பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப் படம்எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்8 ஜூலை 2025, 07:11 GMT

புதுப்பிக்கப்பட்டது 2 நிமிடங்களுக்கு முன்னர்

வரும் 2041 ஆம் ஆண்டில் கோவை வளர்ச்சியைக் கணித்து, கோவைக்கான முழுமைத்திட்டம் (Master Plan 2041) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த ஜூலை 3 அன்று வெளியிட்ட இந்த திட்டத்தின் சுருக்கம் தற்போது வெளியாகியுள்ளது.

அனைத்து விவரங்களையும் உள்ளடக்கிய முழுமைத் திட்டம், அரசிதழில் வெளியிடப்பட்ட பின், ஒரு வாரத்துக்குள் நகர ஊரமைப்புத்துறை தளத்தில் வெளியிடப்படுமென்று நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசன் தெரிவித்தார்.

புதிய மாஸ்டர் பிளான் வெளியீட்டை கோவை தொழில் அமைப்புகள் வரவேற்றுள்ளன. அதேநேரத்தில், பழைய மாஸ்டர் பிளானில் இருந்த 136 திட்டச்சாலைகளை கைவிட்டிருப்பதற்கு எதிர்ப்பும் எழுந்துள்ளது.

கோவை மாஸ்டர் பிளான்-2041

தற்போது நடைமுறையிலுள்ள கோவை மாஸ்டர் பிளான் கடந்த 1994 ஆம் ஆண்டில் வெளியிடப்பட்டது. அதன்படி, கோவை உள்ளூர் திட்டக்குழுமப் பகுதி, பழைய கோவை மாநகராட்சிப் பகுதி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளை உள்ளடக்கி 1,287 சதுர கி.மீ. அளவிலானது.

தற்போது விரிவாக்கம் செய்யப்பட்ட கோவை மாநகராட்சியுடன் மதுக்கரை, கருமத்தம்பட்டி, கூடலுார், காரமடை நகராட்சிகள், 21 பேரூராட்சிகள், 66 வருவாய் கிராமங்களையும் உள்ளடக்கி, 1,531 சதுர கி.மீ., பரப்பளவுக்கு கோவை திட்டப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டு, கோவை மாஸ்டர் பிளான் 2041 தயாரிக்கப்பட்டுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிப்ரவரி 11-ல் கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் வரைவு வெளியிடப்பட்டிருந்தது. மக்கள் ஆட்சேபம் மற்றும் ஆலோசனை தெரிவிக்க அவகாசம் வழங்கப்பட்டது. கோவையிலுள்ள தொழில், சமூக அமைப்புகள், கட்டுமானத் துறையினர் மற்றும் தனிநபர்கள் என 3500க்கும் அதிகமான கருத்துகள் வரப்பெற்றன.

உரிய திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு இறுதி செய்யப்பட்ட மாஸ்டர் பிளான் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, 1,531 சதுர கி.மீ., பரப்பளவுக்கு கோவை திட்டப்பகுதிக்குள் கொண்டு வரப்பட்டு, கோவை மாஸ்டர் பிளான் 2041 தயாரிக்கப்பட்டுள்ளது.முக்கிய அம்சங்கள்

தமிழக அரசின் நகர ஊரமைப்புத்துறையின் இணையதளம் கூறும் விளக்கத்தின்படி, ஒரு மாஸ்டர் பிளான் என்பது 20 ஆண்டுகளுக்கான ஒரு விரிவான திட்டமாகும்.

புதிய மாஸ்டர் பிளானின் சுருக்கத்தில் முக்கிய அம்சங்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. அதன்படி,

கோவையில் மக்கள் தொகை வளர்ச்சி விகிதம் 30 சதவீதமாகவுள்ளது. கோவை முழுமைத் திட்டப் பகுதியில் 2021 ஆம் ஆண்டில் 31.62 லட்சம் பேர் வசிக்கின்றனர். இது வரும் 2041 ஆம் ஆண்டில் 58.24 லட்சமாக உயரும்கோவை முழுமைத் திட்டப்பகுதியில் தற்போது 10 பல்கலைக் கழகங்கள், 5 மருத்துவக் கல்லுாரிகள், 73 பொறியியல் கல்லுாரிகள் உட்பட 180 கல்லுாரிகளும், 1172 பள்ளிகளும் அமைந்துள்ளன.கடந்த 1994 மாஸ்டர் பிளானின் குறிப்பிட்டிருந்த குடியிருப்பு, தொழிற்சாலை, வணிகம், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு நிலப் பயன்பாடுகளும் உத்தேசிக்கப்பட்ட அளவை 100 சதவீதம் எட்டியுள்ளன.கோவைக்கான சுற்றுலாப்பயணிகள் வருகை இன்னும் 16 ஆண்டுகளில் 4 மடங்கு அதிகரிக்கும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோயம்புத்தூர் மாநகரம்மின் தேவை 1,528 மெகாவாட் என்ற அளவில் இருந்து 2041 ஆம் ஆண்டில் 6,262 மெகாவாட் ஆக உயரும். அதற்கேற்ப துணை மின் நிலையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும் தற்போது கோவை மாஸ்டர் பிளான் ஏரியாவில் 1390 மெட்ரிக் டன் திடக்கழிவு சேகரிக்கப்படுகிறது. இது 2041 ஆம் ஆண்டில் 2620 மெட்ரிக் டன்னாக அதிகரிக்கும். இதனால், குப்பையைக் கையாளும் புதிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்தற்போதுள்ள மத்திய சிறையை பிளிச்சிக்கு இடம் மாற்றுவதாகக் கூறப்பட்டுள்ளது. தற்போதுள்ள சிறைச்சாலை வளாகத்தில் 45 ஏக்கரில் செம்மொழிப் பூங்கா அமைக்கப்படும்.ஒண்டிபுதூர் 30.36 ஏக்கரில் சர்வதேச கிரிக்கெட் ஸ்டேடியம், ஆர்.எஸ்.புரத்தில் 7 ஏக்கரில் சர்வதேச தரத்திலான ஹாக்கி ஸ்டேடியம் அமைக்கப்படும். சிறு, குறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள், தகவல் தொழில் நுட்ப நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் திறன் வளர்ப்பு மையங்களை உருவாக்க, புதிய மண்டலங்களை அடையாளப்படுத்தவும் மாஸ்டர் பிளானில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

விரிவாக்கம் செய்யப்பட வேண்டிய சாலைகள், புதிய இணைப்புச் சாலைகள் பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ள அதே வேளையில், முதலாவது மாஸ்டர் பிளானில் குறிப்பிட்டிருந்த பல திட்டங்கள் கைவிடப்பட்டிருப்பதும் தற்போது தெரியவந்துள்ளது.

எதிர்ப்பை மீறி கைவிடப்பட்ட 136 திட்டச்சாலைகள்

திருச்சி சாலை, அவிநாசி சாலை மற்றும் மேட்டுப்பாளையம் சாலையை இணைக்கும் வகையில் 80 அடி அகலத்தில் உத்தேசிக்கப்பட்டிருந்த வட்டச்சாலை (Ring Road) திட்டம் கைவிடப்பட்டுள்ளது. துடியலுார்–குனியமுத்துார் இடையிலான 150 அடி அகல உள்வட்டச்சாலை (Inner Ring Road), வெள்ளக்கிணறு– நீலம்பூர் 80 அடி உள்வட்டச்சாலை, நகரின் முக்கியச்சாலைகளை இணைக்கும் பசுமை வழித்தடம் ஆகிய திட்டங்கள் கைவிடப்பட்டுள்ளன.

அதேபோன்று, முதலாவது மாஸ்டர் பிளானில் மொத்தம் 257 திட்டச்சாலைகள் இடம் பெற்றிருந்தன. அவற்றில் 58 சாலைகள் போடப்பட்டுள்ளதாகவும், 53 சாலைகள் இனிமேல் போடப்படுமென்றும் 136 திட்டச்சாலைகளை அமைக்க சாத்தியமில்லை என்றும் மாஸ்டர் பிளானில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, ஒரு மாஸ்டர் பிளான் என்பது 20 ஆண்டுகளுக்கான ஒரு விரிவான திட்டமாகத் தயாரிக்கப்படுவதாகும்கோவை மெட்ரோ ரயில் திட்டத்துக்கான முதல்கட்ட விரிவான திட்ட அறிக்கை, மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டுள்ள நிலையில், மாஸ்டர் பிளான் வரைவில் உக்கடம்–கணியூர், உக்கடம்–சாய்பாபா காலனி–பிளிச்சி, தண்ணீர்ப்பந்தல்–சிங்காநல்லுார்–காரணம்பேட்டை, கணேசபுரம்–காந்திபுரம்–காருண்யா நகர், உக்கடம்–வெள்ளலுார் பஸ் முனையம் என ஐந்து வழித்தடங்கள் பரிந்துரைக்கப்பட்டன.

ஆனால் இறுதி செய்யப்பட்டுள்ள மாஸ்டர் பிளானில் இந்த விபரங்கள் எதுவுமின்றி, மொத்தம் 147.3 கி.மீ. தூரத்துக்கு 3 கட்டங்களாக பொதுப் போக்குவரத்து திட்டம் (MRTS–Mass Rapid Transit System) செயல்படுத்தப்படும் என்று கூறப்பட்டுள்ளது.

ரூ.56,669 கோடி திட்ட மதிப்பு

இவற்றுடன் ஏற்கெனவே வரைவில் பரிந்துரைக்கப்பட்டிருந்த சரக்கு முனையங்கள், மல்டி மாடல் லாஜிஸ்டிக்ஸ் பார்க் திட்டங்கள், புதிய புறவழிச் சாலைகள் போன்ற திட்டங்களும் இதில் இடம் பெற்றுள்ளன. மொத்தம் 12 விதமான திட்டங்களுக்கு ரூ.56,669 கோடி தேவையென்றும் மாஸ்டர் பிளானில் மதிப்பிடப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், Thiyagarajan

படக்குறிப்பு, தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் தியாகராஜன்கோவைக்கான புதிய மாஸ்டர் பிளான் பற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு ரிசர்வ் சைட் பாதுகாப்பு சங்கத்தின் மாநில செயலாளர் தியாகராஜன், ”தகவல் அறியும் உரிமைச் சட்டத்தில் நாங்கள் வாங்கிய தகவலின்படி, கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தில் மட்டும், புதிய கட்டடங்களில் கட்டமைப்பு மற்றும் அடிப்படை வசதிகள் கட்டணமாக ரூ.492 கோடி நகர ஊரமைப்புத் துறையால் வசூலிக்கப்பட்டது. அதை வைத்து திட்டச்சாலைக்கான நிலங்களை கையகப்படுத்தி அவற்றை அமைத்திருக்க வேண்டும். ஆனால் சாத்தியமில்லை என்று இப்போது பல திட்டச்சாலைகளை கைவிட்டுள்ளனர். .” என்றார்.

“கட்டுமான திட்டங்கள் வேகம் பெறுமென்று நம்பிக்கை”

கோயம்புத்துார் கன்ஸ்யூமர் காஸ் செயலாளர் கதிர்மதியோன் பேசுகையில், காகிதத்தில் வெறும் கோடுகளைப் போட்டுவிட்டு, அவற்றுக்கான நிலங்களை எடுக்காமல் இருப்பதால் அரசுக்கும், மக்களுக்கும், நில உரிமையாளர்களுக்கும் எந்த பயனுமில்லை என்றார். அதற்குப் பதிலாக அந்த திட்டச்சாலைகளை கைவிட்டு புதிய சாலைகளை திட்டமிடுவது நல்லது என்று அவர் கூறினார்.

”திட்டம் போடப்பட்டு 30 ஆண்டுகளாக எதுவும் நடக்கவில்லை. தற்போது பல இடங்களில் கட்டடங்கள் அதிகரித்துவிட்டன. இதனால் முன்பு திட்டமிடப்பட்டிருந்த பெரும்பாலான சாலைகளை அமைப்பதற்கான சாத்தியம் குறைவு . அதனால்தான் நாங்கள் இயலாதவற்றை கைவிடுமாறு ஆலோசனையாகத் தெரிவித்தோம்.” என்றார்.

ஆனால் நிலங்களை எடுக்க முடியவில்லை என்று கூறி, வளர்ச்சித் திட்டங்களை கைவிடுவது சரியான முடிவல்ல என்று கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குநர் சதீஷ் கூறுகிறார்.

பட மூலாதாரம், Sathish

படக்குறிப்பு, கொங்கு குளோபல் ஃபோரம் இயக்குநர் சதீஷ்”திட்டச்சாலைக்கு மட்டுமின்றி, எந்தவொரு திட்டமாக இருந்தாலும் நிலத்தைக் கொடுப்பதற்கு பலரும் தயாராகவுள்ளனர். ஆனால் கொடுக்கின்ற இழப்பீடுக்கும், நிஜமான நிலமதிப்புக்கும் பெரும் இடைவெளி இருப்பதுதான் பெரும்பாலானவர்கள் இதை எதிர்க்கக் காரணம். நகருக்குள் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க புதிய புறவழிச்சாலைகள், இணைப்புச்சாலைகள் நிறையத் தேவை.” என்கிறார் சதீஷ்.

கட்டுமானத் துறையினரைப் பொறுத்தவரை, தாங்கள் பரிந்துரைத்த பெரும்பான்மையான ஆலோசனைகள் ஏற்கப்பட்டிருப்பதாக ‘கிரடாய்’ நிர்வாகி குகன் இளங்கோ தெரிவித்தார். புதிய மாஸ்டர் பிளான் வந்திருப்பதால் புதிய கட்டுமானத் திட்டங்கள் வேகம் பெறுமென்று அவர் நம்பிக்கை தெரிவித்தார். இதேபோன்று இந்திய தொழில் மற்றும் வர்த்தக சபையும் இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ளது.

பிபிசி தமிழிடம் பேசிய தொழில் மற்றும் வர்த்தக சபையில் கோவை கிளை தலைவர் ராஜேஷ்லுந்த், ”ஆட்சேபம், ஆலோசனை ஏற்கப்பட்டதா என்பதை இனிமேல்தான் முழுமையாக ஆராய வேண்டும். ஆனால் நீண்டகாலமாக கனவாக இருந்த புதிய மாஸ்டர் பிளான் வந்திருப்பதே தொழில் துறையினரை உற்சாகம் அடைய வைத்துள்ளது. இதில் தேவையான மாற்றங்களைச் செய்வதாகவும் அரசு உறுதியளித்திருப்பது, எங்களுக்கு ஒரு விதமான நம்பிக்கையை அளித்துள்ளது.” என்றார்.

படக்குறிப்பு, கோவைக்கான முழுமைத்திட்டம் (Master Plan 2041) தமிழக அரசால் வெளியிடப்பட்டுள்ளது.கோவை நகர்ப்புற வளர்ச்சி குழுமம் அமைவது எப்போது?

பெயர் குறிப்பிட விரும்பாத தொழில் அமைப்பின் நிர்வாகி ஒருவர், ”மாஸ்டர் பிளான் வந்தாலும் அதிலுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதற்கு உரிய அதிகார அமைப்பு இல்லை. சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமத்தைப் போன்று கோவை நகர்ப்புற வளர்ச்சிக்குழுமம் (CUDA–Coimbatore Urban Development Authority) உருவாக்கப்படும் வரை, புதிய திட்டங்களைச் செயல்படுத்துவது மட்டுமின்றி, திட்ட அனுமதி வழங்குவதில் உள்ள சிக்கல்களும் தொடரவே செய்யும். அதை உருவாக்குவதற்கான அரசாணை வெளியிட்டு 3 ஆண்டுகளாகியும் அதை அமைக்காததற்கும் இந்த அரசின் மெத்தனமே காரணம்.” என்றார்.

தற்போது வெளியிடப்பட்டுள்ள மாஸ்டர் பிளானில் குடியிருப்புப் பகுதி, தொழிற்சாலைப்பகுதி, கல்வி நிறுவனப்பகுதி என்று மண்டல வாரியாக பிரித்திருப்பதற்குப் பதிலாக, எல்லாமே கலந்துள்ள பகுதியாக (Mixed Land use Zone) என்று அறிவித்தால், அது நகர வளர்ச்சிக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும் என்ற கருத்தையும் தொழில் அமைப்பினர் முன் வைக்கின்றனர்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இகுகுறித்து தமிழக அரசின் நகர ஊரமைப்பு இயக்குநர் கணேசனிடம் பிபிசி தமிழ் சில கேள்விகளை முன் வைத்தது. அதற்கு பதிலளித்த அவர், ”நகர ஊரமைப்புச்சட்டத்தின்படி, எல்லாமே கலந்துள்ள பகுதி என்று ஒரு பகுதியை வரையறுக்க முடியாது. ஆனால் ஒருவர் ஒரு பகுதியை பலவித பயன்பாட்டுக்கான பகுதியாக மாற்ற வேண்டுமெனில் அதற்கு சிறப்பு அரசாணை பெற வேண்டும்.” என்றார்.

”உத்தேச திட்டச்சாலைக்கான பெரும்பாலான இடங்கள் இன்று கட்டடங்களாகிவிட்டன. அங்கே நிலத்தை கையகப்படுத்தி திட்டச்சாலை அமைப்பது இனிமேல் சாத்தியமேயில்லை. அதனால்தான் அவை கைவிடப்பட்டுள்ளன. அதேபோன்று புதிய மாஸ்டர் பிளானில் உள்ள திட்டங்களை செயல்படுத்துகிற அமைப்பாக கோவை நகர்ப்புற வளர்ச்சிக் குழுமம் அமையாது. திட்ட அனுமதி வழங்கும் அமைப்பாகவே அது இருக்கும். ஏனெனில் இந்த திட்டங்களை நிறைவேற்ற நிதி பெருமளவில் தேவை. அதை அரசே வழங்க முடியும். அதனால் மாஸ்டர் பிளானில் உள்ள திட்டங்கள் வெவ்வேறு அரசுத்துறைகளால்தான் நிறைவேற்றப்படும்.” என்றார் அவர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு