முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது மனைவி சிராந்தியை கைதிலிருந்து காப்பாற்ற மல்வத்து மகாநாயக்க தேரரிடம் விடுத்த கோரிக்கை சர்ச்சைகளை தோற்றுவித்துள்ளது.

எனினும் அத்தகைய கோரிக்கைகள் தொடர்பில் உண்மைக்கு புறம்பான தகவல் பரப்புபவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மல்வத்து மகா விகாரையின் பிரதி பதிவாளர் மஹாவெல ரத்தனபால தேரர் வெளியிட்டுள்ள அறிக்கையில் சிராந்தியை கைது செய்ய வேண்டாம் என்று அநுரவிடம் சொல்லுங்கள் என்ற எந்த சந்திப்பும் அல்லது தொலைபேசி உரையாடலும் நடைபெறவில்லை.

அது போன்ற தவறான செய்திகளை உருவாக்கி பரப்புவதன் ஊடாக தேவையற்ற பொது அமைதியின்மையை உருவாக்க முயற்சிக்கும் தனிநபர்கள் மற்றும் அமைப்புகளுக்கு எதிராக எதிர்காலத்தில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் மீது சிறிலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளார்.

மகிந்த ராஜபக்ச, தமது குடும்பத்தினரை கைது செய்யாது தடுக்கும் வகையில் மகாநாயக்க தேரர்களிடம் உதவி கோரியதாக வெளியான செய்தியை அரசியல் மயமான பொய்யான முயற்சி எனவும், முழுமையாக தவறானது என்றும் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.