Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அமெரிக்காவில் காரே இல்லாத தீவு: மக்கள் வசதி இருந்தும் கார் வாங்காமல் குதிரையில் செல்வது ஏன்?
பட மூலாதாரம், Mackinac Island Tourism Bureau
படக்குறிப்பு, கிட்டத்தட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலத்திலிருந்தே கார்களை தடை செய்த மேக்கினாக் ஒரு அழகிய தீவுஎழுதியவர், ஸ்டீபென் ஸ்டார்பதவி, 30 ஜூன் 2025, 08:04 GMT
புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
“உலகின் கார் தலைநகரத்துக்கு” நடுவே 600 பேரும், 600 குதிரைகளும் உள்ள காரே இல்லாத ஒரு அமைதியான தீவு கடந்த கால வாழ்க்கை முறையில் இன்றும் இயங்குகிறது.
ஃபோர்டு, ஜெனரல் மோட்டார்ஸ், க்ரைஸ்லர் போன்ற கார் நிறுவனங்கள் தோன்றிய “மோட்டார் நகரம்” டெட்ராய்ட் அமைந்துள்ள மிச்சிகன் மாகாணம், “உலகின் கார் தலைநகரம்” என அழைக்கப்படுகிறது. ஆனால் மாகாணத்தின் வடக்கே, ஹுரான் ஏரியில் இந்த அமைதியான கண் கவரும் தீவு அமைந்துள்ளது. இந்த தீவு பல நூறு ஆண்டுகளாக பயணிகளை ஈர்த்து வருவதுடன் கிட்டத்தட்ட கார்கள் கண்டுபிடிக்கப்பட்ட காலம் முதல் அவற்றை தடை செய்திருக்கிறது.
3.8 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்ட மேக்கினாக் தீவில் 600 பேர் வசிக்கின்றனர், மோட்டார் வாகனங்கள் இல்லை, கார் ஓட்ட அனுமதி இல்லாத ஒரு அமெரிக்க நெடுஞ்சாலையும் இங்கு அமைந்துள்ளது. கோல்ஃப் வண்டிகள் கூட இந்த தீவின் தெருக்களில் தடை செய்யப்பட்டுள்ளதால், நீங்கள் ஒரு சத்தத்தைக் கேட்டால் அது இந்த தீவில் உள்ள வாத்துகள் அல்லது ஆந்தைகளின் குரலாக இருக்கவே வாய்ப்புள்ளது.
பட மூலாதாரம், Getty Images
கார்கள் ஏன் இல்லை?
ஏனென்றால், தீவின் முக்கிய வீதியில் கைவினைப்பொருட்கள் கடையை வைத்திருக்கும் உர்வான டிரேசி மோர்ஸ் கூற்றின்படி,”குதிரைதான் இங்கு மன்னன்.” என்கிறார்.
உள்ளூர் மக்கள் கூற்றின்படி, 1898-ல் ஒரு கார் பேக்ஃபயர் ஆனதால் வந்த சத்தத்தில் அருகில் இருந்த குதிரைகள் வெருண்டதால் கிராம அதிகாரிகள் இண்டர்னல் கம்பஷன் என்ஜின்களை தடை செய்தனர், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த தடை தீவின் மற்ற பகுதிகளுக்கு விரிவுபடுத்தப்பட்டது. அப்போதிருந்து, இங்கு அமைதியான, பழைய கால வாழ்க்கை முறையை உள்ளூர் மக்கள் பின்பற்றி வருகின்றனர்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
நூறாண்டுகளுக்கு மேலான பின்னரும், தீவிரமான குளிர்காலம் முதல் சுட்டெரிக்கும் கோடை வரையிலும் 600 குதிரைகளே முழுமையாக இயங்கி வருகின்றன. சுமார் 1.2 மில்லியன் மக்கள் வசிக்கும் மேக்கினாவ் சிட்டி அல்லது செயின்ட் இக்னேஸ் நகரங்களில் இருந்து 20 நிமிட படகு பயணத்தில் இந்த தீவின் தெற்கு முனையில் உள்ள கிராமத்தில் (அதுவும் மேக்கினாக் தீவு என அழைக்கப்படுகிறது) வந்திறங்குகின்றனர்.
பட மூலாதாரம், Mackinac Island Tourism Board
படக்குறிப்பு, இந்த தீவில் ஒரு கோட்டை உள்ளது, அங்கு இன்றும் பீரங்கிகளை சுட்டு காட்டுகின்றனர்அங்கு, 70 மைல் நீளமுள்ள பாதைகளில் குதிரைகளின் “கிளிப்-கிளாப்” ஒலியை ரசிக்கின்றனர்.
“குப்பை அகற்றுவது முதல் ஃபெடெக்ஸ் விநியோகம் வரை எல்லாவற்றுக்கும் குதிரைகள் பயன்படுத்தப்படுகின்றன,” என்கிறார் , 1990ஆம் ஆண்டு மாணவியாக சுற்றுலா வந்த பின்னர் கடலோடிகளின் கைவினைப் பொருட்கள், கலைப்பொருட்கள், நகைகள் மற்றும் பல பொருட்கள் விற்பனையில் ஈடுபட்டு வரும் மோர்ஸ். “இப்படித்தான் எங்கள் வாழ்க்கை முறை இருந்திருக்கிறது: இதுதான் எங்கள் வேகம்.”
“நாங்கள் நடை, சைக்கிள் அல்லது குதிரை டேக்ஸிகளில் பயணிக்கிறோம் என்ற பாரம்பரியம் எங்களில் ஒரு பகுதியினருக்கு பிடித்திருக்கிறது,” என மோர்ஸ் கூறுகிறார்.
‘மாபெரும் ஆமையின் இடம்’
பட மூலாதாரம், Mackinac Island Tourism Board
படக்குறிப்பு, மிச்சிகன் ஆளுநர் சமீபத்தில் மேக்கினாக் தீவை HBO-வின் ‘தி வைட் லோட்டஸ்’ அடுத்த சீசனுக்கான படப்பிடிப்பு இடமாக பரிந்துரைத்தார் ஹூரான் மற்றும் மிச்சிகன் ஏரிகளின் சந்திப்பில் உள்ள இந்த தீவை மீன்பிடித்தல் மற்றும் வேட்டையாடுதலுக்கு பழங்குடி மக்கள் பல நூற்றாண்டுகளாக பயன்படுத்தினர். இதன் மலைகள் மற்றும் பசுமையான காடுகள் ஆமை வடிவத்தில் இருப்பதாகக் கருதி, “மிச்சிலிமாக்கினாக்” (மாபெரும் ஆமையின் இடம்) என்று அனிஷ்நாபேமோவின் மொழியில் பெயரிட்டனர்.
பிரிட்டிஷ் படைகள் 1780-ல் பாதுகாப்பு கோட்டை ஒன்றை அமைத்தனர். இன்று, பயணிகள் மிச்சிகனின் பழமையான கட்டடத்தில் உள்ள அதிகாரி அறைகளைப் பார்க்கலாம்.
சுற்றுலா பயணிகள், பாரம்பரிய உடைகள் அணிந்த வழிகாட்டிகளைப் பின்தொடர்ந்து, பீரங்கி சுடுதல் நிகழ்ச்சிகளை பார்க்கலாம். 1812-ம் ஆண்டு போருக்குப் பிறகு அமெரிக்கா மேக்கினாக் தீவை கைப்பற்றி 200 ஆண்டுகளுக்கு மேல் ஆன பிறகும், இதன் பழமையான வேர்கள் இன்னும் உள்ளன.
“மேக்கினாக் தீவு அனிஷ்நாபே மக்களின் வரலாறு, கலாசாரத்தில் மிக முக்கியமான மற்றும் முதன்மையான இடங்களில் ஒன்று,” என்கிறார் தீவின் பழங்குடி வரலாற்றை மீட்டெடுப்பதில் முக்கிய பங்காற்றிய அனிஷ்நாபே சமூகத்தை சேர்ந்த எரிக் ஹெமன்வே.
“அனிஷ்நாபே மக்கள் ஹூரான் மற்றும் மிச்சிகன் ஏரிகளை இணைக்கும் நீர்வழிப் பகுதிகளில், சிலர் கூறுவதுபோல், பழங்காலம் தொட்டு இருந்து வருகின்றனர். இப்போதும் நாங்கள் எங்கள் மூதாதையர்களின் இடமான இந்த நீரிணைப் பகுதிகளில் இருக்கிறோம். இந்த நீர்ப்பகுதிகள் மத்திய மேற்கு அமெரிக்காவின் நெடுஞ்சாலைகளாக இருந்தன, இப்போதும் அப்படியே உள்ளன,” என்றார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பயணிகள் நடைபயணமாகவோ, சைக்கிள் ஓட்டியோ அல்லது குதிரை வண்டியிலோ ஆர்ச் ராக்குக்கு செல்லலாம்ஹெமன்வே சுட்டிக்காட்டுவதுபோல், தீவில் இறந்த பழங்குடியினரை புதைக்கும் இடங்கள் கண்டறியப்பட்டுள்ளன, அவற்றில் சில 3,000 ஆண்டுகள் பழமையானவை. “பெரிய ஏரிகளில் எங்களுக்கு மிகவும் புனிதமான இடங்களில் (மேக்கினாக்) ஒன்று,” என்று அவர் கூறுகிறார்.
2021-ல் திறக்கப்பட்ட மேக்கினாக் தீவு பழங்குடி அமெரிக்கர் அருங்காட்சியகம் அமைந்துள்ள பிடில் ஹவுஸின் உருவாக்கத்தில் ஹெமன்வே பணியாற்றியுள்ளார்.
“மற்ற பழங்குடி மக்கள் இங்கு வந்து செல்லும் போது, இது எங்கள் கதை என்று உணர்வது என் மிகப்பெரிய வெற்றி,” என்கிறார் ஹெமன்வே. “இப்போது இந்த தீவு சுற்றுலாத் தலமாகக் கருதப்படுகிறது, ஆனால் இந்த இடத்தின் ஆழமான அடுக்குகள் இன்னும் இங்கு உள்ளன.”
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில், மேக்கினாக் தீவு சிகாகோ, டெட்ராய்டு மற்றும் செழிப்பாக இருந்த மத்திய மேற்கு அமெரிக்காவின் பிற பகுதிகளைச் சேர்ந்த பணக்கார தொழிலதிபர் குடும்பங்களுக்கு கோடைகாலத்தில் ஓய்வெடுக்கும் இடமாக மாறியது.
138 ஆண்டு பழமையான மேக்கினாக்கின் கிராண்ட் ஹோட்டல், தனித்தனியாக அலங்கரிக்கப்பட்ட அறைகளையும், உலகின் மிக நீளமான முற்றத்தை கொண்டுள்ளது. இது அமெரிக்காவின் தொழில்துறை பொற்காலத்தில் இயங்கிய, தற்போதும் முழு செயல்பாட்டில் உள்ள ஹோட்டல்களில் ஒன்றாகும். இந்த ஹோட்டலின் தனித்துவமான ஈர்ப்பு காரணமாக, மிச்சிகன் ஆளுநர் கிரெட்சன் விட்மர் சமீபத்தில் எக்ஸ் தளத்தில், HBO-வின் *தி வைட் லோட்டஸ்* சீசன் 4-ஐ இந்த தீவில் படமாக்க வேண்டும் என்று பரிந்துரைத்தார்.
இந்த பரிந்துரை விளையாட்டுத்தனமாக இருந்தாலும், மேக்கினாக் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளால் நிரம்பி வழிய வேண்டாம் என மோர்ஸ் கருதுகிறார். “நாங்கள் வசிக்கும் இடத்தைப் பற்றி பெருமைப்படுகிறோம்; ஆனால் அதே நேரத்தில், ஒருவகையில் இது எவ்வளவு அருமையான இடம் என்பதை மற்றவர்களுக்கு சொல்ல விரும்பவில்லை,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இந்த சிறிய தீவில் சுமார் 1,500 சைக்கிள்கள் வாடகைக்கு கிடைக்கின்றனநாட்டின் மற்றப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படலாம்
இந்த சிறிய தீவு உண்மையிலேயே பல அம்சங்களை உள்ளடக்கியது. தீவின் 80% பரப்பு மேக்கினாக் தீவு மாநில பூங்காவாக உள்ளது. இதில் பயணிகள் பழைய காடுகளில் உலவலாம். நெடிதுயர்ந்த சுண்ணாம்பு தூண்களை ரசிக்கலாம், மற்றும் இந்த தீவின் மிகவும் புகழ் பெற்ற 50 அடி அகலமுள்ள ஆர்ச் ராக் என்ற இடத்தை புகைப்படம் எடுக்க நடைபயணம், சைக்கிள் அல்லது வாடகை குதிரை வண்டி பயணத்தை மேற்கொள்ளலாம்.
தீவில் உள்ள ஒரே கிராமத்தில் இருந்து வடக்கே செல்லமாறு சுற்றுலாப் பயணிகள் உள்ளூர் மக்கள் பரிந்துரைக்கின்றனர். அங்கு 8.5 மைல் நீளமுள்ள நெடுஞ்சாலை, சைக்கிள் மற்றும் நடைபயண பாதையாக மாற்றப்பட்டுள்ளது. இது தீவைச் சுற்றி நீள்கிறது மற்றும் 5 மைல் நீளமுள்ள மேக்கினாக் தொங்கு பாலத்தின் காட்சிகளையும், அமைதியான கூழாங்கல் நிறைந்த கடற்கரைகள் மற்றும் காட்டுப் பகுதிகளுக்கு பாதையாகவும் விளங்குகிறது.
குதிரைகளைத் தவிர, தீவில் 1,500 வாடகை சைக்கிள்கள் உள்ளூர்வாசிகளுக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் முக்கிய போக்குவரத்து சாதனங்களாக உள்ளன. இது மேக்கினாக் மக்கள் நாட்டின் மற்ற பகுதிகளை விட மாறுபட்ட வேகத்தில் வாழ விரும்புவதைக் காட்டுகிறது.
ஆண்டில் ஒன்பது மாதங்கள் தனது சைக்கிளை ஓட்டும் மோர்ஸ், கடுமையான குளிர்காலம் நிலவினாலும் கூட, இந்த தீவில் ஆண்டு முழுவதும் வசிக்க முடிவு செய்ய முக்கியமான காரணங்களில் ஒன்று கார்கள் இல்லாத இடத்தில் வசிக்க வேண்டும் என்பதுதான்.
“சைக்கிளில் ஏறி, மரங்களுக்கு இடையே புகுந்து கிராமத்துக்கு வருவது எனக்கு மிகவும் பிடிக்கும். இது என் நாளை எதிர்கொள்ள என்னை தயார்படுத்துகிறது,” என்று அவர் கூறுகிறார்.
பட மூலாதாரம், Mackinac Island Tourism Bureau
படக்குறிப்பு, குதிரைகள் இல்லாமல் இந்த இடம் அதன் இயல்புடன் இருக்க முடியாதுஆனால், சைக்கிள் ஓட்டுதல் அதிகம் பின்பற்றப்படும் போக்குவரத்து முறையாக இருந்தாலும், தீவின் இயக்கத்தில் அதற்கு இரண்டாம் பட்சம்தான்.
“குதிரைகள் இல்லையென்றால் இந்த தீவு இப்படி இருக்காது. படகில் இருந்து இறங்கும் போது கேட்கும் ‘கிளிப்-கிளாப்’ ஒலி, காலத்தில் பின்னோக்கி சென்ற உணர்வை அளிக்கிறது,” என்கிறார் ஆர்னல்ட் ஃப்ரைட் நிறுவனத்தில் பணிபுரியும் ஹன்டர் ஹோக்லண்ட். இந்த நிறுவனம் 140 ஆண்டுகளாக தீவுக்கு படகு சேவையை நடத்தி வருகிறது மிச்சிகனின் மேல் தீபகற்பத்தில் குளிர்காலத்தைக் கழிக்கும் குதிரைக் கூட்டத்தை ஏப்ரல் மாதத்தில் திரும்ப அழைத்து வருகிறது.
“எங்கள் டிரக்குகள் ஒவ்வொரு நாளும் இங்கு வருகின்றன (குதிரைகளை இறக்கிவிட), அடுத்த ஒரு மாதத்தில் 200 முதல் 300 வருவதைப் பார்க்கலாம்,” என்று அவர் கூறுகிறார். குளிர்காலத்தில் குப்பை அகற்றுதல், பொருட்கள் விநியோகம் மற்றும் தீவை இயக்குவதற்கான நடவடிக்கைகளுக்காக 20-30 குதிரைகள் மட்டும் இருக்கின்றன.
தெள்ளத்தெளிவான நீரால் சூழப்பட்ட மேக்கினாக், குளிர்காலத்தில் பனிக்கட்டிகள் படகு சேவைகளை தடுக்கும்போது நாட்டின் மற்றப் பகுதிகளில் இருந்து துண்டிக்கப்படலாம்.
ஆனால், வசந்த காலம் மற்றும் கோடைக் காலத்தில் மேக்கினாக் தீவு உயிர்ப்புடன் திகழ்கிறது.
கிராமத் தெருக்களில் பரவியுள்ள லிலாக் மரங்கள், ஜூன் மாதத்தில் நடைபெறும் 10 நாள் லிலாக் விழாவுக்கு முன்பு மலரத் தொடங்குகின்றன. வானியல் ஆர்வலர்கள் வடக்கு மிச்சிகன் இரவு வானத்தின் தடையற்ற காட்சிகளை ரசிக்க தீவின் உயரமான இடமான ஃபோர்ட் ஹோம்ஸ் மற்றும் கிராண்ட் ஹோட்டலின் குபோலா பாருக்கு செல்கின்றனர். ஆனால், தீவைச் சுற்றி சைக்கிள் ஓட்டி களைத்த பிறகு , பெரும்பாலான சுற்றுலா பயணிகளைப் பொருத்தவரை கடற்கரையை பார்த்துக் கொண்டு ஒரு ஐஸ்கிரீம் அல்லது ஒரு ஃபட்ஜ் சாப்பிடுவது பேரானந்தம்.
இந்த அனுபவத்தைக் கெடுக்க என்ஜின் சத்தம் எதுவும் அங்கு இல்லை.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு