Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
புத்தகப் பையுடன் சிறுவன் எலும்புக்கூடு: செம்மணி புதைகுழியில் தோண்டத்தோண்ட வரும் எலும்புக்கூடுகள்
எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்பதவி, பிபிசி தமிழுக்காக 33 நிமிடங்களுக்கு முன்னர்
இலங்கையில் யாழ்ப்பாணம் – செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. நேற்றைய தினம் (01) நடத்தப்பட்ட அகழ்வு பணிகளின் போது மேலும் 5 மனித எலும்புக்கூடுகள் கிடைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சித்துபாத்தி மனித புதைகுழியிலிருந்து இதுவரை 38 மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இவ்வாறான மனித எலும்புக்கூடுகளில் பெரும்பாலான சிறுவர்களின் எலும்புக்கூடுகளும் காணப்படுகின்றமை பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.
குறித்த பகுதியில் தொடர்ந்தும் அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. என்ன நடக்கிறது?
அகழ்ந்தெடுக்கப்பட்ட சிறுவரின் எலும்புக்கூடு
நீல நிறத்திலான புத்தக பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறு குழந்தையொன்றின் எலும்புக்கூடு இரு தினங்களுக்கு முன்பு முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.
இந்த எலும்புக்கூடு அகழ்ந்து எடுக்கப்பட்ட இடத்திலிருந்து பாதணி மற்றும் குழந்தைகள் விளையாடும் பொம்மையொன்றும் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
”ஏற்கெனவே அடையாளப்படுத்தி பாடசாலை புத்தக பையுடன் இருந்த மனித உடல், முழுமையாக நாள் முழுவதையும் செலவிட்டு, நிலத்திலிருந்து வெளியில் எடுக்கப்பட்டுள்ளது, முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளது. அந்த குழந்தையின் உடலுடன் காலணியும், அதேநேரத்தில் சிறிய குழந்தைகள் விளையாடுகின்ற பொம்மை ஒன்றும் அகழ்ந்தெடுக்கப்பட்டிருக்கின்றது.” என வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
படக்குறிப்பு, மனித புதைகுழியிலிருந்து சிறுவர்கள் உள்ளிட்ட 33 பேரின் மனித எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளனபின்னிப் பிணைந்த எலும்புக்கூடுகள்
யாழ்ப்பாணம் – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து நேற்றைய தினம் பின்னிப் பிணைந்த நிலையில் மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா குறிப்பிடுகின்றார்.
இந்த மனித எலும்புக்கூட்டுத் தொகுதிகளில் 5 எலும்புக்கூடுகள் காணப்படுவதற்கான சாத்தியம் உள்ளதாக தென்படுகின்ற நிலையில், அந்த தொகுதியில் சரியாக எத்தனை எலும்புக்கூடுகள் உள்ளமை குறித்து தற்போதைக்கு சரியாக கூற முடியாது எனவும் அவர் கூறுகின்றார்.
”இன்றைய நாள் முழுவதும் நடந்த அகழ்வு பணிகளில் ஒன்றோடு ஒன்று பின்னிப் பிணைந்ததான மேலதிக 5 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. எண்ணிக்கை எத்தனை என்பதை சரியாக சொல்ல முடியாது. அதுவொரு குழப்பமான முறையில் அந்த உடலங்கள் காணப்பட்டுள்ளன.” என அவர் குறிப்பிடுகின்றார்.
படக்குறிப்பு, புதைகுழியிலிருந்து எடுக்கப்பட்ட பொம்மை செம்மணி மனிதப் புதைகுழி வழக்கை ஒன்றாக தொட முயற்சி
யாழ்ப்பாணம் – செம்மணி பழைய மனிதப் புதைகுழி வழக்கையும், செம்மணி – சித்துபாத்தி மனிதப் புதைகுழி வழக்கையும் ஒன்றாக இணைந்து முன்னெடுப்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ளவுள்ளதாக பாதிக்கப்பட்டோர் சார்பில் புதைகுழி அகழ்வுப் பணிகளை மேற்பார்வை செய்யும் வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
”செம்மணி பழைய புதைகுழி தோண்டுதல் நடவடிக்கைகளில் ஈடுபட்ட பிரதான சட்ட மருத்துவ அதிகாரி பெரேரா அகழ்வு நடந்த பிரதேசத்துக்கு வருகைத் தந்தார். தற்போது அகழ்வு பணிகளில் ஈடுபடுகின்ற சட்ட மருத்துவ அதிகாரிகளுடன் அவர் கலந்துரையாடி கடந்த அகழ்வு பணிகளின் தகவல்களை வழங்கியிருந்ததை பார்க்கக் கூடியதாக இருந்தது.
கிட்டத்தட்ட அந்த வழக்கும் இந்த வழக்கும் இருவேறு வழக்குகளாக இருந்தாலும் இரண்டு வழக்கையும் தொடர்புப்படுத்த வேண்டிய நிலைமை இருக்கின்றது. இதனால், முறையான நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பழைய வழக்கை இந்த வழக்குடன் சேர்ந்து அழைப்பதற்கான நடவடிக்கைகளை பாதிக்கப்பட்ட தரப்பினர் சார்பில் செய்வதற்கான கலந்துரையாடல் நடந்து கொண்டிருக்கின்றது’ என அவர் குறிப்பிடுகின்றார்.
செம்மணி மனிதப் புதைகுழி அகழ்வு
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிடமிருந்து யாழ்ப்பாணம் 1995ம் ஆண்டு காலப் பகுதியில் முழுமையாக மீட்கப்பட்ட நிலையில், யாழ்ப்பாணம் பகுதியில் காணாமல் போனதாக கூறப்படுவோர் செம்மணி பகுதியில் புதைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியிருந்தன.
இந்த நிலையில், செம்மணி பகுதியில் 1999-ஆம் ஆண்டு காலப் பகுதியில் நடத்தப்பட்ட அகழ்வு பணிகளில் போது அந்த பகுதியில் மனிதப் புதைகுழி காணப்படுகின்றமை உறுதிப்படுத்தப்பட்டிருந்தது.
இந்த மனிதப் புதைகுழியிலிருந்து பெருமளவிலான மனித எலும்புக்கூடுகள் கண்டெடுக்கப்பட்டிருந்தன.
இந்த செம்மணியை அண்மித்த பகுதியிலிருந்து தற்போது சித்துபாத்தி மனிதப் புதைகுழி அடையாளம் காணப்பட்டு அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
குறித்த இரண்டு வழக்குகளையும் ஒரே வழக்காக முன்னெடுத்து செல்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளவுள்ளதாக வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
படக்குறிப்பு, புதைகுழியிலிருந்து கண்டெடுக்கப்பட்டவை ஆய்வு செய்யப்படுகின்றன ‘செயற்கை நுண்ணறிவு மூலம் சித்தரித்தால் சட்ட நடவடிக்கை’
சித்துபாத்தி மனிதப் புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்பட்டு வரும் மனித எலும்புக்கூடுகள் மற்றும் ஆதாரங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி சிலர் வெவ்வேறு விதங்களில் சித்தரித்து வருகின்றமையை சமூக வலைத்தளங்களில் காணக்கூடியதாக இருக்கின்றது.
இந்த நிலையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதாரங்களை சித்தரிக்கும் செயற்பாடு தொடரும் பட்சத்தில், அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க எதிர்பார்த்துள்ளதாக, வழக்கறிஞர் ரனிதா ஞானராஜா தெரிவிக்கின்றார்.
”இந்த புதைகுழியிலிருந்து அகழ்ந்து எடுக்கப்படுகின்ற எலும்பு மாதிரிகளை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக பிழையான விதத்திலான படங்கள் சமூக வலைத்தளங்களிலும் பொதுவான தகவல்கள் வெளியிலும் பரப்பப்படுகின்றது. இதுவொரு குற்றவியல் விசாரணை நடவடிக்கையின் ஊடாக நீதிமன்ற விசாரணைகள் முன்னெடுக்கப்படுகின்றமையினால், இனிவரும் காலங்களில் அப்படியானது வருமாக இருந்தால் சட்ட ரீதியான நடவடிக்கை எடுப்பதற்கு பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் நாங்கள் உத்தேசித்திருக்கின்றோம்.” என அவர் குறிப்பிடுகின்றார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தின் ஊடாக படங்கள் வெளியிடப்படும் பட்சத்தில், அது விசாரணைகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் குழப்பகரமான நிலையை ஏற்படுத்தக்கூடும் என அவர் குறிப்பிடுகின்றார்.
அதனைத் தவிர்க்கும் நோக்கிலேயே இந்த நடவடிக்கை எடுக்கப்படவுள்ளதாக வழக்கறிஞர் மேலும் தெரிவிக்கின்றார்.
ஐநா மனித உரிமை ஆணையாளர் நேரில் பார்வையிட்டார்
இலங்கைக்கான அதிகாரப்பூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகளின் மனித உரிமை ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் வோல்கர் டர்க், செம்மணி பகுதிக்கு அண்மையில் சென்றிருந்தார்.
செம்மணி பகுதியில் இடம்பெற்ற போராட்டத்தில் கலந்துகொண்ட மக்களுடன் கலந்துரையாடல்களை நடத்திய மனித உரிமை ஆணையாளர், நினைவு தூபிக்கு மலர் அஞ்சலி செலுத்தியிருந்ததையும் காண முடிந்தது.
இலங்கையில் தொடரும் மனிதப் புதைகுழிகள்
இலங்கையில் சுமார் 20க்கும் மேற்பட்ட மனித புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் கடந்த வருடம் அறிக்கையொன்றின் ஊடாக அறிவித்திருந்த நிலையில், அந்த அறிக்கை வெளியிடப்பட்டதன் பின்னர் மேலும் மூன்று மனிதப் புதைகுழிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
முல்லைத்தீவு – கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழி, கொழும்பு துறைமுக மனிதப் புதைகுழி மற்றும் யாழ்ப்பாணம் – சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி ஆகியன கடந்த ஒரு வருட காலத்துக்குள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழியாக பதிவாகியுள்ளன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.புதைகுழிகள்
யாழ்ப்பாணம் – துரையப்பா விளையாட்டு அரங்கம்யாழ்ப்பாணம் – செம்மணி மனிதப் புதைகுழியாழ்ப்பாணம் – மிருசுவில் மனிதப் புதைகுழிகிளிநொச்சி – மனிதப் புதைகுழிகிளிநொச்சி – கணேசபுரம் மனிதப் புதைகுழிமுல்லைத்தீவு – புதுக்குடியிருப்பு மனிதப் புதைகுழிமுல்லைத்தீவு – 2 முல்லைத்தீவு மனிதப் புதைகுழிமன்னார் – மன்னார் மனிதப் புதைகுழிமன்னார் – திருக்கேதீஸ்வரம் மனிதப் புதைகுழிகுருநாகல் – நிகவரபிட்டிய மனிதப் புதைகுழிகம்பஹா – மினுவங்கொட வல்பிட்ட அரச பண்ணைகம்பஹா – எஸ்செல்ல மனிதப் புதைகுழிகம்பஹா – வவுல்கெல்ல நித்தம்புல மனிதப் புதைகுழிகொழும்பு – கோகந்தர மனிதப் புதைகுழிகொழும்பு – பொல்கொட எரி மனிதப் புதைகுழிமாத்தறை – அக்குரஸ்ஸ வில்பிட்ட மனித புதைகுழிஇரத்தினபுரி – இறக்குவானை – சூரியகந்தை மனிதப் புதைகுழிமட்டக்களப்பு – களுவாஞ்சிக்குடி மனிதப் புதைகுழிமாத்தளை – மாத்தளை மருத்துவமனை மனிதப் புதைகுழிகண்டி – அங்கும்புர மனிதப் புதைகுழிமுல்லைத்தீவு கொக்குத்தொடுவாய் மனிதப் புதைகுழிகொழும்பு துறைமுக மனிதப் புதைகுழிஅரியாலை – சிந்துப்பாத்தி மனிதப் புதைகுழி- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு