Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வன உரிமைச் சட்டம் பழங்குடிகளின் உரிமையை அங்கீகரிப்பதால் காடுகள் அழிகிறதா? உண்மை என்ன?
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், க. சுபகுணம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இந்திய வன உரிமைச் சட்டம், பழங்குடிகள் மற்றும் பாரம்பரியமாக காடுகளைச் சார்ந்து வாழும் மக்களுக்கான நில உரிமையை அங்கீகரிக்கிறது. ஆனால், இந்தச் சட்டம் காடுகள் சீரழிவதிலும் பங்கு வகிப்பதாக கடந்த மாதம் மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் பூபேந்தர் யாதவ் பேசியிருந்தார்.
அந்தக் கருத்துக்குக் கடும் எதிர்வினையாற்றிய சமூக ஆர்வலர்களும் பழங்குடி செயற்பாட்டாளர்களும் இணைந்து, பிரதமர் அலுவலகத்திற்குக் கடிதம் எழுதியுள்ளனர்.
இந்தச் சட்டத்தைத் தவறாகச் சித்தரிக்கும் முயற்சி, பழங்குடிகளின் உரிமைகள் மீதான மறைமுகத் தாக்குதல் என்றும் பழங்குடியின ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.
கடந்த 28-ஆம் தேதி, இதுதொடர்பாக 151 அமைப்புகள் பிரதமர் அலுவலகத்திற்கு கடிதம் எழுதின. அந்தக் கடிதத்தில், “மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம், தவறான கூற்றுகளைப் பரப்புவது, காட்டில் வாழும் சமூகங்களின் சட்டரீதியான உரிமைகளை அச்சுறுத்துவது ஆகிய நடவடிக்கைகளின் மூலம் வன உரிமைச் சட்டத்தைத் தொடர்ந்து சீர்குலைப்பதாக” குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சரின் விளக்கத்தைப் பெறுவதற்கு பிபிசி தமிழ் பல முறை முயன்றும் பதில் கிடைக்கவில்லை.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மத்திய அமைச்சர் வன உரிமைச் சட்டம் பற்றி கூறியது என்ன?
கடந்த ஜூன் 5ஆம் தேதியன்று ஹிந்துஸ்தான் டைம்ஸ் நாளிதழுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அமைச்சர் புபேந்திர யாதவ் பேட்டி அளித்திருந்தார்.
அதில், இந்திய காடுகள் பரப்பளவு குறித்த 2023ஆம் ஆண்டின் அறிக்கை, முதன்மைக் காடுகளின் சீரழிவைச் சுட்டிக் காட்டியுள்ளதாகக் குறிப்பிட்டு, அதை எவ்வாறு குறைக்க முடியும் என்று அவரிடம் ஒரு கேள்வி கேட்கப்பட்டது.
அந்தக் கேள்விக்குப் பதிலளித்த மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ், “அடர்ந்த காடுகளைப் பொறுத்தவரை நிகர பரப்பளவு அதிகரித்து இருந்தாலும், முதன்மைக் காடுகளின் சீரழிவும் சில பகுதிகளில் உள்ளன. அதற்கு ஆக்கிரமிப்புகள், சட்டவிரோதமாக மரம் வெட்டுதல், வடகிழக்குப் பிராந்தியங்களில் நடக்கும் இடப்பெயர்வு முறையிலான சாகுபடி ஆகியவை காரணமாக இருக்கலாம். அதோடு, கட்டுப்பாடற்ற மேய்ச்சல், நிலச்சரிவு, வன உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ள நில உரிமைகள் ஆகியவையும் காரணமாக இருக்கலாம்.
இந்தச் சீரழிவைத் தடுக்க, சமூக ஈடுபாட்டுடன் கூடிய பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். வடகிழக்குப் பகுதிகளைப் பொறுத்தவரை இடப்பெயர்வு முறை சாகுபடி முறையை மாற்றுவதன் மூலம் தடுக்கலாம்,” என்று கூறினார்.
இந்த நிலையில், மத்திய சுற்றுச்சூழல், காடு மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் நடவடிக்கைகள் தொடர்ச்சியாக வன உரிமைச் சட்டத்தைக் குறைத்து மதிப்பிடுவதாகவே உள்ளதாக, மத்திய அமைச்சரின் இந்தக் கருத்துக்கு எதிராக பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
பிரதமருக்கு அனுப்பப்பட்ட கடிதம் கூறுவது என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பழங்குடி மக்களுக்கு, வனம் சார்ந்த பொருட்களைச் சேகரிப்பதற்கான உரிமையை வன உரிமைச் சட்டம் வழங்குகிறதுசமூக நல அமைப்புகள், பழங்குடியின அமைப்புகள் என தமிழ்நாடு உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்து மொத்தம் 151 அமைப்புகள் இந்தக் கடிதத்தில் கையெழுத்திட்டுள்ளன.
பழங்குடிகள் மற்றும் காடு சார்ந்து வாழும் சமூகங்களுக்கு அங்கீகரிக்கப்படும் வன உரிமை, காடுகளின் பரப்பளவு குறைவதற்குக் காரணமாக இருப்பதாகக் கூறுவது “பொறுப்பற்ற, தவறாக வழிநடத்தக்கூடிய” செயல் என்று அவர்கள் விமர்சித்துள்ளனர்.
காடுகள் சீரழிவதற்கு வன உரிமைச் சட்டமும் ஒரு காரணம் என்று மத்திய அமைச்சர் குற்றம் சாட்டியபோதிலும், உண்மையில் 2008 முதல் தற்போது வரை காடுகள் சாராத நடவடிக்கைகளுக்காக மூன்று லட்சம் ஹெக்டேர்களுக்கும் அதிகமான காட்டு நிலம் திசைதிருப்பப்பட்டதில் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு இருக்கும் பங்கை அவர் புறக்கணித்துள்ளதாகவும் அந்தக் கடிதம் குற்றம் சாட்டியது. மேலும், மக்களவையில் 2023ஆம் ஆண்டு அளிக்கப்பட்ட பதிலின்படி, இந்த நடவடிக்கைகள் பெரிய அளவிலான காடழிப்புக்கு வழிவகுத்ததாகவும் கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.
அதோடு, நாடாளுமன்றத்தின் இரு அவைகளிலும் ‘ஆக்கிரமிப்பு’ குறித்து தவறான தரவுகளை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் தொடர்ந்து தெரிவித்து வருவதாக கடிதத்தில் சமூக நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
இவற்றுடன், அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சட்டபூர்வ அமைப்பான தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையம், 2024ஆம் ஆண்டு ஜூன் 19ஆம் தேதியன்று வெளியிட்ட ஓர் உத்தவரையும் அந்தக் கடிதம் மேற்கோள் காட்டியுள்ளது.
அந்த உத்தரவில், புலிகள் காப்பகங்களில் இருந்து 64,801 குடும்பங்கள் இடம்பெயர வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இது காட்டுயிர் பாதுகாப்புச் சட்டம் மற்றும் அதனுடன் தொடர்புடைய பிற சட்டங்களை முழுமையாக மீறும் செயல் என்று இந்த அமைப்புகள் விவரித்து இருப்பதோடு, இந்த உத்தரவை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்றும் கோரின.
ஆனால், இந்த உத்தரவு திரும்பப் பெறப்படாத காரணத்தால், காடுகளைச் சார்ந்து வாழும் மக்கள் கட்டாய வெளியேற்றத்தை எதிர்கொள்ளும் அபாயம் அதிகரித்து இருப்பதாகவும், இதனால் லட்சக்கணக்கான மக்கள் சமூக, பொருளாதார பாதுகாப்பின்மையை எதிர்கொண்டு இருப்பதாகவும் சமூக நல அமைப்புகள் குற்றம் சாட்டியுள்ளன.
சட்டங்களை மத்திய அரசு நிலைநிறுத்தி, லட்சக்கணக்கான பழங்குடிகள் மற்றும் காடு சார்ந்து வாழும் மக்களின் சட்டபூர்வ உரிமைகளைப் பாதுகாக்க உடனடித் தலையீட்டை மேற்கொள்ள வேண்டும் என்றும் பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பிய கடிதத்தில் சமூக நல அமைப்புகள் கோரிக்கை விடுத்துள்ளன.
வன உரிமைச் சட்டம் என்றால் என்ன?
படக்குறிப்பு, வால்பாறையில் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரியில் வன உரிமைச் சட்டப்படி பட்டா வழங்கக் கோரி போராட்டத்தில் ஈடுபட்ட பழங்குடி மக்கள் (கோப்புப் படம்)இந்திய காடுகளைச் சார்ந்து லட்சக்கணக்கான மக்கள் பல தலைமுறைகளாக வாழ்ந்து வருகிறார்கள். தாங்கள் வாழும் நிலத்தின் மீதான அவர்களின் உரிமையை உறுதி செய்வதற்காக கடந்த 2006ஆம் ஆண்டு இந்திய வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டது.
வன உரிமைச் சட்டம் குறித்து ஆய்வு மேற்கொண்டுள்ள சுயாதீன ஆய்வாளரான சி.ஆர்.பிஜோய், “இந்தச் சட்டம் புதிதாக யாருக்கும் நில உரிமைகளை வழங்குவதில்லை. ஏற்கெனவே காடுகளைச் சார்ந்து வாழும் மக்களுக்கு இருக்கும் உரிமைகளை மட்டுமே அங்கீகரிக்கிறது” என்கிறார்.
அதாவது, காட்டுப் பகுதிகளில் வாழும் பழங்குடிகள் மற்றும் காடு சார்ந்து வாழும் மக்கள், அவர்கள் 2005ஆம் ஆண்டுக்கு முன்பு வரை எந்த அளவிலான நிலத்தில் வாழ்ந்தார்களோ, அதன் மீதான உரிமையை மட்டும் இந்தச் சட்டம் அங்கீகரிக்கிறது.
குறிப்பாக, பழங்குடியல்லாத, காடு சார்ந்து வாழும் பிற சமூகத்தினராக இருந்தால், அவர்களது குடும்பம் அங்கு குறைந்தபட்சம் 75 ஆண்டுகளுக்கு வாழ்ந்திருக்க வேண்டும். அதோடு, இந்த நிலத்தை அவர்கள் யாருக்கும் விற்க முடியாது.
அதோடு, இந்தச் சட்டம் காடுகள் பாதுகாப்புக்காக ஏற்கெனவே அமலில் இருக்கும் எந்தச் சட்டங்களிலும் மாற்றங்களைச் செய்யவில்லை என்று இதன் 13வது சட்டப்பிரிவு கூறுகிறது.
இதுகுறித்து மாதவ் காட்கில் தலைமையிலான மேற்குத் தொடர்ச்சி மலை ஆய்வறிக்கையில், “இந்தச் சட்டம், காடுகளைப் பாதுகாக்கும் உரிமைகளை மக்களிடம் கொடுப்பதன் மூலம் கூடுதலான பாதுகாப்பைத்தான் ஏற்படுத்துகிறது. இது காட்டின் நிர்வாகத்தை ஜனநாயக கட்டமைப்பை நோக்கி நகர்த்துவதற்கான முதல் படி” என்று கூறப்பட்டுள்ளது.
வன உரிமைச் சட்டம் காடுகளை சீரழிக்கிறதா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, வன உரிமைச் சட்டம் பழங்குடிகளுக்கு புதிதாக எந்த நிலத்தை வழங்குவதில்லை. ஏற்கெனவே அவர்கள் வாழும் நிலத்தின் மீதான உரிமையை மட்டுமே அங்கீகரிக்கிறது.மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் தனது பேட்டியில் வன உரிமைச் சட்டம் பற்றிக் கூறிய அதே கருத்து, இந்திய காடுகள் அளவை நிறுவனம் வெளியிட்டுள்ள நாட்டின் மொத்த காடுகள் பரப்பளவு குறித்தான அறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்திய காடுகள் அளவை நிறுவனம், இரு ஆண்டுகளுக்கு ஒருமுறை நாட்டிலுள்ள மொத்த காடுகளின் பரப்பளவைக் கணக்கிட்டு அறிக்கையாக வெளியிடுகிறது.
கடந்த 2023ஆம் ஆண்டு வெளியான அந்த அறிக்கையில், காடுகளின் பரப்பளவில் எதிர்மறையாகத் தாக்கம் செலுத்திய செயல்பாடுகள் என்ற பட்டியலில், வன உரிமைச் சட்டத்தின் கீழ் அங்கீகரிக்கப்படும் நில உரிமைகளும் ஒரு காரணமாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு உரிய அறிவியல்பூர்வ ஆதாரங்களோ, தரவுகளோ வெளியிடப்படவில்லை.
ஆனால், இது முற்றிலும் உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தவறான தகவல் எனக் கூறுகிறார் பழங்குடியின உரிமைகள் தொடர்பாக ஆய்வு செய்து வரும் சுயாதீன ஆய்வாளரான சி.ஆர்.பிஜோய்.
“கடந்த 2006ஆம் ஆண்டு வன உரிமைச் சட்டம் கொண்டு வரப்பட்டதில் இருந்து, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் இந்தச் சட்டத்தையும் அதன் அம்சங்களையும் அதற்குப் பொறுப்பான பழங்குடி விவகார அமைச்சகத்தையும் இடைவிடாமல் எதிர்த்தது.
இந்தச் சட்டம், காட்டின் நிர்வாகத்தை காலனித்துவ அடக்குமுறை அடிப்படையிலான நிர்வாக முறையில் இருந்து ஜனநாயக ரீதியிலான நிர்வாகத்திற்கு மாற்றுகிறது. தேசிய, மாநில அளவில் மட்டுமின்றி உள்ளூர் மட்டங்களிலும் அதிகாரத்துவத்தை மறுசீரமைக்கும் வகையில் இந்தச் சட்டம் உள்ளது,” என்கிறார் பிஜோய்.
மேலும், “சுற்றுச்சூழல் அமைச்சகமும் வனத்துறையும் இந்தச் சட்டம் காடுகளின் மீதான தங்களது ஆதிக்கத்தைப் பலவீனப்படுத்துவதாகக் கருதுகின்றன. ஆனால், வன உரிமைச் சட்டம், காடுகள் நிர்வாகத்தில் ஒரு ஜனநாயக முறையையும், இயற்கைவளப் பாதுகாப்பையும் உறுதி செய்யும் ஒரு சட்டம்,” என்று அவர் விளக்கினார்.
உண்மையில், “எந்தவித ஆதாயத்தையும் எதிர்பார்க்காமல், லாப நோக்கத்துடன் காட்டு நிலங்களை வணிகப் பண்டமாக அணுகாமல், தங்கள் வாழ்வாதாரத்திற்காக காடுகளைச் சார்ந்து வாழும் பழங்குடி சமூகங்கள், அந்தக் காடு ஆரோக்கியமாக இருந்தால் மட்டுமே செழித்து வாழ முடியும்.”
“அப்படியிருக்கும்போது அவர்களால் எப்படி காடுகள் சீரழியும்?” எனக் கேள்வி எழுப்புகிறார் பிஜோய்.
‘வன உரிமைச் சட்டத்தால் காடு துண்டாக்கப்படுகிறது’
பட மூலாதாரம், Getty Images
ஆனால், மத்திய அமைச்சருடன் பல்வேறு கருத்துகளில் முரண்பட்டாலும் அவரது இந்தக் கருத்தை ஆமோதிப்பதாகக் கூறுகிறார் காட்டுயிர் ஆய்வாளரும் வன உரிமைச் சட்டத்தை விமர்சிப்பவருமான முனைவர் உல்லாஸ் கரந்த். மேலும், அவரது கூற்று கள நிலவரத்தையே காட்டுவதாகவும் அவர் குறுப்பிட்டார்.
அவரது கூற்றுப்படி, “வரலாற்று ரீதியாகப் பார்க்கையில் காடுகள் பாதுகாப்புக்காக இந்திய அளவில் பல்வேறு சட்டங்கள் கொண்டு வரப்பட்டன. அவை, காடுகள் மற்றும் காட்டுயிர் பாதுகாப்பை உறுதி செய்வதற்காகச் சில கட்டுப்பாடுகளை விதித்தன. ஆனால், 2006ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட வன உரிமைச் சட்டம், அந்தக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் வகையில் அமைந்தது.”
வன உரிமைச் சட்டத்தால் பயனடைபவர்கள் பழங்குடி சமூகங்கள் மட்டுமல்ல என்று கூறும் அவர், “ஒருவர் எந்தச் சமூகத்தைச் சேர்ந்தவராக இருந்தாலும் சரி, அவரது வாழ்வாதாரம் காடு சார்ந்து இருந்தால், காட்டிற்குள் அவருக்கான நில உரிமை அங்கீகரிக்கப்படும் என்றே சட்டம் கூறுகிறது” என்கிறார்.
இதன் காரணமாகப் பல இடங்களில் இந்தச் சட்டம் தவறாகப் பயன்படுத்தப்படுவதாகக் குறிப்பிடும் உல்லாஸ் கரந்த், இதனால் காடுகள் பாதுகாப்புக்கு இடையூறு ஏற்படுவதாகவும் குறிப்பிட்டார்.
பழங்குடி மக்களுக்கும் காடு சார்ந்து வாழும் மக்களுக்கும் காட்டிற்குள் நில உரிமை வழங்குவதால், காடுகள் துண்டாக்கப்படுவதாக வன உரிமைச் சட்டத்தை எதிர்க்கும் பலரும் கூறுகின்றனர்.
இதுகுறித்து அவரிடம் வினவியபோது, காடுகள் துண்டாக்கப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கியக் காரணமாக இருப்பதாகக் குறிப்பிட்டார்.
“காட்டிற்குள் மக்கள் சமூகங்களுக்கு நில உரிமைகளை வழங்கும்போது, அவர்களுக்குத் தேவையான சாலை, மின்சார வசதி, விவசாய நிலம் என அனைத்துமே வழங்கப்பட வேண்டிய தேவை ஏற்படும். இதன் காரணமாக, காட்டிற்குள் இருக்கும் அந்தப் பகுதி நிலம் துண்டாக்கப்படுகிறது” என்றார்.
‘காடுகள் பாதுகாப்பை மக்களிடம் வழங்குகிறது’
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தெற்கு ஒடிசாவை சேர்ந்த கபாடா பழங்குடிகள்ஆனால், காடுகளைப் பற்றிய அனுபவம் நிறைந்த அறிவுள்ள, அதைச் சார்ந்து வாழக்கூடிய மக்களிடமே, அதைப் பாதுகாப்பதற்கான அதிகாரத்தை இந்தச் சட்டம் வழங்குவதாகவும், அதன் மூலம் காடுகளில் ஜனநாயக அடிப்படையிலான ஒரு புதிய சகாப்தத்தை இது உருவாக்குவதாகவும் கூறுகிறார் பிஜோய்.
மேலும், இந்தச் சட்டம் யாருக்கும் புதிதாக நில உரிமைகளை வழங்குவதில்லை என்று கூறும் பிஜோய், “ஏற்கெனவே பல தலைமுறைகளாக வாழும் மக்களுக்கு அவர்களின் நிலம் மீதான உரிமையை அங்கீகரிக்க மட்டுமே செய்கிறது” என்கிறார்.
வன உரிமைச் சட்டத்தின் கீழ் நில உரிமை அங்கீகரிக்கப்படுவது காடுகள் பாதுகாப்பைச் சீர்குலைப்பதாகக் கூறுவதை மறுக்கிறார் முனைவர் அ.பகத் சிங். மானுடவியல் ஆய்வாளரான இவர், தமிழகப் பழங்குடிகளின் வாழ்வியல் குறித்து ஆய்வு செய்து வருகிறார்.
“பழங்குடி சமூகங்களால், காட்டின் பசுமைப் பரப்பு குறைவதாக எவ்வித ஆதாரங்களும் இதுவரை முன்வைக்கப்படவில்லை. அதோடு, அவர்களுக்கு இந்தச் சட்டம் புதிதாக எந்த நிலத்தையும் வழங்கப் போவதில்லை என்னும்போது, புதிதாக காடுகள் துண்டாக்கப்படுவதற்கான காரணிகளில் ஒன்றாக இந்தச் சட்டம் இருப்பதற்கும் வாய்ப்பில்லை,” என்கிறார் முனைவர் அ.பகத் சிங்.
அவரது கூற்றுப்படி, காட்டின் இயக்கவியலில் பழங்குடிகளுக்கும் பங்கு உண்டு என்பதால், அவர்களை அதனிடம் இருந்து பிரிப்பது, அந்த இயக்கவியலில் இடையூறையே ஏற்படுத்தும்.
அதுமட்டுமின்றி, “இந்தச் சட்டத்தின் கீழ் உரிமை கோரும் பழங்குடியினரல்லாத மக்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. ஒருவேளை அதில் முறைகேடுகள் நடந்தாலும், அதைத் தடுப்பது எப்படி என்பதிலேயே கவனம் செலுத்த வேண்டும். மாறாக, பழங்குடிகளுக்கு இயற்கையாக இருக்கும் உரிமையை அங்கீகரிக்கும் ஒரு சட்டத்தை முற்றிலுமாகப் புறக்கணிக்கக் கூடாது,” என்றும் அவர் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு