டிஜிபின் என்றால் என்ன? அஞ்சல் குறியீடுகளுக்கு மாற்றாக வரப் போகிறதா?

பட மூலாதாரம், X/India Post

எழுதியவர், நீச்சல்காரன்பதவி, தகவல் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்15 நிமிடங்களுக்கு முன்னர்

அண்மையில் இந்திய தபால் துறை புதிதாக அஞ்சல் குறியீட்டிற்குப் பதில் டிஜிபின் (Digipin) என்ற குறியீடுகளை அறிமுகம் செய்துள்ளது. அதில் நாம் பதிவு செய்துகொண்டு அந்தக் குறியீடுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என்பது குறித்தான செய்திகளை நாம் கண்டிருப்போம்.

இது உண்மையா? டிஜிபின்னுக்கு பின்னுள்ள தொழில்நுட்பம் என்ன? விரிவாக இந்தக் கட்டுரையில் காண்போம்.

இந்தியாவில் பொதுவாக இருப்பிட அடையாளத்தைக் காட்டும் அலுவல்பூர்வ முறை என்றால் அது பின்கோடு எனப்படும் அஞ்சல் குறியீடுதான்.

அனைவரது அடையாள அட்டைகளிலும் இது இருக்கும். ஆறு இலக்க எண்களான இது, முறையே மண்டலம், உள் மண்டலம், மண்டலத்திற்குள் வரிசைப்படுத்தும் மாவட்டம், மாவட்டத்திலுள்ள அலுவலகம், கடைசி இரண்டு இலக்கங்கள் குறிப்பிட்ட தபால் அலுவலகத்தை அடையாளம் காட்டுகின்றன.

இந்த ஆறு இலக்கக் குறியீடானது பல ஊர்களுக்குப் பொதுவானதாக இருப்பதாலும் வளரும் நவீன தேவைகளும் தொழில்நுட்பமும் பாதுகாப்பும் அதிகரித்து உள்ளதாலும் தற்போதைய அஞ்சல் குறியீடு முறை போதுமானதாக இல்லை.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அதாவது விரைவாக ஓர் இடத்தை அடையவோ, உரிய நிர்வாகப் பணிகளைச் செய்வதிலோ சவால்கள் உள்ளன. அதற்காகப் புதிய குறியீட்டு முறையை அறிமுகம் செய்துள்ளனர். நேரடியாக இந்த இணையதள முகவரிக்கு சென்று, யார் வேண்டுமானாலும் அவரது இடத்தைத் தேர்வு செய்து டிஜிபின்னை பார்க்க முடியும்.

இதை, 10 இலக்கக் குறியீடாகவும் முழுவதும் கணித முறையில் கணக்கிடும் வகையிலும் அமைத்துள்ளனர்.

டிஜிபின் எவ்வாறு நிர்ணயிக்கப்படுகிறது?

பட மூலாதாரம், Getty Images

பூமியின் அட்சரேகை (latitude), தீர்க்கரேகை (longitude) ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்திய நிலப்பரப்பின் ஒவ்வொரு 4 சதுரமீட்டருக்கும் ஓர் அடையாளக் குறியீட்டைக் கொடுக்கிறார்கள்.

அதாவது, இந்திய நிலப்பரப்பை 4×4 மீட்டர் சதுரமாக வெட்டினால் எப்படி இருக்குமோ அதுபோல ஒவ்வொரு துணுக்கிற்கும் ஒரு குறியீடு.

டிஜிபின்னின் கட்டமைப்புப்படி, 16 பகுதிகளாக இந்திய நிலப்பரப்பு பிரிக்கப்பட்டு நேர்த்தியாக இலக்கங்களை ஒதுக்கீடு செய்துள்ளனர்.

அதன் கணித நிரலையும் வெளியிட்டுள்ளதால் யாரும் இதை எளிதில் இணையம் இல்லாமல்கூட கணக்கிட்டு தங்களது டிஜிபின்னை கண்டுபிடித்துக் கொள்ள முடியும்.

கூகுள் மேப் போன்ற ஏதாவது ஒரு நிலவரைபட செயலியில் உங்களது இருப்பிட ஆள்கூறுகளை (coordinates) எடுத்து டிஜிபின்னாக மாற்றிக் கொள்ள முடியும். டிஜிபின்னை பகிர்வதற்கும் கண்டுபிடிப்பதற்கும் எளிதாக இருக்கும். தற்போதைய அஞ்சல் குறியீடு போலன்றி துல்லியமாக இருப்பிடத்தைக் காட்டுவதால் சரக்கு விநியோகச் சங்கிலிக்கும், அவசர விரைவு உதவிக்கும், அரசு உதவிகளுக்கும் பயனளிக்கும்.

இதுவொரு கட்டற்ற மூலம் (Open source). அதாவது இதன் கணக்கீட்டு முறையான மற்ற இருப்பிடங்காட்டியைப் போல ரகசியமாக இல்லாமல் வெளிப்படையாக உள்ளது. யாரும் எளிதில் கணித்து தங்களது செயலிகளில் உட்புகுத்திக் கொள்ள முடியும்.

உணவு விநியோக நிறுவனங்களோ, பொருள் விநியோக நிறுவனங்களோ இந்த முறையை வெளிப்படையாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். டிரோன்கள் ஒரு குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல தபால் குறியீட்டைவிட இந்த டிஜிபின் துல்லியமாக உதவும்.

நீண்ட நெடிய எண்களைக் கொண்ட ஆள்கூறுகளைப் பகிர்வதற்குப் பதிலாகப் பத்து இலக்கக் குறியீட்டை ஒரு தொலைபேசி எண் போலப் பகிர்வது எளிதுதானே? நீங்கள் எங்கே இருந்தாலும் எளிதில் உங்களை வந்தடைய முடியும்.

உங்களது இருப்பிடத்தை இவ்வாறு பகிர்வதால் தீயணைப்புத் துறை, காவல் துறை, அவரச ஊர்தி என அவசரக் காலங்களில் உதவி விரைவாகக்க் கிடைக்கும்.

வேறு நாடுகளில் இதுபோல் உள்ளதா?

பட மூலாதாரம், X/India Post

இதேபோன்ற வேறு தொழில்நுட்பங்கள் பல நாடுகளில் உள்ளன. குறிப்பாக கூகுளின் பிளஸ் கோட் (Plus Codes), வாட்3வேர்ட்ஸ் (what3words) போன்ற சேவைகள் உலகம் முழுவதும் செயல்பாட்டில் உள்ளன.

கூகுளின் பிளஸ் கோட் என்பது 20 இலக்கக் குறியீடு, உலகப் பரப்பு அனைத்தையும் மூன்று சதுரமீட்டராகப் பிரித்துள்ளனர். வாட்3வேர்ட்ஸ் நிறுவனமும் அவர்களுடைய முறையில் மூன்று சதுரமீட்டராக உலகைப் பிரித்தாலும் சற்று மாறுபட்டு, குறியீட்டிற்குப் பதில் நினைவில் கொள்ளத் தக்க மூன்று வார்த்தைகளாகப் பெயரிடுகிறார்கள். இந்த முகவரி பல மொழிகளில் அமையும்.

இந்தியாவிலும் சில சொகுசு வாகனங்களில் வாட்3வேர்ட்ஸ் வழிகாட்டி நிறுவப்பட்டுள்ளது. இது போல, டிஜிபின்னும் புதியதாக இந்திய எல்லைக்கு உட்பட்டு அறிமுகமாகியுள்ள இருப்பிடங்காட்டி முறையாகும்.

இந்தப் புதிய முறை ஏன் தேவை என்றால் இந்த டிஜிபின்னின் இலக்கு என்பது இருப்பிடத்தை எளிதில் கண்டுபிடிப்பது மட்டுமல்ல, இது முகவரி சேவை (address-as-service) என்ற புதிய திட்டத்தின் ஒரு பகுதி. அதனால் தற்போதைய அஞ்சல் குறியீட்டிற்கு மாற்றில்லை அதற்கும் மேல் தொலைநோக்குத் திட்டமுள்ளது.

முகவரி சேவை என்பது ஓர் இருப்பிட முகவரியையே இணையத்தில் ஒரு சேவையாகப் பெற்றுக் கொள்ளும் வசதி. எளிதாகச் சொல்வதென்றால் உங்களுக்குத் தூதஞ்சல் கொண்டு வரும் நபர் உங்கள் வீட்டைத் தேடுவதற்குப் பதில் இந்தச் சேவையில் கேட்டு உங்கள் வீடு இருக்கும் அந்த 4 சதுரமீட்டரை துல்லியமாகக் காட்டச் சொல்லி வந்துவிடலாம்.

தற்போதைய தெருப்பெயருடன் உள்ள முகவரிகளை வைத்து கணினிகளால் இருப்பிடத்தை துல்லியமாகக் கணிக்க முடியாது. அதற்கு மாறாக ஒவ்வொரு முகவரியையும் டிஜிபின்னுடன் இணைக்கும்போது கணினிகளால் எளிதில் அடையாளம் காண முடியும். டிஜிபின் என்பது முதல் அடுக்கு. அது மட்டுமே தற்போது அறிமுகமாகியுள்ளது.

அதைத் தொடர்ந்து, முகவரி அடுக்கு (Digital Address Layer) என்ற ஒன்றை உருவாக்கி வருகிறார்கள். இதில் யுபிஐ போல ஒரு மின்முகவரியை ஒவ்வொருவரும் பதிந்துகொள்ள முடியும்.

பட மூலாதாரம், X/India Post

அதில் தற்போதைய மனிதர்கள் புரிந்துகொள்ளும் அஞ்சல் முகவரியுடன் இயந்திரங்களும் புரிந்துகொள்ளும் டிஜிபின்னும் சேர்ந்து இணைக்கப்படும். இதனால் உங்கள் மின் முகவரியைக் கொண்டு நீங்கள் எந்த இடத்தில் இருக்கிறீர்கள் என்று துல்லியமாக ஒரு கணினியால் அறிந்து கொள்ள முடியும்.

உங்கள் அனுமதியோடு எப்படி ஆதார் என்பது சுய அடையாள ஆதாரமாக இதர நிறுவனங்களுக்கு இருக்கிறதோ அது போல இத்திட்டம் இருப்பிடங்காட்டியாகச் செயல்படும். இந்தத் தகவல்கள் பாதுகாக்கப்படும், உரிய அனுமதியோடே இதர நிறுவனங்களுக்குப் பகிரப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டுள்ளது.

இந்த முழுமையான திட்டத்தின் பெயர் “துருவா”. இதனால் எதிர்காலத்தில் இயந்திரங்கள் எளிதில் உங்கள் முகவரியை அடையாளங்கண்டு வந்தடையும். இந்தியாவில் பணப் பரிவர்த்தனை செயல்பாடுகளில் யுபிஐ எப்படி ஒரு புரட்சியைச் செய்ததோ, அதுபோல இந்த துருவா விநியோகத் துறையில் புரட்சியை உண்டாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

டிஜிபின்னில் உள்ள சிக்கல்கள் என்ன?

இந்த முறையில் சில குறைபாடுகளும் உள்ளன. இந்தியாவின் எல்லையோரப் பகுதிகளில் இந்த இலக்கம் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. குறிப்பாக ராமேஸ்வரம் பகுதியில் உள்ள பல தீவுகளுக்கு இந்த இலக்கங்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை. எல்லையோரம் என்பதால் டிஜிபின் தளமே அதைத் தவிர்க்கிறது என்பதே அதற்குக் காரணம். இதைச் சீர்படுத்தினால் மீனவர்களுக்கு அவரச நேரத்தில் உதவிகரமாக இருக்கும்.

கூகுள் அல்லது வாட்3வேர்ட்ஸ் போல இதர துணை நுட்பங்கள் தற்போதைக்கு அறிமுகமாகவில்லை. அதாவது ஒரு முகவரியில் இருந்து இன்னொரு முகவரிக்குச் செல்லும் வழிகாட்டல், இரண்டு இலக்கங்களுக்கு இடையே உள்ள தூரத்தைக் கணக்கிடுவது போன்ற பல வசதிகள் தற்போதைய செயலியில் இல்லை.

அதனால் இணையமின்றி முகவரிகள் இடத்தைச் சுட்டிக் காட்டினாலும் பயணம் செய்ய கூகுள் மேப் அல்லது ஓபன்ஸ்ட்ரீட் மேப் போன்ற வேறு ஒரு வழிகாட்டுதல் செயலியின் உதவி தேவைப்படுகிறது. மேலும் இதர முறைகளில் பல கருவிகளுக்கான ஒத்திசைவு உண்டு.

அதாவது வாகனங்கள், கையடக்கக் கருவிகளில் குறுஞ்செயலிகளாக உள்ளதால் அதைப் பயன்படுத்துவது எளிது. ஆனால் இந்த விஷயத்தில் டிஜிபின் செல்ல வேண்டிய தூரம் அதிகமாக உள்ளது.

பட மூலாதாரம், X/India Post

ஒவ்வொரு முகவரியும் இருப்பிடம் சார்ந்து இருப்பதால் நிர்வாகப் பகுதிகளை இது அடையாளம் காட்டாது. உதாரணத்திற்கு தற்போதைய அஞ்சல் குறியீட்டின் முதல் மூன்று இலக்கம் அந்த ஊராட்சி அல்லது பகுதியை அடையாளம் காட்டும்.

புதிய முறையில் இந்த இலக்கங்கள் சதுரங்களைத்தான் அடையாளம் காட்டும் என்பதால் எந்தெந்த உள்ளாட்சி அமைப்பு என்பது போன்ற நிர்வாகத் தகவல்கள் தற்போதைக்குக் கிடைக்காது.

ஒரு குறிப்பிட்ட சதுர அடியை மட்டும் சுட்டிக்காட்டுவதால் மாடி வீடு, அடுக்கு மாடிக் குடியிருப்பு, சிறிய வீடுகள் போன்ற இடங்களையும் இதனால் சரியாக அடையாளம் காட்ட முடியாது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஆதார் போல இதுவும் தனிநபர் தகவல்களைக் கொண்டுள்ளதால் இதன் பாதுகாப்பையும் தனியுரிமையையும் எவ்வாறு கையாள்கிறார்கள் என்பதைப் பொறுத்திருந்துதான் கவனிக்கவேண்டும். அதுதான் இந்தத் தொழில்நுட்பத்தில் இருக்கும் ஒரு முக்கியமான சவால்.

இது அஞ்சல் குறியீட்டிற்கு மாற்றுத் தொழில்நுட்பமல்ல, அதற்கும் மேலே உள்ள ஒரு தொழில்நுட்பம். அஞ்சல் குறியீட்டுடன் இணைந்தே இதைப் பயன்படுத்துவோம்.

தற்போதைக்கு டிஜிபின் பயன்பாட்டை அதிகரிக்க உரிய துணைக் கருவிகளும், விழிப்புணர்வும் தேவை. அதன் பின்னர் அறிமுகமாகவுள்ள துருவா நிச்சயம் பயனுள்ள தொழில்நுட்பப் பாய்ச்சலாக அமையும்.

குறிப்பு: கட்டுரையில் இடம்பெற்றுள்ள தகவல்கள் கட்டுரையாளரின் சொந்த கருத்துகளே.

– இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு