இரானுக்கு ரஷ்யா உதவாதது ஏன்? மத்திய கிழக்கில் சண்டை நீடித்தால் ரஷ்யாவுக்கு என்ன லாபம்?

பட மூலாதாரம், Simon Dawson/Bloomberg via Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இஸ்ரேல், மற்றும் இரான் ஆகிய இரு நாடுகளின் தலைவர்களுடன் பேசினார்எழுதியவர், அபே குமார் சிங்பதவி, பிபிசி செய்தியாளர்26 நிமிடங்களுக்கு முன்னர்

சிரியாவில் பஷர் அல்-அசாத் ஆட்சி முடிவுக்கு வந்ததுடன் 2024ஆம் ஆண்டு நிறைவடைந்தது. பஷர் அல்-அசாத் சிரியாவில் ஆட்சிப் பீடத்தில் இருந்து அகற்றப்பட்டது ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கு எந்த வகையிலும் நன்மையாக இருக்கவில்லை.

மேற்கு ஆசியாவில் ரஷ்யா செல்வாக்குடன் இருப்பதற்கு பஷர் அல் அசாத், சிரியாவில் அதிகாரத்தில் இருப்பது முக்கியமானதாக இருந்தது. ஆனால் கடந்த ஆண்டு டிசம்பரில் அசாத் ரஷ்யாவில் தஞ்சமடைய வேண்டிய நிலை ஏற்பட்டது. ரஷ்யாவே யுக்ரேனுடன் பிப்ரவரி 2022 முதல் போரிட்டுக் கொண்டிருக்கிறது.

தற்போது இரான் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலுக்கு அமெரிக்காவின் முழு ஆதரவு இருக்கிறது. அமெரிக்காவே இரானின் 3 அணுசக்தி தளங்கள் மீது குண்டுகளை வீசியுள்ளது. இரானிலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால், மேற்காசியாவில் ரஷ்யாவின் எஞ்சியிருக்கும் செல்வாக்கு மேலும் குறையும் என பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

இரான் சிக்கலில் இருக்கிறது, ஆனால் ரஷ்யா அதற்கு உதவவில்லை. இது போன்ற ஒரு சூழ்நிலையில், ரஷ்யா பற்றிய பல கேள்விகள் எழுப்பப்படுகின்றன. முதலாவது, ரஷ்யா ஏன் இரானுக்கு உதவவில்லை? இரண்டாவது, இஸ்ரேலுக்கு எதிரான யுத்தத்தில் இரான் தோல்வியடைந்தால் ரஷ்யாவின் மீது அது என்ன தாக்கத்தை ஏற்படுத்தும்?

இந்த வருடத்தில், ரஷ்ய அதிபர் விளாடிமர் புதின் மற்றும் இரானின் அதிபர் மசூத் பெஷெஷிகியன் இடையே ஒரு மூலோபாய ஒத்துழைப்பு ஒப்பந்தமும் கையெழுத்தானது. இந்த ஒப்பந்தம் இரு நாடுகளிடையே பாதுகாப்பு ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்து பேசுகிறது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பட மூலாதாரம், TR/AFP via Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் இரானின் உச்சத் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயி (கோப்புப் படம்)ரஷ்யாவின் அதிகாரப்பூர்வ நிலைப்பாடு என்ன?

இஸ்ரேல்-இரான் யுத்தத்தை பொருத்தவரை ஒரு சமன்பாடும், எச்சரிக்கையும் கொண்ட நிலைப்பாட்டை ரஷ்யா எடுத்திருப்பதாக தோன்றுகிறது. இரான் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலை ரஷ்யா எதிர்க்கிறது. ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரானுக்கு ரஷ்யா உதவவில்லை.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவன கூற்றின்படி, மோதல் தொடங்கிய ஜூன் 13ஆம் தேதி இஸ்ரேல் மற்றும் இரான் ஆகிய 2 நாடுகளின் தலைவர்களுடன் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் தொலைபேசி மூலம் உரையாடினார்.

டெஹ்ரானுக்கு எதிரான தாக்குதலை மாஸ்கோ கண்டிப்பதாக இரான் அதிபரிடம் புதின் தெரிவித்தார். இஸ்ரேல் பிரதமரிடம் பேசும்போது, இரானின் அணு ஆயுதம் தொடர்பான கவலைகள் ராஜீய நடவடிக்கைகள் மூலம்தான் தீர்க்க முடியும் என அவர் வலியுறுத்தினார்.

சில நாட்களுக்கு பின்னர் ரஷ்யாவின் அரசு செய்தி நிறுவனமான டாஸ், ஐக்கிய அரபு அமீரகத்தின் அதிபர் முகமது பின் ஜையத் அல் நஹ்யானுடனான தொலைபேசி உரையாடலில் இஸ்ரேல் மற்றும் இரான் இடையேயான பேச்சுவார்த்தையில் மத்தியஸ்தம் செய்ய தயாராக இருப்பதாக புதின் குறிப்பிட்டதாக செய்தி வெளியிட்டது.

அதாவது, இந்த யுத்தத்தில் ராணுவ தலையீட்டை தவிர்த்து ராஜீய வழியை பின்பற்ற ரஷ்யா விரும்புகிறது என்பதையே இதுவரையான அதன் அணுகுமுறை காட்டுகிறது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.இரானுக்கு ரஷ்யா உதவாதது ஏன்?

டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தின் ரஷ்யா மற்றும் மத்திய ஆசிய ஆய்வுகளுக்கான மையத்தில் துணை பேராசிரியராக இருப்பவர் ராஜன் குமார்.

தாமே யுக்ரேன் போரில் ஈடுபட்டிருப்பதால் அமெரிக்காவுடனான உறவை மோசமாக்கிக் கொள்ள ரஷ்யா விரும்பவில்லை என்பதுதான் இதற்கு மிகப்பெரிய காரணம் என அவர் தெரிவித்தார்.

ராஜன் குமார் மேலும் பேசுகையில், “தற்போது ரஷ்யாவுக்கு ஒரு முக்கிய கூட்டாளியாக இரான் மாறியுள்ளது. இந்த வேளையில் யுக்ரேனில் போர் இல்லாமலிருந்தால், அதுவும் சிரியாவிலிருந்து ரஷ்யா விலகியிருக்கும் இந்த வேளையில், ரஷ்யா முழுமையாக இரானுடன் நின்றிருக்க வாய்ப்பு இருக்கிறது. இரண்டாவதாக ரஷ்யாவுக்கே ஆயுதங்கள் தேவைப்படுவதால், அதனால் இரானுக்கு அதிக ராணுவ உதவி அளிக்க முடியாது. முன்னதாக டிரோன் உள்ளிட்ட சில ஆயுதங்களை இரானிடமிருந்து ரஷ்யா பெற்றது, ஆனால் தற்போது அந்த நிலை நேரெதிராக மாறியுள்ளது, இரானுக்கே உதவி தேவைப்படுகிறது.

யுக்ரேனுக்கு எதிரான போரில் ரஷ்யாவுக்கு முக்கியமானவையாக இருந்த டிரோன்களையும் இரான் ரஷ்யாவுக்கு அளித்தது. எஸ்-300 தற்காப்பு அமைப்பு போன்ற ரஷ்யாவின் சில ஆயுதங்கள் இன்னமும் இரானிடம் உள்ளன.” என்றார்.

“மற்றொரு காரணம் ரஷ்யா டிரம்புடன் பேச்சுவார்ர்தை நடத்தியதுடன் அமெரிக்காவுடனான பேச்சு நடத்துவதற்கான சாத்தியத்தை தக்க வைக்க ரஷ்யா விரும்புகிறது. இதைப் போன்ற ஒரு சூழ்நிலையில் எந்த ஒரு பக்கமும் வெளிப்படையாக சார்பெடுப்பதை ரஷ்யா தவிர்க்கிறது.” என்றும் அவர் கூறினார்.

பட மூலாதாரம், Majid Saeedi/Getty Images

படக்குறிப்பு, டெஹ்ரான் மீது இஸ்ரேல் தாக்குதலின் புகைப்படம் (13 ஜூன் 2025)ரஷ்யாவுக்கு என்ன லாபம்?

இருந்தாலும், இந்த போரின் மூலம் ரஷ்யாவுக்கு சில நன்மைகள் ஏற்பட வாய்ப்பு இருப்பதாகவும் கருதப்படுகிறது. எடுத்துக்காட்டாக, சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் ரஷ்யாவுக்கு எண்ணெய் விற்பனை மூலம் கிடைக்கும் வருவாய் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

“ரஷ்யாவுக்கும் சில சாதகங்கள் உள்ளன. உதாரணமாக, கச்சா எண்ணெய் விலை அதிகரித்தால், ரஷ்யா பொருளாதார ரீதியாக பயனடையும்.” என்றார் ராஜன் குமார்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் அமைதியை நிலைநாட்டுபவராக தன்னை நிலைநிறுத்திக் கொள்ளவும் ரஷ்யா முயற்சி செய்து வருகிறது.

இருப்பினும், அமெரிக்க அதிபர்டொனால்ட் டிரம்பின் அண்மைய கருத்துகள், ரஷ்யாவின் மத்தியஸ்த முயற்சிகளை ஆதரிக்கும் மனநிலையில் அவர் இல்லை என்பதையே காட்டுகின்றன என ராஜன் குமார் நம்புகிறார். ரஷ்யாவின் மத்தியஸ்தத்திற்கு இடமில்லாத முழு அழுத்தத்தை தரும் உத்தியையே டிரம்ப் பின்பற்றுகிறார்,

இரான் இந்த மோதலில் பலவீனமடைந்தால், ரஷ்யாவும் இழப்புகளை சந்திக்கும் என்கிறார் ராஜன் குமார். “இரான் பலவீனமடைந்தால், அமெரிக்காவும் இஸ்ரேலும் மேற்காசியாவில் முழுமையாக ஆதிக்கம் செலுத்தலாம். இதை ரஷ்யாவோ, சீனாவோ, துருக்கியோ, இஸ்லாமிய நாடுகளோ விரும்பவில்லை.” என்பது அவரது கருத்து.

கடந்த 6 மாதங்களில், ரஷ்யா ஏற்கனவே மேற்காசியாவில் ஒரு முக்கிய கூட்டாளியை இழந்திருக்கிறது. சிரியாவின் அதிபத் பஷர் அல் அசாத் டிசம்பர் மாதம் பதவியிலிருந்து அகற்றப்பட்ட போது ரஷ்யா அவருக்கு அடைக்கலம் கொடுத்தது.

தற்போது இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் போரில் மற்றுமொரு மூலோபாய கூட்டாளியை இழக்கும் அபாயத்தை ரஷ்யா எதிர்கொள்கிறது.

பட மூலாதாரம், Contributor/Getty Images

படக்குறிப்பு, சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் (கோப்புப் படம்)ரஷ்யாவின் கவலைகள்

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் பிரிக்ஸ் அமைப்புகள் இரானை ஆதரிக்க முன்வராதது ஏன்? இந்த இரண்டு அமைப்புகளிலும் இரான் ஒரு அங்கமாக உள்ளது.

இதற்கு பதிலளித்த ராஜன் குமார், “இந்த அமைப்புகளில் அரசியல் மற்றும் பொருளாதார அளவில் ஒத்துழைப்பு உள்ளது, இவை ராணுவ கூட்டணியல்ல” என கூறினார்.

“மேற்கத்திய நாடுகளுடன் நேரடி மோதலில் ஈடுபட விரும்பாத ஜனநாயக நாடுகளும் பிரிக்ஸ் அமைப்பில் உள்ளன. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நிச்சயம் மேற்கத்திய நாடுகளுக்கு எதிரானதுதான், ஆனால் அது பாதுகாப்பு குறித்து அறிக்கைகள் மட்டும் வெளியிடும், ராணுவ நடவடிக்கைகளை எடுக்காது” என்கிறார் அவர்.

“மேற்கத்திய நாடுகளோடு தொடர்புடைய தங்களது நலன்களை முற்றிலும் விட்டுவிட ரஷ்யா மற்றும் சீனா ஆகிய 2 நாடுகளும் விரும்பவில்லை. ரஷ்யா மீது அமெரிக்கா இரண்டாம் கட்ட தடைகளை விதித்தால், இந்தியா, சீனா போன்ற நாடுகள் பாதிக்கப்படுவதுடன், ரஷ்யாவின் பொருளாதாரம் ஒரு பெரிய இழப்பை சந்திக்கும். எனவே இந்த நாடுகளால வெறுமனே பேசமட்டுமே முடியும்.” என்று ராஜன் குமார் தெரிவித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனேயிபலவீனமடைந்த இரான்

ஆங்கில நாளிதழான ‘தி இந்து’வின் சர்வதேச விவகாரங்கள் பிரிவு ஆசிரியர் ஸ்டான்லி ஜானி, “இரான் இந்தப் போரில் தோல்வியடைந்தால், மேற்காசியாவில் இஸ்ரேலின் செல்வாக்கு மேலும் அதிகரிக்கும். சிரியாவில் பஷார் அல் அசாத் ஏற்கனவே பதவிலிருந்து தூக்கியெறியப்பட்டுவிட்டார். இரான் ஆதரவு பெற்ற ஆயுதக் குழுக்கள் ஏற்கனவே பலவீனமடைந்துவிட்டன. காஸாவை இஸ்ரேல் ஏற்கனவே அழித்துவிட்டது. மேற்குக் கரையில் இஸ்ரேல் தனது விருப்பப்படி என்ன வேண்டுமானாலும் செய்யும். இரான் பலவீனமடைந்தால், மேற்காசியாவில் ரஷ்யாவின் எஞ்சிய செல்வாக்கும் சுருங்கிவிடும். வளைகுடாவில் உள்ள அமெரிக்கக் கூட்டாளிகளின் எண்ணெயை நம்பவேண்டிய நிலைக்கு சீனா தள்ளப்படும். ” என்று எழுதியுள்ளார்.

இதைத் தவிர, இரான் பலவீனமடைந்தால், ‘பலதுருவ உலகம்’ என்ற கருத்து குலைந்துவிடுமா என்றொரு கேள்வி உள்ளது.

ரஷ்யா, இந்தியா உட்பட பல நாடுகள் பலதுருவ அமைப்புடைய ஒரு உலகம் குறித்து பேசி வருகின்றன.

இதைப் போன்ற ஒரு சூழலில், இரான் மற்றும் இஸ்ரேல் இடையே நடைபெறும் யுத்தம் இந்த சிந்தனைக்கு ஒரு பின்னடைவா?

இந்த கேள்விக்கு பதிலளித்த ராஜன் குமார், “அமெரிக்கா இந்த யுத்தத்தில் வெளிப்படையாக குதித்தால் இரான் அரசு நிலைத்திருப்பது கடினம். ஆனால் அதனால் அமெரிக்காதான் வெற்றி பெறும் என பொருளில்லை.” என்றார்.

“மேற்கத்திய தலையீட்டுக்குப் பிறகு ஆப்கானிஸ்தான், இராக், லிபியா, சிரியா என எல்லா பக்கமும் நிலைமை மோசமடைந்துள்ளது. அடிப்படைவாத சக்திகள் ஆட்சிக்கு வந்து, பயங்கரவாதம் அதிகரித்தது. இரானின் தோல்வி, அகதிகள் நெருக்கடி, நிலையற்ற தன்மை, பயங்கரவாத எதிர்ப்பு என இதே சுழற்சி மேற்கு ஆசியாவில் தொடங்கக்கூடும்” என்று ராஜன் குமார் தெரிவித்தார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு