Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
காந்திக்கு வழங்கப்படாத நோபல் ஒபாமாவுக்கு கிடைத்தது எப்படி? – அமைதிக்கான நோபல் பரிசு விவாதத்திற்குள்ளான வரலாற்று தருணங்கள்
பட மூலாதாரம், Washington Post via Getty Images
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
அமைதிக்கான நோபல் பரிசுக்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை பரிந்துரைந்திருப்பதாக, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார். இவ்விருது டிரம்பின் நீண்ட கால இலக்காக கூறப்படுகிறது.
“தற்போது அவர் ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு பகுதியிலும் அமைதியை நிலைநாட்டுகிறார்,” என தெரிவித்த நெதன்யாகு, நோபல் பரிசு குழுவினருக்கு தான் அளித்த கடிதத்தை டிரம்பிடம் வழங்கினார்.
டிரம்ப் மீது இத்தகைய மதிப்பீட்டை நெதன்யாகு மட்டும் கொண்டிருக்கவில்லை. கடந்த மே மாதம் இந்தியா மற்றும் பாகிஸ்தானுக்கு இடையே சண்டை நிறுத்தத்தை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்த உதவியதாக, அமைதிக்கான நோபல் பரிசுக்கு டிரம்பை பரிந்துரைக்க திட்டமிட்டிருப்பதாக கடந்த ஜூன் மாதம் பாகிஸ்தான் அறிவித்தது.
அதற்கு அடுத்த நாளே அண்டை நாடான இரானில் உள்ள அணுசக்தி தளங்கள் மீது அமெரிக்கா குண்டுவீசியதைத் தொடர்ந்து, பாகிஸ்தானின் அறிவிப்புக்கு சமூக வலைதளங்களில் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.உலகின் முகவும் மதிப்புமிக்கதாக அமைதிக்கான நோபல் பரிசு கருதப்படுகிறது. சுவீடன் நாட்டை சேர்ந்த மறைந்த விஞ்ஞானியும் தொழிலதிபரும் மற்றும் கொடையாளியுமான ஆல்ஃப்ரெட் நோபலால் உருவாக்கப்பட்ட ஆறு விருதுகளில் இதுவும் ஒன்று.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நார்வே நாடாளுமன்றத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஐந்து பேரை கொண்ட குழுவினரால், இந்த விருதுகளுக்கான வெற்றியாளர்கள் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
டிரம்ப் அமைதிக்கான நோபல் பரிசை வென்றால் அதை பலரும் சர்ச்சையானதாக கருதலாம். ஆனால், இந்த விருதின் அரசியல் இயல்பினாலேயே, மற்ற ஐந்து விருதுகளை விட அமைதிக்கான விருது அடிக்கடி சர்ச்சைகளில் சிக்கியுள்ளது. இந்த விருதின் பெயரால் எழுந்த ஆறு சர்ச்சைகள் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளன. இதில், சில அந்த விருது வழங்கப்பட்ட காலத்திலும் சில அதற்கு பின்னரும் விமர்சனத்தை சந்தித்தன. மேலும், குறிப்பிடத்தக்க ஒருவருக்கு இந்த விருது வழங்கப்படாதது குறித்த சர்ச்சையும் இங்கே பட்டியலிடப்பட்டுள்ளது.
பாரக் ஒபாமா
பட மூலாதாரம், AFP
அமெரிக்க முன்னாள் அதிபருக்கு 2009ம் ஆண்டில் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டபோது பலரும் குழப்பமடைந்தனர். விருது பெற்ற ஒபாமாவும் குழப்பமடைந்தார்.
ஒபாமா 2020ல் எழுதிய தன்னுடைய நினைவுக்குறிப்பில், இந்த அறிவிப்பு வழங்கப்பட்டபோது “எதற்காக?” என்பதுதான் தன்னுடைய முதல் எதிர்வினையாக இருந்ததாக குறிப்பிட்டுள்ளார்.
அந்த சமயத்தில் அவர் ஆட்சியில் அமர்ந்து வெறும் ஒன்பது மாதங்களே ஆகியிருந்ததால், இந்த முடிவு மிகவும் முன்கூட்டியது என விமர்சகர்கள் தெரிவித்தனர். மேலும், ஒபாமா பதவியேற்று வெறும் 12 நாட்களிலேயே, இந்த விருதுக்கான பரிந்துரைகளை சமர்ப்பிக்கும் கடைசி தேதி முடிந்திருந்தது.
2015ம் ஆண்டில் நோபல் இன்ஸ்டிட்யூட்டின் முன்னாள் இயக்குநர் கெய்ர் லன்டெஸ்டட் பிபிசியிடம் கூறுகையில், ஒபாமாவுக்கு அவ்விருதை வழங்க முடிவு செய்த குழு, அதுகுறித்து வருத்தம் அடைந்ததாக தெரிவித்தார்.
ஒபாமா இரண்டு முறை அதிபராக இருந்தபோது, ஆப்கானிஸ்தான், இராக் மற்றும் சிரியா ஆகிய நாடுகளில் அமெரிக்க துருப்புகள் சண்டையிட்டுக்கொண்டிருந்தன.
யாசெர் அராஃபத்
பட மூலாதாரம், Sygma via Getty Images
படக்குறிப்பு, 1994ல் அமைதிக்கான நோபல் பரிசை பெற்ற யாசெர் அராஃபத் இஸ்ரேலிய தலைவர் யிட்ஸாக் ரபினின் புகைபடத்தைக் கையில் வைத்துள்ளார்.1994ம் ஆண்டில் அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் யிட்ஸாக் ரபின் மற்றும் இஸ்ரேலிய வெளியுறவு அமைச்சர் ஷிமோன் பெரெஸ் ஆகியோருடன் இணைந்து மறைந்த பாலத்தீன தலைவர் யாசர் அராஃபத்துக்கு இந்த விருது வழங்கப்பட்டது. 1990களில் இஸ்ரேல்-பாலத்தீன நெருக்கடிக்கான தீர்வாக விளங்கும் என நம்பப்பட்ட ஓஸ்லோ அமைதி ஒப்பந்தங்களை ஏற்படுத்தும் பணிகளை மேற்கொண்டதற்காக இவ்விருது அவர்களுக்கு வழங்கப்பட்டது.
முன்பு ராணுவ நடவடிக்கைகளில் ஈடுபட்ட யாசர் அராஃபத் போன்ற ஒருவருக்கு இந்த விருது வழங்கப்பட்டது இஸ்ரேல் மற்றும் அதனைத் தாண்டியும் விமர்சிக்கப்பட்டது.
அராஃபத் பரிந்துரைக்கப்பட்டது நோபல் குழுவுக்குள்ளேயும் சலசலப்பை ஏற்படுத்தியது.
அக்குழுவில் இருந்த நார்வே அரசியல்வாதியான கரே கிரிஸ்டியான்சென், இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக அக்குழுவிலிருந்து விலகினார்.
ஹென்றி கிஸ்ஸிங்கர்
பட மூலாதாரம், Gamma-Rapho via Getty Images
1973ம் ஆண்டில் அமெரிக்காவின் அப்போதைய வெளியுறவு துறை செயலாளர் ஹென்றி கிஸ்ஸிங்கருக்கு அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது.
கம்போடியாவில் ரகசிய குண்டுவெடிப்பு நடவடிக்கைகள் போன்று அமெரிக்க வெளியுறவு துறையின் மிகவும் சர்ச்சைக்குரிய காலகட்டங்களில் பங்குபெற்றிருந்த ஒருவருக்கு இந்த விருதை வழங்கியது பலரது புருவங்களை உயர்த்தியது.
கிஸ்ஸிங்கருடன் வடக்கு வியட்நாமிய தலைவர் லீ டக் தோ-வுக்கு, வியட்நாம் போர் நிறுத்தத்துக்கு பேச்சுவார்த்தை நடத்தியதில் பங்காற்றியதற்காக இந்த விருது வழங்கப்பட்டது.
கிஸ்ஸிங்கருக்கு இந்த விருதை வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து விருது குழுவினரில் இருவர் பதவி விலகினர். மேலும், இதுகுறித்து செய்தி வெளியிட்ட நியூ யார்க் டைம்ஸ், இந்த விருதை நோபல் போர் விருது என அழைத்தது.
அபிய் அஹ்மத்
பட மூலாதாரம், Getty Images
2019ம் ஆண்டில் அப்போதைய எத்தியோப்பிய பிரதமர் அபிய் அஹ்மது-க்கு அண்டை நாடான எரித்ரேயாவில் நீண்ட காலமாக நிலவிவந்த எல்லை மோதலை தீர்க்க மேற்கொண்ட முயற்சிகளுக்காக நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால், அதற்கு ஓராண்டுக்குள்ளாகவே அவருக்கு விருது வழங்கும் முடிவு சரிதானா என கேள்விகள் எழுப்பப்பட்டன.
வடக்கு பிரதேசமான டிக்ரேயில் துருப்புகளை நிறுத்தியதற்காக அபிய் அஹ்மது மீது சர்வதேச சமூகம் விமர்சனங்களை முன்வைத்தது.
இதனால் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில் லட்சக்கணக்கான மக்கள் உணவு, மருந்துகள் மற்றும் மற்ற அடிப்படை சேவைகளுக்கு பற்றாக்குறை எழுந்தது, பல நூற்றுக்கணக்கானவர்கள் உயிரிழந்ததாக கருதப்படுகிறது.
ஆங் சாங் சூச்சி
பட மூலாதாரம், Getty Images
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக, அகிம்சை வழியில் நடத்திய போராட்டங்களுக்காக, 1991ம் ஆண்டில் பர்மிய அரசியல்வாதியான ஆங் சாங் சூச்சிக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.
ஆனால், சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு, மியான்மரில் ரோஹிஞ்சா முஸ்லிம் மக்களுக்கு எதிராக நடைபெற்ற தீவிரமான மனித உரிமை மீறல்கள் மற்றும் அதிகளவிலான கொலைகளுக்கு எதிராக குரல் எழுப்பவில்லை என கடும் விமர்சனங்களை அவர் எதிர்கொண்டார். ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிரான மனித உரிமை மீறல்களை “இனப்படுகொலை” என ஐநா விவரித்தது.
அவருக்கு வழங்கப்பட்ட விருதை பறிக்க வேண்டும் எனவும் கோரிக்கைகள் விடுக்கப்பட்டன. ஆனால், விருதுகளை பறிப்பதற்கு அதன் விதிமுறைகள் அனுமதிப்பதில்லை.
வாங்காரி மாதாய்
பட மூலாதாரம், Corbis via Getty
மறைந்த கென்ய செயற்பாட்டாளரான வாங்காரி மாதாய், 2004ம் ஆண்டில் இந்த விருதை பெற்றார். இதன்மூலம், இந்த விருதை பெற்ற முதல் ஆப்பிரிக்க பெண்ணாக இவர் ஆனார்.
பல லட்சக்கணக்கான மரங்களை நடும் பொருட்டு க்ரீன் பெல்ட் இயக்கத்தை முன்னெடுத்ததற்காக உயிரியலாளரான இவர் இந்த விருதை பெற்றார்.
ஆனால், ஹெச்ஐவி மற்றும் எய்ட்ஸ் தொடர்பாக அவர் கூறிய கருத்துகள் பரவியதைத் தொடர்ந்து, இந்த விருது அவருக்கு வழங்கப்பட்டது குறித்து சர்ச்சைகள் எழுந்தன.
கருப்பின மக்களை அழிக்கும் பொருட்டு, ஹெச்ஐவி வைரஸ் ஓர் உயிரி ஆயுதமாக செயற்கையாக உருவாக்கப்பட்டதாக மாதாய் கூறியிருந்தார்.
அவருடைய இந்த கூற்றை ஆதரிப்பதற்கு எவ்வித அறிவியல் ஆதாரமும் இல்லை.
விருது வழங்கப்படாத காந்தி
பட மூலாதாரம், Keystone/Getty Images
சிலருக்கு இந்த விருது வழங்கப்படாததாலும் அமைதிக்கான நோபல் பரிசு விவாதத்திற்கு உள்ளாகிறது.
மகாத்மா காந்திக்கு இந்த விருது வழங்கப்படாதது அதிர்ச்சியை ஏற்படுத்தும் ஒன்றாக உள்ளது.
ஐந்து முறை பரிந்துரைக்கப்பட்டபோதும் 20ம் நூற்றாண்டில் அமைதியை வலியுறுத்திய அடையாளமாக திகழ்ந்த இந்திய தலைவரான காந்திக்கு இந்த விருது வழங்கப்படவே இல்லை.
2006ம் ஆண்டில், இந்த விருதுக்கான வெற்றியாளர்களை தேர்ந்தெடுக்கும் குழுவின் தலைவராக இருந்த நார்வே வரலாற்று அறிஞர் கெய்ர் லன்டெஸ்டட் கூறுகையில், காந்தியின் சாதனைகளை அங்கீகரிக்க தவறியது, நோபல் வரலாற்றில் மிகப்பெரும் புறக்கணிப்பு என தெரிவித்திருந்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு