Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘மோதிய வேகத்தில் பள்ளி வேனை 50 மீ. இழுத்துச் சென்ற ரயில்’ – கடலூர் அருகே என்ன நடந்தது?
படக்குறிப்பு, ரயில் மோதியதில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.48 நிமிடங்களுக்கு முன்னர்
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகே ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற பள்ளி வேன் மீது சிதம்பரம் நோக்கிச் சென்ற ரயில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் அந்த வேனை ரயில் சுமார் 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது.
வேனில் இருந்த 2 பள்ளி மாணவர்கள் உயிரிழந்ததாக, சம்பவ இடத்தை நேரில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். விபத்தில் காயமடைந்தவர்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுதொடர்பாக, விதிகளை மீறியதாக கேட் கீப்பரை ரயில்வே பணியிடை நீக்கம் செய்துள்ளது. விபத்து நடந்தது எப்படி? ரயில்வே கூறுவது என்ன?
நடந்தது என்ன?
கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் அருகேயுள்ள ரயில்வே கேட் பகுதியில் இன்று (ஜூலை 8, 2025) காலை 7.40 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. பள்ளி வேன், ரயில்வே கேட்டைக் கடக்க முயன்ற போது, அந்த தண்டவாளத்தில் வந்த விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் ரயில் அதன் மீது மோதியுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் சேதமடைந்தது. பள்ளி மாணவர்கள் எடுத்துச் சென்ற புத்தகப் பைகள் தண்டவாளத்தில் சிதறிக் கிடந்தன.
பள்ளி வேன் மீது மோதிய ரயில், அந்த வேனை 50 மீட்டர் தொலைவுக்கு இழுத்துச் சென்றுள்ளது. இந்த விபத்தில் பள்ளி வேன் முற்றிலுமாக உருக்குலைந்தது. அதில் பயணித்த 2 மாணவர்கள் பலியானதாக முதல்கட்டத் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்த விபத்தில் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக் கூடும் என அஞ்சப்படுகிறது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கேட் கீப்பரின் கவனக் குறைவாக இருந்து ரயில்வே கேட்டை மூடாமல் விட்டதே விபத்துக்குக் காரணம் என்று அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
படக்குறிப்பு, கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார்எஸ்.பி நேரில் ஆய்வு
விபத்து நடந்த இடத்தில் ஆய்வு செய்த கடலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார், விபத்து நடந்த பகுதி ‘ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல’ என்றார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், “இன்று காலை சுமார் 7.40 மணியளவில், விழுப்புரம்- மயிலாடுதுறை எக்ஸ்பிரஸ் செம்மாங்குப்பம் பகுதியைக் கடக்கும்போது, ஒரு பள்ளி வாகனம் மீது மோதி விபத்து ஏற்பட்டது. இது ஆளில்லா ரயில்வே க்ராஸிங் அல்ல. பள்ளி வாகனத்தில், ஓட்டுநர் மற்றும் 4 மாணவர்கள் இருந்துள்ளனர். சம்பவ இடத்தில் ஒரு மாணவர் இறந்துவிட்டார். மூன்று குழந்தைகளும், ஓட்டுநரும் சிகிச்சைக்காக கடலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுசெல்லப்பட்டனர். அதில் மருத்துவமனையில் ஒரு மாணவி உயிரிழந்து விட்டதாக தகவல்கள் வருகின்றன. இந்த விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது” என்று கூறினார்.
நிவாஸ் (வயது 12) என்ற மாணவரும், சாருமதி (வயது 16) என்ற மாணவியும் உயிரிழந்திருப்பதாக உறுதி செய்யப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, இந்த விபத்தில் பள்ளி வாகனம் முற்றிலும் நொறுங்கியது.தெற்கு ரயில்வே கூறியது என்ன?
இந்த விபத்து தொடர்பாக தெற்கு ரயில்வே வெளியிட்டுள்ள அறிக்கையில், “பள்ளிக்கு சீக்கிரமாகச் செல்ல வேண்டும் என்று வேன் ஓட்டுநர் வற்புறுத்தியதால், கேட் கீப்பர் கேட்டைத் திறந்தார். ரயில்வே ரயில் இயக்கங்களின் பாதுகாப்பு விதிகளின்படி அவர் கேட்டைத் திறந்திருக்கக் கூடாது. கேட் கீப்பர் பாதுகாப்பு விதிகளை மீறியதால், அவர் இப்போது இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
“இந்த விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரயில்வே ஆழ்ந்த வருத்தத்தை தெரிவிக்கிறது. ரயில்வே மருத்துவர்கள் கடலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துமனையில் அனுமதிக்கப்பட்ட நோயாளிகளை கண்காணித்து வருகின்றனர். தேவைப்பட்டால் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மருக்கு அவர்கள் கொண்டு செல்லப்படுவார்கள்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
இறந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.5 லட்சம் மற்றும் படுகாயமடைந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ.2.5 லட்சமும் காயமடைந்தவர்களுக்கு ரூ.50,000 இழப்பீடாக வழங்கப்படும் என தெற்கு ரயில்வே சார்பாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முக்கிய ரயில்கள் நடுவழியில் நிறுத்தம்
திருச்சியிலிருந்து தாம்பரம் செல்லும் இன்டர்சிட்டி எக்ஸ்பிரஸ் ரயில், சிதம்பரம் ரயில் நிலையத்தில் அரை மணி நேரமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.மயிலாடுதுறையிலிருந்து விழுப்புரம் செல்லும் பயணிகள் ரயில் ஆலப்பாக்கம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.
படக்குறிப்பு, விபத்து நடந்த பகுதிமுதலமைச்சர் நிவாரணம் அறிவிப்பு
இந்த விபத்து தொடர்பாக தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
“கடலூர் செம்மங்குப்பதில் நடந்த விபத்தில், இரண்டு இளம் மாணவர்களின் உயிர்கள் பறிபோன துயரச் செய்தியால் அதிர்ச்சியும் வேதனையும் அடைந்தேன். உயிரிழந்த மாணவச் செல்வங்களான நிவாஸ் மற்றும் சாருமதி ஆகியோரது பெற்றோருக்கும் – உறவினர்களுக்கும் – நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.” என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.
“இவ்விபத்தில் காயமடைந்து கடலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் மூவருக்கும் உயர்தர சிகிச்சை அளித்திட அறிவுறுத்தியுள்ளதோடு, அமைச்சர் எம்ஆர்கே பன்னீர் செல்வம் மற்றும் கடலூர் மாவட்ட ஆட்சியர் ஆகியோரை நேரில் சென்று உதவிடவும் அறிவுறுத்தியுள்ளேன்” என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இந்த விபத்தில் உயிரிழந்த குழந்தைகளின் பெற்றோருக்கு முதலமைச்சரின் நிவாரண நிதியிலிருந்து தலா ஐந்து லட்ச ரூபாய் வழங்கிடவும், பலத்த காயமடைந்து சிகிச்சை பெற்று வருபவர்களுக்குத் தலா ஒரு லட்ச ரூபாயும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ஐம்பதாயிரம் ரூபாயும் வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் முதலமைச்சரின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு