான கடிதங்களைப் பெற்ற தாய்லாந்து, மலேசியா போன்ற வளர்ந்து வரும் பொருளாதாரங்கள், ஒரு தீர்வைத் தேடுவதில் குறிப்பாக ஆர்வமாக இருக்கும். சீன ஏற்றுமதிகள் மூன்றாம் நாடுகள் வழியாக (டிரான்ஸ்ஷிப்ட் பொருட்கள்) அனுப்பப்படுவதை அமெரிக்கா இலக்காக வைத்திருப்பதால், அந்த நாடுகள் அமெரிக்க-சீன பதற்றங்களில் சிக்கியுள்ளன.

வர்த்தக ஒப்பந்தங்களின் சிக்கலான தன்மை காரணமாக கால நீட்டிப்பு செய்யப்படுவதற்கான வாய்ப்புள்ளதாக பொருளாதார வல்லுநர்கள் பிபிசியிடம் தெரிவித்துள்ளனர். சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் வணிக விரிவுரையாளர் அலெக்ஸ் காப்ரி, டிரம்பின் கோரிக்கைகள் தெளிவாக இல்லை என்றும், அவற்றைச் செயல்படுத்த நாடுகளுக்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்றும் கூறினார்.

உதாரணமாக, அமெரிக்காவுடனான வியட்நாமின் வர்த்தக ஒப்பந்தத்தில், கப்பல் வழியாக அனுப்பப்படும் பொருட்களுக்கு (டிரான்ஸ்ஷிப்ட்) குறிப்பாக வரி விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், இது முழுமையாகத் தயாரிக்கப்பட்ட பொருட்களுக்கா அல்லது அனைத்து இறக்குமதிக் கூறுகளுக்குமா என்பது தெளிவாக இல்லை.

விநியோகச் சங்கிலிகளைக் கண்காணிக்க மிகவும் மேம்பட்ட தொழில்நுட்பம் தேவைப்படும் எனவும், “இது மூன்றாம் தரப்பினர், தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் தளவாட கூட்டாளிகளை உள்ளடக்கிய மெதுவான, நீண்டகால, பரிணாம வளர்ச்சியடைந்து வரும் செயல்முறையாக இருக்கும்” என்றும் அலெக்ஸ் காப்ரி கூறினார்.

நஷ்டத்தில் ஆசிய உற்பத்தியாளர்கள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கம்போடியாவின் ஆடைத் தொழிலாளர்கள் தங்கள் வாழ்வாதாரத்திற்காக ஏற்றுமதி சார்ந்த தொழிலை நம்பியுள்ளனர்.உலகளாவிய வர்த்தகத்தை நஷ்டமடையச் செய்யும் வகையில், வரிகள் நீடிக்கும் என்பது தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்கா, ஐரோப்பா, சீனாவின் உலகளாவிய வணிகங்கள் ஆபத்தில் உள்ளதாக காப்ரி கூறினார்.

இது ஏற்றுமதியாளர்கள் மட்டுமல்ல, அமெரிக்க இறக்குமதியாளர்கள் மற்றும் நுகர்வோரை பாதிக்கிறது. மின்னணுவியல் முதல் ஜவுளி வரை உற்பத்தியால் வளர்ந்த ஆசியாவின் பொருளாதார இலக்குகள் மீது இது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும்.

சர்வதேச வர்த்தகம், குறிப்பாக அமெரிக்கா, சீனா இடையே, ஆழமாக இணைக்கப்பட்டு இருப்பதால், எந்த நாடு வெற்றி பெறுகிறது, எந்த நாடு தோல்வியடைகிறது என பூஜ்ஜிய-கணிப்பு செய்வது புத்திசாலித்தனமல்ல என்கிறார் அலெக்ஸ் காப்ரி.

ஆனால், சில நாடுகளுக்கு மற்றவற்றைவிட அதிக இழப்பு ஏற்படலாம். ஆசியாவில் முதலில் ஒப்பந்தம் செய்த வியட்நாம், வாஷிங்டனுக்கு எதிராகப் பலம் குறைவாக உள்ளதால், 40% வரை வரிகளை எதிர்கொள்கிறது.

ஏற்றுமதியை நம்பிய ஏழை நாடான கம்போடியாவும், 35% வரி அச்சுறுத்தலுக்கு மத்தியில் ஒப்பந்தத்திற்குப் பேச்சுவார்த்தை நடத்துகிறது. தென் கொரியாவும் ஜப்பானும் பணக்கார நாடுகளாக இருப்பதாலும், உலக அரசியலில் வலுவான செல்வாக்கை கொண்டிருப்பதாலும், நீண்ட காலம் தாக்குப் பிடிக்கலாம்.

இந்தியாவுக்கு இன்னும் வரிக் கடிதம் அனுப்பப்படவில்லை. ஆனால் அதற்கும் தனித்துவமான செல்வாக்கு உள்ளது. ஒப்பந்தம் உடனடியாகத் தோன்றினாலும், இந்திய விவசாயச் சந்தையை அணுகுவது, இறக்குமதி விதிகள் போன்ற முக்கியப் பிரச்னைகளால் தாமதமாகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அமெரிக்க – ஜப்பான் உறவில் சிக்கல்

“அமெரிக்காவுடனான நெருக்கமான பொருளாதார மற்றும் ராணுவ உறவு இருந்தபோதும், ஜப்பான் மற்ற ஆசிய வர்த்தக பங்காளிகளைப் போலவே நடத்தப்படுகிறது,” என பொருளாதார நிபுணர் ஜெஸ்பர் கோல் குறிப்பிட்டார்.

இது உறவை மாற்றக்கூடும், குறிப்பாக ஜப்பான் தனது பெரிய பொருளாதார இருப்புகளுடன் நீண்டகால பேச்சுவார்த்தைக்குத் தயாராக இருப்பதாகத் தெரிகிறது.

“ஜப்பான் கடினமான பேச்சுவார்த்தையாளராக உள்ளது, இது டிரம்பை எரிச்சலடையச் செய்திருக்கிறது என நான் நினைக்கிறன்” என்கிறார் கோல்.

அரிசிப் பற்றாக்குறையால் விலைகள் உயர்ந்திருந்தாலும், பிரதமர் இஷிபா அமெரிக்க அரிசியை வாங்க மறுத்து, உள்நாட்டு விவசாயிகளைப் பாதுகாக்கிறார். மேலும், ராணுவ செலவை அதிகரிக்க வேண்டும் என்ற அமெரிக்காவின் கோரிக்கைகளையும் அவரது அரசு நிராகரித்துள்ளது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் வரிகளால் சாம்சங் போன்ற உலகளாவிய வணிகங்கள் திவாலாகியுள்ளன”ஜப்பான் நன்கு தயாராக உள்ளது,” எனக் கூறுகிறார் ஜெஸ்பர் கோல்.

ஏப்ரல் 2025இல் டிரம்ப் வரிகளை அறிவித்த மறுநாள், ஜப்பான் பொருளாதார அவசரநிலையைப் பிரகடனம் செய்து, பாதிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு உதவ நூற்றுக்கணக்கான ஆலோசனை மையங்களை அமைத்ததாக அவர் தெரிவித்தார்.

“ஜப்பான் நம்பகமான ஒப்பந்தத்தை நாடும்,” என அவர் கூறினார். ஏனெனில் டிரம்ப் மீண்டும் மனம் மாற மாட்டார் என்பதற்கு உத்தரவாதம் இல்லை.

ஜூலை 2025இல் ஜப்பானின் மேல் சபைத் தேர்தல் நடைபெற உள்ளதால், ஆகஸ்ட் 1-க்குள் ஒப்பந்தம் எட்டப்படுவது ஆச்சரியமாக இருக்கும் என கோல் கூறினார்.

“யாரும் மகிழ்ச்சியாக இல்லை. ஆனால் இது ஜப்பானில் பொருளாதார மந்தநிலையை உருவாக்குமா? இல்லை,” என்கிறார் அவர்.

வர்த்தகப் போரில் யாருக்கு வெற்றி?

ஆசியா நீண்ட காலமாக அமெரிக்காவுக்கும் ஜப்பானுக்கும் இடையிலான முக்கியப் போர்க்களமாக இருந்து வருகிறது. ஆனால், வரிகள் காரணமாக டிரம்ப் தனது நிலையை இழக்கக்கூடும் என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்த ஒப்பந்தங்கள் சிக்கலானவை என்பதால், காலக்கெடுவை மீண்டும் நீட்டிப்பது டிரம்பின் மிகைப்படுத்தப்பட்ட நகர்வாக இருக்கலாம். “அமெரிக்காவின் பேரம் பேசும் நிலை உண்மையில் குறைந்துவிட்டது, ஏனெனில் அவர்களின் கை, உண்மையில் அவர்கள் விரும்பும் அளவுக்கு வலுவாக இல்லை என்பதை அவர்கள் வெளிப்படுத்தியுள்ளனர்” என்கிறார் சிங்கப்பூர் தேசிய பல்கலைக்கழகத்தின் பொருளாதார பேராசிரியர் டேவிட் ஜாக்ஸ்.

பட மூலாதாரம், Getty Images

ஒப்பந்தங்கள், பல தசாப்தங்களாக கட்டமைக்கப்பட்ட வர்த்தக உறவுகளை மாற்றியமைக்கும் வகையில் வரலாம். அதேபோல், பாரம்பரிய ராஜ்ஜீய வழிகள் மூலமாக அல்லாமல், கடிதங்களை ஆன்லைனில் வெளியிட டிரம்ப் தேர்வு செய்தது எதிர்விளைவை ஏற்படுத்தக்கூடும் என்று அதை “அரசியல் நாடகம்” என்று வர்ணித்த காப்ரி கூறினார்.

தொடர்ந்து பேசிய அவர், டிரம்பின் கணிக்க முடியாத தன்மைக்கு மாற்றாக தனக்கு நிலையான பிம்பத்தை உருவாக்க முயலும் சீனாவுக்கு இந்தக் குழப்பம் “சிறந்த பரிசு” எனத் தெரிவித்தார்.

ஆனால், அமெரிக்கச் சந்தையை மாற்றுவது எளிதல்ல. வியட்நாம் முதல் ஜப்பான் வரை, ஆசிய நாடுகளுடன் சீனாவுக்கு பதற்றங்கள் உள்ளன. சீனா தற்போது அமெரிக்காவுடன் வர்த்தகப் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது, ஆனால் முழு ஒப்பந்தத்திற்கு ஆகஸ்ட் 13, 2025 வரை நேரம் உள்ளது.

அதனால், இந்த வர்த்தகப் போரில் யாருக்கு அதிக நட்பு நாடுகள் கிடைக்கும் என்பதைக் கணிப்பது கடினம், ஆனால் போட்டி தொடர்கிறது.

“இரு தரப்பும் பிரிவினை தேவை என்பதை உணர்கிறார்கள். ஆனால் அதற்குச் செல்லும் பாதை கடினமானது. பல ஆண்டுகள், சில நேரங்களில் பல தசாப்தங்கள் நீடிக்கும் செயல்முறையாக அது இருந்துவிடலாம்” என்கிறார் பேராசிரியர் டேவிட் ஜாக்ஸ்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு