செம்மணி மனித புதைகுழியில் ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதியில் , இரு சிறுவர்களின் எலும்பு கூடுகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.   

செம்மணி மனித புதைகுழியில் இரண்டாம் கட்ட அகழ்வு பணியின் ஐந்தாம் நாள் பணிகள் நேற்றைய தினம் திங்கட்கிழமை முன்னெடுக்கப்பட்டது. 

செம்மணி அகழ்வு பணிகள் ஆரம்பிக்கப்பட்ட மே மாதம் முதல் நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை வரையில் 33 மனித எலும்பு கூட்டு எச்சங்கள் அடையாளம் காணப்பட்டிருந்தன. அவற்றில் ஏற்கனவே 22 எலும்பு கூட்டு எச்சங்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் நேற்றைய தினம் திங்கட்கிழமை மேலும் இரண்டு எலும்புக்கூடுகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன. 

இறுதியாக அடையாளம் காணப்பட்ட எலும்பு கூட்டு தொகுதிகள் ஒன்றுடன் ஒன்றின் பின்னி பிணைந்து குழப்பமான முறையில் காணப்படுவதால் அதனை அகழ்ந்து எடுப்பதில் அகழ்வில் ஈடுபட்டுள்ளவர்கள் சவால்களை எதிர்கொண்டு உள்ளதாக தெரிவிக்கபப்டுகிறது. ஏற்கனவே அடையாளம் காணப்பட்ட 33 எலும்பு கூடுகளில் நேற்றைய தினம் திங்கட்கிழமை வரையில் 24 எலும்புக்கூடுகள் முற்றாக அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ள நிலையில் , ஏனையவற்றையும் அகழ்ந்து எடுக்கும் பணிகள் முன்னெடுக்கப்பட்டமையால் , புதிதாக எவையும் அடையாளம் காணப்படவில்லை என தெரிவிக்கப்பட்டது. 

அதேவேளை நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை புதைகுழி ஒன்றினுள் அடையாளம் காணப்பட்ட நீல நிற பை முற்றாக அகழ்ந்து எடுக்கப்படவில்லை. அதனை அகழ்ந்து எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.