இரான், இராக், ஆப்கானிஸ்தான் – ராணுவ தலையீட்டால் அமெரிக்கா பெற்றதும் இழந்ததும் என்ன?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், நோர்பெர்டோ பரேடஸ்பதவி, பிபிசி நியூஸ் முண்டோ ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த மே மாதத்தில் தனக்கு முன்பிருந்த அதிபர்களின் வெளிநாட்டு விவகாரங்களில் தலையீடும் கொள்கைகளை கடுமையாக விமர்சித்தபோது, பலரின் கவனத்தை ஈர்த்தார் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்.

“இறுதியில் நாட்டை கட்டியமைத்தவர்களாக கூறப்பட்டவர்கள், அவர்கள் கட்டியமைத்ததைவிட அதிக நாடுகளை அழித்தனர்,” என சர்ச்சைக்குரிய 2003ஆம் ஆண்டு இராக் படையெடுப்பை குறிப்பால் உணர்த்தி அவர் பேசினார்.

“அவர்கள் தாங்கள் புரிந்துகொள்ளாத சிக்கலான சமூகங்களில் தலையிட்டனர்,” என அவர் மேலும் தெரிவித்திருந்தார்.

செளதி தலைநகர் ரியாதுக்கு மேற்கொண்ட பயணத்தின் போது பேசப்பட்ட இந்த வார்த்தைகள், டிரம்பின் இரண்டாவது பதவிக்காலத்திலாவது, இந்தப் பகுதியில் அமெரிக்காவின் தலையீடு ஒரு கடந்த கால நிகழ்வாக இருக்கும் என்பதற்கான குறிப்பாக சில ஆய்வாளர்கள் பார்த்தனர்.

ஆனால் ஒரு மாதத்திற்கு சற்றே கூடுதலான காலத்தில், இரானில் இருக்கும் மூன்று அணுசக்தி மையங்கள் மீது தாக்குதல் நடத்தி இரான் மற்றும் இஸ்ரேல் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

தங்களது தாக்குதல் மூலம், அமெரிக்காவும், இஸ்ரேலும் இரானின் அணு ஆயுதம் தயாரிக்கும் லட்சியத்திற்கு முடிவு கட்ட முயற்சித்தன.

“இரானின் அணு செறிவூட்டல் திறனை அழித்து, உலகின் முன்னணி பயங்கரவாத ஆதரவு நாட்டின் அணு ஆயுத அபாயத்தை தடுப்பதுதான் எங்களது நோக்கமாக இருந்தது,” என தாக்குதலுக்கு பின்னர் டிரம்ப் தெரிவித்தார்.

ஆனால் ஒரு பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக வெளிநாடுகளில், அமெரிக்கா தலையிட்டபோது அனைத்தும் திட்டமிட்டபடி நடந்ததில்லை என்பதை வரலாறு காட்டுகிறது.

லெபனான்-அமெரிக்க எழுத்தாளரும், லண்டன் ஸ்கூல் ஆஃப் எகனாமிக்ஸ் அண்ட் பொலிடிக்கல் சயின்ஸில் மத்திய கிழக்கு அரசியல் மற்றும் சர்வதேச உறவுகள் பேராசிரியருமான ஃபவாஸ் கெர்கஸின் கூற்றுப்படி, 1940-களின் பிற்பகுதியிலிருந்து மத்திய கிழக்கு சர்வதேச உறவுகளில் அமெரிக்க தலையீடு நிலையானதாக இருந்திருக்கிறது.

“இரான் மீதான சமீபத்திய அமெரிக்க வான்தாக்குதல்கள் இந்தக் கொள்கையின் மற்றொரு தெளிவான எடுத்துக்காட்டு,” என்று ‘வாட் ரியலி வென்ட் ராங்: தி வெஸ்ட் அண்ட் தி ஃபெயிலியர் ஆஃப் டெமாக்ரசி இன் தி மிடில் ஈஸ்ட்’ என்ற புத்தகத்தின் ஆசிரியரான அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

வேறு எங்கெல்லாம் அமெரிக்கா தலையிட்டுள்ளது, அவற்றின் விளைவுகள் என்ன?

இரானில் ஆட்சிக் கவிழ்ப்பு

1953ஆம் ஆண்டில் அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் ஆதரவுடன் இரான் ராணுவம் நடத்திய கிளர்ச்சியில் இரானில் ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட பிரதமர் முகமது மொசாடெக் பதவியிலிருந்து தூக்கி எறியப்பட்டார்.

இரானின் பரந்த கச்சா வளங்கள் தேசிய மயமாக்கப்படும் என்ற வாக்குறுதியுடன் இரண்டு வருடங்களுக்கு முன்னர்தான் மொசாடெக் பதவிக்கு வந்திருந்தார்.

ஆனால் இதுவும், கம்யூனிஸ அபாயமும் இணைந்து, இரான் கச்சா எண்ணெய்யை அதிகம் நம்பியிருந்த போருக்கு பிந்தைய பொருளாதாரங்களை கொண்டிருந்த பிரிட்டன் மற்றும் அமெரிக்காவை கவலைக்குள்ளாக்கியது.

ஆரம்பத்தில், ஷா முகமது ரேசா பஹ்லவியை மீண்டும் அரியணையில் அமர்த்துவதற்கு ஆதரவான ஒரு மக்கள் எழுச்சியாக சித்தரிக்கப்பட்ட இந்த கிளர்ச்சி, பிரிட்டன் மற்றும் அமெரிக்க உளவு சேவைகளின் ஆதரவுடன் நடத்தப்பட்டது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, 1977ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜிம்மி கார்ட்டர், வெள்ளை மாளிகைக்கு ஷாவை வரவேற்கிறார்.இந்த ஆட்சி கவிழ்ப்பில் தனது நாடு வகித்த பங்கை 2000-ஆம் ஆண்டில், அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலர் மேடலின் ஆல்பிரைட் பகிரங்கமாக பேசினார்.

நடந்த சம்பவங்களில் அமெரிக்காவின் பங்கை 2009-ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமா கெய்ரோவில் உரையாற்றியபோது ஒப்புக்கொண்டார்.

கிளர்ச்சி நடந்து 60 ஆண்டுகளுக்கு பின்னர், கிளர்ச்சியில் தனது பங்கை ஒப்புக்கொள்ளும் ஆவணங்களை முதல்முறையாக அமெரிக்காவின் ரகசிய உளவு முகமையான சிஐஏ 2013-ல் வெளியிட்டது.

“அந்த ராணுவ கிளர்ச்சி..சிஐஏவின் உத்தரவுப்படி அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையாக நடத்தப்பட்டது,” என அமெரிக்காவின் நேஷனல் செக்யூரிட்டி ஆர்கைவ்ஸ் எனப்படும் தேசிய ஆவண பாதுகாப்பு அமைப்பு வெளியிட்ட ஆவணங்களிலிருந்து எடுக்கப்பட்ட குறிப்பு ஒன்று தெரிவிக்கிறது.

அமெரிக்கா மற்றும் இரான் இடையேயான தற்போதைய மோதலின் ஆணிவேர் இந்த ரகசிய தலையீட்டில்தான் இருப்பதாக கூறுகிறார் பேராசிரியர் கெர்கஸ்.

“சட்டப்படி ஜனநாயகமுறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் ஒருவரை பதவியிலிருந்து தூக்கிவீசிவிட்டு ஒரு கொடூரமான சர்வாதிகாரியான இரானின் ஷாவை நாட்டின் ஒட்டுமொத்த ஆட்சியாளராக நிறுவதற்காக அமெரிக்காவை இரானியர்கள் எப்போதும் மன்னிக்கவில்லை,” என அவர் விளக்கினார்.

“இரானின் அரசியல் பாதையை மாற்றியதாக அமெரிக்கா மீது அரசியலின் மேல்மட்டத்தில் இருப்பவர்கள் குற்றம்சாட்டுவதுதான் இன்று இரானில் உள்ள அமெரிக்க எதிர்ப்பு உணர்வுக்கு காரணம்.”

எகிப்திய அதிபர் கமால் அப்தெல் நாசரின் கொள்கைகளை அவரது நாட்டிலேயே மாற்றி, அவரின் தேசியவாத திட்டத்தின் போக்கை மாற்ற அமெரிக்கா முயற்சித்து பெரிய அளவில் வெற்றி பெறமுடியவில்லை என பேராசிரியர் கெர்கஸ் சுட்டிக்காட்டுகிறார்.

ஆப்கானிஸ்தானில் இஸ்லாமியவாதிகளுக்கு ஆதரவு

1979-ஆம் ஆண்டு, ஒரு ஆண்டுக்கு முன்பு ஆட்சிக்கு வந்து துண்டாடப்பட்ட கம்யூனிச அரசுக்கு ஆதரவாக சோவியத் ராணுவம் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்தது.

ஆனால் முஜாஹிதீன் எனப்பட்ட இஸ்லாமிய குழுவிடமிருந்து சோவியத் படைகள் எதிர்ப்பை எதிர்கொண்டனர்.

கம்யூனிச அரசுக்கு எதிரான இஸ்லாமிய ஜிஹாதி தீவிரவாதிகளைக் கொண்ட இந்தக் குழு, அமெரிக்கா, பாகிஸ்தான், சீனா, மற்றும் செளதி அரேபியா உள்ளிட்ட பல நாடுகளின் ஆதரவைப் பெற்றிருந்தது.

பனிப்போர் காலத்தில், சோவியத்தின் நோக்கங்களை தடுப்பதற்காக ஆப்கானிஸ்தானுக்கு அதிக ஆயுதங்களையும் பணத்தையும் வழங்கிய நாடுகளில் ஒன்றாக அமெரிக்கா இருந்தது.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தானின் மீதான சோவியத் படையெடுப்பு ஆரம்பத்தில் அங்குள்ள கம்யூனிச அரசாங்கத்தை வலுப்படுத்துவதற்காக இருந்தது.வியட்நாம் போரில் அமெரிக்க ராணுவம் சந்தித்த உயிரிழப்புகள் மற்றும் வள இழப்புகளுக்கு ஒப்பாக ஆப்கானிஸ்தானில் ஒரு புதைகுழியில் சோவியத் யூனியனை சிக்கவைக்க அமெரிக்கா முயன்றது வெளியிடப்பட்ட ரகசிய ஆவணங்கள், பத்திரிகை புலனாய்வுகள் மற்றும் சாட்சியங்கள் மூலம் தெரியவந்தது.

இந்த திட்டம் ஆபரேஷன் சைக்லோன் என்று அழைக்கப்பட்டதுடன், அப்போதைய ஊடகங்களில் ” சிஐஏ வரலாற்றில் மிகப்பெரிய ரகசிய நடவடிக்கை” என விவரிக்கப்பட்டது.

அப்போதைய அமெரிக்க அதிபர் ரொனால்ட் ரீகன், ஜிஹாதி தலைவர்களை அதிபர் அலுவலகத்திலேயே சந்தித்தார்.

1998ஆம் ஆண்டில், ஜெனிவா ஒப்பந்தத்திற்கு பிறகு சோவிய அதிபர் கோர்பசேவ் பத்தாண்டுகள் ஆக்கிரமிப்புக்கு பிறகு தனது படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ள தொடங்கினார். கடைசி படை நாட்டை விட்டு 1989ஆம் ஆண்டு முற்பகுதியில் வெளியேறியது.

ஆனால் அந்த நாடு விரைவிலேயே பல்வேறு பிரிவுகளுக்கிடையேயான ஒரு உள்நாட்டு போரில் சிக்கிக்கொள்ள, சோவியத் யூனியனின் ஆதரவு இல்லாத அரசு விரைவிலேயே வீழ்ந்தது.

இதிலிருந்து வெளிப்பட்டதுதான் ஷரியா சட்டத்தை தீவிரமாக பின்பற்றுவதில் நம்பிக்கை கொண்ட தாலிபன். இதன் தலைவர்கள் பலர் முஜாஹிதீன் இயக்கத்தில் சோவியத் ஆக்கிரமிப்புக்கு எதிராக போராடி அமெரிக்கா மற்றும் பிற நாடுகளின் ஆயுதங்களை பெற்றவர்கள்.

இதைப் போலவே சோவியத்-ஆப்கான் போர் முடிவடைந்த பின்னர், ஆப்கானிஸ்தான் போராளிகள் குழு ஒன்று இஸ்லாமிய போராட்டத்தை ஆப்கானிஸ்தானுக்கு வெளியேயும் கொண்டு செல்வதற்காக அல்-கொய்தாவை உருவாக்கினர்.

இந்த அமைப்பிற்கும் அதன் தலைவர் ஒசாமா பின் லேடனுக்கும் தங்கள் செயல்பாடுகளை தொடரவும், அமெரிக்கா மீதான 2001 செப்டம்பர் 11 தாக்குதலை திட்டமிடுவதற்கும் ஒரு பாதுகாப்பான புகலிடத்தை தாலிபன் அளித்தது.

‘கிளின்டன் நிர்வாகத்தின் புதிய அணுகுமுறை’

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, முன்னாள் அமெரிக்க அதிபர் பில் கிளின்டன்”பனிப்போரின்போது, இந்தப் பகுதியில் அமெரிக்காவின் தலையீடுகளில் பெரும்பாலானவை சமநிலையை பேணுவதற்காக எடுக்கப்பட்ட முயற்சிகள் என விவரிக்கலாம்” என வாதிடுகிறார் அலபாமா பல்கலைக்கழகத்தின் அரசியல் அறிவியல் துறையில் மத்திய கிழக்கு ஆய்வுகளின் பேராசிரியரான வாலீத் ஹஸ்புன்.

“அமெரிக்கா மற்றும் அதன் தோழமை நாடுகளின் நலன்களுக்கு எதிரான எந்தவொரு சக்தியையும் எதிர்க்க அவர்கள் முயற்சி செய்தனர்,” என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

அமெரிக்கா தலைமையில் வளைகுடா போரில் (1990-91) நிகழ்ந்த தலையீடு ஒரு எடுத்துக்காட்டாக இருப்பதாக பேராசிரியர் ஹஸ்புன் சொல்கிறார்.

“அது குவைத் மீதான இராக்கின் படையெடுப்பை முறியடிக்கும் முயற்சி. குவைத்தின் இறையாண்மை மீட்டெடுக்கப்பட்டது, பனிப்போர் முடிந்த பின்னர், பொதுவான பாதுகாப்பு தேவைகளை பூர்த்தி செய்வதற்கான அமெரிக்க கொள்கை வகுப்பாளர்களுக்கும், இந்தப் பகுதியில் உள்ள தலைவர்களுக்கும் இடையே பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன.”

ஆனால் கிளின்டன் நிர்வாகத்தின் கீழ் ஒரு புதிய அணுகுமுறை தொடங்கியதாக ஹஸ்புன் நம்புகிறார்.

“அமெரிக்க நலன்கள் மற்றும் பிராந்திய ஒழுங்கு குறித்த அதன் பார்வை ஆகியவற்றிற்கு பயனளிக்கும் வகையிலான ஒரு பாதுகாப்பு கட்டமைப்பை உருவாக்குவதுதான் குறிக்கோளாக இருந்தது,” என அவர் குறிப்பிடுகிறார்.

“ஒருபுறம் அனைத்து அரபு நாடுகளும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து கொள்ளும் வகையில் அமைதிக்கான நடைமுறை மற்றும் அரபு- இஸ்ரேல் உறவுகள் சீரமைப்பு ஆகியவற்றின் மீது கவனம் செலுத்துவது, அத்துடன் இரான் மற்றும் இராக்கை ராணுவ நடவடிக்கை மற்றும் தடைகள் மூல்ம் கட்டுப்படுத்துவது இதில் அடங்கும்”

அமெரிக்க தலைவர்கள் “உறுதியான” என விவரிக்கும் இஸ்ரேலுக்கான ஆதரவு அமெரிக்காவின் தலையீட்டுடன் இணைந்து சென்றுள்ளது.

இரண்டாம் உலகப் போருக்கு பிறகு, ஒவ்வொரு ஆண்டும் பல பில்லியன் டாலர்களை பெற்றுக்கொண்டு அமெரிக்காவின் வெளிநாட்டு உதவிகளை அதிகம் பெற்ற நாடாக இஸ்ரேல் இருக்கிறது.

மீண்டும் ஆப்கானிஸ்தானில் நுழைந்த அமெரிக்கா

அக்டோபர் 2001-ல் ஆப்கானிஸ்தான் மீதான ஒரு படையெடுப்புக்கு அமெரிக்கா தலைமை தாங்கியது. தாலிபன்களை வெளியேற்றவும், ஜனநாயகத்தை பாதுகாக்கவும், செப்டம்பர் தாக்குதல்களை தொடர்ந்து ஏற்பட்ட அல்-கொய்தா அச்சுறுத்தலை நீக்கவும் இந்த படையெடுப்பு என அது தெரிவித்தது.

அமெரிக்கா விரைவில் அந்த நாட்டின் தலைநகர் காபூலை கைப்பற்றியது.

சண்டைகளில் பங்கேற்கவும் ஆப்கானிஸ்தான் பாதுகாப்பு படைகளுக்கு பயிற்சி அளிக்கவும் 2003ஆம் ஆண்டு முதல் நேட்டோ படைகளும் அந்த நாட்டில் இருந்தன.

மூன்று வருடங்களுக்கு பின்னர். ஒரு புதிய ஆப்கான் அரசு பதவியேற்றது. ஆனால் தாலிபனின் கொடூரத் தாக்குதல்கள் தொடர்ந்தன.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஆப்கானிஸ்தான் போரில் அமெரிக்க துருப்புகள் பெரும் உயிரிழப்புகளைச் சந்தித்தன.2009-ல் அப்போதைய அமெரிக்க அதிபர் பராக் ஒபாமாவின் அரசு படைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதாக அறிவித்தது, தாலிபன்களை பின்வாங்க வைத்தது, ஆனால் அது நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

2001ஆம் ஆண்டுக்கு பிறகான காலகட்டத்தில் மிகவும் ரத்தக்களரியான ஆண்டான 2014-ல் நேட்டோ படைகள் தங்கள் பணிகளை முடித்துக்கொண்டு பாதுகாப்புப் பணிகளை ஆப்கான் ராணுவத்திடம் ஒப்படைத்தனர்.

இது தாலிபன் கூடுதல் பகுதிகளை கைப்பற்றுவதற்கு வழிவகுத்தது.

அதற்கு அடுத்த வருடம், அந்த குழு மேலும் வலுவடைந்து தொடர் தற்கொலை தாக்குதல்களில் ஈடுபட்டது. காபூலில் நாடாளுமன்றத்தின் மீதான தாக்குதலுக்கும் தலைநகரின் சர்வதேச விமான நிலையத்தின் அருகே நடைபெற்ற தாக்குதலுக்கும் அந்த அமைப்பு பொறுப்பேற்றது.

இறுதியில் அமெரிக்கா தலைமையில் படையெடுப்புக்கு 20 ஆண்டுகளுக்கு பின்னர், பைடன் நிர்வாகம் அதன் படைகளை ஆப்கானிஸ்தானிலிருந்து விலக்கிக்கொள்ள 2021 ஏப்ரலில் முடிவு செய்தது.

காபூல் தாலிபன் கைகளில் விழுவதற்கான காரணமான சர்ச்சைக்குரிய முடிவாக இது இருந்தது. இது தெற்கு வியட்நாமில் 1975ஆம் ஆண்டு நடைபெற்ற சம்பவங்களுடன் ஒப்பிடப்பட்டது.

“இது (அமெரிக்க அதிபர்) ஜோ பைடனின் சைகான் (ஒரு வியட்நாம் நகரம்)” என குடியரசுக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் எலிஸ் ஸ்டெஃபானிக் சமூக ஊடகத்தில் தெரிவித்தார். “சர்வதேச அரங்கில் என்றுமே மறக்கப்படாத ஒரு மோசமான தோல்வி”

அத்துடன் தாலிபன் பெரும்பகுதி ராணுவ உபகரணங்களை(அமெரிக்க நிதியில் வாங்கப்பட்டவை) பெற்றது என பெயர் குறிப்பிட விரும்பாமல் பிபிசியிடம் பேசிய ஒரு முன்னாள் ஆப்கான் அதிகாரி கூறினார்

அமெரிக்காவிடமிருந்து பறிமுதல் செய்த ஆயுதங்களில் 20 விழுக்காட்டை வைத்துக்கொள்ள தனது உள்ளூர் தலைவர்களை தாலிபன் அனுமதித்ததாகவும், அதன் விளைவாக கள்ளச் சந்தை செழிப்பாக இருந்ததாகவும் 2023ல் வெளியான ஐநா அறிக்கை ஒன்று சுட்டிக்காட்டுகிறது.

இராக் மீது படையெடுப்பு

1990 ஆகஸ்ட் மாதத்தில் இராக் ராணுவம், அப்போதைய அதிபர் சதாம் உசேனின் உத்தரவுப்படி குவைத் எல்லையை கடந்து, படையெடுப்பை எதிர்த்த நூறுக்கணக்கான மக்களை கொன்றதுடன் குவைத் ஆட்சியாளர்களை செளதி அரேபியாவிற்கு விரட்டியது.

பலருக்கும், மத்திய கிழக்கின் வரலாற்றில் ஒரு நீண்ட கொந்தளிப்பான காலகட்டத்தின் தொடக்கமாக இது அமைந்தது.

பலமுறை விடுக்கப்பட்ட எச்சரிக்கை மற்றும் ஐநா பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்திற்கு பிறகு, அமெரிக்காவின் தலைமையில் பிரிட்டன் மற்றும் செளதி அரேபியாவின் ஆதரவுடன் மிகப்பெரிய ஒரு கூட்டணி (இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் மிகப்பெரிய கூட்டணி) குவைத்திலிருந்து இராக் படைகளை வெளியேற்ற 1991 ஜனவரி 17ஆம் தேதி ஒரு தாக்குதலை தொடங்கியது.

இதன் பின்னர், இராக் தனது பேரழிவு ஆயுதங்களையெல்லாம் அழிக்க வலியுறுத்தி ஐநா பாதுகாப்பு கவுன்சில் 687ஆவது தீர்மானத்தை நிறைவேற்றியது. பேரழிவு ஆயுதங்கள் என்பது அணுஆயுத, ரசாயன, உயிரியியல் ஆயுதங்கள் மற்றும் தொலைதூரர் பாலிஸ்டிக் ஏவுகணைகளை குறிக்க பயன்படுத்தப்படும் ஒரு சொல்லாகும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஏப்ரல் 2003இல் பாக்தாத் அருகே அமெரிக்க வீரர்கள்.1998ஆம் ஆண்டில் இராக் ஐநா ஆயுத ஆய்வாளர்களுடன் ஒத்துழைப்பதை நிறுத்தியது. 2001-ல் நியுயார்க் உலக வர்த்தக மையம் மற்றும் அமெரிக்க ராணுவ தலைமையகம் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர், முன்னாள் அமெரிக்க அதிபர் ஜார்ஜ் டபிள்யு புஷ் இராக் மீது படையெடுக்க திட்டமிடத் தொடங்கினார்.

உசேன் தொடர்ந்து பேரழிவு ஆயுதங்களை உற்பத்தி செய்து சேகரித்து வருவதாக குற்றம்சாட்டிய புஷ், இரான் மற்றும் வடகொரியா ஆகியவற்றுடன் சேர்ந்து ஒரு ‘சர்வதேச தீமையின் அச்சாக’ இருப்பதாகவும் கூறினார்.

உயிரியல் ஆயுதங்களை உற்பத்தி செய்வதற்காக “நடமாடும் ஆய்வகங்களை” இராக் வைத்திருப்பதாக அப்போதைய அமெரிக்க வெளியுறவு செயலாளர் காலின் பவல் 2003ல் ஐநாவிடம் தெரிவித்தார்.

ஆனால் ஆதாரங்கள் அவ்வளவு திடமானவையாக இருப்பதாக தெரியவில்லை என அவர் 2004-ல் ஏற்றுக்கொண்டார்.

பிரிட்டன், ஆஸ்திரேலியா மற்றும் போலந்து, இந்த படையெடுப்பில் அமெரிக்காவுடன் இணைந்துகொண்டன, ஆனால் ஜெர்மனி, கனடா, ஃபிரான்ஸ் மற்றும் மெக்ஸிகோ உட்பட பல நாடுகள் அதை எதிர்த்தன.

அப்போதைய பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் டொமினிக் டி வில்பின், ராணுவ தலையீடு “மிக மோசமான தீர்வாக இருக்கும்” என்று கூறினார். நேட்டோ உறுப்பு நாடும், இராக்கின் அண்டை நாடுமான துருக்கி, அமெரிக்காவும் அதன் கூட்டாளிகளும் தனது விமான தளங்களைப் பயன்படுத்துவதற்கு அனுமதி மறுத்தது.

அமெரிக்கா ஆட்சி மாற்றத்தின் மூலம் பாதுகாப்பு குறித்த தனது சொந்த பார்வையை அந்தப்பகுதியில் திணிக்க முயன்றுகொண்டிருந்தது என பேராசிரியர் ஹஸ்பன் பிபிசியிடம் தெரிவித்தார்,

பிபிசியின் சர்வதேச ஆசிரியர் ஜெரெமி போவெனின் கூற்றுப்படி, 2003ஆம் ஆண்டு படையெடுப்பு இராக்கிற்கும் அதன் மக்களுக்கும் பேரழிவை ஏற்படுத்தி நாட்டை பல்லாண்டுகளாக குழப்பத்தில் ஆழ்த்தியது.

“2023-ல் வெடித்த பல வருட குழப்பமும், கொடூரமும் ஒசாமா பின் லேடன் மற்றும் ஜிஹாதி தீவிரவாதிகளையும் அழிப்பதற்கு பதிலாக, ஜிஹாதி வன்முறையை தீவிரப்படுத்தியது,” என படையெடுப்பின் 20ஆம் ஆண்டை குறிக்கும் வகையில் 2023ஆம் ஆண்டு வெளியான செய்தியில் அவர் தெரிவித்தார்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இந்த படையெடுப்பின் மற்றொரு விளைவு அல்-கொய்தா மறு உரு பெற்று தன்னைத் தானே ‘இஸ்லாமிய அரசு’ என அழைத்துக்கொள்ளும் அமைப்பாக மாறியது.

2003 படையெடுப்பின் விளைவாக எத்தனை இராக்கியர்கள் மரணமடைந்தனர் என்பது சரியாகத் தெரியவில்லை.

படையெடுப்புக்கு பிறகு உயிரிழந்த பொதுமக்களின் இறப்புகளை பதிவு செய்வதற்காக தொடங்கப்பட்ட இராக் பாடி கவுன்ட் (IBC) பிராஜக்ட் கணக்கின்படி 2,09,982 இராக் பொதுமக்கள் 2003 முதல் 2022ஆம் ஆண்டு வரையான காலகட்டத்தில் கொல்லப்பட்டனர்.

பாதுகாப்பை மேம்படுத்த எடுக்கப்படும் பிராந்திய முயற்சிகளுக்கு உதவுவதுதான் அமெரிக்கா தற்போது செய்யவேண்டியது என பேராசிரியர் ஹஸ்பன் தெரிவித்தார்.

“அமெரிக்கா மற்றும் அதன் கூட்டாளிகளின் அதீத ராணுவ ஆற்றல் மூலம் ஒழுங்கை திணிப்பதைவிட, பாதுகாப்பு குறித்த பொதுவான புரிதலை நோக்கி நகரும் ஒரு பிராந்தியம் அமெரிக்காவின் சர்வதேச நலன்களுக்கு மேலும் சிறப்பாக உதவக்கூடும்,” என்று அவர் தெரிவித்தார்.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு