‘உடல் ரீதியாகவும், மன ரீதியாகவும் டார்ச்சர்’ – திருப்பூரில் புதுமணப்பெண் மரணத்தில் நடந்தது என்ன?

பட மூலாதாரம், Boopathy

எழுதியவர், சேவியர் செல்வகுமார்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

[எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் தற்கொலை குறித்த தகவல்கள் உள்ளன.]

”போலீசோ, வேற யாராச்சும் வந்து கேட்டா, எனக்காக நீங்க தலை குனிய வேண்டாம். இதை போட்டுக் காமிச்சிருங்க. என்னோட இந்த முடிவுக்கு என்னோட திருமண வாழ்க்கைதான் காரணம். உடல்ரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்; மனரீதியாவும் டார்ச்சர் அனுபவிச்சிட்டேன்…என் கல்யாண வாழ்க்கையே மோசமா போயிருச்சு…என்னை மன்னிச்சிருங்கப்பா…என்னை மன்னிச்சிருங்கம்மா…!”

திருப்பூரை சேர்ந்த ரிதன்யா என்ற 27 வயது பெண், தனது தந்தைக்குப் பதிவு செய்து வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பிய ஆடியோவில் கூறப்பட்டிருந்த வார்த்தைகள் இவை.

அவருடைய இந்த ஆடியோ வாக்குமூலத்தை ஆதாரமாக வைத்து, தற்கொலைக்குத் தூண்டியதாக அவரின் கணவர் மற்றும் மாமனார் , மாமியார் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கணவரும், மாமனாரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருப்பூர் மாவட்டம் கைகாட்டிபுதுாரைச் சேர்ந்தவர் அண்ணாதுரை. ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவரது மகள் ரிதன்யா(வயது 27).

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

ரிதன்யா, எம்.எஸ்.சி.–சிஎஸ் படித்தவர். இவருக்கும் அவினாசி பழங்கரையைச் சேர்ந்த ஈஸ்வரமூர்த்தியின் மகன் கவின்குமாருக்கும் கடந்த ஏப்ரல் 11 அன்று திருமணம் நடந்துள்ளது. திருமணமாகி 77 நாட்களே ஆனநிலையில், கடந்த ஜூன் 28 அன்று, ரிதன்யா தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்கின்றனர் அவரது குடும்பத்தினர்.

பட மூலாதாரம், Boopathy

‘திருமணமாகி 2 வாரங்களில் திரும்பிய ரிதன்யா’

அவினாசி–சேயூர் காவல்நிலையத்தில் பதிவாகியுள்ள முதல் தகவல் அறிக்கையில், ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை அளித்துள்ள புகாரின் அடிப்படையில் சில தகவல்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

அதன்படி, திருமணமாகி 2 வாரங்கள் மட்டுமே, ரிதன்யாவும், கவின்குமாரும் மகிழ்ச்சியாக இருந்துள்ளனர். அதற்குப்பின், பிரச்னையாகி ரிதன்யா தன் தந்தை வீட்டிற்கு வந்துள்ளார். அங்கு 20 நாட்கள் இருந்துள்ளார். அப்போது கவின் அவ்வப்போது வந்து பார்த்துச்சென்றுள்ளார்.

பெற்றோர் மீண்டும் ரிதன்யாவிடம் பேசி, அவரை கவின் வீட்டிற்கு அனுப்பி வைத்துள்ளனர். அப்போது இருவரும் சேர்ந்து திருப்பதி கோவிலுக்கும், வேறு சில இடங்களுக்கும் சுற்றுலா சென்றுள்ளனர். இரு வாரங்கள் சந்தோஷமாக இருந்த நிலையில், மீண்டும் கடந்த ஜூன் 22 அன்று ரிதன்யாவை கவின் அழைத்து வந்து, அவரின் தந்தையின் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். அப்போது ரிதன்யா மிகவும் சோகமாக இருந்துள்ளார்.

தன்னிடம் எதுவும் கேட்க வேண்டாமென்று ரிதன்யா கூறிய நிலையில், தங்களுக்குள் எந்தப் பிரச்னையும் இல்லை, ஒரு வாரம் அப்பாவின் வீட்டில் இருக்க ஆசைப்பட்டதால் கொண்டு வந்து விட்டதாக அண்ணாதுரையிடம் கவின் கூறியுள்ளார்.

ரிதன்யாவை விட்டுச்சென்ற பின், ஜூன் 23 மற்றும் ஜூன் 27 ஆகிய இரு நாட்களும் கவின் வந்து பார்த்துச் சென்றுள்ளார். மறுநாள் ஜூன் 28 அன்று, சேயூர் மொண்டிபாளையம் பெருமாள் கோவிலுக்குச் செல்வதாகக் கூறி காரை தனியாக எடுத்துச் சென்றுள்ளார் ரிதன்யா. வாரம் ஒரு முறை அவர் அந்தக் கோவிலுக்குச் செல்வது வழக்கம் என்பதால் அவரை தனியாக அனுப்பியுள்ளனர்.

அன்று மதியம் ஒரு மணிக்கு ரிதன்யாவின் தாயார் ஜெயசுதாவுக்கு ரிதன்யாவின் மொபைலில் இருந்து அழைப்பு வந்துள்ளது. அதில் பேசிய ஒருவர், இந்த எண் யாருடையது என்று கேட்டு, செட்டிபுதுார் என்ற இடத்தில் நிறுத்தப்பட்டிருந்த காரில் ஒரு பெண் மயங்கிக் கிடக்கிறார் என்றும், அருகில் விஷபாட்டில் இருப்பதாகவும் தகவல் தெரிவித்துள்ளார்.

உடனே ரிதன்யாவின் தந்தை உள்ளிட்ட உறவினர்கள் அங்கு செல்வதற்குள் அவரை அவினாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்துள்ளனர். அங்கு அவர் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாகக் கூறியுள்ளனர்.

முதலில் ரிதன்யாவின் தற்கொலை குறித்து, அவருடைய குடும்பத்தினர் எந்தப் புகாரும் போலீசில் தெரிவிக்கவில்லை. அதனால் சேயூர் போலீசார் தற்கொலை வழக்கு மட்டும் பதிவு செய்துள்ளனர்.

ஆனால் தற்கொலை செய்வதற்கு முன்பாக, ஜூன் 28 மதியம் 12 மணியளவிலேயே அவர் ஆடியோ பதிவு செய்து, தன் தந்தைக்கு அனுப்பியுள்ளார்.

அப்போது மொபைலில் ‘நெட்’டை அணைத்து வைத்திருந்ததால் வாட்ஸ்ஆப் தகவலை பெற முடியவில்லை. அன்றிரவு, உறவினர்களுக்குத் தகவல் தெரிவிப்பதற்காக, இரவு 11 மணியளவில் அண்ணாதுரையின் மொபைலில் ‘நெட்’டை அவருடைய உறவினர் ஒருவர் ‘ஆன்’ செய்தபோது, ரிதன்யாவின் மொபைல் எண்ணிலிருந்து 10 ஆடியோ பதிவுகள் வந்துள்ளன.

அதில் தன்னுடைய தற்கொலை முடிவு பற்றி, அழுதவாறே பேசியுள்ள ரிதன்யா, அந்த ஆடியோக்களை வாட்ஸ்ஆப் மூலமாக அனுப்பியிருந்தது தெரியவந்தது. அந்த ஆடியோக்களில் தன்னுடைய தற்கொலை முடிவுக்கு கவினும், அவருடைய தாயும், தந்தையுமே காரணமென்று தெரிவித்திருந்தார்.

பட மூலாதாரம், Boopathy

படக்குறிப்பு, கணவர் குடும்பத்துடன் ரிதன்யாஇந்த ஆடியோவைக் கேட்டு அதிர்ச்சியும் வேதனையும் அடைந்த ரிதன்யாவின் தந்தை, சேயூர் காவல் நிலையத்தில் மீண்டும் புகார் அளித்துள்ளார்.

அந்த ஆதாரத்தின் அடிப்படையில், தற்கொலைக்கு தூண்டியது (IPC 306) உள்ளிட்ட பிரிவுகளில் ரிதன்யாவின் கணவர் கவின் குமார், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தி, தாயார் சித்ரா தேவி ஆகியோர் மீது சேயூர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

கவின்குமாரும், ஈஸ்வரமூர்த்தியும் கைது செய்யப்பட்டனர். உடல்ரீதியான பாதிப்பு காரணமாக, சித்ரா தேவியை உடனடியாகக் கைது செய்யவில்லை என்று போலீசார் தெரிவித்தனர்.

ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை பிபிசி தமிழிடம் பேசுகையில், ”300 சவரன் போட்டு 70 லட்ச ரூபாய்க்கு வால்வோ காரும் வாங்கிக்கொடுத்தோம். அதில் 150 சவரன் அங்கே இருந்தது. மீதம் என் வீட்டில் இருந்தது. ஆனால் அதற்கு மேலும் கேட்டு, டார்ச்சர் செய்து, இரண்டே வாரத்தில் மகளை என் வீட்டுக்கு அனுப்பிவிட்டனர். நானும் எல்லாம் சரியாகிவிடுமென்று சமாதானப்படுத்தி பேசி மீண்டும் அனுப்பி வைத்தேன். ஆனால் வெளியில் சொல்லவே முடியாத அளவுக்கு உடல்ரீதியான கொடுமைகளை அவள் அனுபவித்துள்ளார்.” என்றார்.

”என்னிடமும் என் மனைவியிடமும் கூட முழுமையாக எதையும் சொல்லாமல், அவள் மாமியாரை வரச்சொல்லி, என் வீட்டில் வைத்தே ஒன்றரை மணி நேரம் தனியாகப் பேசினாள். அதன்பின், மாமியார் எங்களிடம் வந்து, ‘எங்க பையன் இப்படி இருப்பான்னு எங்களுக்கே தெரியலை. இனிமேல் அப்படி நடக்காமல் பார்த்துக் கொள்வோம்.’ என்று கூறி அழைத்துச் சென்றார்.

மறுபடியும் 20 நாளில் திரும்பிவிட்டாள். பையனுக்கு தொழில் இல்லை. உறவினர்களில் பலர் 100 கோடி ரூபாய் செலவழித்து அவரவர் மாப்பிள்ளைக்குத் தொழில் செய்து கொடுத்துள்ளனர். உங்க அப்பா 500 சவரன் போடுவதாகக் கூறி பாதியளவும் போடவில்லை என்று எல்லோரும் சேர்ந்து கொடுமைப்படுத்தியுள்ளனர்.” என்றும் அண்ணாதுரை தெரிவித்தார்.

மாப்பிள்ளைக்கு தனியாக தொழில் இல்லாவிடினும், 10 முதல் 15 லட்ச ரூபாய் வரை வாடகை வந்ததால் வருமானம் இருக்கிறதென்று திருமணத்துக்கு 3 கோடி ரூபாய் செலவழித்ததாக பிபிசி தமிழிடம் கூறிய ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, தற்கொலைக்கு முன்பாக ரிதன்யா, தன் தந்தைக்குப் பேசி அனுப்பிய ஆடியோக்களை பிபிசிடம் பகிர்ந்தார்.

அதில் பேசியுள்ள ரிதன்யா, தான் உடல்ரீதியாகவும், மனரீதியாகவும் பெரும் கொடுமைகளை அனுபவித்துள்ளதாக மீண்டும் மீண்டும் பல முறை தெரிவித்துள்ளார்.

தன்னுடைய தற்கொலை முடிவுக்கு, கவினும், அவருடைய தந்தை ஈஸ்வரமூர்த்தியும், அவருடைய தாயார் சித்ராதேவியும்தான் காரணமென்று குறிப்பிட்டுள்ளார்.

பட மூலாதாரம், Boopathy

படக்குறிப்பு, பெற்றோருடன் ரிதன்யாமகளுக்கு நீதி வேண்டுமென்று கேட்கும் தந்தை!

தன்னுடைய மகளின் மரணத்திற்கு நீதி வேண்டும், இனிமேல் எந்தப் பெண்ணுக்கும் இந்த நிலை ஏற்படக் கூடாது என்று கண்ணீரோடு பேசினார் ரிதன்யாவின் தந்தை அண்ணாதுரை.

கவின் குடும்பத்தினருக்கு இருக்கும் அரசியல் செல்வாக்கைப் பயன்படுத்தி, இந்த வழக்கை திசை திருப்ப முயற்சி நடப்பதாக ரிதன்யாவின் சித்தப்பா பூபதி, பிபிசி தமிழிடம் பேசுகையில் குற்றம் சாட்டினார்.

ரிதன்யாவின் ஆடியோவில், தன்னுடைய தற்கொலைக்கு கவின் மற்றும் அவருடைய தாய், தந்தை இருவரும் காரணமென்று தெளிவாகக் கூறியிருந்தும் கவினையும், அவருடைய தந்தையை மட்டும் காவல்துறை கைது செய்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதுபற்றி சேயூர் காவல் ஆய்வாளர் ராஜபிரபுவிடம் பிபிசி தமிழ் கேட்டதற்கு, ”அவருடைய தாயார் வயது முதிர்ந்தவர். சமீபத்தில்தான் அவருக்கு கர்ப்பப்பை நீக்க அறுவை சிகிச்சை நடந்துள்ளது. விசாரணையின் போதே, அவர் அடிக்கடி மயக்கமாகிவிட்டார். அதனால் அவருடைய உடல்நிலையைக் கருத்தில் கொண்டே உடனடியாக அவரைக் கைது செய்யவில்லை. ஆனால் வழக்கில் அவர் சேர்க்கப்பட்டுள்ளார்.” என்றார்.

ரிதன்யாவின் கணவர் கவின்குமார் தரப்பில் அவர்களுடைய உறவினர் யாரிடமும் கருத்துப் பெற முடியவில்லை. அவர்கள் சார்பில் பிபிசி தமிழிடம் பேசிய வழக்கறிஞர் சண்முகானந்தன், ”கவின் குடும்பத்தினர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுபற்றி யாரும் பேசமுடியாத நிலையில் உள்ளனர். அவர்களின் ஒப்புதலின்றி அவர்களின் சார்பில் நானும் எந்தக் கருத்தும் கூற முடியாது. ” என்றார்.

திருமணம் முடிந்த 77 நாட்களில் இந்த மரணம் நடந்துள்ளதால் வருவாய் கோட்டாட்சியர் விசாரணைக்கும் உத்தரவிடப்பட்டு, திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர் மோகனசுந்தரம் தனது விசாரணையை இன்று காலையில் துவக்கியுள்ளார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவினாசி துணை காவல் கண்காணிப்பாளர் சிவகுமார், ”தற்கொலை செய்து கொண்ட ரிதன்யாவின் ஆடியோ கிடைத்துள்ளது. அதில் அவர் கூறியுள்ள தகவலின் அடிப்படையில், அவரின் கணவர், மாமனார், மாமியார் மீது தற்கொலைக்குத் தூண்டியதாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ரிதன்யாவின் ஆடியோவில் எந்த மாதிரியான கொடுமை நிகழ்ந்தது பற்றி எதுவும் கூறவில்லை. அதனால் இன்னும் விரிவாக விசாரணை நடத்த வேண்டியுள்ளது. வருவாய் கோட்டாட்சியர் விசாரணையும் நடக்கிறது. இரு தரப்பிலும் விசாரித்தபின்பே தெளிவான காரணங்கள் தெரியவரும்.” என்றார்.

நீங்களோ அல்லது உங்களின் அன்புக்குரிய நபர்களோ மன அழுத்தத்தில் இருந்தால் அல்லது மனநலம் சார்ந்த பிரச்னைகளை எதிர்கொண்டால் அவர்களுக்குத் தேவையான உதவிகளைக் கீழ்கண்ட உதவி எண்கள் மூலமாகப் பெற்றுக்கொள்ள இயலும்.

சினேகா தற்கொலை தடுப்பு உதவி மையம்: 044 -24640050 (24 மணிநேரம்)

மாநில தற்கொலை தடுப்பு உதவி மையம்: 104 (24 மணிநேரம்)

சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் உதவி எண்: 1800-599-0019

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு