Wednesday, August 20, 2025
Home tamil newsபின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது!

பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது!

by ilankai
0 comments

வடமாகாணத்தில் பின்தங்கிய பிரதேசங்களில் எந்தவொரு பாடத்துக்கும் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது எனவும் அதை உறுதிப்படுத்தவேண்டியது வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பு என வடமாகாண ஆளுநர் பணிப்பாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
வடக்கு மாகாண கல்வி பண்பாட்டலுவல்கள் விளையாட்டுத்துறை இளைஞர் விவகார அமைச்சின் கீழ் இந்த ஆண்டு நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் நிதி மற்றும் பௌதீக முன்னேற்றம் தொடர்பில் ஆராயும் மாதாந்தக் கலந்துரையாடல் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது.கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர்,

இம்முறை அதிகளவான திட்டங்களுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றை முழுமையாகச் செலவு செய்யவேண்டும் என அறிவுறுத்தினார்.

இதன் பின்னர் அமைச்சின் கீழ் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்கள் தொடர்பான மீளாய்வு இடம்பெற்றது.

தொடர்ந்து கல்வித் திணைக்களம், விளையாட்டுத் திணைக்களம், பண்பாட்டலுவல்கள் திணைக்களம் என்பவற்றால் நடைமுறைப்படுத்தப்படும் திட்டங்களின் முன்னேற்றங்கள் தொடர்பாக ஆராயப்பட்டன.

banner

இதன்போதுள்ள சவால்கள் தொடர்பிலும் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு அதற்குரிய தீர்வுகளும் வழங்கப்பட்டன.

வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் பல்வேறு திட்டங்களின் கீழ் ஆரம்பிக்கப்பட்டு இடைநடுவிலுள்ள கட்டடங்களை ஆய்வு செய்து அவற்றில் தேவையானவற்றை நிறைவுறுத்துவதற்குரிய ஒழுங்குகளை மேற்கொள்ளுமாறு ஆளுநர் பணிப்புரைவிடுத்தார்.

மேலும், ஆசிரிய வளப்பங்கீடு தொடர்பில் வலயக் கல்விப் பணிப்பாளர்களே பதிலளிக்க வேண்டியவர்கள் எனக் குறிப்பிட்ட ஆளுநர், பின்தங்கிய பிரதேசங்களில் எந்தவொரு பாடத்துக்கும் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது எனவும் அதை உறுதிப்படுத்தவேண்டியது வலயக் கல்விப் பணிப்பாளர்களின் பொறுப்பு என்றும் சுட்டிக்காட்டினார்.

வடக்கிலுள்ள தேசியப் பாடசாலைகள் சிலவற்றால் எழுந்துள்ள சவால்கள் தொடர்பிலும் ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டது.

மேலும், தவணைப் பரீட்சைகளுக்கு பாடசாலை மாணவர்களிடம் நிதியை அறவிடாமல் மாகாண நிதியை வழங்குவது தொடர்பாகவும் இதன்போது ஆராயப்பட்டது.

மேலும், கடந்த காலங்களில் முன்னெடுக்கப்பட்ட அனைத்து ஒழுக்காற்று விசாரணைகளையும் எவ்வளவு விரைவாக நடத்தி முடிக்க முடியுமோ அதைச் செய்து முடிக்குமாறும், எதிர்காலத்தில் ஒழுக்காற்று விசாரணைகளை எவ்வளவு குறுகிய காலத்தில் செய்து முடிக்க முடியுமோ அதற்குரிய ஒழுங்குகளையும் விரைந்து தயாரிக்குமாறும் ஆளுநர் பணித்தார்.

வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலளர், பிரதிப் பிரதம செயலாளர் – நிர்வாகம், நிதி, திட்டமிடல், கல்வி, விளையாட்டு, பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர்கள்,  வலயக் கல்விப் பணிப்பாளர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர்.

The post பின்தங்கிய பிரதேசங்களில் ஆசிரியர் இல்லாத நிலைமை இருக்கக் கூடாது! appeared first on Global Tamil News.

You may also like