Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘பறந்து போ’: இயக்குநர் ராமின் திரைக்கதையில் மிர்ச்சி சிவா பொருந்துகிறாரா?
பட மூலாதாரம், @actorshiva
ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
இயக்குநர் ராமின் ‘பறந்து போ’ திரைப்படம் நேற்று (ஜூலை 4) திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. சிவா, அஞ்சலி, மிதுல் ரயான், கிரேஸ் ஆண்டனி, அஜூ வர்கீஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசை அமைத்துள்ளார், பாடல்களுக்கு சந்தோஷ் தயாநிதி இசையமைத்துள்ளார்.
‘கற்றது தமிழ்’ திரைப்படம் மூலம் அறிமுகமாகி, தங்க மீன்கள், தரமணி, பேரன்பு போன்ற அழுத்தமான கதைகள்- கதாபாத்திரங்கள் கொண்ட திரைப்படங்களுக்காக அறியப்படுபவர் இயக்குநர் ராம். ஆனால், சரோஜா, வணக்கம் சென்னை, கலகலப்பு, தமிழ் படம், போன்ற திரைப்படங்களில் தனது நகைச்சுவை கலந்த நடிப்பிற்காக அறியப்படுபவர் ‘மிர்ச்சி’ சிவா.
அப்படியிருக்க இவர்கள் இருவரும் இணையும் திரைப்படம் எப்படி இருக்கப் போகிறது என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது.
அந்த எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்ததா ‘பறந்து போ’? இது வழக்கமான ராம் திரைப்படமா அல்லது சிவாவின் பாணியிலான நகைச்சுவைத் திரைப்படமா? ஊடக விமர்சனங்களை இந்தக் கட்டுரையில் பார்க்கலாம்.
பறந்து போ- கதை என்ன?
சென்னையிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில் தங்களது மகனுடன் வாழ்கிறார்கள் கோகுல் (மிர்ச்சி சிவா) மற்றும் குளோரி (கிரேஸ் ஆண்டனி) தம்பதி. இஎம்ஐ சூழ்ந்த, நடுத்தர வாழ்க்கை இவர்களுடையது, இருப்பினும் தங்களது மகனுக்கு அனைத்தும் கிடைக்க வேண்டுமென விரும்புகிறார்கள்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
படத்தின் நாயகன் அந்தக் குழந்தை அன்பு தான். பெற்றோர் இருவரும் வேலைக்குச் செல்வதால், சேட்டைகள் செய்து, வீட்டையே இரண்டாக்கி, என்னென்மோ செய்து தன் தனிமையை விரட்டுகிறான் அன்பு. இப்படியான சூழலில், தன் தந்தையான சிவாவிடம் அடம்பிடித்து இருசக்கர வாகனத்தில் அழைத்துச் செல்ல வேண்டும் என அன்பு அடம்பிக்கிறான். இருவரும் ஒரு பயணத்தை மேற்கொள்கின்றனர். அதில், என்னென்ன சம்பவங்கள், மனமாற்றங்கள் நிகழ்கிறது என்பதே பறந்து போ.
பட மூலாதாரம், @actorshiva
திரைப்படம் எப்படி உள்ளது?
தினமணி நாளிதழ் தனது விமர்சனத்தில், “இயக்குநர் ராம் மீண்டும் நல்ல திரைப்படத்தைக் கொடுத்திருக்கிறார். கற்றது தமிழ், தங்க மீன்கள், பேரன்பு, தரமணி என காலத்திற்கேற்ப நாம் சந்திக்கும் சமூக சிக்கல்களைப் பேசிய ராம், பறந்து போ படத்திலும் இன்றைய குழந்தை வளர்ப்பு குறித்தும் நாம் சரியாகத்தான் நம் குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கிறோமா என்பதையும் துளி முகச்சுழிப்பும் இல்லாமல் அழகான வசனங்களால், வெடித்துச் சிரிக்கும் நகைச்சுவைகளால் சுட்டிக்காட்டியிருக்கிறார்.” எனப் பாராட்டியுள்ளது.
“ஒரு திரைப்பட இயக்குநர் தனது வழக்கமான அம்சங்களும் இருக்கும் வகையில், அதேசமயம் முற்றிலும் மாறுபட்ட ஒரு திரைப்படத்தை உருவாக்குவது எவ்வாறு சாத்தியம்? பறந்து போ திரைப்படத்தில் ராம் அதைச் செய்திருக்கிறார்” என இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம் கூறுகிறது.
“ராமின் படங்கள் எப்போதும் அழுத்தமான களங்களைக் கொண்டவையாக இருக்கும், ஆனால் நம்பிக்கையூட்டுபவையாக இருக்கும். இதுவும் அப்படிதான். ஆனால் இந்த முறை, இயல்பு வாழ்க்கைக்கு நெருக்கமான ஒரு மெல்லிய, நகைச்சுவை உணர்வு நிறைந்த திரைப்படத்தை அளித்துள்ளார்” என அந்த விமர்சனம் கூறுகிறது.
“உலகம் புனிதமானது என இந்தப் திரைப்படம் கூறவில்லை, ஆனால் சுற்றியுள்ள நல்லதைப் பார்க்கவும், சக மனிதர்களிடமிருந்து அன்பை எதிர்பார்க்கவும் உங்களுக்கு இந்தத் திரைப்படம் உதவும்” என ‘தி இந்து’ நாளிதழின் விமர்சனம் கூறுகிறது.
மிர்ச்சி சிவாவின் நடிப்பு எப்படி உள்ளது?
பட மூலாதாரம், @actorshiva
படக்குறிப்பு, மிர்ச்சி சிவா மற்றும் இயக்குநர் ராம்”சிவாவுக்கும் அஞ்சலிக்குமான காட்சிகள் சூரியகாந்தி பூ போல் பார்க்க பார்க்க கொள்ளை அழகு. பால்யகால நண்பனை அடையாளம் கண்டுகொள்வதிலிருந்து வேறு வேறு குழந்தைகளின் பெற்றோரான இருவருக்குமான உரையாடல் ரசிக்க வைக்கிறது. குளத்தில் பாவாடை அணிந்து அஞ்சலி குளிக்கும்போது சிவா அருகில் அமர்கிறார். இரு நண்பர்களுக்கான உரையாடலில் அஞ்சலி மீது கிளாமர் எண்ணம் வருவதில்லை. அழகான ராம் டச்” என தினமணியின் விமர்சனம் கூறுகிறது.
மேலும், “நடிகர் சிவாவுக்கு நல்ல கதாபாத்திரம். அவரது இயல்பான உடல்மொழியும் நடிப்பும் இக்கதைக்கு பிரமாதமாகப் பொருந்தியிருக்கிறது. மரத்தின் மேலே இருந்தபடி அவர் பேசும் வசனங்களில் திரையரங்கமே சிரித்து கைதட்டி கொண்டாடுகிறது. அதேபோல், அம்மாவாக நடித்த மலையாள நடிகையான கிரேஸ் ஆண்டனி அட்டகாசம். இரண்டாம் பாதியில் நிறைய நல்ல காட்சிகளால் கவனம் ஈர்க்கிறார். தமிழுக்கு நல்ல வரவு.” எனப் பாராட்டியுள்ளது அந்த விமர்சனம்.
“‘பறந்து போ’ திரைப்படத்தின் வெற்றிக்கு முக்கிய காரணம் அதன் சரியான நடிகர்கள் தேர்வு தான். சிவா தனது திறமையான நடிப்பால் ‘கோகுல்’ கதாபாத்திரத்தில் நம்மை கவர்கிறார்.” என இந்தியா டுடே விமர்சனம் கூறுகிறது.
மேலும், “சிவாவின் வழக்கமான நகைச்சுவை உணர்வு, காமெடி ‘ஒன்லைனர்கள்’, அலட்சியமான உடல்மொழி மற்றும் நடிப்பு, ஆகியவை, இயக்குநர் ராம் கற்பனை செய்த கோகுலை நம் கண் நிறுத்துகின்றன. கிரேஸ் ஆண்டனியும் குளோரியாக, தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். உணர்ச்சிகரமான காட்சிகளாக இருந்தாலும் சரி, நகைச்சுவையாக இருந்தாலும் சரி, சிறப்பாக நடித்துள்ளார்” என்று பாராட்டுகிறது அந்த விமர்சனம்.
திரைப்படத்தில் குறைகளே இல்லையா?
பட மூலாதாரம், @actorshiva
“இப்படத்தின் நாயகன் அன்பு கதாபாத்திரத்தில் நடித்த சிறுவன் மிதுல் ரியன் நடிப்பில் கலக்கியிருக்கிறார். குழந்தைத்தனத்துக்கு உண்டான அனைத்து உடல்மொழிகளையும் ராம் அச்சிறுவனிடமிருந்து வாங்கிவிட்டார்.” என தினமணி விமர்சனம் கூறுகிறது.
“ஒளிப்பதிவாளர் என்.கே. ஏகாம்பரத்தின் அழகான காட்சிகள் இந்தப் படம் தொழில்நுட்ப ரீதியாக அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்கின்றன. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசையும், சந்தோஷ் தயாநிதியின் பாடல்களும் ‘பறந்து போ’ படத்தை இன்னும் ரசிக்க வைக்கின்றனர். பாடல்கள் கிட்டத்தட்ட உரையாடல் பாணியிலும், எளிமையான தமிழிலும் உள்ளன, இது இன்றைய தமிழ் சினிமா பாடல்களிலிருந்து முற்றிலும் மாறுபட்டதாக உள்ளது.” எனக் கூறுகிறது இந்தியன் எக்ஸ்பிரஸ் விமர்சனம்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆனால், மகன் செய்யும் அத்தனை குறும்புகளையும், அட்டகாசங்களையும் ஒரு தந்தை மன்னித்துக் கொண்டே இருப்பாரா என்கிற விஷயம் மட்டும் கொஞ்சம் அன்னியமாகத் தெரிந்தது. படத்தில் முதல் காட்சியில் மகனை அடிப்பதுடன் சரி, அதற்குப் பின் கண்டிப்புகள் இல்லாமல் போனது லாஜிக் பிரச்னைகளைக் கொடுக்கிறது என சில குறைகளையும் சுட்டிக்காட்டுகிறது தினமணியின் விமர்சனம்.
‘பறந்து போ’- ஒரு அழகான சிறிய குடும்பத்தின் கதையாகும். இது பிள்ளை வளர்ப்பு, தன்னிலை அறிதல் மற்றும் வாழ்க்கையை ஒரு பந்தையமாக பார்ப்பதற்கு பதிலாக, நிதானமாக, ரசித்து வாழ்வதன் முக்கியத்துவத்தை இது சொல்கிறது எனப் பாராட்டியுள்ளது இந்தியா டுடே.
“பறந்து போ படத்தைப் பற்றி ஒரே வரியில் சொல்ல வேண்டுமென்றால் இந்தாண்டில் வெளிவந்த மிகச்சிறந்த தமிழ்ப்படம். கமர்சியலாகவும் கதையாகவும் ரசிகர்களை ஏமாற்றாத திரைப்படம். இயக்குநர் ராமின் திரைப்பயணத்தில் பறந்து போ தனித்துவமானது” என தினமணி நாளிதழும் இப்படத்தை பாராட்டியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு