இந்தி எதிர்ப்பில் தமிழ்நாடு – மகாராஷ்டிரா இடையே என்ன வேறுபாடு?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ராஜ் தாக்கரே மற்றும் உத்தவ் தாக்கரேஎழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

மகாராஷ்டிராவில் ஆளும் பாஜக கூட்டணி அரசு பள்ளிகளில் இந்தி மூன்றாவது மொழியாக கட்டாயம் கற்பிக்கப்படும் என அறிவித்தது கடுமையான எதிர்ப்புகளைச் சந்தித்து வருகிறது.

இந்த அறிவிப்புக்கு எதிராக பல்வேறு தரப்பினரும் போராட்டம் நடத்தினர். உத்தவ் தாக்கரே மற்றும் ராஜ் தாக்கரே சகோதரர்கள் 20 ஆண்டுகளுக்குப் பிறகு ஒன்றாக கைகோர்த்து போராட தீர்மானித்தனர். ஆனால், மகாராஷ்டிர அரசு தனது 2 அரசாணைகளையும் திரும்பப் பெற்றதையடுத்து, போராட்டம் வெற்றிப் பேரணியாக மாற்றப்பட்டது. அதில், தமிழ்நாட்டை மேற்கொள் காட்டி உத்தவ் தாக்கரே பேசினார்.

“தமிழ்நாடு, மேற்கு வங்காளம் போன்ற மாநிலங்களில் இத்தகைய முயற்சிகளைப் பரிசோதித்து பார்ப்பார்களா எனத் தெரிந்து கொள்ள விரும்புகிறேன்” என்றார் உத்தவ் தாக்கரே. கட்டாய இந்திக்கு எதிராக உத்தவ் தாக்கரே நடத்திய கூட்டத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.

அதே கூட்டத்தில் ராஜஸ்தானையும் உத்தரப் பிரதேசத்தையும் குறிப்பிட்டு ராஜ் தாக்கரே பேசியதையும் ஸ்டாலின் தனது எக்ஸ் பதிவில் மேற்கொள் காட்டியிருந்தார்.

“உத்தர பிரதேசத்திலும் ராஜஸ்தானிலும் கற்பிக்கப்படும் மூன்றாம் மொழி என்ன?” என்றும், “இந்தி பேசும் மாநிலங்கள் பின்தங்கி இருக்கின்றன – இந்தி பேசாத முன்னேறிய மாநிலங்களின் மக்கள் மீது ஏன் இந்தியைத் திணிக்கிறீர்கள்?” என்றும் திரு.ராஜ் தாக்கரே அவர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு இந்தியையும் சமஸ்கிருதத்தையும் வளர்ப்பதையே முழுநேர முன்னுரிமையாக வைத்திருக்கிற ஒன்றிய அரசிடம் எந்த பதிலும் இருக்காது என்பதை நன்றாக அறிவேன்.” என்று தனது பதிவில் தெரிவித்திருந்தார்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், X/MK Stalin

படக்குறிப்பு, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் எக்ஸ் தளப்பதிவுஇந்தி மொழியை வைத்து என்ன சர்ச்சை?

மகாராஷ்டிரத்தில் மராட்டி மற்றும் ஆங்கில வழிப் பள்ளிகளில் படிக்கும் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இந்தி கட்டாய மூன்றாவது மொழி பாடமாக இருக்கும் என கடந்த ஏப்ரல் 16-ஆம் தேதி மகாராஷ்டிரா அரசு ஆணை ஒன்றை வெளியிட்டிருந்தது.

இதற்கு எதிர்ப்பு கிளம்பியதால் கடந்த ஜூன் 17-ம் தேதி முந்தைய ஆணையைத் திருத்தி இந்தி விருப்பப் பாடம் எனக் குறிப்பிட்டு அரசாணை வெளியிடப்பட்டது.

ஒரு வகுப்பில் இந்தி அல்லாத வேறு மொழியை மூன்றாவதாகப் படிக்க மாணவர்கள் விரும்பினால், 20 மாணவர்கள் இருந்தால் மட்டுமே புதிய ஆசிரியர் நியமிக்கப்படுவார், இல்லாத பட்சத்தில் இணையம் மூலம் அந்த மொழி கற்பிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

“இந்த ஏற்பாடும் மறைமுகமாக இந்தியை திணிப்பதற்கான வழி என்றே மராட்டிய அமைப்புகள் பார்த்தன” என்கிறார் மும்பையைச் சேர்ந்த தமிழ் அறக்கட்டளையின் தலைவர் சு.குமணராசன்.

படக்குறிப்பு, மும்பையைச் சேர்ந்த தமிழ் அறக்கட்டளையின் தலைவர் சு.குமணராசன்.மராட்டிய மொழிக்கு ஒரு மாநிலம்

தமிழ்நாட்டைப் போலவே மகாராஷ்டிராவிலும் மராட்டிய மொழிக்கு என வலுவான இயக்கம் உள்ளது என்கிறார் ஓய்வு பெற்ற அரசியல் அறிவியல் பேராசிரியரான ராமு மணிவண்ணன்.

இந்தியாவில் 1956-ல் மொழிவழி மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. அப்போது மதராஸ் மாகாணத்தில் இருந்து தமிழ்நாடு உருவாக்கப்பட்டது. ஆனால் அப்போது ஒன்றுபட்ட பம்பாய் மாகாணம் பிரிக்கப்படவில்லை.

மராட்டிய மொழிக்கென தனி மாநிலம் என்ற கோரிக்கை அப்போது தீவிரமாக இருந்தது எனக் குறிப்பிடுகிறார் குமணராசன், “பல்வேறு காரணங்களுக்காக அப்போது பம்பாய் மாகாணம் பிரிக்கப்படவில்லை. ஆனால் மராட்டிய அமைப்புகளின் தொடர் போராட்டங்களைத் தொடர்ந்து 1960ஆம் ஆண்டில் பம்பாய் மாகாணம் குஜராத் மற்றும் மகாராஷ்டிரம் எனப் பிரிந்தது” எனத் தெரிவித்தார்.

தமிழ்நாடும் இந்தி மொழியும்

தமிழ்நாட்டில் மொழி தொடர்பான உரையாடல் சுதந்திரத்திற்கு முன்பு இருந்தே உள்ளது. பல்வேறு கட்டங்களில் இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டங்கள் தமிழ்நாட்டில் நடைபெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் அப்போது மொழி உணர்வு மேலோங்கி இருந்தாலும் மற்ற மாநிலங்களில் இருந்ததைப் போல மொழி அடிப்படையில் மாநிலத்தைப் பிரிக்க வேண்டும் என்கிற உணர்வு இங்கு தீவிரமாக இருக்கவில்லை என்கிறார் பேராசிரியர் ராமு மணிவண்ணன்.

படக்குறிப்பு, பேராசிரியர் ராமு மணிவண்ணன்.”1956-க்கு முன்பே ஆந்திர மாநிலம் தனியாகப் பிரிக்கப்பட்டது. பம்பாய் மாநிலம் 1960-ல் பிரிக்கப்பட்டது. ஆனால், தமிழ்நாட்டில் 1938-ல் இருந்து இந்தி திணிப்புக்கு எதிரான இயக்கங்கள் உள்ளன. 1960க்குப் பின்பும் இது தொடர்ந்து. தற்போதும் கட்டாய இந்தி திணிப்புக்கு எதிரான ஒருமித்த கருத்து இங்குள்ள அரசியல் கட்சிகள் மற்றும் இயக்கங்களிடம் உள்ளது” எனத் தெரிவித்தார்.

சமீபத்தில் கூட இந்தி மொழியை அடிப்படையாக வைத்து பல்வேறு நிகழ்வுகள் தமிழ்நாட்டில் அரங்கேறியுள்ளன.

தமிழ்நாட்டில் தேசிய கல்வி கொள்கை தொடர்பாகவும் மும்மொழி கொள்கை தொடர்பாகவும் மாநில அரசுக்கும் மத்திய அரசுக்கும் இடையே கருத்து வேறுபாடு நிலவி வருகிறது.

இந்தி திணிப்பு எதிர்ப்பு: ஒற்றுமையும் வேற்றுமையும்

மகாராஷ்டிரா வட இந்தியாவா அல்லது தென் இந்தியாவா என்கிற வரலாற்றுக் குழப்பம் எப்போதும் உண்டு என்று கூறும் குமணராசன் இந்த மாநிலத்தை முழுவதுமாக வட இந்தியா அல்லது தென் இந்தியா என வரையறுத்துவிட முடியாது எனத் தெரிவித்தார். இரு மாநிலங்களின் இந்தி எதிர்ப்புக்கும் வேறுபாடுகள் உள்ளன என்கிறார் குமணராசன்.

ஸ்டாலின் கருத்துக்கு எதிர்வினையாற்றிய சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத் தென் மாநிலங்களின் இந்தி எதிர்ப்புக்கும் எங்களது இந்தி எதிர்ப்புக்கும் வித்தியாசம் உள்ளது என்று தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சிவசேனா (உத்தவ் தாக்கரே) தலைவர் சஞ்சய் ராவத்இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில், “தென் மாநிலங்கள் இந்த விவகாரத்தில் பல வருடங்களாக சண்டையிட்டு வருகின்றன. இந்தி திணிப்புக்கு எதிரான அவர்களின் நிலைப்பாடு என்னவென்றால் நாங்கள் இந்தி பேச மாட்டோம் யாரையும் இந்தி பேச விடவும் மாட்டோம் என்பது தான். மகாராஷ்டிராவில் எங்களின் நிலைப்பாடு அதுவல்ல. நாங்கள் இந்தி பேசுவோம். தொடக்க பள்ளிகளில் இந்திக்கான கட்டாயத்தைப் பொறுத்துக் கொள்ள மாட்டோம் என்பது தான் எங்களின் நிலைப்பாடு. எங்களது சண்டை இதற்கு உட்பட்டது மட்டுமே” என்றார்.

இதன்மூலம் இரு மாநில இந்தி எதிர்ப்பு இயக்கங்களின் வேறுபாட்டை புரிந்துகொள்ள முடியும் என்கிறார் ராமு மணிவண்ணன். “பள்ளியில் மட்டும் தான் கட்டாய இந்தியை எதிர்க்கிறோம் என அவர்கள் கூறுகிறார்கள். ஆனால் தமிழ்நாட்டைப் பொருத்தவரை இந்தியை கற்றுக்கொள்ள யாருக்கும் தடையில்லை, கட்டாய இந்தி திணிப்பு எங்குமே கூடாது என்பது வரலாற்று நிலைப்பாடாக உள்ளது. கல்வி கொள்கை என்று மட்டும் இல்லை, ஏதாவது அரசுத் துறையின் செயல்பாடு அல்லது முன்னெடுப்புகளில் இந்தி முன்னிலைப்படுத்தப்பட்டாலும் கூடதமிழ்நாட்டில் எதிர்ப்பு எழுகிறது” என்றார்.

தமிழ்நாட்டின் இந்தி திணிப்பு எதிர்ப்பு தற்போது மகாராஷ்டிராவிலும் உணரப்படுகிறது என்கிறார் குமணராசன்.

“இந்தியை தாய்மொழியாகக் கொண்டு மகாராஷ்டிராவில் வசிப்பவர்கள் அந்த மொழியைப் படிப்பது என்பது வேறு. அனைவரும் இந்தியை கட்டாயமாக படிக்க வேண்டும் என்பது வேறு. கட்டாய மூன்றாவது மொழி என்பது மாணவர்களுக்கு சுமையாக இருக்கும் என பெற்றோர் கருதுகின்றனர்.” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “மராத்திக்கும் இந்திக்கும் எழுத்து வடிவம் தேவநாகரி தான். இதனால் மொழி என்கிற அளவில் பெரிய எதிர்ப்பு இல்லை. ஆனால் உள்ளூர் மக்கள் இப்போது தான் இதை திணிப்பாகப் பார்க்கிறார்கள்” என்று தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் முன்னர் தமிழர்களுக்கு இருந்த எதிர்ப்பு மொழி என்பதை அடிப்படையாக வைத்தது அல்ல எனக் கூறும் குமணராசன், “வெளி மாநிலத்தவருக்கான எதிரான இயக்கமாகத் தான் அது இருந்துள்ளது. தற்போது தான் மொழி ஒரு அம்சமாக உருவெடுத்துள்ளது” என்றார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.”தமிழ்நாட்டில் இந்தி மொழி திணிப்பு என்பதை கலாசாரத்துடன் சேர்த்து பார்க்கும் புரிதல் உள்ளது. மகாராஷ்டிராவில் இந்திக்கு மக்களிடையே ஏற்பு உள்ளது. இந்தி சினிமாவின் மையமாக மும்பை உள்ளது. எனவே சமீபத்திய எதிர்ப்பு என்பது கட்டாய மொழி திணிப்பு மற்றும் மும்மொழி கொள்கை என்பதன் அடிப்படையில் மட்டுமே. பாஜக ஆட்சியில் உள்ள மாநிலத்திலே இதற்கு கடுமையான எதிர்ப்பு வந்துள்ளது பின்னடைவாகவே பார்க்கப்படும். தேசிய அளவில் மொழி என்பதை அடிப்படையாக வைத்து பாஜகவுக்கு நெருக்கடி கொடுக்க திமுக விரும்பலாம்” என்றார் ராமு மணிவண்ணன்.

மகாராஷ்டிராவிலும் அரசியல் கட்சிகளுக்கும் மொழி இயக்கங்களின் நிலைபாட்டிலுமே வேறுபாடுகள் உண்டு என்று அவர் கூறுகிறார்.

“இந்தி அறவே கூடாது எனச் சொல்கிற இயக்கங்களும் அங்கு உள்ளன. 1956-க்கு முன்பு தென்னிந்திய மொழி திரைப்படங்களின் தலைமையிடமாக அப்போதைய மதராஸ் இருந்தது. மொழி வாரியாக மாநிலங்கள் பிரிக்கப்பட்ட பிறகு அந்தந்த மொழி திரைப்படத் துறைகள் தனித்தனியே வளர்ந்தன. ஆனால் மகாராஷ்டிராவில் அவ்வாறு நிகழவில்லை. இந்தி சினிமா அளவிற்கு மராட்டிய சினிமா வளரவில்லை, ஆனால் மராட்டிய நாடக இயக்கம் அங்கு வலுவாக உள்ளது. தமிழ்நாட்டில் திரைத்துரையினரிடம் கூட மொழி பற்றிய ஒரு கருத்து இருக்கும். மகாராஷ்டிரத்தில் நாம் அதைப் பார்க்க முடியாது” என்று ராமு மணிவண்ணன் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு