Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘செயலியில் கதை படித்தால் காசு வரும்’ – பெண்களை குறிவைத்து கொடைக்கானலில் நடந்த லுக் ஆப் மோசடி
படக்குறிப்பு, ரோஸ்லின் மேரி (வலதுபுறம்), லுக் செயலி மூலம் சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாய் செலுத்தியுள்ளார்.எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
‘இருபதாயிரம் ரூபாய் செலுத்தி செயலியில் (App) கதை படித்தால் தினமும் 700 ரூபாய் பெறலாம்’ எனக் கூறி கோடிக்கணக்கில் மோசடி செய்ததாக, தனியார் நிறுவனம் மீது திண்டுக்கல் காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்ட மக்கள் புகார் அளித்துள்ளனர்.
“அவர்கள் யாரையும் நேரில் பார்த்தது இல்லை. வாட்ஸ்ஆப் உரையாடல் மூலம் மட்டுமே மொத்த பணத்தையும் ஏமாற்றிவிட்டனர்” எனக் கூறுகின்றனர், கொடைக்கானல் பகுதி மக்கள்.
புத்தகம் படித்தாலே பணம் வருமா? மோசடி நடந்தது எப்படி?
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல், புதுக்காடு பகுதியைச் சேர்ந்தவர் ரோஸ்லின் மேரி. இவருக்கு உறவினர் ஒருவர் மூலம் லுக் கல்ச்சர் மீடியா (Look Culture Media) என்ற செயலியின் அறிமுகம் கிடைத்துள்ளது.
‘செயலியில் 20,300 ரூபாயை செலுத்தினால் தினசரி 700 ரூபாய் வரும்’ எனக் கூறியதால் அவரும் ஆர்வத்துடன் சேர்ந்துள்ளார். “தினமும் ஆங்கில நாவல் படிப்பதுதான் திட்டத்தின் நோக்கம். ஒரு பாராவை படித்தால் 28 ரூபாய் என 700 ரூபாய் வரை பணம் கொடுத்தனர். பணம் எடுக்கும் வகையில் செயலி வடிவமைக்கப்பட்டு இருந்தது” எனக் கூறுகிறார், ரோஸ்லின் மேரி.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
‘படிக்க வேண்டாம்… பார்த்தால் போதும்’
படக்குறிப்பு, செயலியில் பணம் செலுத்திய பிறகு வாட்ஸ்ஆப் குழு மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர்.லுக் செயலியில் (Look App) 2,250 ரூபாய், 6,600 ரூபாய், 20,300 ரூபாய் என மூன்றுக்கும் மேற்பட்ட திட்டங்களை வகைப்படுத்தியுள்ளனர். செயலிக்குள் நுழையும்போது ஆங்கில நாவலின் பிடிஎஃப் இருந்துள்ளது. ஒரு பாராவை படிப்பதற்கு 20 நொடிகள் அவகாசம் கொடுத்துள்ளனர்.
“அதைப் படிக்க வேண்டுமென்ற அவசியம் இல்லை. அதன் மேல் பகுதியில் 20 செகன்ட் வரை ஓடிக் கொண்டிருக்கும். 2,250 ரூபாய் செலுத்தினால் ஒருமுறை படிப்பதற்கு 15 ரூபாய் என ஐந்து வாய்ப்புகளைத் தருவார்கள். 20,300 ரூபாய் செலுத்தினால் தினமும் 700 ரூபாய் வரை கிடைக்கும் என்ற வகையில் அந்தச் செயலி இருந்தது” எனக் கூறுகிறார், தூத்துக்குடியைச் சேர்ந்த அமுதா.
செயலியில் பணம் செலுத்திய பிறகு வாட்ஸ்ஆப் குழு மூலம் அனைவரும் ஒருங்கிணைக்கப்பட்டுள்ளனர். “எனக்குக் கீழே ஆட்களைச் சேர்த்துவிட்டால் போனஸ் வரும் எனக் கூறினார்கள். நண்பர்கள், உறவினர்கள் எனப் பலரையும் சேர்த்துவிட்டேன்” என்கிறார், ரோஸ்லின் மேரி.
கடந்த டிசம்பர் மாதம் செயலியில் இணைந்த இவருக்கு முதல் மூன்று மாதங்கள் வரை பணம் வந்துள்ளது. “ஆட்கள் அதிகளவில் சேரத் தொடங்கியதும் தினமும் கொடுத்துக் கொண்டிருந்த பணத்தை வாரம் ஒருநாள் என மாற்றினர். வார விடுமுறை, அரசு விடுமுறை தினங்களில் பணம் எடுக்க முடியாது” எனவும் ரோஸ்லின் மேரி குறிப்பிட்டார்.
முடக்கப்பட்ட வங்கிக் கணக்குகள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, “அவர்கள் யாரும் போனிலோ, வாட்ஸ்ஆப்பிலோ பேச மாட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவு மட்டும் வந்து கொண்டே இருக்கும்” என்று கூறுகிறார் புகார் மனுவில் குற்றம் சாட்டப்பட்டிருக்கும் அமுதா”லுக் செயலியில் நமக்கான பணத்தை எடுக்கும்போது அது வேறு ஒருவரின் யுபிஐ பரிவர்த்தனைக்கான முகவரியாக இருந்தது. லுக் நிறுவனத்தின் வங்கிக் கணக்கு எண் என எதுவும் குறிப்பிடவில்லை” எனவும் அவர் தெரிவித்தார்.
நாளொன்றுக்கு நான்கைந்து யுபிஐ முகவரிகளைக் கொடுத்து அந்த எண்ணுக்கு புதிதாகச் சேரும் நபர்களின் பணத்தைப் பிரித்து அனுப்புமாறு தனக்குக் கூறப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இவர் கடந்த மாதம் சுமார் 2 லட்சத்து 24 ஆயிரம் ரூபாயை லுக் செயலி மூலம் செலுத்தியுள்ளார். அதற்கான போனஸ் பணத்தை எடுக்க முற்பட்டபோது, ரோஸ்லின் மேரியின் வங்கிக் கணக்கை அதிகாரிகள் முடக்கிவிட்டனர்.
“வங்கி அதிகாரிகளிடம் கேட்டபோது, சூதாட்டத்தின் மூலம் இந்தப் பணம் வந்துள்ளது’ எனக் கூறி காவல்துறையில் புகார் அளிக்குமாறு கூறினர் புத்தகம் படிப்பதுதான் டாஸ்க் எனக் கூறியதால் ஆர்வமாக இணைந்தோம். இதனால் எனக்கு மட்டும் 3 லட்ச ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது” எனவும் அவர் தெரிவித்தார்.
கொடைக்கானலில் 360 பேரிடம் மோசடி
படக்குறிப்பு, லுக் செயலி நிறுவனத்தினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கூட்டங்களை நடத்தி ஆட்களைச் சேர்த்துள்ளனர்.இந்த மோசடியில் கொடைக்கானலில் மட்டும் சுமார் 360 பேர் ஏமாந்துள்ளதாகக் கூறும் ரோஸ்லின், “பணம் செலுத்தியவர்களில் பலரும் பீடி சுற்றும் பணி செய்பவர்கள், விவசாயத் தொழிலாளர்கள் என மிகச் சாதாரணமானவர்கள். திண்டுக்கல், மதுரை, நெல்லை, தூத்துக்குடி உள்பட மாநிலம் முழுவதும் லுக் செயலி மூலம் மோசடி நடந்துள்ளது” என்கிறார்.
கொடைக்கானலில் சூப்பர் மார்க்கெட் ஒன்றில் கணக்காளராகப் பணிபுரிந்து வரும் பிரியதர்ஷினியிடம் பிபிசி தமிழ் பேசியது.
“புத்தகம் படிக்கும் பணி என்பதால் யாரும் ஏமாற்ற மாட்டார்கள் என நினைத்தோம். ஆரம்பத்தில் பணம் வந்ததால் சந்தேகம் வரவில்லை. தற்போது வரை 2 லட்சத்து 25 ஆயிரம் ரூபாயை இழந்துவிட்டேன்” எனக் கூறுகிறார்.
இவர் தனக்குக் கீழே 188 பேரை லுக் செயலியில் சேர்த்துள்ளார். “என் மூலமாகச் சேர்ந்ததால் அவர்களுக்குப் பணம் கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டுள்ளது. காவல்துறை அதிகாரிகளும், ‘இப்படி ஏமாந்துவிட்டீர்களே?’ எனக் கூறுகின்றனர். இதனால் குடும்பத்திலும் பிரச்னை ஏற்பட்டது” என்கிறார்.
படக்குறிப்பு, லுக் செயலி மூலமாக மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் இணையத்தில் உள்ளனபுகார் மனுவில் கூறப்பட்டது என்ன?
லுக் செயலி மூலம் தாங்கள் ஏமாற்றப்பட்டதாகக் கூறி திண்டுக்கல் காவல் நிலையத்தில் வியாழக்கிழமையன்று (ஜூலை 10) பாதிக்கப்பட்ட மக்கள் புகார் மனு ஒன்றை அளித்துள்ளனர்.
அந்த மனுவில், “மதுரை, விளாத்திகுளத்தைச் சேர்ந்த அமுதா என்பவர் மூலமாக செயலி அறிமுகம் ஆனது. 2,250 ரூபாய் முதல் 2,24,000 ரூபாய் வரை திட்டங்கள் இருப்பதாகக் கூறினார். இதை நம்பி அக்கம் பக்கம் வசிப்பவர்களை செயலியில் சேர்த்தோம்” எனக் கூறியுள்ளனர்.
“தற்போது லுக் கல்ச்சர் மீடியா செயலி தென்படவில்லை. எங்களின் வங்கிக் கணக்குகளும் முடக்கப்பட்டுவிட்டன. பணம் கொடுத்தவர்கள் தகராறு செய்கின்றனர். லுக் செயலியை அறிமுகம் செய்து வைத்த அமுதா மூலம் நாங்கள் ஏமாந்துவிட்டோம்” என்று புகார் மனுவில் பாதிக்கப்பட்ட மக்கள் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, லுக் கல்ச்சர் மீடியா செயலியை இணையதளத்தில் தேடியபோது காணக் கிடைக்கவில்லை. மகாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்ததாக பாதிக்கப்பட்டவர்கள் கூறினாலும் அதுதொடர்பான தரவுகளும் கிடைக்கவில்லை.
ஆனால், இந்த செயலி தொடர்பாக இணையத்தில் தேடியபோது, அந்த நிறுவனத்தின் பெயரில் மேற்கொள்ளப்பட்ட சமூகப் பணிகள் தொடர்பான வீடியோ காட்சிகள் மட்டும் கிடைக்கின்றன. இந்த நிறுவனத்தின் பிரதிநிதிகள் தொடர்பான விவரம் எதுவும் கிடைக்கவில்லை.
‘பேச மாட்டார்கள்… உத்தரவு மட்டும் வரும்’
படக்குறிப்பு, மங்களூர் கூட்டம் தொடர்பாக வெளியான அறிவிப்புஇதையடுத்து, புகார் மனுவில் குற்றம் சுமத்தப்படும் அமுதாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“அவர்களைப் போல நானும் ஏமாந்துவிட்டேன். கடந்த அக்டோபர் மாதம் செயலியில் இணைந்தேன். எனக்கு டார்லேன் என்பவர் வழிகாட்டினார். இதன் தலைமை அலுவலகம் புனேவில் உள்ளதாகக் கூறினர். அவரிடம் வாட்ஸ்ஆப்பில் மட்டும் உரையாடல் நடக்கும்” எனக் கூறுகிறார்.
ஜூன் 25ஆம் தேதியோடு இந்த ஆப் செயலிழந்துவிட்டதாகக் கூறும் அமுதா, “அவர்கள் யாரும் போனிலோ, வாட்ஸ்ஆப்பிலோ பேச மாட்டார்கள். என்ன செய்ய வேண்டும் என்ற உத்தரவு மட்டும் வந்து கொண்டே இருக்கும்” எனக் கூறுகிறார்.
“நாவல் படிப்பதற்குப் பணம் கொடுப்பது சந்தேகத்தை ஏற்படுத்தவில்லையா?” எனக் கேட்டபோது, “இதைப் பற்றிக் கேட்டபோது பெரிய கார்ப்பரேட் நிறுவனங்களுடன் தொடர்பு வைத்துள்ளோம். ஐரோப்பிய நாடுகளில் உள்ள எழுத்தாளர்களுக்கு உதவி செய்கிறோம் என்றனர். பணம் வருகிறது என்பதால் அதைப் பற்றி யோசிக்கவில்லை” என்றார்.
‘கண்ணுக்குத் தெரியாத வருமானம்’
படக்குறிப்பு, லுக் செயலி நிறுவனத்தினர் நடத்திய உறுப்பினர் சேர்க்கை கூட்டம்.லுக் செயலி நிறுவனத்தினர் மதுரை, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களில் கூட்டங்கள் நடத்தி ஆட்களைச் சேர்த்ததாகவும் அமுதா கூறுகிறார். “இதற்கான செலவுகளை அவர்களே ஏற்றுக் கொண்டனர். அந்தப் பணமும் ஏதாவது ஒரு யுபிஐ முகவரியில் இருந்து வரும்” எனக் கூறுகிறார் அமுதா.
தொடர்ந்து பேசிய அவர், “கண்ணுக்குத் தெரியாத வருமானம் என்பதால் செயலி திடீரென முடங்கிவிட்டால் என்ன செய்வது என்பதைப் பற்றியும் ஆலோசித்தோம். பணம் போனாலும் பிரச்னையில்லை என்று நினைப்பவர்கள் மட்டும் சேரலாம் எனவும் அறிவுறுத்தினோம்,” என்கிறார்.
கடந்த ஓரிரு மாதங்களாக வங்கிகளில் பணம் முடக்கப்படும் நிகழ்வுகள் நடப்பதாகக் கூறும் அமுதா, “தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் மீது கேரளா, கர்நாடகா ஆகிய மாநிலங்களில் புகார்கள் பதிவாகியுள்ளன” என்கிறார்.
“தற்போது என் மீது புகார் கொடுத்துள்ளனர். கடந்த 2 மாதங்களாக, பணம் போட வேண்டாம் எனக் கூறியும் அவர்களில் பலர் கேட்கவில்லை. டார்லேன் என்ற நபரிடம் வாட்ஸ்ஆப் மூலமாகத்தான் பேசுவோம். அந்த எண்ணும் தற்போது செயல்பாட்டில் இல்லை” என்று அமுதா தெரிவித்தார்.
காவல்துறை கூறும் பதில் என்ன?
கொடைக்கானல் பகுதி பெண்களின் புகார் தொடர்பாக, திண்டுக்கல் மாவட்ட இணைய குற்றப் பிரிவு காவல் ஆய்வாளர் விக்டோரியாவிடம் பிபிசி தமிழ் பேசியது.
“செயலி மூலமாக நேரடியாகவும் வசூல் நடந்துள்ளது. யார் என்பதே தெரியாமல் இருந்தால் மட்டுமே அது இணைய குற்றப்பிரிவின் கீழ் வரும். இதில் ஒரு நபர் நேரடியாக தொடர்பில் இருந்துள்ளதால் அவரிடம் விசாரணை நடத்தப்படும். தற்போது இந்த வழக்கை குற்றப் பிரிவு போலீசார் விசாரித்து வருகின்றனர்” என்று மட்டும் பதில் அளித்தார்.
திண்டுக்கல் மாவட்ட எஸ்.பி பிரதீப்பிடம் பிபிசி தமிழ் பேச முயன்றபோது, “புகார் தொடர்பாக விசாரித்துவிட்டுத் தொடர்பு கொள்வதாக” மட்டும் பதில் அளித்தார்.
மோசடிகள் நடப்பது எப்படி?
படக்குறிப்பு, இத்தகைய மோசடிகளில் ஈடுபடுபவர்கள் சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போன்று செயல்படுவார்கள் என்கிறார் வழக்கறிஞர் கார்த்திகேயன்.”இதுபோன்ற மோசடிகள் தொடர்வது ஏன்?” என சைபர் தொழில்நுட்ப வல்லுநரும் வழக்கறிஞருமான கார்த்திகேயனிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“போலியான செயலிகளின் பெயர், ஒவ்வொரு காலகட்டத்திலும் மாறிக் கொண்டே இருக்கும். சிறிய மீனைப் போட்டு பெரிய மீனைப் பிடிப்பது போன்று இவர்கள் செயல்படுவார்கள்” எனக் கூறுகிறார்.
“கூகுள் பிளே ஸ்டோர், ஐ ஸ்டோர் ஆகியவற்றில் இவற்றைப் பார்க்க முடியாது” எனக் கூறும் கார்த்திகேயன், “கூகுள் பிளே ஸ்டோரில் சில செயலிகள் போலியானவை எனக் கண்டறியப்பட்டால் அனுமதி கிடைப்பதில்லை. ஆப் ஸ்டோர்களில் இல்லாத எதையும் ஐபோன்களில் பதிவிறக்கம் செய்ய முடியாது” என்கிறார்.
சமூக ஊடகங்களில் வரும் விளம்பரங்களை கிளிக் செய்யும்போது இதுபோன்ற செயலிகள் பயனர்களுக்கே தெரியாமல் பதிவிறக்கம் செய்யப்படுவதாகவும் அதன்மூலம் ஏராளமானோர் ஏமாற்றப்படுவதாகவும் தெரிவித்தார்.
யுபிஐ மூலமாக வங்கிப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வது குறித்துக் கேட்டபோது, “இந்தியாவில் இருந்து யாரும் செயலியை நடத்துவதில்லை. யாரையாவது ஏமாற்றிப் பணம் பெறுவதற்கு வேறு ஒருவரின் வங்கிக் கணக்கை கொடுப்பார்கள். எதிர் முனையில் உள்ளவரும் கம்பெனி பணம் கொடுத்ததாக நினைப்பார்கள்” என்கிறார்.
“தான் ஏமாற்றப்பட்டதாக பணம் செலுத்தியவர் புகார் கொடுக்கும்போது, யாருடைய வங்கிக் கணக்குக்கு பணம் அனுப்பப்பட்டதோ அந்தக் கணக்கு முடக்கப்படுகிறது” எனக் கூறுகிறார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மோசடிகளில் சிக்காமல் இருப்பது எப்படி? சிக்கினால் என்ன செய்ய வேண்டும்?
இதில் இருந்து பொது மக்கள் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழிமுறைகளையும் கார்த்திகேயன் பட்டியலிட்டார்.
சமூக ஊடகங்களின் மூலம் அறிமுகமாகும் செயலிகளின் வழியாக சிறிய தொகை கிடைத்தாலும் அதை நம்பக்கூடாது.வேறு ஒருவரின் கணக்குக்கு பணம் செலுத்தும்போது அது தீவிரவாத செயல்களுடன் தொடர்புடைய நபராகவும் இருக்கலாம் என்ற எச்சரிக்கை அவசியம்.எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர் பாதிக்கப்படுகிறாரோ, அங்கு வழக்கு பதிவு செய்யப்படுகிறது. வழக்கை முடிவுக்குக் கொண்டு வருவதற்கு அம்மாநில காவல்துறையை அணுக வேண்டும். இது தேவையற்ற மன உளைச்சலை ஏற்படுத்தும்.வழக்கு முடிவுக்கு வந்த பிறகு வங்கிக் கணக்கு மீட்டெடுக்கப்படும் என்பதால் காவல் துறையிடம் இருந்து ஒப்புதல் கடிதம் கிடைக்கும் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும்.தான் ஏமாற்றப்பட்டது தெரிய வந்தால் உடனே காவல்துறையில் புகார் அளிக்க வேண்டும். இதன் மூலம் வரப்போகும் சிக்கல்களைத் தவிர்க்கலாம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு