Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
படக்குறிப்பு, உடற்கூறாய்வு அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளதுஎழுதியவர், விஜயானந்த் ஆறுமுகம்பதவி, பிபிசி தமிழ்2 மணி நேரங்களுக்கு முன்னர்
திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமாரின் உடற்கூறாய்வு அறிக்கையின் முழு விவரங்கள் வெளியாகியுள்ளன. உடலில் 40க்கும் மேற்பட்ட இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டாலும், மரணத்துக்கான காரணம் என்ன என்பதை மருத்துவர்கள் தெரிவிக்கவில்லை.
அதேவேளையில், ஒரே இடத்தில் தொடர்ச்சியாகத் தாக்கியதன் விளைவாக ஏற்பட்ட ரத்தக் கசிவால் மரணம் நேர்ந்திருக்க வாய்ப்புள்ளதாக தடயவியல் நிபுணர்கள் கூறுகின்றனர். அஜித்குமாரின் உயிரைப் பறிக்கக் காரணமாக இருந்தது எது?
சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகாவில் உள்ள மடப்புரத்தில் அடைக்கலம் காத்த அய்யனார் மற்றும் பத்ரகாளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு வந்த மதுரையைச் சேர்ந்த நிகிதா என்பவரின் ஒன்பதரை சவரன் நகை காணாமல் போனதாக புகார் எழுந்தது.
புகார் அடிப்படையில், கோவிலில் காவலாளியாகப் பணியாற்றி வந்த அஜித்குமார் என்ற இளைஞரை திருப்புவனம் காவல் நிலையத்தில் கோவில் ஊழியர்கள் ஒப்படைத்தனர்.
படக்குறிப்பு, கோவிலின் பின்புறம், இங்கு வைத்துதான் காவலாளி அஜித்குமார் தாக்கப்பட்டதாகக் கூறப்படுகிறதுதிருப்புவனம் போலீசார் விசாரணை நடத்தி வந்த நிலையில், இந்த வழக்கை தனிப்படை பிரிவுக்கு மானாமதுரை காவல் துணைக் கண்காணிப்பாளர் மாற்றியுள்ளார். காவலாளி அஜித்குமாரிடம் தனிப்படை பிரிவு போலீசார் விசாரணை நடத்தியதில் மறுநாள் (28ஆம் தேதி) அவர் உயிரிழந்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கோவிலில் இருந்து அஜித்குமாரை ஆட்டோவில் கொண்டு செல்லும் போதே உயிரிழந்துவிட்டதாக, அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார். இந்த வழக்கில் தனிப்படை காவலர்கள் ஆனந்த், கண்ணன், ராஜா, பிரபு, சங்கர மணிகண்டன் ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரேத பரிசோதனை அறிக்கை கூறுவது என்ன?
மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு 28ஆம் தேதி இரவு 11.15 மணியளவில் இறந்த நிலையில் அஜித்குமார் கொண்டு வரப்பட்டதாக, உடற்கூறாய்வு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
மறுநாள் காலை 5.45 மணியளவில் அஜித்குமாரின் உடலை மருத்துவர் சதாசிவம் மற்றும் மருத்துவர் ஏஞ்சல் தலைமையிலான குழுவினர் உடற்கூறாய்வு செய்துள்ளனர். சுமார் மூன்று மணிநேரம் 35 நிமிடங்கள் அது நடந்ததாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 44 வெளிப்புறக் காயங்களும் பல வகையான உள்புறக் காயங்களும் இருந்ததாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், மரணம் ஏற்பட்டதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை. இதில் காயங்கள் பலவும் கன்றிப் போன நிலையில் இருந்துள்ளன.
மூளையில் ரத்தக்கசிவு இருந்ததாகவும் இரு காதுகளிலும் உலர்ந்த நிலையில் ரத்தம் காணப்பட்டதாகவும் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. அஜித்குமாரின் இதயம், நுரையீரல், கல்லீரல், மூளை ஆகியவை ரசாயனம் (chemical analysis) மற்றும் திசுப் பகுப்பாய்வுக்கு (histopathological) அனுப்பப்பட்டுள்ளது.
‘ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்கள்’
படக்குறிப்பு, திருப்புவனம் காவல் நிலையம்”மரணத்துக்கான காரணம் பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படாத நிலையில், காவலர்கள் தாக்கியதால் காவலாளிக்கு மரணம் ஏற்பட்டிருக்குமா?” என்று மருத்துவரும் மீனாட்சி மருத்துவக் கல்லூரியின் தடய அறிவியல் துறையின் தலைவருமான டிகாலிடம் பிபிசி தமிழ் கேட்டது.
“மொத்தமாக 44 இடங்களில் காயம் ஏற்பட்டுள்ளதாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இவற்றில் 13 முதல் 16 வரை வகைப்படுத்தப்பட்டுள்ள காயங்கள் என்பது ஒரு காயம் மட்டும் அல்ல. இவை ஒரே இடத்தில் பலமுறை அடிக்கப்பட்ட காயங்களாக உள்ளன” என்கிறார்.
தொடர்ந்து ஒரே இடத்தில் அடித்ததால் ஏற்பட்ட காயம் எனக் கணக்கிட்டால் சுமார் 70க்கும் மேற்பட்ட புறக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகப் பார்க்கலாம் எனக் கூறும் டிகால், “சுமார் 12 செ.மீ அளவில் தசைகள் வரை காயம் ஏற்பட்டுள்ளது” என்கிறார்.
மரணம் ஏற்படக் காரணம் என்ன?
படக்குறிப்பு, திருப்புவனம் பத்ரகாளியம்மன் கோவில்”அதேநேரம், இதயம், நுரையீரல் உள்பட பிரதான உறுப்புகளில் எங்கும் அடிபடவில்லை. மூளையில் மட்டும் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. அது உயிரிழப்பை உடனே ஏற்படுத்த வாய்ப்பில்லை” எனக் கூறுகிறார் டிகால்.
“அஜித்குமாரின் உடலில் எலும்பு முறிவு எதுவும் காணப்படவில்லை” எனக் கூறும் டிகால், “எல்லாம் கன்றிப் போன காயங்களாக உள்ளன. அஜித்குமார் இறந்து போவார் என காவலர்கள் எதிர்பார்த்திருக்க வாய்ப்புகள் இல்லை” எனக் குறிப்பிட்டார்.
“பல்வேறு காயங்களால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தக் கசிவினால் இறப்பு ஏற்பட்டிருக்கவே வாய்ப்புகள் அதிகம்” எனக் கூறும் டிகால், “இது நியூரோ ஜெனிக் ஷாக் (neuro genic shock) எனக் கூறப்படுகிறது. அடிக்கும்போது ஒவ்வோர் இடத்தில் ஏற்படும் வலியும் மூளைக்குக் கடத்தப்பட்டுக் கொண்டே இருக்கும்” என்கிறார்.
உடலில் மூன்று லிட்டருக்கும் குறைவாக ரத்த சுழற்சி ஏற்பட்டால் உயிரிழப்புக்கான வாய்ப்புகள் அதிகம் எனவும் இது ஹைப்போ வாலிமிக் ஷாக் (hypo volemic shock) என அழைக்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
உதாரணமாக, ஒருவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்படும்போது நீரிழப்பு ஏற்படுவதை மேற்கோள் காட்டிய டிகால், “நீரிழப்பைச் சரிசெய்யாவிட்டால் உயிரிழப்பு ஏற்படும். அதைப் போல ரத்தம் சுழற்சி அடைவதில் (blood circulation) பாதிப்பு ஏற்பட்டால் உயிரிழப்பு ஏற்படும்” என்கிறார்.
“அடிக்கும்போது ஒவ்வொரு காயத்துக்கு உள்ளும் ரத்தக் கசிவு ஏற்பட்டுள்ளது. மூளைக்குள் ஆக்சிஜன் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. ரத்தக்கசிவு வேகமாக ஏற்பட்டிருந்தால் மரணமும் விரைவாக ஏற்பட்டிருக்கும்” எனக் கூறுகிறார் டிகால்.
காவலாளியின் உடலில் காயங்கள் பலவும் கன்றிப் போய் இருப்பதால், உடலில் உள்ள ரத்தம் மீண்டும் சுழற்சிக்கு வரவில்லை எனக் கூறும் டிகால், “அழுத்தம் குறையும்போது போதிய ஆக்சிஜனை மூளைக்குக் கொண்டு செல்ல முடியவில்லை. அதுவே உயிரிழப்புக்கு காரணமாக அமைந்திருக்கலாம்” என்றார்.
மிளகாய்ப் பொடி போட்டதற்கான ஆதாரம் உள்ளதா?
படக்குறிப்பு, மடப்புரம் கிராம மக்கள்கோவிலில் அஜித்குமாரை தாக்கும்போது அவர் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டபோது, அங்கிருந்த மிளகாய்ப் பொடியைக் கரைத்து அவர் வாயில் காவலர்கள் ஊற்றியதாக அவரது சகோதரர் நவீன்குமார் பிபிசி தமிழிடம் தெரிவித்தார்.
ஆனால், இதுதொடர்பாக பிரேத பரிசோதனை அறிக்கையில் கூறப்படவில்லை. “பிரேத பரிசோதனையின்போது ஆடைகளையும் பரிசோதனைக்கு அனுப்பி வைப்பார்கள். அதன் முடிவுகள் வரும்போது மிளகாய்த் துகள்கள் இருந்ததா எனத் தெரிய வரும். ஆனால், அவரது உடலில் மிளகாய்ப் பொடி இருந்ததாக விவரங்கள் இல்லை” எனக் கூறுகிறார் டிகால்.
“நாக்கு கடிபட்டுக் காயம் உள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. வலி தாங்க முடியாமல் அவர் கடித்திருக்கலாம். திசுப் பகுப்பாய்வு முடிவுகள் வருவதற்கு ஓரிரு மாதங்கள் தேவைப்படும். அதன் பிறகே இறுதி முடிவை வெளியிடுவார்கள்” எனக் கூறுகிறார் டிகால்.
அவரது கூற்றுப்படி, “அஜித்குமாருக்கு உடல்ரீதியாக எந்தப் பிரச்னைகளும் இல்லை. முதல்கட்ட அறிக்கை எனக் கூறப்பட்டாலும் இதை இறுதி அறிக்கையாகவும் பார்க்கலாம். இவ்வளவு காயங்களுடன் ஒரு மனிதர் உயிர் வாழ்வது கடினம்.”
அஜித்குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை முடிவுகள், மனித உரிமை ஆர்வலர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
’24 மணிநேர சித்ரவதை’
படக்குறிப்பு, அஜித் குமாரின் தம்பி நவீன்குமார்”மதியம் 1 மணியளவில் வேன் மூலமாக அஜித்குமாரை அழைத்துச் சென்ற தனிப்படைக் காவலர்கள், மறுநாள் மரணம் ஏற்படும் வரை அடித்துள்ளனர். அவர் அடி தாங்க முடியாமல் நகையை எடுத்ததாகப் பொய் கூறியிருக்கிறார்” என்கிறார் மதுரை ‘எவிடென்ஸ்’ அமைப்பின் கதிர்.
பிபிசி தமிழிடம் பேசிய அவர், “அஜித்குமார் உடன் பணியாற்றும் வினோத்குமார், அருண்குமார் உள்பட மூன்று பேர் முன்னிலையில் அவரைக் கடுமையாகத் தாக்கியுள்ளனர். இது கோவிலில் நடந்த காவல் படுகொலையாகப் பார்க்க வேண்டும்” எனக் கூறுகிறார்.
சுமார் 40க்கும் மேற்பட்ட இடங்களில் கன்றிப் போன காயங்கள் உள்ளதாக உடற்கூறாய்வு அறிக்கை கூறுவதை மேற்கோள் காட்டிய கதிர், “24 மணிநேரமும் அஜித்குமாரின் உடல் சித்ரவதைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளது. இவ்வளவு கோபம் வரும் அளவுக்கு எதுவும் நடந்துவிடவில்லை” என்கிறார்.
“ஒன்பதரை சவரன் நகைத் திருட்டு என்பது கொடூரமான குற்றம் கிடையாது. இது கொள்ளை வழக்கு அல்ல திருட்டு வழக்கு” எனக் கூறும் கதிர், “அந்தப் பெண்ணின் குடும்பத்தினருக்கு அதிகாரத்தில் உள்ளவர்களுடன் தொடர்பு இருந்துள்ளது. ஒரு சாதாரண காவலாளி என்ற எண்ணத்தில் திருட்டுப் புகார் கொடுத்துள்ளார்” என்கிறார்.
காவலாளி கொலை வழக்கை சிபிசிஐடி விசாரணையில் இருந்து சிபிஐ விசாரணைக்கு மாற்றி முதலமைச்சர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இதைக் குறிப்பிட்டுப் பேசிய கதிர், “சாத்தான்குளத்தில் தந்தை-மகன் காவல் மரண வழக்கின் விசாரணையை இன்னமும் சிபிஐ முடிக்கவில்லை. அஜித்குமார் வழக்கை விரைந்து விசாரிக்குமாறு சிபிஐக்கு மாநில அரசு அழுத்தம் கொடுக்க வேண்டும்” எனக் கூறினார்.
இதே கோரிக்கையை முன்வைக்கும் காவலாளி அஜித்குமார் தரப்பு வழக்கறிஞர் கணேஷ்குமார், “சிபிஐ விசாரணை நடந்தால் வழக்கின் விசாரணை தாமதமாகும். நீதிமன்ற மேற்பார்வையில் சிபிசிஐடி விசாரணை நடத்தப்பட வேண்டும்” எனத் தெரிவித்தார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.சாட்சியம் அளித்த கோவில் பணியாளர்கள்
காவலாளி கொலை வழக்கை விசாரித்து அறிக்கை தருமாறு மதுரை மாவட்ட நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷை, கடந்த ஜூலை 1 அன்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை நியமித்தது.
திருப்புவனத்தில் உள்ள நெடுஞ்சாலைத்துறையின் ஆய்வு மாளிகையில் தங்கி மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தி வருகிறார். சம்பவம் தொடர்பாக நேரில் ஆஜராகி சாட்சியம் அளிக்கலாம் எனக் கூறப்பட்டு இருப்பதால், அஜித்குமார் தாக்கப்பட்டதைப் பார்த்த நபர்கள் சாட்சியம் அளித்து வருகின்றனர்.
அஜித்குமாரின் தாயார் மாலதி, சகோதரர் நவீன்குமார் மற்றும் அவரது உறவினர்கள், காவலர்கள், கோவில் பணியாளர்கள், அறநிலையத்துறை அதிகாரிகள் ஆகியோரிடம் மாவட்ட நீதிபதி விசாரணை நடத்தியுள்ளார்.
இதன் அறிக்கையை ஜூலை 8ஆம் தேதி தாக்கல் செய்யுமாறு உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. அதற்குள் சி.பி.ஐ தனது விசாரணையைத் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உள்ளதாகவும் பார்க்கப்படுகிறது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு