Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
சாதனைமேல் சாதனை படைத்த சுப்மன் கில், பிராட்மேனை முந்த வாய்ப்பு – வெற்றியை நோக்கி இந்தியா
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காகஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரிமிங்ஹாமில் நடந்து வரும் 2வதுடெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற 608 ரன்களை இந்தியா இலக்காக நிர்ணயித்துள்ளது. இந்திய அணி இரண்டாவது இன்னிங்சில் 427 ரன்கள் எடுத்திருந்த போது டிக்ளேர் செய்தது. இந்த இன்னிங்சிலும் கேப்டன் கில் அபாரமாக ஆடி சதம் அடித்தார். சாதனைமேல் சாதனை படைத்த கில், கிரிக்கெட் பிதாமகன் என்று வர்ணிக்கப்படும் டான் பிராட்மேனின் சாதனையை தகர்க்கும் வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது.
இமாலய இலக்குடன் களம் புகுந்த இங்கிலாந்து அணி 4வது நாள் ஆட்டநேர முடிவில் இரண்டாவது இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 72 ரன்களுடன் போராடி வருகிறது. கடைசி நாளான இன்று இங்கிலாந்து அணி வெற்றி பெற 536 ரன்கள் தேவைப்படுகிறது. அந்த அணிக்கு கைவசம் 7 விக்கெட்டுகள் இருக்கின்றன. ஹேரி ப்ரூக் 15 ரன்களுடனும், போப் 24 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.
கருண் நாயருக்கு ‘செக்’ வைத்த ஸ்டோக்ஸ்
இந்தியா – இங்கிலாந்து அணிகள் மோதும் டெஸ்ட் தொடரின் இரண்டாவது போட்டி பிரிமிங்ஹாம் நகரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 587 ரன்களும், இங்கிலாந்து அணி முதல் இன்னிங்சில் 407 ரன்களும் எடுத்தன.
இந்திய அணி 2வது இன்னிங்ஸில் 3வது நாள் ஆட்டநேர முடிவில் ஒரு விக்கெட் இழப்புக்கு 64 ரன்களுடன் இருந்தது. கருண் நாயர்(7), ராகுல் 28) ரன்களுடன் 4வது நாள் ஆட்டத்தைத் தொடர்ந்தனர். கருண் நாயர் பவுன்ஸருக்கும், பேக்ஆஃப் லென்த் பந்துக்கும் சிரமப்படுகிறார், அதுபோன்ற பந்துகளை வீசும்போது ஷாட்களை ஆடவும், டிபென்ஸ் செய்யவும் திணறுகிறார் என்பதை இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் தெரிந்து கொண்டார்.
கருண் நாயருக்கு கட்டம் கட்டிய ஸ்டோக்ஸ், கார்ஸ், டங் வீசிய ஒவ்வொரு ஓவரிலும் பவுன்ஸர்களை கருண் நாயருக்கு வீசச் செய்தார். கருண் நாயருக்கு தொடர்ந்து பவுன்ஸர் நெருக்கடியை அளித்து ஒரு கட்டத்தில் கார்ஸ் பந்துவீ்ச்சில் விக்கெட் கீப்பர் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து 26 ரன்னில் கருண் வெளியேறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
ராகுல் கிளீன் போல்ட்
அடுத்து கேப்டன் கில் களமிறங்கி, ராகுலுடன் இணைந்தார். இருவரும் நிதானமாக பேட் செய்து ரன்களைச் சேர்த்தனர். ராகுல் பொறுமையாக ஆடி அரைசதம் அடித்து 55 ரன்களில் டங்க் பந்துவீச்சில் கிளீஙன போல்டானார். டங்க் வீசிய இந்த பந்து அற்புதமானது, பேட்டர் விளையாட முடியாத அளவில் திடீரென இன் ஸ்விங்காகியதால், ராகுலால் சமாளிக்க முடியாமல் போல்டாகினார்.
அடுத்து ரிஷப் பந்த் களமிறங்கி, கில்லுடன் இணைந்தார். உணவு இடைவேளைக்கு செல்லும் போது இந்திய அணி 3 விக்கெட் இழப்புக்கு 177 ரன்ள் சேர்த்திருந்தது.
பட மூலாதாரம், Getty Images
ரிஷப் பந்த் அதிரடி
2வது செஷன் தொடங்கியதிலிருந்து ரிஷப் பந்த், கில் இருவரும் வேகமாக ரன்களைச் சேர்த்தனர். அதிலும் ரிஷப் பந்த் டி20 போட்டியைப் போன்று பேட் செய்யத் தொடங்கி, பவுண்டரி, சிக்ஸர்களாக பறக்கவிட்டு 48 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில் 57 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். டங்க் பந்துவீச்சில் விளாசிய கில் தொடர்ந்து அடுத்தடுத்த பந்துகளில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி அரைசதத்தை எட்டினார்.
ரிஷப் பந்த் பெரிய ஷாட்களை ஆடுவதைப் பார்த்த கேப்டன் ஸ்டோக்ஸ் சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு அதிக ஓவர்களை வழங்கினார். அவர் கணித்தபடியே, பஷீர் பந்துவீச்சில் சிக்ஸர் அடிக்க முயன்ற ரிஷப் பந்த் லாங்ஆன் திசையில் டக்கெட்டிடம் கேட்ச் கொடுத்து 65 ரன்னில் (3 சிக்ஸர், 8பவுண்டரி) வெளியேறினார். 4வது விக்கெட்டுக்கு கில், ரிஷப் கூட்டணி 110 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்துப் பிரிந்தனர்.
பட மூலாதாரம், Getty Images
கில் இரண்டாவது சதம்
அடுத்து ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கில் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, மாலை தேநீர் இடைவேளைக்கு முன்பாக 129 பந்துகளில் சதத்தை எட்டினார். தேநீர் இடைவேளைக்குப்பின் வோக்ஸ் வீசிய பந்தில் கில் சிக்ஸர், 2 பவுண்டரிகளை விளாசி ரன் வேகத்தை அதிகப்படுத்தினார்.
ஜடேஜாவும் அதிரடிக்கு மாறத் தொடங்கி, வேகமாக ரன்களை சேர்த்தார். பஷீர் வீசிய பந்தில் சிக்ஸர் விளாசி தனது ஸ்கோரை உயர்த்தி 94 பந்துகளில் அரைசதம் அடித்தார். சுப்மான் கில்லின் அதிரடி ஆட்டத்தால் 156 பந்துகளில் 150 ரன்களை எட்டினார். 129 பந்துகளில் சதம் அடித்த கில் அடுத்த 27 பந்துகளில் 50 ரன்களை அதிரடியாகச் சேர்த்தார். இந்திய அணி 400 ரன்களை எட்டிய நிலையில் கில் 161 ரன்களில் பஷீர் பந்துவீச்சில் அவரிடமே கேட்ச் கொடுத்து வெளியேறினார். கில் கணக்கில் 8 சிக்ஸர்கள், 13 பவுண்டரிகள் அடங்கும்.
நிதிஷ் குமார் ரெட்டி இந்த இன்னிங்ஸிலும் ஒரு ரன்னில் ரூட் பந்துவீச்சில் ஆட்டமிழந்து ஏமாற்றினார். வாஷிங்டன் சுந்தர் 12 ரன்னிலும்,ஜடேஜா 69 ரன்னில் இருந்த போது, அணியின் ஸ்கோர் 6 விக்கெட் இழப்புக்கு 427 ரன்களை எட்டியது. அப்போது இந்திய அணி டிக்ளேர் செய்வதாக அறிவித்தது.
பட மூலாதாரம், Getty Images
முதல்முறையாக 1000 ரன்கள்
இந்த டெஸ்டில் இந்திய அணி இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 1014 ரன்கள் சேர்த்து, உலகளவில் டெஸ்டில் 4வது இடத்தைப் பெற்றுள்ளது. ஒரு டெஸ்டில் ஆயிரம் ரன்களை எட்டுவதும், கடப்பதும் இந்திய அணிக்கு இது முதல்முறையாகும்.
உலகளவில் டெஸ்டில் 6வது முறையாக டெஸ்டில் ஒரு அணி 1000 ரன்களைக் கடந்தது. இந்திய அணியின் அதிகபட்ச ஸ்கோரும் இதுதான். இதற்கு முன் 2004ல் சிட்னியில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக 916 ரன்கள் குவித்ததுதான் இந்திய அணியின் அதிகபட்ச ரன்களாக இருந்தது.
2வது இன்னிங்ஸில் இந்திய அணி மாபெரும் ஸ்கோரை எட்டுவதற்கு கேப்டன் சுப்மான் கில் தொடர்ந்து 2வது இன்னிங்ஸிலும் சதம் அடித்து 158 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இது தவிர ரிஷப் பந்த்(65), ராகுல்(55) ஜடேஜா ஆட்டமிழக்காமல் 69 ரன்களும் சேர்த்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு உதவினர்.
ஆகாஷ் அசத்தல்
608 ரன் என்ற இமாலய இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணிக்கு தொடக்கமே அதிர்ச்சியாக அமைந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் ஜாக் கிராவ்லியை முகமது சிராஜ் டக்அவுட் ஆக்கினார். மறுபுறம் அதிரடி காட்டிய பென் டக்கெட் 15 பந்துகளில் 25 ரன்களை எடுத்திருந்த நிலையில் ஆகாஷ் தீப் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.
இதனால், 30 ரன்களிலேயே இங்கிலாந்து ஆணி 2 விக்கெட்டுகளை இழந்துவிட்டது. இக்கட்டான நிலையில் இருந்த இங்கிலாந்து அணி பெரிதும் நம்பியிருந்த நட்சத்திர வீரர் ஜோ ரூட் ஏமாற்றினார். வெறும் 6 ரன்களில் அவரை ஆகாஷ்தீப் கிளீன் போல்டாக்கி பெவிலியனுக்கு அனுப்பி வைத்தார். அதிலும் பென் டக்கெட், ரூட்டை போல்டாக்கிய ஆகாஷ் தீப் வீசிய பந்து அற்புதத்திலும் அருமையான பந்துவீச்சாகும். ஒரு சாதாரன பேட்டரால் விளையாட முடியாத வகையில் வீசப்பட்ட ஆகச்சிறந்த பந்துவீச்சாக இருந்தது.
நான்காம் நாள் ஆட்ட நேர முடிவில் இங்கிலாந்து அணி 3 விக்கெட் இழப்பிற்கு 72 ரன்களை எடுத்துள்ளது. ஆகாஷ் தீப் 2 விக்கெட்டுகளையும், சிராஜ் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர். பிரசித் கிருஷ்ணா விக்கெட் எடுக்காவிட்டாலும் சரியான அளவில் கட்டுக்கோப்பாக பந்துவீசி இங்கிலாந்து பேட்டர்களை திணறடித்தார்.
பட மூலாதாரம், Getty Images
மதில்மேல் பூனையாக இங்கிலாந்து
இங்கிலாந்து அணியைப் பொருத்தவரை மதில்மேல் நிற்கும் பூனையாக இருக்கிறது. வெற்றிக்கு இன்னும் 536 ரன்கள் தேவைப்படும் நிலையில் அதை அடைவது என்பது கடினமான இலக்காக இருக்கும்.
இதில் களத்தில் இருக்கும் ஆலி போப், ஹேரி ப்ரூக்கைத் தவிர்த்து கேப்டன் ஸ்டோக்ஸ், ஸ்மித் இருவர் மட்டுமே பேட்டர்கள். இங்கிலாந்து அணி இன்னும் 2 விக்கெட்டுகளை இழந்தாலே தோல்வியின் பக்கம் தள்ளப்பட்டுவிடும்.
பாஸ்பால் உத்தியைக் கையாண்டு பல வெற்றிகளைப் பெற்றுவரும் இங்கிலாந்து அணி, கடந்த 3 ஆண்டுகளில் ஒரு டெஸ்ட் போட்டியை மட்டுமே அதுவும் கடைசி நாளில் மழை காரணமாக, டிரா செய்தது. பெரும்பாலும் அதிரடியாக சேஸ் செய்வது அல்லது விக்கெட்டுகளை இழந்து தோற்பது என்ற ரீதியில்தான் இங்கிலாந்து அணி விளையாடி வந்துள்ளது.
ஆதலால், இன்றைய ஆட்டத்தில் இங்கிலாந்து பேட்டர்கள் வெற்றிக்காக முயல்வார்களா அல்லது டிரா செய்யும் நோக்கில் ஆட்டத்தை கொண்டு செல்லப் போகிறார்களா என்பது தெரியவில்லை.
கடைசி நாளில் ஆடுகளத்தில் பிளவுகள், வெடிப்புகள் அதிகமாகும். இதனால் சுழற்பந்துவீச்சுக்கு நன்கு ஒத்துழைக்கும் என்று ஆய்வுகள் தெரிவிக்கின்றன. அது மட்டுமல்லாமல் வேகப்பந்துவீச்சில் எதிர்பாராத பவுன்ஸர்கள், ஸ்விங்குகள் வெடிப்புகளில் பந்துபட்டவுடன் எகிறும் என்பதால், பேட்டர்கள் பேட் செய்வது கடினமாக இருக்கும், ரன் சேர்ப்பதில் கவனம் செலுத்துவதைவிட விக்கெட்டுகளை காப்பாற்றவே முயற்சிக்கலாம். இல்லாவிட்டால் இங்கிலாந்து அணி விக்கெட்டுகளை இழக்க நேரிடும்.
பட மூலாதாரம், Getty Images
கில் சாதனைமேல் சாதனை – பிராட்மேன் முந்துவாரா?
இந்திய டெஸ்ட் அணிக்கு கேப்டனாக பொறுப்பேற்றபின் சுப்மான் கில்லின் ஆட்டத்தில் முதிர்ச்சி தெரிகிறது. இங்கிலாந்து தொடருக்கு வருவதற்கு முன் கில்லின் டெஸ்ட் சராசரி 35 ரன்களாக இருந்தது. ஆனால், முதல் டெஸ்டில் அடித்த சதம், 2வது டெஸ்டில் இரட்டை சதம், 150 ரன்களுக்கு மேல் குவித்ததைத் தொடர்ந்து கில்லின் டெஸ்ட் சராசரி 42 ரன்களாக உயர்ந்துவிட்டது.
டெஸ்ட் வரலாற்றில் ஒரே டெஸ்டில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற கவாஸ்கரின் 54 ஆண்டு கால சாதனையை கில் முறியடித்துள்ளார். 1971-ஆம் ஆண்டு வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக போர்ட் ஆஃப் ஸ்பெயினில் நடைபெற்ற டெஸ்டில் கவாஸ்கர் 344 ரன்களை குவித்திருந்தார். தற்போது இரு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 430 ரன்களை சேர்த்ததன் மூலம் கவாஸ்கர் சாதனையை கில் தகர்த்துள்ளார்.
அது மட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் அதிக ரன்களைக் குவித்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். ஒரு டெஸ்டில் 430 ரன்களுடன் சுப்மான் கில் 2வது இடத்தில் உள்ளார். முதலிடத்தில் இங்கிலாந்து முன்னாள் வீரர் கிரஹாம் கூச் 456 ரன்களுடன் உள்ளார்.
அதுமட்டுமல்லாமல் டெஸ்ட் வரலாற்றில் ஒரு டெஸ்டில் தொடர்ந்து இரு 150 ரன்களைக் கடந்த 2வது வீரர் என்ற பெருமையை கில் பெற்றார். இதற்கு முன் ஆஸ்திரேலிய முன்னாள் கேப்டன் ஆலன் பார்டர் லாகூரில் பாகிஸ்தானுக்கு எதிராக 1980ம் ஆண்டில் ஒரு டெஸ்டில் இரு 150 ரன்களை அடித்திருந்தார்.
மேலும் ஒரு டெஸ்டில் இரட்டை மற்றும் சதம் அடித்த உலகளவில் 9 பேட்டர்களில் ஒருவராகவும், இந்திய அளவில் சுனில் கவாஸ்கருக்கு அடுத்தார்போல் கில் இடம் பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்திய அளவில் கேப்டன் பொறுப்பேற்று தொடர்ந்து இரு இன்னிங்ஸ்களிலும் சதம் அடித்தவர்களில் இதற்கு முன் சுனில் கவாஸ்கர், விராட் கோலி ஆகியோர் மட்டுமே இருந்த நிலையில் அந்தப் பட்டியலில் இப்போது கில்லும் இணைந்துவிட்டார். இங்கிலாந்து மண்ணில் தொடர்ந்து இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த வீரர்களில் ரிஷப் பந்த்துக்கு அடுத்தார்போல் கில்லும் இணைந்தார்.
முதல் இன்னிங்ஸில் கில், ஜடேஜா கூட்டணி 200 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்து, 2வது இன்னிங்ஸலும் 100 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இதன் மூலம் ஒரு டெஸ்டில் இரட்டை சதம், சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த ஒரே ஜோடி என்ற பெருமையை கில், ஜடேஜா பெற்றனர்.
எட்ஜ்பாஸ்டன் டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப்பை இந்தியா எட்டியுள்ளதில் அனைத்திலும் கில்லின் பங்களிப்பு இருக்கிறது. ஒரு டெஸ்டில் 4 சதம் பார்ட்னர்ஷிப் அமைத்த வீரர்களில் இந்திய அளவில் முதல் பேட்டராகவும், உலகளவில் 5வது பேட்டராகவும் கில் இருக்கிறார். இதற்கு முன் ஹனிப் முகமது, கிரஹாம் கூச், மார்க் டெய்லர், ஜோ ரூட் ஆகியோர் இதுபோன்று 4 சதங்கள் பார்ட்னர்ஷிப் அமைக்க உதவியிருந்தனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சுப்மான் கில் இங்கிலாந்து தொடரில் இரு டெஸ்ட்களிலும் சேர்த்து 4 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 585 ரன்கள் குவித்துள்ளார். ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த கிரிக்கெட் ஜாம்பவான் டான் பிராட்மேன் ஒரே தொடரில் 974 ரன்களைக் குவித்ததே சர்வதேச கிரிக்கெட்டில் ஒரு தொடரில் வீரர் ஒருவர் குவித்த அதிகபட்ச ரன்களாக நீடிக்கிறது. இந்த தொடரில் இன்னும் 3 டெஸ்ட் போட்டிகள் எஞ்சியிருப்பதால் அதனை முறியடிக்க சுப்மன் கில்லுக்கு அதிக வாய்ப்புள்ளது.
இந்த டெஸ்ட் தொடரில் அடித்த 3வது சதமாகவும், ஒட்டுமொத்தத்தில் கில்லுக்கு 8-வது டெஸ்ட் சதமாகவும் அமைந்தது. 4வது நாள் ஆட்டத்தில் கில் சேர்த்த ரன்களில் பெரும்பகுதி இங்கிலாந்து சுழற்பந்துவீச்சாளர்களின் ஓவர்களில் வந்தது.
148 ஆண்டு கால டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் செய்திடாத சாதனையை கில் படைத்துளளார். ஒரே டெஸ்டில் இரட்டை சதமும், 150 ரன்களும் சேர்த்த ஒரே வீரர் என்ற பெருமைக்கு சுப்மன் கில் சொந்தக்காரராகியுள்ளார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு