செம்மணியில் மீட்கப்படும் மனித என்புக்கூட்டு எச்சங்களை சர்வதேச நாடுகளிற்கு அனுப்பாது இலங்கையினுள் ஆய்வு செய்ய அனுர அரசு தயாராகிவருகின்றது.

இந்நிலையில் ஐ. நா விடம் தொடர்புடைய காபன் பரிசோதனைகளை முன்னெடுக்கும் ஆய்வு கூடத்தை பெறுவதற்கான கோரிக்கை அண்மையில் இலங்கைக்கு பயணம் செய்த ஜநா மனித உரிமைகள் ஆணையரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது.

எனினும் ஆய்வுகூடத்தை மட்டுமன்றி பரிசோதனைகளை செய்வதற்கு சர்வதேச நிபுணர்களும் தேவையென குரல்கள் எழுந்துள்ளன.

கடந்தகால அரசாங்கங்கள் மிகப்பெரும் குற்றங்களை மூடிமறைத்ததால் ஆராய்வுகள் நம்பகரமாக இருக்க வேண்டியது மிக முக்கியமென சிவில் அமைப்புக்கள் கருத்து வெளியிட்டுள்ளன.

இதனிடையே செம்மணி மனிதப் புதைகுழியில் இதுவரை கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக்கூடுகளைப் பாதுகாப்பது குறித்து; மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் கடுமையான கவலைகளை எழுப்பியுள்ளார்.

நேற்று வரை 33 எலும்புக்கூடுகள் கண்டுபிடிக்கப்பட்ட மனிதப் புதைகுழிகள் தொடர்பிலான பாதுகாப்பு போதுமானதா, அது செயல்முறையின் நேர்மையின் மீதான பொதுமக்களின் நம்பிக்கையைப் பாதிக்குமா என்பது குறித்த கேள்விகள் உள்ளன, செம்மணியில் முழுமையாக செயல்படும் சிசிடிவி கண்காணிப்பு இருப்பது வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கும் எனவும் சாணக்கியன் தெரிவித்துள்ளார்.