இரானை தாக்கி டிரம்ப் கையில் எடுத்த பேராபத்து என்ன?

பட மூலாதாரம், Getty Images

எழுதியவர், ஆண்டனி ஜுர்சர்பதவி, வட அமெரிக்க செய்தியாளர்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

“அமைதியை நிலைநாட்டுபவராக” இருப்பேன் என்ற வாக்குறுதியுடன் ஜனவரி மாதம் வெள்ளை மாளிக்கைக்கு திரும்பிய அதிபர் டொனால்ட் டிரம்ப், இரான் – இஸ்ரேல் இடையே நடைபெறும் இடர்கள் மிகுந்த மோதலில் அமெரிக்காவை திணிக்கும் நடவடிக்கையை எடுத்துள்ளார்.

இந்த போரில் அமெரிக்கா நேரடியாக ஈடுபட்டுள்ளது. இதன் முலம் பதவியேற்றது முதல் மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவருவதற்கு மாறாக, பெரிய போரின் விளிம்பில் இந்த பிராந்தியத்தை டிரம்ப் அழைத்து சென்றுள்ளார்.

அமெரிக்க படைகள் இரானில் உள்ள மூன்று அணு ஆயுத நிலையங்கள் மீது தாக்குதல் நடத்தியதாக சமூக ஊடகங்கள் மூலம் அறிவித்த இரண்டு மணி நேரத்தில் வெள்ளை மாளிகையிலிருந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய டிரம்ப், அந்த தாக்குதல் “அற்புதமான வெற்றியை,” பெற்றதாக தெரிவித்தார்.

இந்த நகர்வு, இரான் ஒரு அணு ஆயுத சக்தியாக வளரக்கூடிய வாய்ப்பு இல்லாத ஒரு நீடித்த அமைதிக்கான கதவைத் திறக்கும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

உச்சபட்ச பாதுகாப்பு கொண்ட தனது ஃபொர்டோ அணு ஆயுத நிலையத்திற்குச் சிறிய சேதங்கள்தான் ஏற்பட்டதாக இரான் தெரிவித்துள்ளது. எந்த தரப்பு சொல்வது உண்மை என்பதற்கு காலம் பதில் சொல்லும்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அணு ஆயுதத் திட்டத்தைக் கைவிடாவிட்டால், “மிகவும் மோசமான மற்றும் மிக எளிதான” தாக்குதல்களை எதிர்காலத்தில் எதிர்கொள்ள நேரிடும் என துணை அதிபர் ஜே.டி. வான்ஸ், வெளியுறவு செயலாளர் மார்கோ ரூபியோ மற்றும் பாதுகாப்பு செயலாளார் பீட் ஹெக்செத் ஆகியோர் புடைசூழ, டிரம்ப் இரானுக்கு எச்சரிக்கை விடுத்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கு ஏற்கனவே “விளிம்பில்” இருப்பதாக குறிப்பிட்டார் ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ்இன்னமும் “பல இலக்குகளில் எஞ்சியிருப்பதாக” கூறிய டிரம்ப், அமெரிக்கா அவற்றை “வேகம், துல்லியம் மற்றும் திறனுடன்,” தாக்கும் எனக் கூறினார்.

டிரம்ப்பின் வீரவேசமாக பேச்சுக்கள் ஒரு பக்கம் இருந்தாலும். இரானில் அமெரிக்க ராணுவம் தொடர்ந்து மோதலில் ஈடுபட்டால் அது அமெரிக்கா, அந்தப் பிராந்தியம் மற்றும் மொத்த உலகுக்குமே மிக மோசமான சூழ்நிலையாக அமையக்கூடும்.

மத்திய கிழக்கு ஏற்கனவே “விளிம்பில்” இருப்பதாக குறிப்பிட்ட ஐநா பொதுச் செயலாளர் ஆந்தோனியோ குத்தேரஸ், மோதலைத் தீவிரப்படுத்தும் அமெரிக்காவின் முடிவால் ஒரு சுழற்சியான குழப்பநிலை ஏற்படும் என எச்சரித்தார்.

அமெரிக்கா தாக்கினால் பதிலடி தரப்படும் என ஆயதுல்லா அலி காமனெயி எச்சரித்தது போல் இரான் பதிலடி தந்தால் – அதற்கு எதிர்வினையாற்ற வேண்டிய கட்டாயத்தை அமெரிக்க தரப்பு உணரக்கூடும்.

காற்றில் பறந்த டிரம்ப்பின் இரண்டு வார எச்சரிக்கை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும்இரான் “நிபந்தனையின்றி சரணடையவேண்டும்” என இந்த வாரத்தில் டிரம்ப் பேசியது அவர் மேலும் பின்வாங்குவதைக் கடினமாக்கும் ஒரு நிலைக்கு அவரைத் தள்ளக்கூடும். இரானும் தன் பங்குக்கு விடுத்த எச்சரிக்கைகள் காரணமாக அதே போன்றதொரு மூலையில் சிக்கிக்கொண்டிருக்கிறது.

இப்படித்தான் போர்கள் தொடங்கி அதோடு தொடர்புடையவர்களின் கற்பனையையும், கட்டுப்பாட்டையும் மீறி பெரிதாகின்றன.

வியாழக்கிழமை, இரானியர்களுக்கு டிரம்ப் இரண்டு வாரம் அவகாசம் கொடுத்திருந்தார், ஆனால் அது எதிர்பார்த்ததைவிட மிகக் குறுகிய காலமாக- வெறும் இரண்டு நாட்களாக மாறிப் போனது. தான் நடவடிக்கை எடுத்துவிட்டதாக டிரம்ப் சனிக்கிழமை இரவு அறிவித்தார்.

பேச்சுவார்த்தை நடத்துவதற்கு “இரண்டு வாரம் அவகாசம்” என்பது வெறும் ஏமாற்றுதானா? இரானியர்களுக்குப் போலியான ஒரு பாதுகாப்பு உணர்வை கொடுக்கும் முயற்சியா? அல்லது அமைதி பேச்சுவார்த்தை நடத்த டிரம்ப்பால் நியமிக்கப்பட்ட ஸ்டீவ் விட்காஃப் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்ததா?

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.தாக்குதலுக்குப் பிந்தைய உடனடி தாக்கம் குறித்து அதிகம் தெரியவில்லை. ஆனால் தனது சமூக ஊடகப் பதிவு மற்றும் தனது தொலைக்காட்சி உரை மூலம் அமைதிக்கான கதவை திறக்க டிரம்ப் முயற்சி செய்தார்.

ஆனால் இது அதீத நம்பிக்கையின் வெளிப்பாடாக இருக்கலாம். இரானின் ராணுவ வலிமையைக் குறைக்க இஸ்ரேல் கணிசமான முயற்சிகளை மேற்கொண்டிருந்தாலும், ஆயதுல்லாவிடம் இன்னமும் ஆயுதங்கள் உள்ளன.

நிலைமை வேகமாக மோசமடையக் கூடும்.

இப்போது காத்திருப்பு தொடங்குகிறது. தனது அணு ஆயுத திட்ட மகுடத்தின் முத்தாக கருதப்படும் ஃபோர்டோ உட்பட மூன்று நிலைகள் மீதான தாக்குதல்களுக்கு இரான் எப்படி பதிலளிக்கப்போகிறது?

அமெரிக்க தாக்குதல்கள் பேச்சுவார்த்தையில் இரான் மேலும் இறங்கிவர வழிவகுக்கும் என டிரம்ப் நம்புவதாக தோன்றுகிறது.

ஆனால் இஸ்ரேலின் தாக்குதலில் இருக்கும் போது பேச்சுவார்த்தை நடத்த விரும்பாத ஒரு நாடு, அமெரிக்கா குண்டுமழை பொழியும் போது பேசுவதற்கு தயாராக இருக்குமா என்பது கேள்விக்குறிதான்.

அமெரிக்காவின் தாக்குதல் தனித்துவமான வெற்றி பெற்றதாக டிரம்ப் குறிப்பிடுவதாகத் தெரிகிறது. அப்படி இல்லாவிட்டால், மீண்டும் தாக்குதல் நடத்துவதற்கான அழுத்தம் அதிகரிக்கும், மிகக் குறைந்த ராணுவ வெற்றிக்கு டிரம்ப் அதிக அரசியல் அபாயங்களை எதிர்கொள்ள நேரிடும்.

டிரம்ப் சந்திக்கும் அரசியல் எதிர்வினைகள் என்ன?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை.உள்நாட்டு அரசியல் கவலைகளுடன் சர்வதேச பாதுகாப்பும் இந்த அபாயங்களில் அடங்கும்.

இரான் மீதான அமெரிக்க தாக்குதல் என்ற கருத்துக்கு ஜனநாயக கட்சியினர் மட்டுமல்லாது, டிரம்பின் “அமெரிக்கா முதலில் (America First),” இயக்கத்திற்குள்ளேயும் ஏற்கனவே கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது.

தனக்கு நெருக்கமான மூன்று ஆலோசகர்கள் உடன் தனது உரையை நிகழ்த்திய டிரம்ப்பின் வழக்கத்திற்கு மாறான முடிவு, தனது கட்சிக்குள் ஒற்றுமை இருப்பதாக காட்டிக்கொள்ளும் ஒரு முயற்சியாக இருக்கக்கூடும்.

குறிப்பாக வெளியுறவு கொள்கையில் அமெரிக்கா மேலும் கட்டுப்பாடுடன் நடந்துகொள்ள வேண்டும் என்பதை வெளிப்படையாக பேசிக்கொண்டிருக்கும் வான்ஸ், டிரம்ப் இன்னமும் பிற நாடுகளின் விவகாரங்களில் தலையீடு செய்யாதவர்தான் எனவும் அவரது ஆதரவாளாவர்கள் அவரை நம்ப வேண்டும் எனவும் அண்மையில் சமூக ஊடகங்களில் பதிவிட்டிருந்தார்.

இந்த தாக்குதல் ஒருமுறை நடவடிக்கையாக இருந்தால், தனது சொந்த முகாமில் ஏற்பட்டுள்ள பிளவுகளை சீர்படுத்த டிரம்பால் முடியலாம்.

ஆனால் இது அமெரிக்காவை இதைவிட பெரிய மோதல்களுக்குள் இழுத்தால், அதிபர் தனது சொந்த தளபதிகள் மத்தியில் கலகத்தை எதிர்கொள்ள நேரலாம்.

தனது முதல் பதவிக்காலத்தில் போர் எதையும் தொடங்கவில்லை என மார்தட்டிக்கொண்டவரும், கடந்த ஆண்டு தேர்தல் பரப்புரையின் போது வெளிநாட்டு யுத்தங்களில் அமெரிக்காவை ஈடுபடுத்திய முந்தைய ஆட்சியாளர்களுக்கு எதிராகப் பரப்புரை செய்தவருமான ஒரு அதிபருக்கு சனிக்கிழமை நடைபெற்ற தாக்குதல் ஒரு ஆக்ரோஷமான நடவடிக்கை.

டிரம்ப் தனது நடவடிக்கையை எடுத்துவிட்டார். ஆனால் இது எங்கு இட்டுச் செல்லும் என்பது அவரது கட்டுப்பாட்டில் இல்லை.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு