Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
திருவனந்தபுரத்தில் பழுதாகி நிற்கும் பிரிட்டன் போர் விமானம் – இதுவரை கிடைத்த முக்கிய தகவல்கள்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, F-35B போர் விமானத்தைப் பழுது பார்க்க பிரிட்டனில் இருந்து பொறியாளர்கள் குழு வரவுள்ளது. (சித்தரிப்புப் படம்)எழுதியவர், இம்ரான் குரேஷிபதவி, பிபிசி செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையத்தின் தார் சாலையில் நின்றுபோயிருக்கும் F-35B போர் விமானத்தைப் பழுதுபார்ப்பதற்காக ஹேங்கருக்கு மாற்றப்படும் என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
பிரிட்டன் பொறியாளர்கள் குழு திருவனந்தபுரம் வந்து சேர்ந்த பிறகு விமானத்தின் பழுது நீக்கும் பணிகள் தொடங்கும் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஜூன் 14ஆம் தேதி HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் போர் விமானம், திருவனந்தபுரம் விமான நிலையத்தில் அவசரமாகத் தரையிறங்கியது. மோசமான வானிலை காரணமாக, ராயல் கடற்படையின் விமானம் தாங்கிக் கப்பலுக்கு இந்தப் போர் விமானம் திரும்ப முடியவில்லை.
பிபிசி ஹிந்தியின் கேள்விக்குப் பதிலளித்த பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக செய்தித் தொடர்பாளர், “தரையில் இருக்கும் விமானத்தில் தொழில்நுட்ப சிக்கல் ஒன்று உருவாகியுள்ளது. அதனால்தான், விமானம் கப்பலுக்கு திரும்பவில்லை” என்று தெரிவித்தார்.
“HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸின் பொறியாளர்கள் விமானத்தை மதிப்பீடு செய்தனர். அதன் பிறகு, பிரிட்டனை தளமாகக் கொண்ட பொறியியல் குழுவின் உதவி தேவைப்படும் என்று முடிவு செய்யப்பட்டது. விமானத்தை சரிசெய்ய எவ்வளவு நேரம் ஆகும் என்பதைத் தற்போது எங்களால் கூற முடியாது.”
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
மேலும், “சிறப்பு உபகரணங்கள் மற்றும் பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு வந்த பிறகு, விமான நிலைய நடவடிக்கைகளுக்கு எந்த இடையூறும் ஏற்படாதவாறு, பழுது பார்ப்பதற்காக விமானம் ஹேங்கருக்கு கொண்டு செல்லப்படும்” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
பட மூலாதாரம், PA Media
படக்குறிப்பு, விதிகளின்படி F-35B போர் விமானங்கள் பார்க்கிங் கட்டணத்தைச் செலுத்த வேண்டும்பிரிட்டனை சேர்ந்த பொறியியல் குழு, போர் விமானத்தைப் பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு எடுத்துச் செல்ல முடிவு செய்தால், விமான நிலையத்தில் அமைந்துள்ள ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஹேங்கருக்கு போர் விமானம் கொண்டு செல்லப்படும்.
“பழுது பார்ப்பு பணிகளுக்கான இடம் தேடப்பட்டு வருகிறது. பிரிட்டனில் இருந்து வருகை தரும் பொறியியல் குழுவிற்கு விமான நிலையத்திலேயே தங்க வசதி செய்து தரப்படும்” என்று விமான நிலைய அதிகாரிகள் பிபிசியிடம் தெரிவித்தனர், அவர்கள் தங்கள் பெயரை வெளியிட விரும்பவில்லை.
“இந்தப் போர் விமானம் தொடர்பாக இந்திய விமானப் படை, இந்திய கடற்படை மற்றும் திருவனந்தபுரம் சர்வதேச விமான நிலையம் என அனைத்து அமைப்புகளின் இந்திய அதிகாரிகளுடனும் நாங்கள் தொடர்ச்சியாகத் தொடர்பு கொண்டு வருகிறோம். அவர்கள் கொடுத்த, ஒத்துழைப்புக்கு மிகவும் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்” என்று பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சக அறிக்கை தெரிவித்துள்ளது.
“இந்தச் சூழ்நிலையைச் சமாளிப்பதில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்பு, போர் விமானத்தைப் பாதுகாப்பாகத் தரையிறக்க உதவியது, தொடர்ச்சியான பாதுகாப்பு மற்றும் ஆதரவு ஆகியவை பிரிட்டன் மற்றும் இந்திய ஆயுதப் படைகளுக்கு இடையிலான ஆழமான உறவை நிரூபிக்கின்றன” என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
விமான நிலையத்தில் போர் விமானங்களை நிறுத்துவதற்கு பிரிட்டன் பாதுகாப்பு அமைச்சகம் கட்டணம் செலுத்த வேண்டும். தற்போதைய விதிகளின்படி, விமான நிலையத்தில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்ப்பதற்காக ஹேங்கருக்கு கொண்டு வரப்பட்டாலோ, அதற்கான கட்டணத்தைச் செலுத்த வேண்டும்.
விமானத்தின் அளவு மற்றும் விமான நிலையத்தின் இருப்பிடத்தை அடிப்படையாகக் கொண்டே விமானத்திற்கான பார்க்கிங் மற்றும் ஹேங்கர் பயன்பாட்டு கட்டணங்கள் நிர்ணயிக்கப்படுவது வழக்கம்.
உதாரணமாக, மும்பை அல்லது பெங்களூருவில் உள்ள ஒரு ஹேங்கரில் ஒரு விமானம் நிறுத்தப்பட்டாலோ அல்லது பழுது பார்க்கப்பட்டாலோ நிர்ணயிக்கப்படும் கட்டணம், திருவனந்தபுரம் போன்ற விமான நிலையத்தைவிட அதிகமாக இருக்கும்.
தரையிறக்கம் மற்றும் நிறுத்தும் இடத்திற்கான விதிகள் இந்திய அரசால் தீர்மானிக்கப்படுகின்றன.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.மூன்று பில்லியன் யூரோ மதிப்புள்ள ராயல் கடற்படையின் முதன்மைக் கப்பலான HMS பிரின்ஸ் ஆஃப் வேல்ஸ், தனது நீண்ட நேர பயணங்களில் ஒன்றுக்காக ஏப்ரல் மாத இறுதியில் புறப்பட்டது.
கடலில் இருந்து ஜெட் விமானங்களைத் துரிதமாக இயக்கவும், உலகின் மறுபக்கத்தில் பெரிய அளவிலான ராணுவ நடவடிக்கைகளை மேற்கொள்ளும் பிரிட்டனின் திறனை நிரூபிக்கும் பயிற்சிகளில் பங்கேற்கவும் விமானம் தாங்கி கப்பல் போர்ட்ஸ்மாவுத்தில் இருந்து புறப்பட்டது.
மத்திய தரைக்கடல், மத்திய கிழக்கு, தென்கிழக்கு ஆசியா, ஜப்பான் மற்றும் ஆஸ்திரேலியாவில் உள்ள 40 நாடுகளுக்கு போர்க்கப்பல்களை வழிநடத்தும் இந்த விமானம் தாங்கிக் கப்பலில், 24 நவீன F-35B ஸ்டெல்த் ஜெட் விமானங்கள் உள்ளன.
சுமார் 65 ஆயிரம் டன் எடையுள்ள இந்தப் போர்க் கப்பலில் 1,600 ராணுவ வீரர்கள் தங்க முடியும்.
F-35B விமானம் என்றால் என்ன?
ராயல் விமானப்படை வலைதளத்தின்படி, F-35B என்பது பல பணிகளைச் செய்யும் திறன் கொண்ட விமானம். இது வான், தரை மற்றும் மின்னணு போரிலும் ஈடுபடும் திறன் கொண்டது.
இந்த விமானம் மின்னணு போர், உளவுத் தகவல்களைச் சேகரிப்பது, வானில் இருந்து தரை மற்றும் வான் முதல் வான் வழிப் பணிகளை ஒரே நேரத்தில் மேற்கொள்ளும் திறன் கொண்டது.
மிகவும் கடினமான சூழ்நிலைகளிலும் செயல்படக்கூடிய மேம்பட்ட சென்சார்கள் F-35Bஇல் பயன்படுத்தப்பட்டுள்ளன.
இந்த சென்சார்களை பயன்படுத்தி, சேகரிக்கப்பட்ட தகவல்களை பைலட் ஒரு பாதுகாப்பான தரவு இணைப்பு வழியாகப் பிற தளங்களுடன் பகிர்ந்துகொள்ள முடியும்.
– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு