‘உயரம் செல்ல உருவம் தடையில்லை’ – மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவிகாணொளிக் குறிப்பு, “உயரம் தடையில்லை” – ஜேஇஇ தேர்வில் சாதித்த அரசுப்பள்ளி மாணவி’உயரம் செல்ல உருவம் தடையில்லை’ – மும்பை ஐஐடியில் படிக்க தேர்வான விருதுநகர் அரசுப் பள்ளி மாணவி

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

விருதுநகரைச் சேர்ந்த 127 செ.மீ உயரம் கொண்ட 17வயது யோகேஸ்வரி ஒரு மாற்றுத் திறனாளி ஆவார். தமிழக அரசின் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 40 நாட்கள் இலவசப் பயிற்சி பெற்று ஜேஇஇ அட்வான்ஸ்ட் தேர்வில் தேர்ச்சிப் பெற்றார். தற்போது ஐஐடி பாம்பேவில் படிக்க தேர்வாகியுள்ளார்.

யோகேஸ்வரி பேசுகையில், “எனக்கு ஐ ஐ டி பாம்பேவில் சீட் கிடைச்சுருக்கு, அப்பா டீக்கடையில் வேலை பார்க்கிறார், அம்மா பட்டாசு ஆலையில் வேலை செய்கிறார். அம்மா காலையில் வேலைக்கு போவாங்க, ஞாயிற்றுகிழமையும் போவாங்க, அவஙகள் பாக்கும் போது மோடிவேஷனா இருக்கும்.” என்றார்.

அவரின் தாய் கனகவல்லி பேசுகையில், “காலை ஆறு மணிக்கு எழுந்து அவ வேலைய அவளே பாத்துப்பா, எனக்கு உதவியா இருப்பா. என் பொண்ணு ஐ ஐ டி போறது சந்தோசமா இருக்கு, இதே மாதிரி எல்லா பிள்ளைகளும் நல்லா வரணும்.” என்றார்.

பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி, “நான் சிறு வயதில் இருந்து மருத்துவராக வேண்டும் என்றுதான் நினைத்து வந்தேன். படிப்பில் முதல் மதிப்பெண் எடுக்கும் மாணவி அல்ல நான், சராசரியாகவே படிப்பேன். ஆனால் இந்தப் பயிற்சியைத் தீவிரமாக எடுத்துக் கொண்டேன். நாற்பது நாட்கள் ஈரோட்டில் தங்கியிருந்து பயின்றேன். தமிழ் வழியில் பயின்ற எனக்கு ஆங்கிலத்தில் எல்லா பாடங்களையும் புரிந்து கொள்வது கடினமாக இருந்தது. ஆனால் பயிற்சி மையத்தில் இருந்த ஆசிரியர்கள் எனக்கு மிகவும் உதவியாக இருந்தனர்” என்கிறார்.

இன்று ஐஐடியில் இடம் கிடைத்த மகிழ்ச்சி யோகேஸ்வரியின் குடும்பம் முழுவதும் பரவியிருந்தாலும், அவர் கடந்து வந்த பாதை கடினமானது. ஏழாம் வகுப்பு வரை, மற்ற மாணவர்களைப் போலவே காணப்பட்டாலும், அதன் பிறகு யோகேஸ்வரி மற்ற பிள்ளைகளைவிட உயரம் குறைவாக இருப்பது வெளியில் கவனிக்கப்பட்டது.

“யோகேஸ்வரியைவிட இளையவர்கள் சில நேரங்களில் அவரைப் பார்த்து, வயதில் சிறியவர் என்று நினைத்துக் கொண்டு ‘சொல்லு பாப்பா’ என்று கூறிவிடுவார்கள். அவர்கள் தெரியாமல் கேட்டாலும் அதுபோன்ற தருணங்கள் வலி மிகுந்ததாக இருக்கும்” என்கிறார் பாண்டீஸ்வரன்.

விழாக்கள், திருமணங்களுக்குச் செல்லும்போது இன்னும் வேதனையாக இருக்கும் என்கிறார் பாண்டீஸ்வரன். “அவர் 12ஆம் வகுப்பு படிக்கிறார், உயரம் குறைவாக இருக்கிறார் என்று கூறியவுடன், அப்படியா என்று ஆச்சர்யத்துடன் பார்ப்பார்கள். ஏன் இதைச் சரி செய்ய மருத்துவ சிகிச்சை எடுத்துக் கொள்ளவில்லை என்று எங்களிடம் கேட்பார்கள். ஒரே பதிலை குறைந்தது 20 முறையாவது சொல்ல வேண்டியிருக்கும். அதுவும் வலியை மறைத்துக்கொண்டு, முகத்தில் புன்னகையுடன் பதில் சொல்வது இன்னும் துயரம்” என்கிறார் அவர்.

யோகேஸ்வரிக்கு 11 அல்லது 12 வயதாகும்போது அவர் உயரம் குறைவாக இருக்கிறார் என்பதைக் கவனித்த பெற்றோர்கள், அரசு மருத்துவமனை, தனியார் சிகிச்சை மையங்கள் எனப் பல இடங்களில் அவருக்கு மருத்துவம் பார்த்ததாகக் கூறுகின்றனர்.

உயரம் தனக்கு எப்போதுமே தடையாக இருந்ததில்லை என்று பிபிசி தமிழிடம் பேசிய யோகேஸ்வரி கூறினார். இதே கருத்தை அவரது தோழியும், ஆசிரியரும் குறிப்பிட்டனர்.

“அவர் எப்போதும் போலவே, எல்லா மாணவர்களையும் போலவே இருப்பார். படிப்பில் மட்டுமின்றி எல்லாவற்றிலும் தைரியமாக முதல் ஆளாக நிற்பவர். காலையில் மாணவர் கூட்டங்களில் பாடுவது, விழாக்களில் ஆடுவது என அனைத்திலும் பங்கேற்பார். ஒரு முறை சென்னைக்கு சுற்றுலா சென்றபோது, சில விளையாட்டுகளில் உயரம் காரணமாக அவர் அனுமதிக்கப்படவில்லை. எங்களுக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. அந்த ஒரு நிகழ்வு தவிர வேறு எங்கும் அவருக்கு உயரம் ஒரு பிரச்னையாக இருப்பதை நான் பார்த்ததில்லை” என்கிறார் ஆசிரியர் உமா மகேஸ்வரி.

முழு விவரம் காணொளியில்…

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு