Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், A.R.Murugadoss Productions
படக்குறிப்பு, 2013இல் வெளியான ‘ராஜா ராணி’ திரைப்படத்தின் ஒரு காட்சி.எழுதியவர், சிராஜ் பதவி, பிபிசி தமிழ் 4 ஜூலை 2025, 01:10 GMT
புதுப்பிக்கப்பட்டது 43 நிமிடங்களுக்கு முன்னர்
ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டுமென யாரிடமாவது கேட்டால், ‘கையில் சாவி அல்லது இரும்பைக் கொடுங்கள்’ என்பதே உடனடி பதிலாக இருக்கும். பல திரைப்படங்களில் நாம் அந்தக் காட்சியை பார்த்திருப்போம்.
அதேபோல, ஒருவரை பாம்பு கடித்தால் உடனடியாக பாம்பு கடித்த இடத்திற்கு அருகில் கயிறால் இறுக்கிக் கட்டி, நஞ்சை வாயால் உறிஞ்சி எடுத்து, துப்புவது. ஒருவரை மயக்கமடையச் செய்ய வேண்டுமென்றால் கட்டையால் பின்னந்தலையில் அடிப்பது அல்லது கைக்குட்டையில் குளோரோஃபார்ம் ஊற்றி, முகத்தில் வைத்து அமுக்குவது, இப்படி பல காட்சிகளை நாம் திரைப்படங்களில் பார்த்திருப்போம்.
ஆனால் உண்மை என்ன? நிபுணர்கள் கூறுவது என்ன?
வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருளைக் கொடுக்க வேண்டுமா?
ஒருவருக்கு வலிப்பு ஏற்பட்டால் இரும்புப் பொருள் அல்லது சாவிக்கொத்தை கொடுப்பது மிகவும் தவறான செயல் எனக் கூறுகிறார், பொது மருத்துவர் அஷ்வின் கருப்பன்.
சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் பணிபுரியும் இவர், “வலிப்பு ஏற்படும் சமயத்தில் பாதிப்புக்குள்ளாகும் நபர்கள், கை, கால்களை வேகமாக அசைப்பார்கள் எனும்போது, இரும்பு அல்லது சாவிக்கொத்து கொடுத்தால், அதைக் கொண்டு அவர்கள் தங்களைக் காயப்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது.” என்று கூறுகிறார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
அந்த நபரை உடனடியாக தரையில், ஒருக்களித்து படுக்க வைக்க வேண்டும் என்றும், அருகில் ஏதேனும் கூரான பொருட்கள் இல்லாதவாறு பார்த்துக்கொள்ள வேண்டும் என்றும் அவர் கூறுகிறார்.
“வலிப்பு என்பதே 30 நொடிகள் முதல் 1 நிமிடம் வரை நீடிக்கக்கூடியதுதான். அதிகபட்சமாக 2 நிமிடங்களுக்கு மேல் செல்ல வாய்ப்பில்லை. எனவேதான் இரும்புப் பொருள் அல்லது சாவியைக் கொடுத்த சில நொடிகளில் வலிப்பு நின்று விடுகிறது என பலர் நம்புகிறார்கள். திரைப்படங்களும் அதை ஊக்குவிக்கின்றன. அதுவொரு மூடநம்பிக்கை. அதன் பின்னால் எந்த அறிவியலும் இல்லை” என்கிறார் அஷ்வின்.
பட மூலாதாரம், AP International
படக்குறிப்பு, நிஜத்தில் கட்டையால் தலையால் அடிவாங்கியவர், இயல்பாக பேசவோ அல்லது ‘நான் யார்?’ என கேட்கவோ வாய்ப்புகள் குறைவு.ஒருவரை மயக்கமடையச் செய்ய கட்டையால் அடிப்பது
கட்டையால் பின்னந்தலையில் அடித்து அல்லது குளோரோஃபார்ம் பயன்படுத்தி ஒரு கதாபாத்திரத்தை மயக்கமடையச் செய்வார்கள். சில நிமிடங்கள் கழித்து, அந்தக் கதாபாத்திரம் மயக்கம் தெளிந்து ‘நான் எங்கே இருக்கிறேன்?’ எனக் கேட்கும் – உள்ளத்தை அள்ளித்தா, உனக்காக எல்லாம் உனக்காக, ஃபிரண்டஸ் என பல தமிழ் திரைப்படங்களில் இந்தக் காட்சியை காணமுடியும்.
“ஒரு துணியில் குளோரோஃபார்ம் கொட்டி, அதை ஒருவரின் முகத்தில் அல்லது மூக்கில் வைத்து 4-5 நொடிகள் அமுக்கினால், அவர்கள் மயக்கமடைந்துவிடுவார்கள் என்பது திரைப்படங்களில் மட்டுமே சாத்தியம். நிஜத்தில் ஒருவர் மயக்கமடைய 3 முதல் 5 நிமிடங்கள் ஆகும்” என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
ஆனால் அந்த முறையில் ஒருவரை மயக்கமடையச் செய்ய அதிக அளவிலான குளோரோஃபார்ம் தேவைப்படும் என்றும், அது ஒருவரை கோமா நிலைக்கு கொண்டுசெல்லக்கூடும் என்றும் கூறுகிறார் அவர்.
“3 நிமிடங்களுக்கு மேல் ஒருவரது முகத்தில் துணியை வைத்து அழுத்தினால் நிச்சயமாக மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவர் உயிரிழப்பார் அல்லது மூர்ச்சையடைவார். அதேபோல ஒருவரை கட்டையால் அடித்தால், அவர் மயங்கிவிட்டு, மீண்டும் சகஜமாக எழுந்து பேச வாய்ப்பில்லை.
கட்டையால் அடித்தவுடன் வெளிக்காயம் மட்டுமல்லாது தலைக்குள் ரத்தக்கசிவு ஏற்படவும் வாய்ப்பு அதிகம். உயிருக்கே ஆபத்தான சூழல் கூட ஏற்படலாம். நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணரின் ஆலோசனையும், சில சமயங்களில் அறுவை சிகிச்சையும் கூட தேவைப்படும்.” என்கிறார் அஷ்வின்.
இந்த பாதிப்புகள் அடிப்பட்டவருக்கு எனும்போது, அடித்தவர் (நடைமுறை வாழ்க்கையில்) சட்ட ரீதியான சிக்கல்களை சந்திக்கக்கூடும் என்பதை நாம் தனியாகக் குறிப்பிடத் தேவையில்லை.
பாம்பு கடித்தால் நஞ்சை வாயால் எடுக்கலாமா?
பட மூலாதாரம், Getty Images
திரைப்படங்களில் வருவது போல ஒரு நபரைக் பாம்பு கடித்துவிட்டால், கடித்த இடத்துக்கு மேலாக கயிறு, துணி போன்றவற்றால் இறுக்கமாகக் கட்டி, பின்னர் அந்த இடத்தில் வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி எடுப்பது சரியா?
இதுகுறித்து பாம்புக்கடி தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் யுனிவர்சல் ஸ்நேக் பைட் ஆராய்ச்சி அமைப்பின் நிறுவனரும் முதன்மை விஞ்ஞானியுமான முனைவர் என்.எஸ்.மனோஜ் பிபிசி தமிழிடம் விவரித்திருந்தார்.
“பாம்பு கடித்த இடத்தில் கயிறு, துணி போன்றவற்றால் இறுக்கமாக கட்டுவது மிகவும் ஆபத்தானது. இறுக்கமாக கட்டுவதால் ரத்த ஓட்டம் முழுவதும் தடைபடுவதோடு, நஞ்சு அங்கேயே அதிகளவிலான பாதிப்புகளை ஏற்படுத்துவதால், கயிற்றால் இறுக்கமாகக் கட்டப்பட்ட இடத்திலுள்ள திசுக்கள் அழுகிவிடும். இது, கை அல்லது கால் என அந்தக் குறிப்பிட்ட பாகத்தையே நீக்கும் அபாயத்தை உருவாக்கலாம்.” என எச்சரிக்கிறார்.
மேலும், “ஒருவேளை, காட்டுக்குள்ளோ அல்லது உடனடியாக மருத்துவமனையை அணுக முடியாத பகுதியிலோ இருந்தால், உயிரைக் காப்பாற்றும் நோக்கில் ஒரு முதலுதவியாக இதைச் செய்யலாம். ஆனால், பாம்பு கடித்த ஒரு மணிநேரத்துக்கு உள்ளாக மருத்துவ உதவியைப் பெற்றுவிட முடியுமெனில் நிச்சயமாக அப்படிச் செய்யக்கூடாது,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
அதேபோல, சிகிச்சை என்ற பெயரில் கடிபட்ட இடத்தைக் கீறிவிட்டு, வாய் வைத்து நஞ்சை உறிஞ்சி வெளியே எடுக்க முயலக்கூடாது. இப்படிச் செய்வதால் நஞ்சு நிச்சயமாக வெளியேறாது என்பதையும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.
“அதற்கு மாறாக, ஒருவேளை பாம்பு மேற்புற சதையில் மட்டுமே கடித்திருந்தால், இப்படிக் கீறிவிடுவது, நஞ்சு மேலும் ஆழமாக உள்ளே பரவக் காரணமாகிவிடும். அதோடு, காயத்தின் மீது வாய் வைத்து உறிஞ்சும் நபருக்கு, வாய்ப்புண், சொத்தைப் பல் ஆகியவை இருந்தால், கடிபட்ட நபரைவிட, இப்படி சிகிச்சையளிக்க முயலும் நபர்கள் விரைவில் நஞ்சின் வீரியத்தை எதிர்கொள்ள வேண்டி வரும்.
மேலும், கடிபட்ட இடத்தைப் பிதுக்கி நஞ்சை வெளியே எடுக்க முயல்வது, அப்பகுதியில் ரத்த ஓட்டத்தை விரைவுபடுத்தி நஞ்சு உடலுக்குள் வேகமாகப் பரவ வழிவகுக்கும்,” என்று எச்சரிக்கிறார் மனோஜ்.
புற்றுநோய் குறித்த மூடநம்பிக்கைகள்
பட மூலாதாரம், Thirrupathi Brothers
படக்குறிப்பு, புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நாயகனுக்கு கடமைகளை செய்துமுடிக்க சில நாட்கள் அல்லது மாதங்களே அவகாசம் இருக்கும் என்ற ரீதியில் பல திரைப்படங்கள் வந்துள்ளன.எழுபதுகள், எண்பதுகளில் வந்த ‘வசந்த மாளிகை’, ‘வாழ்வே மாயம்’ தொடங்கி சமீபத்தில் வெளியான ‘வாரிசு’ திரைப்படம் வரை புற்றுநோய் வந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டது என்பது போலவும், பாதிக்கப்பட்ட கதாபாத்திரம் அடிக்கடி ரத்த வாந்தி எடுப்பது போலவும் சித்தரிக்கப்பட்டிருக்கும். உண்மை என்ன?
“புற்றுநோய் வந்தால் வாழ்க்கையே முடிந்துவிட்டது அல்லது மரணம் நிச்சயம் எனக் கூறுவது மிகப்பெரிய பொய்” என்கிறார் புற்றுநோயியல் மருத்துவர் பி.கே.ஜெயச்சந்திரன்.
“மருத்துவ தொழில்நுட்பம் மிகவும் முன்னேறிவிட்டது. புற்றுநோயிலிருந்து உயிர் பிழைப்பதற்கான வாய்ப்புகள் பலமடங்கு பெருகிவிட்டன. உதாரணத்திற்கு, ஸ்டேஜ் 4 நுரையீரல் புற்றுநோய் மிக மோசமான கட்டம், குணப்படுத்தமுடியாது. அந்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களைக் கூட, இப்போது இருக்கும் மருத்துவ தொழில்நுட்பத்தால் 4 முதல் 5 வருடங்கள் வரை உயிர் வாழ வைக்கமுடியும்.
அப்படியிருக்க புற்றுநோய் வந்தால் எல்லா கடமைகளையும் விரைவாக முடித்துவிட்டு, மரணத்திற்கு தயாராக வேண்டும் என காட்டுவது மிகவும் தவறு. இதனால் பலரும் புற்றுநோய் வந்தால் எங்காவது போய்விட வேண்டும் என கூட நினைக்கிறார்கள்.” என்கிறார் பி.கே.ஜெயச்சந்திரன்.
முறையான சிகிச்சை அளித்தால் பெரும்பாலான புற்றுநோயாளிகளை கண்டிப்பாக குணப்படுத்த முடியும் என்றும் அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், T-Series
படக்குறிப்பு, நாயகன் அதிகமாக மது அருந்தினாலும், புகைப்பிடித்தாலும் கூட ‘ஃபிட்டாக’ இருப்பது போன்ற சித்தரிப்புகள் திரைப்படங்களில் புதிதல்லபுற்றுநோய் வந்த கதாநாயகன் ரத்த வாந்தி எடுப்பது, கடுமையாக இருமுவது போன்றவற்றை திரைப்படங்களில் பார்த்திருப்போம். இது குறித்து பேசிய பி.கே.ஜெயச்சந்திரன், “ரத்த வாந்தி என்பது புற்றுநோயின் அறிகுறி என்ற பிம்பம் உருவாகிவிட்டது. உண்மையில், இரைப்பைப் புற்றுநோய் அல்லது சில இறுதிக்கட்ட புற்றுநோய்களில் அத்தகைய ரத்த வாந்தி பிரச்னை உள்ளது. அதுவும் மிக அரிதாக. மற்றபடி புற்றுநோய் இருப்பவர், 5 நிமிடங்களுக்கு ஒருமுறை ரத்தவாந்தி எடுத்து, கைக்குட்டையால் துடைத்துக் கொள்வார் அல்லது இருமும்போது எல்லாம் ரத்தவாந்தி எடுப்பார் என்பதெல்லாம் அதீத கற்பனை” என்கிறார்.
“நான் சிகரெட் பிடிக்க மாட்டேன், குடிக்க மாட்டேன், ஒரு பெண்ணைக் கூட தொட்டதில்லை. எனக்கு ஏன் புற்றுநோய் வந்தது?”, வசூல்ராஜா எம்பிபிஎஸ் திரைப்படத்தில் மருத்துவரைப் பார்த்து, ஜாகிர் (ஜெய் சூர்யா) இந்தக் கேள்வியைக் கேட்பார். அந்தக் கதாபாத்திரம் இரைப்பைப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருக்கும், எனவே அதிக நாட்கள் உயிர்வாழ முடியாது என மருத்துவர் கூறுவார்.
இதுகுறித்து பேசிய பி.கே.ஜெயச்சந்திரன், “மது, புகையிலை பயன்படுத்துபவர்களுக்கு மட்டுமே புற்றுநோய் ஆபத்து உள்ளது என்ற பிம்பம் உண்மையல்ல. புற்றுநோய்க்கு பல காரணங்கள் உள்ளன, அதில் மது, புகையிலை பயன்பாடும் ஒன்று. மற்றபடி அது புற்றுநோயை பாதிப்பை தீவிரப்படுத்தும்.”
“புற்றுநோய் என்பது பாவ புண்ணியங்கள் அல்லது கர்மா அடிப்படையில் வரும் ஒன்றல்ல. எந்த மோசமான பழக்கமும் இல்லாத நபருக்கு கூட புற்றுநோய் வரும். அதேபோல புற்றுநோய் என்பது கலவியின் மூலம் பரவக்கூடியதும் அல்ல. அது தொற்றுநோயும் அல்ல. இதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்” என்று கூறுகிறார்.
உடலில் குண்டு பாய்ந்தவுடன் தோட்டாக்களை தானே அகற்றுவது
பட மூலாதாரம், Getty Images
‘மனிதன்’ திரைப்படத்தில் தனது இடது கையில் பாய்ந்த தோட்டாவை, கத்தியைத் தீயில் வாட்டி, அதைக் கொண்டு எடுப்பார் ரஜினி. இத்தகைய காட்சி தமிழ் திரைப்படங்களில் மட்டுமல்ல பல்வேறு ஹாலிவுட், பாலிவுட் திரைப்படங்களிலும் உண்டு. சில திரைப்படங்களில் ஒருபடி மேலே போய், காயத்தில் ‘ஆல்கஹால்’ ஊற்றி கழுவிவிட்டு, பெயருக்கு ஒரு சிறு பேண்டேஜ் ஒட்டிக்கொண்டு, ஆக்ரோஷமாக பழிவாங்க கிளம்புவார் கதாநாயகன்.
“முதலில் ஒரு தோட்டா உடலில் பாய்ந்தால், அது திசுக்களை ஊடுருவி உடலுக்குள் சென்றுவிடும். திரைப்படங்களில் காட்டப்படுவது போல தோலில் மேற்புறத்தில் சிக்கி நிற்காது. எனவே அறுவை சிகிச்சை இல்லாமல் அதை எடுப்பது சாத்தியமில்லை. தோட்டா காயத்திலிருந்து மீண்டு வர பல நாட்கள் தேவைப்படும்.” என்கிறார் மருத்துவர் அஷ்வின்.
ராணுவ வீரர்கள் கூட சுய சிகிச்சை செய்து தோட்டாவை எடுப்பதில்லை எனக்கூறும் அஷ்வின், “அதிகபட்சமாக துணியை பேண்டேஜ் போல பயன்படுத்தி, ரத்தப் போக்கை கட்டுப்படுத்த முயற்சிக்கலாம். ஆனாலும், விரைவாக மருத்துவரிடம் செல்ல வேண்டும். மற்றபடி, திரைப்படத்தில் வருவது போல முயற்சித்தால், கையில் நோய் தொற்று ஏற்பட்டு, அறுவை சிகிச்சை செய்து கையை நீக்க வேண்டிய நிலை கூட ஏற்படும்.” என எச்சரிக்கிறார்.
“மருத்துவம், உடல்நலன் சார்ந்த காட்சிகளை வைக்கும்போது குறைந்தபட்சம் ஒரு மருத்துவ நிபுணரிடமாவது படைப்பாளிகள் ஆலோசனை பெற வேண்டும். எவ்வளவு குடித்தாலும், புகை பிடித்தாலும் கதாநாயகன் ஆரோக்கியமாக, ‘சிக்ஸ் பேக்’-உடன் இருப்பது போன்ற காட்சிகள் எல்லாம் சமூகத்தில் எதிர்மறை பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அவர்கள் உணர வேண்டும்” எனக் கூறுகிறார் மருத்துவர் அஷ்வின்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு