Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அஜித்குமார் வழக்கு: உயிருக்கு ஆபத்து என கூறும் வீடியோ எடுத்த நபர் – சாட்சிகளை காக்கும் வழி என்ன?
படக்குறிப்பு, காவலாளி அஜித்குமாரும் அவர் தாக்கப்பட்டதாக கூறப்படும் இடமும்எழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“அஜித்குமாரை தாக்கும் வீடியோவை நான் எடுத்தேன். இதை நீதிமன்றத்தில் சமர்ப்பித்த காரணத்தால் எனக்கும் என்னைச் சார்ந்தோரின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளது” என்கிறார், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் பத்ரகாளியம்மன் கோவில் ஊழியர் சக்தீஸ்வரன்.
தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், டி.ஜி.பி ஆகியோருக்கு அவர் கடிதம் அனுப்பியுள்ளார்.
அதன்படி, தென்மண்டல ஐஜி உத்தரவின் பேரில் ராமநாதபுரத்தில் இருந்து இரண்டு காவலர்கள் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியில் ஈடுபடுவதற்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
‘இந்தியாவில் சாட்சிகளை பாதுகாப்பதற்கு பல்வேறு திட்டங்கள் இருந்தாலும் அதை மாநில அரசு முறையாக செயல்படுத்துவதில்லை’ என சமூக ஆர்வலர்கள் விமர்சிக்கின்றனர்.
சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரம் ஊராட்சியில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் அமைந்துள்ளது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இங்கு கடந்த 28 ஆம் தேதியன்று வழிபாடு நடத்துவதற்காக வந்த முனைவர் நிகிதா என்பவர், தனது காரில் வைத்திருந்த ஒன்பதரை சவரன் நகையைக் காணவில்லை என திருப்புவனம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரின்பேரில் கோவில் காவலாளி அஜித்குமாரிடம் விசாரணை நடத்தினர். அப்போது அவர் கொடூரமாக தாக்கப்பட்டு உயிரிழந்ததாக அவரது குடும்பத்தினர் குற்றஞ்சாட்டினர். அஜித்குமார் தாக்கப்படும் வீடியோவும் வெளியானது.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.கைதான ஐந்து காவலர்கள்
இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். காவலாளி மரண வழக்கை கொலை வழக்காக மாற்றியுள்ளதாக, தமிழ்நாடு காவல்துறை தெரிவித்தது.
காவலாளி அஜித்குமார் போலீஸாரால் தாக்கப்பட்டு இறந்தது தொடர்பான வழக்கு, ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் விசாரணைக்கு எடுத்தது.
அப்போது, அஜித்குமாரை காவலர்கள் தாக்கும் வீடியோவை மனுதாரர்கள் தரப்பில் போட்டுக் காண்பித்தனர். கோவில் நிர்வாக அலுவலகத்தின் பின்புறம் உள்ள இடத்தில் வைத்து அவரைத் தாக்கியதாகவும் அப்போது ஒருவர் மறைவாக நின்று வீடியோ எடுத்ததாகவும் நீதிமன்றத்தில் கூறப்பட்டது.
படக்குறிப்பு, அஜித்குமார் வழக்கில் முக்கிய சாட்சியான சக்தீஸ்வரன் தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக புகார் கூறியிருந்தார் வீடியோவின் உண்மைத்தன்மையை பிபிசி தமிழால் சரிபார்க்க முடியவில்லை. ஆனால், போலீஸார் தாக்கும் வீடியோவை தான் எடுத்ததாகக் கூறிய கோவில் ஊழியர் சக்தீஸ்வரனிடம் நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், மரியா கிளீட் அமர்வு விசாரணை நடத்தியது.
வீடியோ எங்கிருந்து எடுக்கப்பட்டது, எவ்வளவு நேரம் எடுக்கப்பட்டது அங்கு யார் இருந்தார்கள் என்றெல்லாம் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதில் அளித்த சக்தீஸ்வரன், கோவில் பின்புறம் உள்ள கழிவறையில் இருந்து வீடியோ எடுத்ததாக தெரிவித்தார்.
“வழக்கை மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரிக்க வேண்டும்” எனக் கூறிய நீதிபதிகள், வழக்கின் ஆவணங்கள், கேமரா பதிவுகளை அவரிடம் ஒப்படைக்க வேண்டும் என உத்தரவிட்டு, ஜூலை 9 ஆம் தேதிக்கு வழக்கை தள்ளிவைத்தனர்.
‘உயிருக்கு அச்சுறுத்தல்’ – டிஜிபியிடம் மனு
இந்த நிலையில், தனக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்குமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளையின் பதிவாளர், தமிழ்நாடு காவல்துறை தலைமை இயக்குநருக்கு கோவில் ஊழியர் சக்தீஸ்வரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார்.
அந்தக் கடிதத்தில், ‘சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பு வழங்குமாறு ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. வழக்கில் தொடர்புடைய காவலருக்கு குற்றப் பின்னணி உடைய நபர்களுடன் தொடர்பு உள்ளது’ எனக் கூறியுள்ளார்.
அஜித்குமாரை போலீஸ் தாக்கும் வீடியோவை எடுத்தேன் என்பதால் தனக்கும் தன்னைச் சார்ந்துள்ளவர்களின் உயிருக்கும் அச்சுறுத்தல் உள்ளதாக சக்தீஸ்வரன் தெரிவித்தார்.
செய்தியாளர்களிடம் பேசும்போது இதே தகவலைக் குறிப்பிட்ட சக்தீஸ்வரன், “அஜித்குமாரை காப்பாற்ற முடியாமல் தவித்தேன். வீடியோ எடுக்கும்போது யாரோ வருவது போல இருந்ததால், 30 நொடிகளுக்கு மேல் வீடியோவை எடுக்க முடியவில்லை” எனக் கூறினார்.
“அஜித்குமாரின் சகோதரர் நவீன்குமார் உள்பட வழக்கின் சாட்சிகளுக்கு போதிய பாதுகாப்பை அரசு வழங்க வேண்டும்” எனவும் சக்தீஸ்வரன் குறிப்பிட்டார்.
சக்தீஸ்வரனின் கோரிக்கையை தொடர்ந்து அவருக்கு ஆயுதமேந்திய போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. அதேநேரம், சாட்சிகளின் பாதுகாப்பு தொடர்பான விவகாரம் பேசுபொருளாக மாறியுள்ளது.
படக்குறிப்பு, கோவிலின் பின்புறம் “சாட்சி மிக முக்கியம்…ஆனால்?” – சகாயம் சொல்வது என்ன?
“கொலை, கொள்ளை அல்லது கொடும் குற்றங்கள் சார்ந்த வழக்குகளில் நீதிமன்றத்தால் தண்டனைகளை வழங்குவதற்கு எந்தளவுக்கு ஆவணங்கள் முக்கியமோ, அதே அளவுக்கு ஒரு மனிதரின் சாட்சி மிக முக்கியமானது” எனக் கூறுகிறார், ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ் அதிகாரி சகாயம்.
ஆனால், சாட்சிகள் அச்சுறுத்தப்படுவது, அலைக்கழிப்பது போன்றவை தொடர்ந்து நடப்பதாக பிபிசி தமிழிடம் கூறிய அவர், “வழக்கு விசாரணை நடக்கும்போது சாட்சி சொல்ல வந்த நபரும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் அருகருகே அமரும் சூழல்கள் ஏற்படுகின்றன” என்கிறார்.
பல்வேறு வகைகளில் சாட்சிகள் மிரட்டப்படுவதாகக் கூறும் சகாயம், “பெரும்பாலும் சாட்சிகளை ஊக்கப்படுத்தும் சூழல்கள் நீதிமன்றங்களில் இல்லை. ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
மதுரையில் கிரானைட் குவாரிகளில் முறைகேடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில், 2014 ஆம் ஆண்டு சட்ட ஆணையராக சகாயத்தை நீதிமன்றம் நியமித்தது.
படக்குறிப்பு, ஒரு வழக்கில் நீதி கிடைக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாக்க வேண்டும் என்கிறார் சகாயம்அப்போது கிரானைட் குவாரிகளில் நரபலி கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. “சாட்சி சொல்வதற்கு பலர் முன்வந்தனர். புகார் கொடுத்த நபரே நேரில் வந்து நரபலி நடந்ததாகக் கூறப்பட்ட இடத்தைக் காட்டினார். அவரைப் பாதுகாக்க வேண்டியது முக்கிய பணியாக இருந்தது” எனக் கூறுகிறார் சகாயம்.
இதுதொடர்பாக, மதுரை காவல் கண்காணிப்பாளரின் கவனத்துக்குக் கொண்டு சென்றதால் சாட்சிக்கு சில மாதங்கள் பாதுகாப்பு அளிக்கப்பட்டதாகக் கூறும் சகாயம், “அதன்பிறகு அவரது பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது. எனக்கு வழங்கப்பட்டு வந்த போலீஸ் பாதுகாப்பும் விலக்கிக் கொள்ளப்பட்டது,” என்கிறார்.
“நடவடிக்கை போதுமானதாக இல்லை”
சகாயத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்ட விவகாரம், கடந்த மே மாதம் விவாதத்தை ஏற்படுத்தியது. இதற்கு விளக்கம் அளித்த காவல்துறை தலைமை இயக்குநர் சங்கர் ஜிவால், ‘பாதுகாப்பு மதிப்பீட்டு அறிக்கையின் அடிப்படையில் எந்த அச்சுறுத்தலும் இல்லாத 22 பேருக்கு வழங்கப்பட்டு வந்த பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டது’ எனத் தெரிவித்தார்.
எந்தவொரு அச்சுறுத்தலும் இல்லாத காரணத்தால் சகாயத்தின் பாதுகாப்பு விலக்கிக் கொள்ளப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
“சாட்சியாக இருப்பவர்களுக்கு பாதுகாப்பின்மை என்பது பரவலாக உள்ளது. அவர்களைப் பாதுகாப்பதற்கு அரசு எடுக்கும் நடவடிக்கை என்பது போதுமானதாக இல்லை” எனக் கூறுகிறார் சகாயம்.
1950 ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சாட்சிகளைப் பாதுகாப்பதன் அவசியத்தை உணர்ந்து சில பரிந்துரைகளை சட்ட ஆணையம் வழங்கியுள்ளதாகக் கூறும் சகாயம், உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் 2018
‘வழக்கின் சாட்சிக்கு அச்சுறுத்தல் இருந்தால் அதுதொடர்பாக மாவட்ட நீதிபதி, மாவட்ட காவல்துறை உயர் அதிகாரி ஆகியோரிடம் புகார் அளிக்கலாம்’ என சாட்சிகள் பாதுகாப்பு திட்டத்தில் கூறப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகம் வெளியிட்டுள்ள இத்திட்டத்தில், சாட்சிக்கான அச்சுறுத்தலை மூன்று வகையாகப் பிரித்துள்ளனர்.
சாட்சி மற்றும் அவரின் குடும்பத்தினரின் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்துவதுவிசாரணை நடக்கும்போது பாதுகாப்பு மற்றும் உடைமைகளுக்கு அச்சுறுத்தல் விளைவிப்பதுசாட்சி மற்றும் அவரது குடும்பத்தினரின் நற்பெயரைக் கெடுப்பது, குற்றம் இழைக்கும் தீங்குடன் அச்சுறுத்துவது போன்றவை.இதற்காக மாநில அரசு தனது நிதிநிலை அறிக்கையில் நிதி ஒதுக்க வேண்டும் எனவும் தனியார் நிறுவனங்களின் சமூக பாதுகாப்பு நிதியின் (CSR) மூலம் இவற்றை செயல்படுத்தலாம் எனவும் இத்திட்டத்தில் கூறப்பட்டுள்ளது.
சாட்சியின் மனுவை பரிசீலிப்பது தொடர்பான வழிமுறைகளையும் இத்திட்டம் பட்டியலிட்டுள்ளது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சட்ட ஆணையத்தின் பரிந்துரைகள் உச்ச நீதிமன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டு 2018 ஆம் ஆண்டு சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் (Witness protection scheme) கொண்டு வரப்பட்டது மேலும் அதில்,
சாட்சிக்கு அச்சுறுத்தல் உள்ளதா என்பது குறித்து உதவி ஆணையர் அந்தஸ்தில் உள்ள அதிகாரி அறிக்கை அளிக்க வேண்டும்.அவசர சூழல்களைப் பொறுத்து மனு நிலுவையில் உள்ளபோதே சாட்சி அல்லது அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இடைக்கால பாதுகாப்பு வழங்கலாம்.உயிருக்கு அச்சுறுத்தல் இருந்தால் உடனடி பாதுகாப்பு வழங்குவதைத் தடுக்கக் கூடாது.அச்சுறுத்தல் தொடர்பான அறிக்கையை தயாரிப்பதில் ரகசியத்தன்மையைக் கடைபிடிக்க வேண்டும். அறிக்கையை விரைவாக தயாரித்து 5 நாட்களுக்குள் உரிய அதிகாரியை சென்றடைய வேண்டும்.சாட்சியின் பாதுகாப்பு தொடர்பான முழு பொறுப்பும் மாநில காவல்துறையின் தலைவருக்கு உள்ளது.பாதுகாப்பு உத்தரவு நிறைவேற்றப்பட்ட உடன் மாதம்தோறும் பின்தொடர்தல் அறிக்கையை (follow-up report) உரிய அதிகாரியிடம் பாதுகாப்புப் பிரிவு தாக்கல் செய்ய வேண்டும்.பாதுகாப்பு உத்தரவை திருத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால் விசாரணை முடிந்ததும் உதவி காவல் ஆணையர் பொறுப்பில் உள்ள அதிகாரியிடம் இருந்து புதிய அறிக்கை கோரப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார் எப்படியெல்லாம் பாதுகாக்கலாம்?
சாட்சியை பாதுகாப்பதற்கான அம்சங்களையும் சாட்சிகள் பாதுகாப்புத் திட்டம் குறிப்பிட்டுள்ளது.
அச்சுறுத்தலுக்கு ஏற்ப பாதுகாப்பு இருக்க வேண்டும். அவை மூன்று மாதங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.விசாரணையின்போது சாட்சியும் குற்றம் சுமத்தப்பட்ட நபரும் நேருக்கு நேர் சந்திக்காமல் பார்த்துக்கொள்வதுதொலைபேசி அழைப்புகளைக் கண்காணித்தல்சாட்சியின் தொலைபேசி எண்ணை மாற்றுவதற்கு தொலைபேசி நிறுவனத்துடன் பேசி ஏற்பாடு செய்தல்சாட்சியின் வீட்டில் பாதுகாப்பு கதவுகள், சிசிடிவி, அலாரம், வேலி போன்றவற்றை நிறுவ வேண்டும்.பெயர்களை மாற்றி சாட்சியின் அடையாளத்தை மறைத்தல்சாட்சியின் வீட்டைச் சுற்றி வழக்கமான ரோந்து பணிகள் மற்றும் அருகில் உள்ள நகரத்துக்கு தற்காலிக வசிப்பிட மாற்றம் செய்யலாம்.நீதிமன்றம் சென்று திரும்புவதற்கான அரசு வாகனம் அல்லது அரசு நிதி உதவியுடன் போக்குவரத்து வசதி வழங்குதல்கேமரா முன்பு விசாரணையை நடத்த வேண்டும்.சாட்சி பாதுகாப்பு நிதியில் இருந்து நிதி உதவிகள், மானியங்கள் வழங்குதல், புதிய தொழில் என தேவைப்படும் நடவடிக்கைகளை எடுக்கலாம். இதனை மேற்கோள் காட்டிப் பேசிய சகாயம், “நீதிமன்றத்தின் செயல்பாடுகள் சிறப்பாக இருக்க வேண்டும் என்றால் சாட்சிகளைப் பாதுகாப்பதில் அரசு உறுதியாக இருக்க வேண்டும்” என்கிறார்.
“பயிற்சி முகாம் நடத்தப்படுவதில்லை” – ஹென்றி திபேன்
பட மூலாதாரம், Henri Tiphagne/Facebook
படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து தமிழ்நாட்டில் எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை என்கிறார் ஹென்றி திபேன்சாட்சிகள் பாதுகாப்பு திட்டம் குறித்து பிபிசி தமிழிடம் பேசிய ‘மக்கள் கண்காணிப்பகம்’ அமைப்பின் இயக்குநர் ஹென்றி திபேன், ” தமிழ்நாட்டில் இதுதொடர்பாக எந்தப் பயிற்சி முகாமும் நடத்தப்படுவதில்லை. 38 மாவட்டங்களிலும் இதுதொடர்பாக வகுப்புகள் நடத்தப்பட வேண்டும்” எனக் கூறுகிறார்.
தொடர்ந்து பேசிய அவர், “வழக்கறிஞர்களை விடவும் சாட்சிகள் முக்கியமானவை. சாட்சிகள் பலவீனமாக உள்ளதா என்பது புலனாய்வு அதிகாரிகளுக்கு தெரியும். ஆனால், அதை முறையாகக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை” எனத் தெரிவித்தார்.
சாட்சிகள் பாதுகாப்புத் திட்டத்தை காவல்துறையோ, பாதிக்கப்பட்டவர்களோ பெரும்பாலும் பயன்படுத்திக் கொள்ளாத சூழலே நிலவுவதாகவும் ஹென்றி திபேன் குறிப்பிட்டார்.
“முறையாகப் பின்பற்றப்படுகின்றன” – முன்னாள் டிஜிபி
பட மூலாதாரம், Dr.SylendraBabu.IPS/Facebook
படக்குறிப்பு, சாட்சிகள் பாதுகாக்கப்படுவதில்லை என்ற குற்றச்சாட்டை மறுக்கிறார் சைலேந்திரபாபுஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை முழுமையாக மறுக்கிறார் தமிழ்நாடு காவல்துறையின் முன்னாள் தலைமை இயக்குநர் சைலேந்திரபாபு.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், ” சில வழக்குகளில் குற்றம் சுமத்தப்பட்டவர்கள் குற்றப் பின்னணி உடையவர்களாகவோ, வசதி படைத்தவர்களாகவோ இருந்தால் மட்டுமே இதுபோன்று சாட்சிகளை மிரட்டும் சம்பவங்கள் நடக்கின்றன” எனக் கூறுகிறார்.
சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பதாகக் புகார் வந்தால் சிறப்பு பாதுகாப்பு கொடுக்கப்படுவதோடு தேவைப்பட்டால் ஆயுதம் ஏந்திய போலீஸ் பாதுகாப்பையும் காவல்துறை வழங்குவதாக அவர் குறிப்பிட்டார்.
சில நேரங்களில் சாட்சிகளுக்கு அச்சுறுத்தல் இருப்பது கண்டறிய முடியாமல் போகும் நிகழ்வுகளும் நடப்பதாகக் கூறும் சைலேந்திரபாபு, “சிறிய தவறுகள் நடக்கலாமே தவிர சாட்சிகள் பாதுகாப்புக்கான வழிமுறைகள் முறையாகப் பின்பற்றப்படுகின்றன” என்கிறார்.
“சாட்சிகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நடந்தால் அது காவல்துறைக்கு கரும்புள்ளியாக மாறும். ஆகவே, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு தொடர்புடைய காவல் ஆணையர்களுக்கு உரிய அறிவுறுத்தல்களும் வழங்கப்படுகின்றன” எனக் கூறுகிறார் சைலேந்திரபாபு.
காவல்துறை அதிகாரிகளுக்கு காவல் தொடர்பான வகுப்புகளுடன் சாட்சிகள் பாதுகாப்பு தொடர்பான வகுப்புகளும் நடத்தப்படுவதாகக் கூறும் அவர், “இதுதொடர்பாக காவல்துறை தலைமை இயக்குநர் மற்றும் காவல் ஆணையர்கள் குறிப்பிட்ட காலத்துக்கு ஒருமுறை மறுஆய்வு செய்வது நடைமுறையாக உள்ளது” எனத் தெரிவித்தார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு