Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
பட மூலாதாரம், Getty Images
எழுதியவர், க.போத்திராஜ் பதவி, பிபிசி தமிழுக்காக8 நிமிடங்களுக்கு முன்னர்
கேப்டன் சுப்மன் கில்லின் தொடர் 2வது சதத்தால் பிரிமிங்ஹாமில் நடந்து வரும் இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் முதல்நாளில் இந்தியா வலுவான நிலையை எட்டியுள்ளது.
முதல்நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 5 விக்கெட் இழப்புக்கு 310 ரன்களுடன் இருக்கிறது. கேப்டன் கில் 114 ரன்களுடனும், ஜடேஜா 41 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளன்.
இருவரும் 6வது விக்கெட்டுக்கு 99 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து வலுவாக நங்கூரமிட்டுள்ளனர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.வலுவான ஸ்கோர்
இருவரையும் பிரிக்க இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் 3வது செஷனில் பல்வேறு முயற்சிகள் செய்தும் ஏதும் பலிக்கவில்லை. 125 பந்துகளில் அரைசதத்தை எட்டிய கில், 199 பந்துகளில் சதத்தை எட்டினார். லீட்ஸ் டெஸ்டில் சதம் அடித்த கில், தொடர்ந்து அடிக்கும் 2வது சதமாகும்.
தொடக்க ஆட்டக்காரர் ஜெய்ஸ்வால் 87 ரன்கள் சேர்த்து முக்கிய பங்களிப்பு செய்து அணியின் ஸ்கோர் உயர்வுக்கு காரணமாக இருந்தார். ரிஷப் பண்ட் (25), நிதிஷ் குமார் ரெட்டி அடுத்தடுத்த ஓவர்களில் ஆட்டமிழந்தபோது இந்திய அணி சற்று தடுமாறியது. ஆனால், கேப்டன் கில், ஜடேஜா ஜோடிதான் அணியை சரிவிலிருந்து மீட்டனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய வீரர் ரவீந்திர ஜடேஜா ஹோம் ஓர்க்கில் வெற்றி
சச்சின்-ஆன்டர்சன் டெஸ்ட் கோப்பைக்கான 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடர்ந்து நடந்து வருகிறது. லீட்ஸில் நடந்த முதல் டெஸ்டில் இங்கிலாந்து அணி வென்று 1-0 என்ற கணக்கில் முன்னிலையில் இருக்கிறது. 2வது போட்டி நேற்று எட்ஜ்பாஸ்டன் மைதானத்தில் தொடங்கியது.
இங்கிலாந்து அணியில் எந்த மாற்றமும் செய்யப்படாத நிலையில், இந்திய அணியில் சாய் சுதர்சனுக்குப் பதிலாக வாஷிங்டன் சுந்தர், பும்ராவுக்குப் பதிலாக ஆகாஷ் தீப், ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக நிதிஷ்குமார் ரெட்டி சேர்க்கப்பட்டிருந்தனர்.
டாஸ் வென்ற இங்கிலாந்து அணி இந்த முறையும் பந்துவீச்சைத் தேர்ந்தெடுத்து இந்தியாவை பேட் செய்ய அழைத்தது. ஜெய்ஸ்வால், கே.எல்.ராகுல் ஆட்டத்தைத் தொடங்கினர்.
கேஎல்.ராகுலை ஆட்டமிழக்கச் செய்ய இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் “ஹோம் ஓர்க்” செய்து வந்திருந்தனர். அவருக்குரிய வலையை சரியாக விரித்து அவரை தவறு செய்யத் தூண்டினர். ஆனால் ராகுல் அதற்குரிய வாய்ப்பை வழங்காமல் தவறு செய்யாமல் தவறான ஷாட்களை ஆடாமல் தவிர்த்தார்.
ஆனால், பவுன்ஸரில்தான் வலை விரிக்கப்பட்டுள்ளது என்பதை ராகுல் கணிக்கவில்லை. வோக்ஸ் வீசிய 9-வது ஓவரில் ஆப்திசையில் போடப்பட்ட பவுன்ஸரை ராகுல் விளையாட முற்பட்டபோது பேட்டில்பந்து பட்டு க்ளீன் போல்டாகியது. ராகுல் 2 ரன்னில் ஆட்டமிழந்தார். அடுத்து கருண் நாயர் களமிறங்கினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய வீரர் கே எல் ராகுல் இரண்டு ரன்களில் ஆட்டம் இழந்தார். பிராட்மேன் வரிசையில் ஜெய்ஸ்வால்
கடந்த டெஸ்டில் 4வது வீரராகக் களமிறங்கிய கருண் நாயர், இந்த முறை 3வது வீரராகக் களமிறக்கப்பட்டார். ஜெய்ஸ்வால் ஒருபுறம் வேகமாக ரன்களைச் சேர்க்கவே, கருண் நாயர் அவருக்கு ஒத்துழைப்பு தந்து விளையாடினார்.
நிதானமாகத் தொடங்கிய ஜெய்ஸ்வால், குறிப்பிட்ட நேரத்துக்குப்பின் வழக்கமான ஆட்டத்துக்குத் திரும்பி பவுண்டரிகளை விளாசினார்.
குறிப்பாக ஜோஷ் டங் ஓவரில் டி20 ஆட்டத்தைப்போன்று தொடர்ந்து 3 பவுண்டரிகளை விளாசி, ஜெய்ஸ்வால் 59 பந்துகளில் அரைசதத்தை நிறைவு செய்தார். இங்கிலாந்துக்கு எதிராக அதிகமான சராசரி வைத்திருக்கும் பிராட்மேனுக்கு அருகே 84 சராசரியில் ஜெய்ஸ்வால் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
2வது செஷனில் ஜெய்ஸ்வால், கருண் நாயர் இருவரும் கட்டுக்கோப்புடனே பேட் செய்தனர், தவறுகள் பெரிதாக செய்யாததால் விக்கெட் வீழ்த்த இங்கிலாந்து பந்துவீச்சாளர்கள் சிரமப்பட்டனர்.
ஆனால், கார்ஸ் பவுன்ஸரில் கருண் நாயர் அவ்வப்போது தடுமாறியதையும், பவுன்ஸரை ஹூக் ஷாட்டில் அடிக்காமல் திணறுவதையும் இங்கிலாந்து கேப்டன் ஸ்டோக்ஸ் கண்டறிந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய வீரர் ஜெய்ஸ்வால் இங்கிலாந்து எதிராக நடைபெற்ற இரண்டாவது டெஸ்ட் போட்டியின் போது அரை சதம் அடித்ததை கொண்டாடுகிறார். கருண் நாயர் ஏமாற்றம்
கருண் நாயரை பிரன்ட்புட் எடுத்து ஆடவைக்கும் வகையில் கார்ஸ் தொடர்ந்து பந்துகளை வீசினார், ஆனால் தனக்கு வலை விரிக்கப்பட்டுவிட்டது என்பதை கருண் நாயர் உணரவில்லை. கார்ஸ் திடீரென ஒரு பந்தை பவுன்ஸரை வீசவே, இதை கருண் நாயர் எதிர்பார்க்கவில்லை. இதனால் மார்புக்கு அருகே வந்த பந்தை பேட் வைத்து தடுக்கவே 2வது ஸ்லிப்பில் இருந்த ப்ரூக்கிடம் கேட்ச் கொடுத்து 31 ரன்களில் ஆட்டமிழந்தார். 2வது விக்கெட்டுக்கு ஜெய்ஸ்வால், கருண் நாயர் 80 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
அடுத்துவந்த கேப்டன் கில், ஜெய்ஸ்வாலுடன் சேர்ந்தார். உணவு இடைவேளைக்குச் செல்லும்போது இந்திய அணி 2 விக்கெட் இழப்புக்கு 98 ரன்களுடன் இருந்தது. 2வது செஷனில் கில், ஜெய்ஸ்வால் ஆட்டத்தைக் கையில் எடுத்தனர். ஜெய்ஸ்வால் மெதுவாக ரன்களைச் சேர்க்க, கில் நிதானமாக பேட் செய்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இங்திய வீரர் கருண் நாயர் கில் பொறுப்பான பேட்டிங்
முதல் டெஸ்டில்கூட கில், வேகமாக ரன்களைச் சேர்க்க வேண்டும் என்பதற்காக ஷாட்களை அவ்வப்போது ஆடினார். ஆனால், இந்த டெஸ்டில் முதிர்ச்சியடைந்த டெஸ்ட் பேட்டர் போன்று மிகுந்த கவனத்துடன் டிபென்ஸ்ப்ளே செய்தார். இதனால் சுப்மன் கில் தவறு செய்யவைக்க இங்கிலாந்தின் திட்டம் ஒட்டுமொத்தமாக தோல்வி அடைந்தது.
2வது சதத்தை நோக்கி நகர்ந்த ஜெய்ஸ்வால் 87 ரன்களில் ஸ்டோக்ஸ் பந்துவீச்சில் ஸ்மித்திடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். 3வது விக்கெட்டுக்கு கில்,ஜெய்ஸ்வால் கூட்டணி 66 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
விக்கெட் சரிவு
அடுத்து ரிஷப் பண்ட் களமிறங்கி, கில்லுடன் சேர்ந்தார். கடந்த டெஸ்டில் இரு இன்னிங்ஸிலும் சதம் அடித்த ரிஷப் பண்ட் இந்தமுறை களமிறங்கியபோது, மிரட்சியுடனே இங்கிலாந்து வீரர்கள் பார்த்தனர்.
ரிஷப் பண்ட் களமிறங்குவதற்கு முன்புவரை சுழற்பந்துவீச்சாளர் பஷீருக்கு குறைவான ஓவர்கள் வழங்கப்பட்டநிலையில், பண்ட் வந்தபின் பஷீருக்கு கூடுதலாக ஓவர்களை கேப்டன் ஸ்டோக்ஸ் வழங்கினார். நிதானமாக பேட் செய்த சுப்மன் கில் 125 பந்துகளில் அரைசதம் அடித்தார். இதில் 4 பவுண்டரிகள் மட்டுமே அடக்கம்.
ரிஷப் பந்தை அடித்து ஆட வைக்க வேண்டும் என்ற நோக்கில் பஷீர் பந்தை நன்கு “டாஸ்” செய்து வீசினார். அதற்கு ஏற்றார்போல் ரிஷப் பவுண்டரி, சிக்ஸர் விளாசி அதிரடியாகத் தொடங்கினார். ஒரு கட்டத்தில் பஷீர் வீசிய பந்தை லாங்ஆன் திசையில் ரிஷப் பண்ட் தூக்கி அடிக்கவே கிராலி அதை கேட்ச் பிடித்தார். ரிஷ பண்ட் 25 ரன்களில் ஆட்டமிழந்தார்.
ஷர்துல் தாக்கூருக்குப் பதிலாக வாய்ப்புப் பெற்ற நிதிஷ் ரெட்டி களமிறங்கினார். வோக்ஸ் பந்துவீச்சை சரியாகக் கணிக்காமல் பந்தை லீவ் செய்ய நிதிஷ் ரெட்டி முயன்றார். ஆனால் பந்து லேசாக ஸ்விங் ஆகி, ஆப்ஸ்டெம்பை பதம்பார்த்துச் சென்றது. நிதிஷ் ரெட்டியின் தவறான கணிப்பால்விக்கெட்டை இழந்து வெளியேறினார். அடுத்தடுத்து ரிஷப் பண்ட், நிதிஷ் ரெட்டி விக்கெட்டுகளை இழந்து இந்திய அணி சற்று தடுமாறியது.
கில்-ஜடேஜா ஜோடி
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்திய வீரர்கள் சுப்மான் கில் மற்றும் ரவீந்திர ஜடேஜா ஆனால், ஜடேஜா களமிறங்கி, கில்லுடன் சேர்ந்து அணியைச் சரிவிலிருந்து மீட்டனர். தொடக்கத்தில் நிதானமாக ஆடிய கில், 3வது செஷசன் ஆட்டம் தொடங்கியதும் ரன் சேர்க்கும் விதத்தை வேகப்படுத்தினார். அரைசதம் அடிக்க 125 பந்துகளை எடுத்துக்கொண்ட கில், அடுத்த 50 ரன்களை 74 பந்துகளில் எட்டினார். 6 பவுண்டரிகளையும் கில் அடித்து, ஸ்கோரை வேகமாக உயர்த்தி 199 பந்துகளில் சதம் அடித்தார்.
சுப்மான் கில்லுக்கு துணையாக ஆடிய ஜடேஜா, சரியான பந்துகளை மட்டுமே தேர்ந்தெடுத்து பவுண்டரிக்கு விரட்டினார், அவ்வப்போது இருவரும் ஸ்ட்ரைக்கை ரொட்டேட் செய்யவும் தவறவில்லை. ஜடேஜா 41 ரன்களுடன் களத்தில் உள்ளார். இருவரும் 99 ரன்கள் பார்ட்னர்ஷிப்பில் களத்தில் உள்ளனர்.
புதிய பந்து நேற்று மாலை எடுக்கப்பட்டும் விக்கெட்டை இங்கிலாந்தால் வீழ்த்த முடியவில்லை, அதே பந்து 2வது நாளிலும் பயன்படுத்தப்படும் என்பதால் ஸ்விங் அதிகமாக இருக்கும். இதில் கட்டுக்கோப்பாக பேட் செய்து 30 ஓவர்களை நகர்த்திவிட்டால் பெரிய ஸ்கோருக்கு இந்திய அணி செல்லக்கூடும்.
இந்திய அணி இன்று 2வது ஆட்டத்தில் விக்கெட்டுகளை இழக்காமல் ஜடேஜா, கில் கூட்டணி பேட் செய்தால், நிச்சயமாக 400 ரன்களை எட்டும். இருவரில் ஒருவர் ஆட்டமிழந்தாலும் வாஷிங்டன் சுந்தர், ஆகாஷ் தீப் என இரு பேட்டர்கள் இருப்பதால், முதல் டெஸ்டைப் போன்று 400 ரன்களுக்கு மேல் சேர்க்க அதிக வாய்ப்புள்ளது
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு