மெக்னீசியம் சத்து நம் உடலுக்கு எவ்வளவு முக்கியம்? எந்தெந்த உணவுகளில் அது இருக்கிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, நமது உணவில் மெக்னீசியத்தை சேர்த்துக் கொள்வது குறித்து சமீப காலங்களில் அதிகளவிலான விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.எழுதியவர், ஜெசிகா பிராட்லிபதவி, பிபிசி செய்திகள்6 ஜூலை 2025, 07:12 GMT

புதுப்பிக்கப்பட்டது 9 நிமிடங்களுக்கு முன்னர்

சமீப காலமாக சமூக ஊடகங்களில் மெக்னீசியம் ஒரு பரபரப்பான பேசுபொருளாக மாறியுள்ளது,

சமூக ஊடகங்களில் மெக்னீசியம் தொடர்பான பதிவுகளும் சமீபத்தில் அதிகரித்துள்ளன. ஆயிரக்கணக்கான மக்கள் #மெக்னீசியம் (#Magnesium) என்ற ஹேஷ்டேக்கைப் பயன்படுத்தி பதிவிடுகிறார்கள்.

ஆனால், கேள்வி என்னவென்றால், மெக்னீசியம் உங்கள் உடல்நலத்திற்கு எவ்வளவு முக்கியமானது?

நீங்கள் போதுமான அளவு மெக்னீசியம் எடுத்துக் கொள்கிறீர்களா என்பதை எப்படித் தெரிந்து கொள்ளலாம்? என்பது தான்.

நமது அன்றாட உணவில் காணப்படும் ஒரு முக்கிய நுண்ணூட்டச்சத்தான மெக்னீசியம், உடலின் பல்வேறு முக்கிய செயல்பாடுகளுக்கு உதவுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

நமது செல்கள், உறுப்புகள் மற்றும் மூளை சரியாக செயல்படுவதை, மெக்னீசியம் உறுதி செய்கிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

மனநிலையை சமன்படுத்தவும், தசைகள் மற்றும் நரம்பு மண்டலத்தை சமநிலைப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை வலுப்படுத்தவும் மெக்னீசியம் உதவுகிறது.

கூடுதலாக, உடலில் வைட்டமின் டி உறிஞ்சப்படுவதிலும், அதன் செயல்பாடுகள் சரியாக நடைபெறுவதிலும் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது.

எந்தெந்த உணவுகளில் மெக்னீசியம் காணப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பசலைக் கீரையில் மெக்னீசியம் நிறைந்துள்ளது.பச்சை இலைக் காய்கறிகளில் மெக்னீசியம் அதிகளவில் உள்ளது. ஏனெனில் தாவரங்களுக்கு பச்சை நிறத்தை தரும் குளோரோபிலில் மெக்னீசியம் காணப்படும் .

சுத்திகரிக்கப்படாத தானியங்கள், பருப்புகள், மற்றும் விதைகளிலும் மெக்னீசியம் நிறைந்துள்ளது. இது தவிர, சில மீன், இறைச்சி மற்றும் பால் பொருட்களிலும் மெக்னீசியம் குறைந்த அளவில் காணப்படுகிறது.

பிரேசில் முந்திரி, ஓட்ஸ் தவிடு, பழுப்பு அரிசி (நடுத்தர வகை), முந்திரி, கீரை மற்றும் பாதாம் போன்ற உணவுகளில் மெக்னீசியம் போதுமான அளவில் உள்ளது என ஒரு ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது.

மற்றொரு ஆய்வு சியா விதைகளிலும், பூசணி விதைகளிலும் மெக்னீசியம் உள்ளது என்று கூறுகிறது.

“நீங்கள் தினமும் உப்பு சேர்க்காத முழு தானியங்களை சாப்பிட்டு, பல்வேறு வகையான பருப்பு வகைகள், பச்சை காய்கறிகள் மற்றும் பழங்களை உணவில் சேர்த்தால், தினசரி உங்களுக்குத் தேவையான மெக்னீசியம் கிடைக்க வாய்ப்பு உள்ளது” என்கிறார் பிரிட்டிஷ் உணவுமுறை சங்கத்தின் ஆலோசகர் உணவியல் நிபுணரும் செய்தித் தொடர்பாளருமான ரெபேக்கா மெக்மனமோன்.

மெக்னீசியத்தின் நன்மைகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சியா விதைகளில் மெக்னீசியம் காணப்படுகிறது.போதுமான அளவு மெக்னீசியம் எடுத்துக்கொள்வது உடலுக்கு பல வழிகளில் நன்மை பயக்கும்.

மூளை ஆரோக்கியம்

மெக்னீசியம் உடலுக்கு மட்டுமல்ல, மூளையின் வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், மூளை திசுக்களின் சரியான செயல்பாட்டிற்கும் முக்கியமானது.

65 வயதுக்கு மேல் உள்ள 6,000க்கும் மேற்பட்ட பெண்களை 20 ஆண்டுகளாகப் பின்தொடர்ந்து ஒரு ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

அதன் மூலம், உணவு மற்றும் சப்ளிமெண்ட்களில் உள்ள மெக்னீசியம், லேசான அறிவாற்றல் குறைபாட்டின் அபாயத்தைக் குறைக்க உதவலாம் என்று கண்டறியப்பட்டது.

வயதாகும் போது மூளையை ஆரோக்கியமாக வைத்திருப்பதில் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கும் என்று நிபுணர்கள் நம்புகின்றனர்.

மன நலம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சில ஆய்வுகள் மெக்னீசியம் மன அழுத்தத்தை எதிர்த்துப் போராட உதவுகிறது என்பதைக் காட்டுகின்றன.பதற்றத்தையும், லேசானது முதல் மிதமான மனச்சோர்வின் அறிகுறிகளையும் குறைப்பதில் மெக்னீசியம் உதவியாக இருக்கும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது.

“மன ஆரோக்கியத்தில் ஈடுபடும் ஒரு முக்கிய அமைப்பை ஒழுங்குபடுத்துவதில் மெக்னீசியம் முக்கியப் பங்கு வகிக்கிறது, இந்த அமைப்பு மன அழுத்தம், பதற்றம், மனநிலை மற்றும் மனச்சோர்வுடன் இணைக்கப்பட்டுள்ளது” என்று லீட்ஸ் பல்கலைக் கழகத்தின் ஊட்டச்சத்து மற்றும் நடத்தைகள் துறை பேராசிரியர் டைய் கூறுகிறார்.

மெக்னீசியத்திற்கும் மன நலனுக்கும் இடையிலான உறவைப் பற்றிய பல்வேறு ஆய்வுகளை பேராசிரியர் டைய் மதிப்பாய்வு செய்தார். அவற்றுள், நான்கு ஆய்வுகள் பதற்றத்தை குறைக்கும் வகையில் மெக்னீசியம் நேர்மறையான விளைவுகளை ஏற்படுத்தியதாக அவர் குறிப்பிடுகிறார்.

இருப்பினும், இதுவரை கிடைத்துள்ள ஆதாரங்களின் தரம் மிகவும் சிறப்பாக இல்லை என்பதையும் அவர் தெளிவுபடுத்தினார்.

“மெக்னீசியம் சப்ளிமெண்ட்களின் நன்மைகளை உறுதிப்படுத்த, இன்னும் சிறந்த மற்றும் முறையான சோதனைகள் தேவை” என்கிறார் பேராசிரியர் டைய்.

தூக்கத்திற்கு உதவும்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, போதுமான அளவு மெக்னீசியத்தை சேர்த்துக்கொள்வது நன்றாக தூங்குவதற்கு உதவி செய்யும் என்று ஒரு ஆய்வு கண்டறிந்துள்ளது (மாதிரி படம்)நமது உணவுப் பழக்கம் பல வழிகளில் நமது தூக்கத்தைப் பாதிக்கலாம்.

2022 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஒரு மதிப்பாய்வு, போதுமான அளவு மெக்னீசியம் உட்கொள்வது தூக்கத்தின் தரத்தை மேம்படுத்தும் என்று கண்டறிந்துள்ளது .

இருப்பினும், இந்த விளைவு மக்கள் தொகை அடிப்படையிலான ஆய்வுகளில் தான் காணப்பட்டுள்ளது. அதற்கான காரணம் என்ன என்பதையும், அதன் விளைவையும் கண்டறியத் தேவையான துல்லியத்தை அந்த ஆய்வால் வழங்க முடியாது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்வளர்சிதை மாற்ற நோய்க்குறி

வளர்சிதை மாற்ற நோய்க்குறி என்பது வகை 2 நீரிழிவு நோய் அல்லது உங்கள் இதய ஆரோக்கியத்துடன் தொடர்புடைய பல்வேறு உடல்நலப் பிரச்னைகளைக் குறிக்கிறது.

9,000க்கும் மேற்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட ஒரு பகுப்பாய்வில், அதிக மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு, குறைந்த மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களை விட, வளர்சிதை மாற்ற நோய்க்குறியின் ஆபத்து, மூன்றில் ஒரு பங்கு குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

இதய ஆரோக்கியம்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இதயம் மற்றும் மூளை ஆரோக்கியத்திற்கு மெக்னீசியம்அவசியம் (மாதிரி படம்)மெக்னீசியத்தின் அளவைச் சரிவர பராமரிப்பது, இதயத்துக்கு நன்மை பயக்கும் என்று சில சான்றுகள் குறிக்கின்றன.

உதாரணமாக, அதிக அளவில் மெக்னீசியம் உட்கொள்ளும் நபர்களுக்கு, குறைந்த அளவில் உட்கொள்ளும் நபர்களை விட உயர் இரத்த அழுத்தம் ஏற்படும் அபாயம் 8% குறைவாக இருப்பது ஒரு மதிப்பாய்வில் கண்டறியப்பட்டது.

முப்பது வருட காலமாக 90,000 பெண் செவிலியர்களைப் பகுப்பாய்வு செய்ததில், அதிக அளவு மெக்னீசியம் உட்கொள்பவர்களுக்கு, குறைந்த அளவு மெக்னீசியம் உட்கொள்பவர்களை விட மாரடைப்பு ஏற்படும் அபாயம் 39% குறைவாக இருப்பது கண்டறியப்பட்டது.

அதேபோல், போதுமான மெக்னீசியம் உட்கொள்வது இதய நோய் அபாயத்தைக் குறைக்கும் என்று மற்றொரு மதிப்பாய்வு கண்டறிந்துள்ளது .

எலும்பு ஆரோக்கியம்

மெக்னீசியம் நமது எலும்புகளின் ஆரோக்கியத்திற்கும் நன்மை பயக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது .

எலும்பு உருவாவதிலும் மெக்னீசியத்தின் பங்கு உள்ளது.

உங்களுக்கு மெக்னீசியம் குறைபாடு ஏற்பட முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, தீவிரமாக விவசாயம் செய்தால், மண்ணில் உள்ள ஊட்டச்சத்துக்கள் குறைவதற்கு வழி ஏற்படலாம்.வயல்களில் வளர்க்கப்படும் பயிர்களில் மெக்னீசியத்தின் அளவையும் இது பாதிக்கலாம்.உடலில் மெக்னீசியம் குறைபாட்டைக் கண்டறிவது பெரும்பாலும் கடினம் என்கிறார் பேராசிரியர் லூயிஸ் டை.

மக்கள் பொதுவாக தங்கள் உணவில் போதுமான மெக்னீசியத்தை எடுத்துக் கொள்வதில்லை என்று அவர் குறிப்பிடுகிறார்.

நவீன விவசாயமும், உணவு செயல்முறையும் இதற்கு ஒரு முக்கிய காரணம் என்று நம்பப்படுகிறது.

“கடந்த 60 ஆண்டுகளில், தீவிரமாக செய்யப்படும் விவசாயம், மண்ணில் உள்ள தாதுக்களை குறிப்பிடத்தக்க அளவில் குறைத்துள்ளது. இதில் மெக்னீசியம் 30% அளவுக்கு குறைந்துள்ளதாக” டைய் கூறுகிறார்.

மேற்கத்திய நாடுகளின் உணவு முறையில் பதப்படுத்தப்பட்ட உணவின் விகிதம் அதிகமாக இருப்பதாகவும், இந்த செயல்முறையின் போது 80-90% மெக்னீசியம் அழிக்கப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.

செரிமான பாதையில் ஏற்படும் நோய்கள், வகை 2 நீரிழிவு நோய், குடிப்பழக்கம், சிறுநீரக செயலிழப்பு மற்றும் சில மரபணு கோளாறுகள் போன்ற பல உடல்நலப் பிரச்னைகளுடன் மெக்னீசியம் குறைபாடு இணைக்கப்பட்டுள்ளது.

மெக்னீசியம் குறைபாடு உடலில் லேசான வீக்கத்தை ஏற்படுத்தும் என்றும், இது பல நோய்களுக்கு பொதுவான காரணமாகும் என்றும் கூறுகிறார் டைய்.

மெக்னீசியம் தேவைகளை கூடுதல் மருந்துகளால் பூர்த்தி செய்ய முடியுமா?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, பருப்பு வகைகளை உட்கொள்வது உடலில் உள்ள மெக்னீசியத்தின் தேவையைப் பூர்த்தி செய்யும்.மெக்னீசியத்தின் நன்மைகள் குறித்த பெரும்பாலான ஆய்வுகள், உணவில் இருந்து பெறப்படும் இயற்கை மெக்னீசியத்தை விட, கூடுதல் மருந்துகளில் கவனம் செலுத்தியுள்ளன.

ஆனால், கூடுதல் மருந்துப் பொருட்களை உணவுக்கு மாற்றாகக் கருதக்கூடாது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.

“மெக்னீசியம் சப்ளிமெண்ட்களை உணவுக்கு மாற்றாகப் பயன்படுத்தக்கூடாது, ஒவ்வொரு பிரச்னையையும் தீர்க்கும் ஒரு ‘அதிசய’ பொருளாக அதனைக் கருதக்கூடாது. உங்கள் உடல்நலம் குறித்து ஏதேனும் கவலைகள் இருந்தால், வைட்டமின்கள் அல்லது தாதுக்களை மட்டும் எடுத்துக்கொள்வதை விட மருத்துவ ஆலோசனையைப் பெற வேண்டும்.”என்கிறார் பேராசிரியர் லூயிஸ் டைய்.

பிரிட்டனின் தேசிய சுகாதார சேவையின் (NHS) கூற்றுப் படி, ஒருவர் தினமும் 400 மில்லிகிராமுக்கு மேல் மெக்னீசியத்தை எடுத்துக் கொண்டால், அவருக்கு வயிற்றுப்போக்கு போன்ற பிரச்னைகள் ஏற்படக்கூடும்.

உங்கள் உணவில் போதுமான அளவு மெக்னீசியம் இருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள் என்பது நிபுணர்களின் கருத்து.

“தினமும் ஒரு கைப்பிடி அளவு பருப்பு வகைகளை சாப்பிடுவது மெக்னீசியத்திற்கு மட்டுமல்ல, நார்ச்சத்து, புரதம் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகளுக்கும் நன்மை பயக்கும்.

சில பருப்பு வகைகள் செலினியம் மற்றும் துத்தநாகத்தையும் வழங்குகின்றன.

கீரை போன்ற பச்சை இலைகள், பல்வேறு பழங்கள் மற்றும் காய்கறிகளை உட்கொள்வதன் மூலம் உடலின் மெக்னீசியம் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும்” என்று ஊட்டச்சத்து நிபுணர் ரெபேக்கா மெக்மனமன் கூறுகிறார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு