ஈழத்தமிழர்கள் மீது இலங்கை அரசால் திட்டமிட்ட வகையில் புரியப்பட்ட இனப்படுகொலைக்கும், வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களுக்கும் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் உள்ளகப் பொறிமுறைகளை நடைமுறைப்படுத்துவது இனமேலாதிக்கம் மிகுந்திருக்கும் இலங்கைத் தீவில் சாத்தியமற்றது.அதனால் பொறுப்புக்கூறலை உறுதிசெய்யும் வகையிலான சர்வதேச விசாரணைக்கு வழிசெய்யுமாறு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரும், நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கை வந்துள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளரிடம் கோரியுள்ளார்.

இன்று மாலை கொழும்பில் நடைபெற்ற, ஐ.நா.மனித உரிமைகள் ஆணையாளருடனான சந்திப்பின் போது இலங்கை தமிழரசுக்கட்சியின் நிலைப்பாட்டை சி.சிறீதரன் வெளிப்படுத்தியிருந்தார்.

போருக்குப் பின்னரும் தமிழர் தாயகப் பகுதிகள் பெரிதும் இராணுவமயமாக்கப்பட்டு, நில அபகரிப்புகள், மக்கள்தொகை மறுசீரமைப்பு, பொருளாதார புறக்கணிப்பு மற்றும் கலாசார அழிப்பு என்பவை  தமிழ்த் தேசியத்தை அழிப்பதற்கான ஆயுதங்களாக அரசாலும், அரச படைகளாலும் தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. தற்போதைய ஆட்சியின் கீழும், இந்த அடக்குமுறை நடவடிக்கைகளை நிறுத்தவோ அல்லது மாற்றியமைக்கவோ புதிய அரசாங்கம் எந்த அர்த்தமுள்ள நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. 

இனப்படுகொலை, போர்க்குற்றங்கள் மற்றும் மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் குறித்த ஆதாரங்களை சேகரிப்பதற்கான சர்வதேச முயற்சிகளையும் தடுக்கிறது.

அத்தகைய உள்ளக அரசியல் நிலைமாறுதல்களை கடந்து, ஐ.நா மனித உரிமைகள் பேரவையானது தீர்மானங்களுக்கு அப்பால் நகர்ந்து, தமிழினப் படுகொலை விவகாரத்தை ஐ.நா பொதுச் சபைக்கும், ஐ.நா பாதுகாப்பு பேரவைக்கும், சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கும் கொண்டு செல்லும் தெளிவான குறிக்கோளுடன் கூடிய சர்வதேச நீதிப் பொறிமுறை ஒன்றை செயற்படுத்த வேண்டுமெனவும் சி.சிறீதரன் தெரிவித்துள்ளார்.