போராட்டக்காரர்களை கொல்ல உத்தரவிட்ட ஷேக் ஹசீனா – வெளியான ஆடியோ பதிவு கூறுவது என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஜூலை 25ஆம் தேதி, வங்கதேசத்தில் மாணவர்கள் சூரையாடியதாகக் கூறப்பட்ட மெட்ரோ ரயில் நிலையத்தை ஷேக் ஹசீனா பார்வையிட்டபோது…எழுதியவர், கிறிஸ்டோபர் கில்ஸ், ரித்தி ஜா, ரஃபித் ஹுசைன் & தாரேகுஸ்ஸமன் ஷிமுல்பதவி, பிபிசி ஐ புலனாய்வு பிரிவு & பிபிசி வங்க மொழி சேவை2 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த ஆண்டு வங்கதேசத்தில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு எதிராக கொடிய அடக்குமுறையைக் கையாள அப்போதைய பிரதமர் ஷேக் ஹசீனா அனுமதி அளித்ததாக, அவரது தொலைபேசி அழைப்புகளில் ஒன்றின் ஆடியோ பதிவு காட்டுகிறது. இந்த ஆடியோ பதிவு பிபிசி ஐ குழுவினரால் சரிபார்க்கப்பட்டது.

கடந்த மார்ச் மாதம் இணையத்தில் கசிந்த இந்த ஆடியோவில், போராட்டக்காரர்களுக்கு எதிராக “கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த” தனது பாதுகாப்புப் படைகளுக்கு அதிகாரம் அளித்திருப்பதாகவும், “அவர்களை எங்கு கண்டாலும் பாதுகாப்புப் படையினர் சுடுவார்கள்” என்றும் ஹசீனா கூறுகிறார்.

இந்த ஆடியோ பதிவை வங்கதேசத்தில் உள்ள வழக்கறிஞர்கள் ஷேக் ஹசீனாவுக்கு எதிரான முக்கிய ஆதாரமாகப் பயன்படுத்த திட்டமிட்டுள்ளனர். அவர் வங்கதேசத்தில் இல்லையென்றாலும், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு வருகிறார்.

கடந்த ஆண்டு கோடையில் ஏற்பட்ட அரசுக்கு எதிரான போராட்டத்தில் 1,400 பேர் வரை உயிரிழந்ததாக ஐ.நா. புலனாய்வாளார்கள் தெரிவிக்கின்றனர்.

இந்தியாவுக்கு தப்பிச் சென்ற ஷேக் ஹசீனா மட்டுமின்றி அவரது கட்சியும், ஹசீனாவுக்கு எதிரான அனைத்து குற்றச்சாட்டுகளையும் நிராகரிக்கின்றனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ஹசீனாவின் அவாமி லீக் கட்சியின் செய்தித் தொடர்பாளர், “அவர் சட்டவிரோதமாக எதையும் செய்யத் திட்டமிட்டதாகவோ அல்லது கடுமையாக பதிலளித்ததாகவோ” ஆடியோவில் காட்டப்படவில்லை என்று கூறி, குற்றச்சாட்டுகளை மறுத்துள்ளார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஷேக் ஹசீனாவின் ஆடியோ பதிவு குறித்த பின்னணி

கடந்த ஆண்டு கோடையில் அரசாங்கத்தை எதிர்த்து வீதிகளில் போராடிய போராட்டக்காரர்களைச் சுடுவதற்கு அவர் நேரடியாக அனுமதி அளித்தமைக்கான மிக முக்கியமான சான்றாக, ஷேக் ஹசீனா அடையாளம் தெரியாத மூத்த அரசு அதிகாரி ஒருவருடன் பேசியதாக வெளியான ஆடியோ பதிவு இருக்கிறது.

கடந்த 1971ஆம் ஆண்டு சுதந்திரப் போரில் போராடியவர்களின் உறவினர்களுக்கான அரசுப்பணி இட ஒதுக்கீட்டிற்கு எதிராகத் தொடங்கிய போராட்டங்கள், 15 ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த ஹசீனாவை பதவியில் இருந்து நீக்கிய ஒரு வெகுஜன இயக்கமாக உருவெடுத்தது. 1971 போருக்குப் பிறகு வங்கதேசம் கண்ட மிக மோசமான வன்முறைப் போராட்டம் இது.

கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று, டாக்காவில் உள்ள ஷேக் ஹசீனாவின் வீட்டை மக்கள் கூட்டம் முற்றுகையிட்டது. அதற்கு முன்பு, அவர் ஹெலிகாப்டரில் தப்பினார். அன்றைய தினத்தில், மிக மோசமான வன்முறைச் சம்பவங்களில் சில நிகழ்ந்தன.

பிபிசி உலக சேவை மேற்கொண்ட விசாரணையில், வங்கதேச தலைநகரில் போராட்டக்காரர்களை போலீசார் கொன்றது பற்றிய புதிய தகவல்கலைக் கண்டறிந்தது. இதில், முன்னர் அறியப்பட்டதைவிட அதிக அளவிலான மக்கள் உயிரிழந்துள்ளனர் என்ற தகவலும் அடங்கும்.

தற்போது கசிந்துள்ள ஆடியோ குறித்த தகவலறிந்த நபர் ஒருவர் பிபிசியிடம் பேசியபோது, அந்த உரையாடல் ஜூலை 18ஆம் தேதி நடந்ததாகவும், அதன்போது ஹசீனா டாக்காவில் உள்ள அவரது இல்லத்தில் இருந்ததாகவும் கூறினார்.

வங்கதேசத்தின் போராட்டத்தில் அதுவொரு முக்கியமான தருணமாக இருந்தது. போராட்டக்காரர்களை போலீசார் கொல்லும் வீடியோக்கள் சமூக ஊடகங்களில் பகிரப்பட்டன. அதையடுத்து, பாதுகாப்பு அதிகாரிகள் மீது பொதுமக்கள் சீற்றம் கொண்டு எதிர்வினையாற்றினர்.

ஹசீனாவின் தொலைபேசி அழைப்புக்குப் பிறகு சில நாட்களில், டாக்கா முழுவதும் ராணுவ பாணியிலான துப்பாக்கிகள் பயன்படுத்தப்பட்டதாக பிபிசி பார்த்த போலீஸ் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

ஆடியோ உண்மை என்பதை உறுதி செய்த பிபிசி

பட மூலாதாரம், AFP

பிபிசி ஆய்வு செய்த ஆடியோ பதிவு, ஷேக் ஹசீனா சம்பந்தப்பட்ட பல தொலைபேசி அழைப்புகளில் ஒன்று. இந்த அழைப்புகள், தகவல் தொடர்புகளைச் சரிபார்த்துக் கண்காணிக்கும் வங்கதேசத்தில் உள்ள ஓர் அரசு நிறுவனமான தேசிய தொலைத்தொடர்பு கண்காணிப்பு மையத்தால் பதிவு செய்யப்பட்டன.

இந்தத் தொலைபேசி அழைப்பின் ஆடியோ இந்த ஆண்டு மார்ச் மாத தொடக்கத்தில் கசிந்தது. ஆனால், யாரால் இது இணையத்தில் கசிந்தது என்பது தெளிவாகத் தெரியவில்லை. போராட்டங்களுக்குப் பிறகு, ஹசீனாவின் தொலைபேசி அழைப்புகளின் ஏராளமான பதிவுகள் இணையத்தில் வெளியாகியுள்ளன. அவற்றில் பல சரிபார்க்கப்படவில்லை.

ஜூலை 18ஆம் தேதியன்று பதிவான தொலைபேசி உரையாடல், ஷேக் ஹசீனாவின் குரல் தொடர்பான அறியப்பட்ட ஆடியோ பதிவுகளுடன் ஒப்பிட்டு சரிபார்க்கப்பட்டது. வங்கதேச காவல்துறையின் குற்றப் புலனாய்வுத் துறை, அந்தப் பதிவில் உள்ள குரல் அவரது குரலுடன் ஒத்துப் போவதை உறுதி செய்தது.

ஆடியோ தடயவியல் நிபுணர்களான இயர்ஷாட்டுடன் பதிவை பகிர்ந்துகொண்டதன் மூலம் பிபிசி தனது சுயாதீன பகுப்பாய்வை மேற்கொண்டது. அவர்கள் இந்த உரையாடல் திருத்தப்பட்டதற்கோ அல்லது மாற்றப்பட்டதற்கோ எந்த ஆதாரமும் இல்லை என்றும், அது செயற்கையாக உருவாக்கப்பட்டிருக்க வாய்ப்பில்லை என்றும் கூறினர்.

பட மூலாதாரம், Getty Images

இந்த ஆடியோ பதிவு ஓர் அறையில், ஸ்பீக்கரில் பேசப்பட்டிருக்கலாம் என்று இயர்ஷாட் நிபுணர்கள் கூறினர். தனித்துவமான தொலைபேசி ஒலி அதிர்வெண்கள் மற்றும் பின்னணி இரைச்சல் காரணமாக அவர்களால் அதை அறிய முடிந்தது. ஆடியோ பதிவு முழுவதும் இருந்த மின்சார நெட்வொர்க் அதிர்வெண் ஒன்றை இயர்ஷாட் நிபுணர்கள் அடையாளம் கண்டனர்.

உரையாடலைப் பதிவு செய்யும் சாதனங்கள் மின் சாதனங்களில் இருந்து சிக்னல்களை எடுக்கும்போது இது நிகழ்கிறது. இது அந்த ஆடியோ பதிவு உண்மையான மற்றும் திருத்தப்படவில்லை என்பதற்கான அறிகுறியாக உள்ளது.

ஷேக் ஹசீனாவின் உரையாடலில் உள்ள, ரிதம், ஒலிப்பு முறை, சுவாச ஒலிகள் ஆகியவற்றைப் பகுப்பாய்வு செய்து, நிலையான இரைச்சல்களை அடையாளம் கண்டதன் மூலம், ஆடியோ செயற்கையாக மாற்றப்பட்டதற்கான எந்த ஆதாரமும் இல்லை என்று இயர்ஷாட் நிபுணர்கள் கண்டறிந்தனர்.

“இந்த ஆடியோ பதிவுகள், ஷேக் ஹசீனாவின் பங்கை நிறுவுவதற்கு மிக முக்கியமானவை. அவை தெளிவாக உள்ளன, முறையாக அவரால் நடவடிக்கைகள் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.” என்று பிரிட்டிஷ் சர்வதேச மனித உரிமைகள் வழக்கறிஞர் டோபி கேட்மேன் பிபிசியிடம் கூறினார்.

ஷேக் ஹசீனா மற்றும் பிறருக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றமான வங்கதேசத்தின் சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்திற்கு கேட்மேன் ஆலோசனை வழங்கி வருகிறார்.

அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் இதுகுறித்துப் பேசுகையில், “பிபிசி குறிப்பிடும் ஆடியோ பதிவு உண்மையானதா என்பதை எங்களால் உறுதிப்படுத்த முடியாது” என்று தெரிவித்தார்.

வங்கதேச வரலாற்றில் மிகக் கொடூரமான போலீஸ் வன்முறை

பட மூலாதாரம், Getty Images

ஷேக் ஹசீனாவுடன், முன்னாள் அரசு மற்றும் காவல்துறை அதிகாரிகளும் போராட்டக்காரர்களின் கொலைகளில் தொடர்புபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தம் 203 பேர் மீது சர்வதேச குற்றவியல் தீர்ப்பாயத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர்களில் 73 பேர் காவலில் உள்ளனர்.

பிபிசி ஐ புலனாய்வுக் குழு, 36 நாட்களில் போராட்டக்காரர்களுக்கு எதிரான காவல்துறை தாக்குதல்களை விவரிக்கும் நூற்றுக்கணக்கான வீடியோக்கள், புகைப்படங்கள் மற்றும் ஆவணங்களைப் பகுப்பாய்வு செய்து சரிபார்த்தது.

தலைநகர் டாக்காவின் பரபரப்பான ஜத்ராபரியில் ஆகஸ்ட் 5ஆம் தேதியன்று நடந்த ஒரு சம்பவத்தில், குறைந்தது 52 பேர் போலீசாரால் கொல்லப்பட்டதாக விசாரணையில் கண்டறியப்பட்டது.

இது வங்கதேசத்தின் வரலாற்றில் மிக மோசமான போலீஸ் வன்முறைச் சம்பவங்களில் ஒன்று. அந்த நேரத்தில் வெளியிடப்பட்ட ஆரம்பக்கட்ட அறிக்கைகள் ஜத்ராபரியில் அன்று 30 பேர் கொல்லப்பட்டதாகத் தெரிவித்தன.

இந்தப் படுகொலை எவ்வாறு தொடங்கியது, முடிந்தது என்பது பற்றிய புதிய விவரங்களை பிபிசி புலனாய்வு வெளிப்படுத்தியது.

நேரில் கண்ட சாட்சிகள் விவரித்த காட்சிகள், சிசிடிவி பதிவுகள், டிரோன் படங்களைச் சேகரித்ததன் மூலம், போராட்டக்காரர்களிடம் இருந்து போலீசாரை பிரித்துவிட்ட ராணுவ வீரர்கள் அந்த இடத்தை விட்டு வெளியேறிய உடனே போராட்டக்காரர்கள் மீது போலீசார் கண்மூடித்தனமாக துப்பாக்கிச்சூடு நடத்தியதை பிபிசி ஐ புலனாய்வு உறுதி செய்தது.

சுமார் 30 நிமிடங்களுக்கும் மேலாக, சந்துகள், நெடுஞ்சாலையில் தப்பிச் செல்ல முயன்ற போராட்டக்காரர்கள் மீது போலீசார் துப்பாக்கிச் சூடு நடத்தினர். அதற்கு முன்பு காவல்துறை அதிகாரிகள் அருகிலுள்ள ராணுவ முகாமில் தஞ்சம் புகுந்தனர். சில மணிநேரங்களுக்குப் பிறகு போராட்டக்காரர்கள் பதிலடி கொடுத்ததில், குறைந்தது ஆறு காவல்துறை அதிகாரிகள் கொல்லப்பட்டனர். ஜத்ராபரி காவல் நிலையத்திற்குத் தீ வைக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் நடந்த வன்முறைச் சம்வபங்களில் ஈடுபட்டதற்காக 60 காவல்துறை அதிகாரிகள் கைது செய்யப்பட்டதாக வங்கதேச காவல்துறையின் செய்தித் தொடர்பாளர் பிபிசியிடம் தெரிவித்தார்.

“அப்போதைய காவல்துறையின் சில அதிகாரிகள் அதிகப்படியான பலத்தைப் பயன்படுத்தியதால் வருந்தத்தக்க சம்பவங்கள் நடந்தன. வங்கதேச காவல்துறை முழுமையான, பாரபட்சமற்ற விசாரணைகளைத் தொடங்கியுள்ளது” என்று காவல்துறை செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா மீதான குற்றவியல் விசாரணை

பட மூலாதாரம், AFP

படக்குறிப்பு, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் அரசாங்க எதிர்ப்புப் போராட்டக்காரர்கள் தீ வைத்ததைத் தொடர்ந்து, எரிந்த நிலையில் இருந்த ஜத்ராபரி காவல் நிலையத்தைக் காண மக்கள் திரண்டனர்ஷேக் ஹசீனாவின் விசாரணை கடந்த மாதம் தொடங்கியது. மனித குலத்திற்கு எதிரான குற்றங்களைச் செய்ததாக அவர் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதில் பொதுமக்களுக்கு எதிரான வன்முறையை ஏற்படுத்துதல், தூண்டுதல், சதித்திட்டம் தீட்டுதல், படுகொலைகளைத் தடுக்கத் தவறியது ஆகிய குற்றச்சாட்டுகள் அடங்கும்.

ஷேக் ஹசீனாவை நாடு கடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை இந்தியா இதுவரை நிறைவேற்றவில்லை. விசாரணைக்காக ஹசீனா வங்கதேசத்திற்குத் திரும்புவது சாத்தியமில்லை என்று டோபி காட்மேன் கூறுகிறார்.

போராட்டக்காரர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்பட்ட பாதுகாப்புப் படையின் செயல்களுக்கு அதன் தலைவர்கள் பொறுப்பல்ல என்று அவாமி லீக் கூறுகிறது.

பிரதமர் உள்பட அதன் உயர்மட்டத் தலைவர்கள் சிலர் மக்கள் கூட்டத்திற்கு எதிராக கொடிய பலத்தைப் பயன்படுத்துவதில் தனிப்பட்ட முறையில் ஈடுபட்டதாகவோ அல்லது அதற்கு உத்தரவிட்டதாகவோ கூறப்படும் கூற்றுகளை அவாமி லீக் செய்தித் தொடர்பாளர் ஒருவர் முற்றிலும் மறுத்துள்ளார்.

“மூத்த அரசு அதிகாரிகளால் எடுக்கப்பட்ட முடிவுகள் நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்டவை மற்றும் உயிரிழப்பைக் குறைக்கும் நோக்கம் கொண்டவை,” என்றும் அவர் தெரிவித்தார்.

ஷேக் ஹசீனா மற்றும் அவரது அரசின் நடவடிக்கைகள் மனித குலத்திற்கு எதிரான குற்றங்களாக இருக்கலாம் என்று நம்புவதற்கு நியாயமான காரணங்களைக் கண்டறிந்ததாகக் கூறும் ஐ.நா புலனாய்வாளர்களின் கண்டுபிடிப்புகளை அவாமி லீக் கட்சி நிராகரித்துள்ளது.

இதுகுறித்து கருத்து கேட்க வங்கதேச ராணுவத்தை பிபிசி அணுகியது. ஆனால், எந்தப் பதிலும் கிடைக்கவில்லை.

ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு, நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் வங்கதேசத்தை நிர்வகித்து வருகிறது.

அவரது அரசாங்கம் தேசிய அளவிலான தேர்தலுக்குத் தயாராகி வருகிறது. அவாமி லீக் தேர்தலில் போட்டியிட அனுமதிக்கப்படுமா என்பது தெளிவாகத் தெரியவில்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு