Thursday, August 21, 2025
Home யாழ்ப்பாணம்மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை

by ilankai
0 comments

தெற்கில் ராஜபக்சக்கள் எவ்வாறு மதவாதம், இனவாதம் பேசி மக்களை ஏமாற்றினார்களோ, அதையே முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனும் செய்கின்றார். மக்களால் நிராகரிக்கப்பட்டவர் இப்போது மக்களை உசுப்பேற்றும் நடவடிக்கைகளை மேற்கொள்கின்றார் என நெடுச்சாலைகள் போக்குவரத்து விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாணத்திற்கு நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை விஜயம் மேற்கொண்ட அமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார்.

மேலும் தெரிவிக்கையில்,

எம்.ஏ.சுமந்திரன் கடந்தகால அரசாங்கத்தில் எதையும் செய்யவில்லை. கடந்தகால அரசாங்கத்துடன் எவ்வாறு இருந்தார் என்பது எமக்குத் தெரியும்.எமது அரசாங்கம் இனவாதம், மதவாதம், பிரதேசவாதம் எவற்றையும் பாவிக்கவில்லை. அந்த யுகம் போய்விட்டது. நாட்டில் அனைத்து இனத்தவர்களுக்கும் சம உரிமை உள்ளது.

banner

வடக்கு மக்களின் காணிகளைப் பிடிக்க வேண்டிய அவசியம் எமக்கு இல்லை. வடக்கு மக்களின் காணிகளைப் படிப்படியாக விடுவித்து வருகின்றோம்.

மக்களால் நிராகரிக்கப்பட்ட அரசியல்வாதிகள் வெளியே இருந்து பிரதேசவாதம், மதவாதம் பேச வேண்டாம். உங்கள் அரசியல் இலாபங்களுக்காக இனங்களிடையே முரண்பாடுகளை ஏற்படுத்த வேண்டாம். தெற்கில் ராஜபக்சக்கள் இருக்கின்றனர். வடக்கில் எம்.ஏ.சுமந்திரன் போன்ற ராஜபக்சக்கள் இருக்கின்றனர்.

வர்த்தமானி தொடர்பாக அரசாங்கம் தற்போது பரிசீலித்து வருகின்றது. தற்போது “கூகிள் மப்” மூலம் வன ஜீவராசிகள் திணைக்களத்துக்குரிய இடங்களை அடையாளப்படுத்தும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன.

நீதிக்கு விரோதமாகக் கைப்பற்றப்பட்ட இடங்களை மீளவும் மக்களிடம் வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும். விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சர் முல்லைத்தீவுக்குச் சென்று காணிப் பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்து வருகின்றார்.

மக்களின் காணிகளைப் பிடித்து வைத்து மக்களின் எதிர்ப்பைச் சம்பாதிக்க நாம் விரும்பவில்லை. காணிகளை மீள வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்கும் என மேலும் தெரிவித்தார்.

You may also like