செங்கடலில் சரக்கு கப்பலை சிறு படகுகள் மூலம் சூழ்ந்து மூழ்கடித்த ஹூதி படை – என்ன நடந்தது?

பட மூலாதாரம், EPA

எழுதியவர், டேவிட் கிரிட்டன் பதவி, பிபிசி செய்திகள் 33 நிமிடங்களுக்கு முன்னர்

செங்கடலில் யேமனின் ஹூதி படையினரின் தாக்குதலுக்கு ஆளான சரக்குக் கப்பலில் பயணித்த 3 பேர் உயிரிழந்துள்ளனர், 6 பேர் உயிருடன் மீட்கபட்டுள்ளனர் என்று கூறுகிறது ஐரோப்பிய கடற்படை.

எட்டர்னிட்டி சி என்று அழைக்கப்படும் அந்த லைபீரியாவில் பதிவு செய்யப்பட்ட கப்பல், கிரேக்க நிறுவனத்தால் இயக்கப்பட்டது.

பிரிட்டனின் கடல் வர்த்தக செயல்பாட்டு முகமையான யூ.கே.எம்.டி.ஓ (UKMTO) வெளியிட்டுள்ள தகவலின்படி இந்த தாக்குதல் திங்கள் அன்று நடைபெற்றுள்ளது.

சிறு படகுகள் மூலமாக எட்டர்னிட்டி சி சூழப்பட்டு, ராக்கெட்டால் வீசப்பட்ட குண்டுகளால் தாக்குதலுக்கு உட்படுத்தப்பட்ட போது அந்த கப்பலில் 25 பேர் இருந்தனர்.

ஹூதி படையினரின் தாக்குதலால் எட்டர்னிட்டி சி முழுமையாக சேதமடைந்து முன்னோக்கி செல்ல முடியாமல் தவித்தது என்றும் யூ.கே.எம்.டி.ஓ. அறிவித்துள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

செவ்வாய்க் கிழமை வரை அந்த தாக்குதல் நீடித்துள்ளது. நள்ளிரவுக்குப் பிறகு மீட்புப் பணிகள் துவங்கின.

இரான் ஆதரவு பெற்ற இந்த அமைப்பானது எட்டர்னிட்டி சியை தாக்கியதை ஒப்புக் கொண்டது. இஸ்ரேலை நோக்கி அந்த கப்பல் சென்றதால் தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவித்துள்ளது. மேலும் அந்த கப்பலில் பயணித்த கப்பல் ஊழியர்களை “பாதுகாப்பான இடத்திற்கு” மாற்றியதாகவும் அறிவித்துள்ளது. ஆனால் எத்தனை ஊழியர்களை ஹூதி படையினர் சிறைபிடித்துள்ளனர் என்ற தகவலை வழங்கவில்லை.

ஒரே வாரத்தில் இரண்டாவது கப்பல்

ஏமனில் இருக்கும் அமெரிக்க தூதரகம், “அக்கப்பலில் பணியாற்றிய நபர்களை ஹூதி படையினர் கடத்திச் சென்றுவிட்டதாகவும், அவர்களை உடனடியாக விடுவிக்க வேண்டும்” என்றும் கேட்டுக் கொண்டது.

பிலிப்பைன்ஸ் அதிகாரிகள், அக்கப்பலில் பணியாற்றிய ஊழியர்களில் 21 பேர் அந்த நாட்டின் பிரஜைகள் என்று கூறுகின்றனர். அவர்களுடன் பயணித்த மற்றொரு நபர் ரஷ்யாவைச் சேர்ந்தவர் என்றும், தாக்குதலின் போது பலத்த காயம் அடைந்த அவர் ஒரு காலை இழந்ததாகவும் கூறப்படுகிறது.

ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக கப்பலை மூழ்கடித்துள்ளது ஹூதி படை. இதற்கு முன்னதாக ஞாயிறு அன்று ஏவுகணைகள் மற்றும் டிரோன்கள் மூலம் தாக்குதல் நடத்திய ஹூதி படை, மேஜிக் சீஸ் என்ற கப்பலை மூழ்கடித்தது.

“ஆக்கிரமிப்பு செய்யப்பட்ட பாலத்தீனத்தில் அமைந்திருக்கும் துறைமுகங்களுக்குள் நுழைய விதிக்கப்பட்டிருக்கும் தடையை மீறிய நிறுவனம் ஒன்றுக்கு சொந்தமானது மேஜிக் சீஸ்,” என்று ஹூத்தி தரப்பில் இந்த தாக்குதலுக்கு காரணம் கூறப்பட்டது.

ஹூதி படையினரால் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்ட வீடியோ ஒன்றில், அப்படையினர் கப்பலின் மீது ஏறுவதும் தொடர்ச்சியாக தாக்குவதும் பதிவாகியிருந்தது. இந்த தொடர் தாக்குதலைத் தொடர்ந்து அக்கப்பல் நீரில் மூழ்கியது.

மேஜிக் சீஸில் பணியாற்றிய 22 ஊழியர்களையும் அவ்வழியாக சென்ற வர்த்தக கப்பல் ஒன்று பத்திரமாக மீட்டது.

பட மூலாதாரம், Diaplous/Handout via Reuters

படக்குறிப்பு, கடலில் இருந்து மீட்கப்பட்ட நபரின் புகைப்படம் ஒரு இந்தியர் மீட்பு

2023-ஆம் ஆண்டு நவம்பர் துவங்கி ஹூதி படையினர் இதுவரை 70 வர்த்தக கப்பல்களை ஏவுகணைகள், டிரோன்கள் மற்றும் சிறு படகுகள் மூலம் தாக்கியுள்ளது. இந்த தாக்குதல்கள் பெரும்பாலும் செங்கடல் மற்றும் ஏதேன் வளைகுடா பகுதிகளில் நடைபெற்றது.

இதுவரை 4 கப்பல்களை மூழ்கடித்துள்ளனர். ஐந்தாவதாக ஒரு கப்பலைக் கைப்பற்றியுள்ளனர். கப்பலில் பணியாற்றிய 7 ஊழியர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே காஸாவில் நடக்கும் போரில் பாலத்தீனியர்களுக்கு ஆதரவாக செயல்படுவதாக ஹூதி படையினர் தெரிவிக்கின்றனர்.

ஏமன் மீது வான்வழி தாக்குதல் நடத்திய இஸ்ரேல், அமெரிக்கா, மற்றும் பிரிட்டன் ஆகிய நாடுகளுக்கு சொந்தமான கப்பல்கள் மீது மட்டுமே தாக்குதல்கள் நடத்தப்படுகிறது என்று ஹூதி தெரிவித்துள்ளது. ஆனால் அது உண்மைக்குப் புறம்பானது.

எட்டர்னிட்டி சி மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு சர்வதேச அளவில் எடுக்கப்பட்டு வரும் பதில் நடவடிக்கைகளில் பங்கேற்பதாக ரோப்பிய ஒன்றியத்தின் கடற்படை தெரிவித்துள்ளது. மேலும் கடலில் தத்தளித்துக் கொண்டிருந்த 6 ஊழியர்களை மீட்டதாகவும் தெரிவித்தது.

ஏ.எஃப்.பி. செய்தி முகமையிடம் பேசிய ஆஸ்பைட்ஸின் அதிகாரி ஒருவர், மீட்கப்பட்ட 6 நபர்களில் 5 பேர் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றும் ஒருவர் இந்தியர் என்றும் கூறியுள்ளார்.மேற்கொண்டு பேசிய அவர், 19 பேரின் நிலை என்னவென்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.

கீரிஸை அடிப்படையாகக் கொண்டு இயங்கி வரும் கடல் பாதுகாப்பு நிறுவனமான டயப்லூஸ் புதன்கிழமை அன்று வீடியோ ஒன்றை வெளியிட்டது. அதில் ஐந்து பேர் மீட்கப்படும் காட்சிகள் இடம் பெற்றிருந்தன. ராய்ட்டர்ஸ் செய்தி முகமையின்படி, அவர்கள் 24 மணி நேரத்திற்கும் மேலாக தண்ணீரில் தத்தளித்து வந்துள்ளனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சர்வதேச அமைப்புகள் கண்டிக்க வேண்டும்

மேஜிக் சீஸ் மற்றும் எட்டர்னிட்டி சி கப்பல்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதலுக்கு அமெரிக்க உள்துறை அமைச்சகம் கண்டனம் தெரிவித்துள்ளது. “இரானின் ஆதரவைப் பெற்ற ஹூதி படையினரால் கடற்பயணத்திற்கான சுதந்திரம், பிராந்திய பொருளாதாரம் மற்றும் கடல் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது,” என்றும் குறிப்பிட்டுள்ளது.

சர்வதேச கடற்பயணங்களின் போது ஹூதி படையினரால் நடத்தப்பட்ட தாக்குதலைத் தொடர்ந்து 7 வாரங்கள் அமெரிக்கா, ஏமன் மீது தாக்குதலை நடத்தியது. இதனைத் தொடர்ந்து ஹூதி அமெரிக்காவுடன் போர் நிறுத்த ஒப்பந்தத்தை ஒப்புக் கொண்டது.

இருப்பினும், இஸ்ரேல் மீதான தாக்குதலை நிறுத்துவது தொடர்பாக ஒப்பந்தத்தில் எந்த கூறுகளும் இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இஸ்ரேல், ஏமன் மீது பல முறை பதில் தாக்குதல்களை நடத்தியுள்ளது.

சர்வதேச கடல்சார் அமைப்பின் (IMO) பொது செயலாளர், தொடர் தாக்குதல்களைத் தொடர்ந்து, ராஜ்ஜீய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

“அமைதியாக நீடித்த சில மாதங்களைத் தொடர்ந்து செங்கடலில் நடத்தப்படும் தாக்குதல்கள் சர்வதேச சட்டங்கள் மற்றும் கடற்பயண சுதந்திரத்தை மீறுகிறது,” என்று அர்செனியோ டோமின்குயிஸ் தெரிவித்துள்ளார்.

“கப்பல்களில் பணியாற்றும் அப்பாவி ஊழியர்களும் உள்ளூர் பொதுமக்களும் இத்தகைய தாக்குதலிலும் அதனால் ஏற்படும் மாசுபாட்டினாலும் அதிகமாக பாதிக்கப்படும் நபர்களாக உள்ளனர்,” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு