செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை (30.06.25) முன்னெடுக்கப்பட்டது.

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை (29.06.25) வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்றின் பின்னி பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது.

ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்பு கூடுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் , புதிதாக எவையும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது.

அதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

செம்மணிப் புதைகுழி தொடர்பில் Ai மூலம் படங்களை உருவாக்குபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்!

செம்மணி புதைகுழிகளில் மீட்கப்படும் எலும்பு கூடுகளை Ai தொழிநுட்பம் ஊடாக மாற்றி அமைப்போருக்கும் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என செம்மணி புதைகுழி வழக்கில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் சார்பாக முன்னிலையாகும் சட்டத்தரணி ரனித்தா ஞானராஜா எச்சரித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

செம்மணி புதைகுழியில் காணப்படும் எலும்பு கூடுகளை வைத்து , Ai தொழிநுட்ப உதவியுடன் படங்கள் உருவாக்கப்பட்டு , அவை சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டுக்கொண்டு இருக்கின்றது

குற்றவியல் நடவடிக்கையாக நீதிமன்ற நடவடிக்கை ஊடாக விசாரணையில் இருப்பதனால் போலியாக உருவாக்கப்பட்ட படங்களை சமூக வலைத்தளங்களில் பகிர்வதனால் குற்றவியல் விசாரணைக்கு தடையை ஏற்படுத்துகின்றது.

அதேவேளை பாதிக்கப்பட்டவர்களின் உருவ அடையாளங்கள் மாற்றப்பட்டு , வழக்கினை பிழையாக திசை மாற்றிக்கொண்டு செல்வதற்கான உத்தியாக இதனை கையாள்கின்றனரா என்ற சந்தேகமும் ஏற்பட்டுள்ளது

எனவே , இவ்வாறான படங்களை உருவாக்குபவர்கள் , அதனை சமூக ஊடகங்களில் பகிர்வோருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்வது தொடர்பில் ஆலோசனை நடாத்தி வருகின்றோம்.

இனி வரும் காலங்களிலும் அவ்வாறான படங்கள் உருவாக்கப்பட்டு , அதனை சமூக வலைத்தளங்களில் பகிர்வோருக்கு எதிராக , குற்றவியல் விசாரணைக்கு இடையூறு ஏற்படுத்தினார்கள் எனவும் , நீதிமன்றில் நிலுவையில் உள்ள வழக்கு நடவடிக்கைகளில் தலையீடு செய்தல் போன்ற குற்றங்களுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

எனவே, குறித்த வழக்கு விசாரணைகள் சரியான முறையில் முன்னெடுத்து செல்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளனர்.