செம்மணி மனிதப் புதைகுழியில் ஏற்கனவே புத்தகப்பையுடன் அடையாளம் காணப்பட்ட சிறுவனின் முழுமையான எலும்புக்கூட்டுத் தொகுதி இன்று மீட்கப்பட்டுள்ளது. அதேநேரம் சிறுவனுடையதென நம்பப்படும் காலணி ஒன்றும் பொம்மை ஒன்றும் மீட்கப்பட்டுள்ளன. 

அதேவேளை பின்னிப்பிணைந்த நிலையில் சில என்புக்கூட்டுத் தொகுதிகளும் இன்று அடையாளம் காணப்பட்டதாகப் பாதிக்கப்பட்டவர்கள் தரப்பு சட்டத்தரணி ரணிதா ஞானராஜ் தெரிவித்துள்ளார். 

அதன் காரணமாக அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூட்டுத் தொகுதிகளின் எண்ணிக்கையைத் துல்லியமாகக் கணக்கிட முடியாதுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

முன்னதாக செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு இரண்டாம் கட்டத்தின் 6ஆம் நாள் அகழ்வு நடவடிக்கை இன்றும் தொடர்ந்திருந்தது. 

நீல நிற புத்தக பையுடன் காணப்பட்ட சிறிய பிள்ளையுடையதாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படும் மனித எச்சம் முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.இன்று மேலும் சில மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்படுள்ளது. அவை சிக்கலான நிலையில் காணப்படுவதால் எண்ணிக்கையை கணிப்பிடுவதில் சிக்கல் நிலை காணப்படுகின்றது.இதுவரை 33 மனித எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.