‘சாதியின் கோரத்தை இனி யாரும் காணக்கூடாது’ – ஊர்கூடி நடத்திய குடமுழுக்கில் நெகிழும் பட்டியலின மக்கள்

பட மூலாதாரம், Ramji

எழுதியவர், நித்யா பாண்டியன்பதவி, பிபிசி தமிழ் 10 நிமிடங்களுக்கு முன்னர்

தமிழ்நாட்டில் தொடர்ச்சியாக பட்டியல் சமூக மக்களின் கோவில் பிரவேச நிகழ்வுகள் போராட்டங்களிலும் பிரச்னைகளிலும் முடிகின்ற சூழலில் சேலம் மாவட்டம் பள்ளிப்பட்டி கிராமத்தில் பட்டியல் சமூக மக்கள் முதல் முறையாக மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்திய நிகழ்வு பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜூன் 8, 9 ஆகிய தினங்களில் கோலாகலமாக அந்த ஊர் மக்கள் குடமுழுக்கு விழாவைச் சிறப்பித்துள்ளனர்.

கோவில் திருவிழா காலத்தில் அச்சிடப்படும் டி-சர்ட்கள், பேனர்கள் போன்றவற்றில் சாதிப் பெயர் ஏதுமின்றி, சாதிய பெருமை பேசும் பாடல்கள் ஏதுமின்றி, ஒற்றுமையாக குடமுழுக்கு நிகழ்ச்சியை நடத்தியிருப்பது நம்பிக்கையளிப்பதாக இருக்கிறது என்று உள்ளூர் மக்கள் தெரிவிக்கின்றனர்.

சாமி சிலையின் பல்லக்கைத் தூக்குவதில் இருந்து கோவில் கோபுர கலசத்தில் நீரைத் தெளிப்பது உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளிலும் அனைத்து தரப்பு மக்களும் சமமாகப் பங்கேற்றனர். அறுபது ஆண்டுகள் கழித்து முதல் முறையாக பட்டியல் சமூக மக்கள் மாரியம்மன் கோவிலில் வழிபாடு நடத்தியது எப்படி?

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும் வழிபாட்டு உரிமைக்காகப் போராடிய பட்டியல் சமூக மக்கள்

சேலம் மாவட்டம் அயோத்திபட்டனம் ஒன்றியத்தில் அமைந்துள்ளது பள்ளிப்பட்டி கிராமம். அந்த கிராமத்தில் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சாதி இந்துக்கள் சுமார் 2000க்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர். அதே ஊரில் பட்டியலின மக்கள் சுமார் 300 பேர் வசித்து வருகின்றனர்.

அந்த ஊரில் 60 ஆண்டுகளுக்கு முன்பு மாரியம்மன் கோவில் ஒன்று கட்டப்பட்டது. இத்தனை ஆண்டுகளாக அந்தக் கோவிலில் பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமை மறுக்கப்பட்டு வந்தது. கடந்த 2010ஆம் ஆண்டு அந்தப் பழமையான கோவிலை இடித்துவிட்டுப் புதிய மாரியம்மன் கோவிலைக் கட்ட ஊர்மக்கள் திட்டமிட்டனர்.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

பிபிசி தமிழிடம் பேசிய உள்ளூர் கிராம மக்கள், அந்த கோவிலின் பெரும்பான்மைப் பணிகள் முடிக்கப்பட்டு, முழுமை பெறாமல் சில ஆண்டு காலம் அப்படியே இருந்தது. அதன் பின்னர் ஊர் மக்கள் அனைவரிடம் இருந்தும் நிதி திரட்டி இந்தக் கோவில் பணிகளை முடிக்க ஆர்வம் காட்டினோம் என்று தெரிவிக்கின்றனர்.

நான்கு முக்கியக் கோரிக்கைகள்

பட மூலாதாரம், Ramji

படக்குறிப்பு, அனைத்து மக்களும் ஒன்றிணைந்து கோவில் குடமுழுக்கு விழாவை சிறப்பிக்க முடிவெடுத்த தருணம் “கோவில் கட்டி முடித்த பிறகு நடைபெறும் குடமுழுக்கு நிகழ்வில் பட்டியலின மக்களின் சம பங்களிப்பு இருக்க வேண்டும் என்பது தொடர்பாகப் பல கட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றன. எங்கள் தரப்பில் இருந்து நாங்கள் நான்கு கோரிக்கைகளை மட்டுமே முன்வைத்தோம்” என்று தெரிவிக்கிறார் பட்டியல் பிரிவைச் சேர்ந்த ராம்ஜி. அந்தக் கோரிக்கைகள்,

பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமையை உறுதி செய்ய வேண்டும்விழா கமிட்டியில் சம அளவிலான பொறுப்புகளை பட்டியலின மக்களுக்கு வழங்க வேண்டும்கோவிலில் நடைபெறும் பொங்கல் நிகழ்ச்சியில் அனைவரும் பங்கேற்க வழி வகை செய்ய வேண்டும் கோவில் திருவிழாவின்போது சாமி சிலை தூக்குவதைப் பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர்கள் மட்டுமே ஆண்டாண்டு காலமாகச் செய்து வருகின்றனர். ஆனால் அந்த வழக்கத்திற்கு முற்றுப்புள்ளி வைத்து, சிலைகளை வண்டியில் வைத்து பவனி அழைத்து வர வேண்டும்.”ஆரம்பத்தில் இதற்கு ஒப்புதல் தெரிவித்தனர். பிறகு ஒவ்வொரு வீடாக கட்டுமானப் பணிகளுக்காக ரூ.5000 வசூலிக்கப்பட்டது. பின்னர் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டன,” என்று தெரிவிக்கிறார் ராம்ஜி.

“ஆரம்பத்தில் சிறு சிறு கோவில் நிகழ்வுகளில் பட்டியலின மக்கள் புறக்கணிக்கப்படுவதாக உணர்ந்தோம். பிறகு சாதி இந்து சமூகங்களைச் சேர்ந்த பெண்கள் பால்குடம் போன்றவற்றை கோவிலுக்கு மேல்புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பட்டியலின பெண்கள் கீழ் புறத்தில் இருந்து எடுத்து வர வேண்டும் என்றும் பேச்சுகள் அடிபடத் தொடங்கின,” என்று விவரிக்கும் ராம்ஜி, பிறகு மாவட்ட நிர்வாகத்தின் தலையீடுதான் இதற்குச் சிறந்த தீர்வாக இருக்கும் என்று நிர்வாகத்தை நாடியதாகக் குறிப்பிடுகிறார்.

ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தின் முடிவுகள்

பட மூலாதாரம், Ramji

படக்குறிப்பு, மாரியம்மன் சிலை பவனி நிகழ்வில் பங்கேற்ற ஊர்ப் பொதுமக்கள் இதைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகம் சார்பில் இரு தரப்பினருக்கும் இடையே வட்ட நிர்வாகம் மற்றும் வட்டாட்சியர் தலைமையில் மே 29ஆம் தேதி ஒருங்கிணைப்புக் குழு கூட்டம் நடத்தப்பட்டது. அந்தக் கூட்டத்தில் விழா கமிட்டி குழுவினர், கோவில் நிர்வாகிகள் மற்றும் இரு தரப்பு மக்களும் கலந்து கொண்டனர்.

அப்போது எடுக்கப்பட்ட மூன்று முக்கிய முடிவுகள் தொடர்பான விரிவான அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகம் வெளியிட்டது. அதன்படி:

கோவில் குடமுழுக்கு விழாவில், பள்ளிப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வகுப்பினர்களுக்கும் சமமான உரிமைகள் வழங்கப்பட வேண்டும். கோவில் விழாக் குழுவில் அனைத்து வகுப்பினரும் உறுப்பினராக இருக்க வேண்டும். அனைவரும் ஒற்றுமையுடன் குடமுழுக்கு விழாவை நடத்த வேண்டும். சாமி ஊர்வலத்திற்கான வாகன ஏற்பாட்டைப் பொதுவான முறையில் செய்ய வேண்டும். வாட்ஸ்ஆப் குரூப்பில் சாதி தொடர்பான பதிவுகள் எதையும் பதிவிடக்கூடாது. சாமி ஊர்வலம், வழிபாட்டு முறைகள் என அனைத்திலும் சாதிப் பாகுபாடின்றி அனைத்து வகுப்பினரும் ஒற்றுமையுடன் கலந்துகொள்ள வேண்டும்.திருவிழா சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்னை ஏற்படாத வண்ணம் நடைபெற அனைத்து ஒத்துழைப்பையும், மேற்படி இருதரப்பினரும் வழங்க வேண்டும். இந்த முடிவுகள் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய சேலம் மாவட்ட மக்கள் தொடர்பு அலுவலர், “மக்கள் மத்தியில் ஏற்றத்தாழ்வு பார்க்கக் கூடாது என்பதில் நாங்கள் உறுதியாக இருக்கின்றோம். அதன் அடிப்படையில், அமைதியான முறையில் வழிபாடு நடத்த மக்கள் அனைவரும் முன்வந்தனர்” என்று மட்டும் கூறினார்.

‘அடுத்த தலைமுறையினர் இதனால் பாதிக்கக் கூடாது’

பட மூலாதாரம், Ramji

படக்குறிப்பு, தேவையற்ற சர்ச்சைகள் மற்றும் பிரச்னைகளுக்கு முற்றுப் புள்ளி வைப்பதற்காக மாவட்ட நிர்வாகத்திடம் முறையிட்ட ஊர் பொதுமக்கள் இந்த விவகாரம் தொடர்பாக பிபிசி தமிழிடம் பேசிய விழாக் கமிட்டி குழுவின் தலைவர் காசி விஸ்வநாதன் அடுத்து வரும் தலைமுறையினர் சாதிய கொடுமை மற்றும் தீண்டாமையின் வாசமின்றி வளர வேண்டும் என்று கூறினார்.

“தமிழ்நாடு முழுவதும் எண்ணற்ற இடங்களில் பட்டியலின மக்களின் வழிபாட்டு உரிமைகள் மறுக்கப்படும் நிகழ்வுகள் தொடர்ச்சியாக நிகழ்ந்த வண்ணம் இருப்பதை நாங்கள் நன்றாக உணர்ந்துள்ளோம். ஆனால் கடவுள் மற்றும் வழிபாட்டு உரிமையானது அனைவருக்கும் பொதுவானது. ஒவ்வொருவருக்கும் தனிப்பட்ட வேண்டுதல்கள் இருக்கும். அதை கடவுளிடம் முறையிட கோவில்களுக்கு வருகின்றனர். பிற்போக்குத் தன்மை கொண்ட சாதிய கட்டுப்பாடுகளை நாங்கள் உடைக்க விரும்பினோம்,” என்று தெரிவித்தார்.

“மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த அவர், கோவில் திருவிழாவின்போது உருவாக்கப்பட்ட வாட்ஸ்ஆப் குழுக்களில் சாதிய பெருமைகளைப் பேசும் வீடியோக்கள், சாதிப் பெயர்கள் மற்றும் பாடல்கள் போன்றவை பகிரப்படுவதை மறுத்தோம்.

மேற்கொண்டு பேனர்களிலும் சாதிப் பெயர்கள் ஏதும் இடம் பெறாமல் அச்சிடப்பட வேண்டும் என்றும் முடிவெடுத்தோம். அதை அனைவரும் முறையாகப் பின்பற்றினோம். மக்களும் எந்தவித எதிர்ப்பும் கூறாமல் மகிழ்வுடன் பங்கேற்றனர்,” என்றார்.

இனி வருங்காலங்களிலும், அனைத்து கோவில் திருவிழாக்களிலும் இத்தகைய போக்கே தொடரும் என்றும் காசி விஸ்வநாதன் குறிப்பிட்டார்.

அனைத்து கோவில் நிகழ்வுகளிலும் பங்கேற்ற பட்டியலின மக்கள்

பட மூலாதாரம், Ramji

படக்குறிப்பு, குடமுழுக்கு நிகழ்வின்போது ஊர்ப் பொதுமக்கள் அனைவரும் சாதி வேறுபாடின்றி பங்கேற்றனர். ஜூன் 8, 9 ஆகிய தேதிகளில் நடைபெற்ற மாரியம்மன் கோவில் திருவிழாவின்போது அனைத்துப் பிரிவினரும் ஒன்றாகச் சேர்ந்து பால் குடம் எடுத்துள்ளனர்.

“அனைவரும் ஒன்றாக பால் குடம் எடுத்தோம். பொங்கலும் ஒன்றாகப் படையலிடப்பட்டது. மேலும் மாரியம்மன் சிலை பவனியின்போது அந்தச் சிலையை பட்டியல் சமூகத்தைச் சேர்ந்தவர்களும் தூக்கிச் சென்றனர். எங்கள் நீண்டகால வேண்டுகோளுக்கு இணங்க அனைத்தும் நடைபெற்றது எங்களுக்குப் பெரும் மகிழ்ச்சியை அளிக்கிறது,” என்று கூறினார் ராம்ஜி.

கேள்விக்குள்ளாகிறதா பட்டியலின வழிபாட்டு உரிமைகள்?

“பட்டியலின மக்களுக்கு வழிபாட்டு உரிமைகள் காலம் காலமாகப் பல்வேறு இடங்களில் மறுக்கப்பட்டு வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. ஆனால் இதில் சில மாற்றங்களையும், சேலம் கிராமத்தில் நடந்திருப்பது போன்று நேர்மறையான மாற்றங்களையும் காண்பது மக்கள் வாழ்வில் ஏற்பட்டிருக்கும் முன்னேற்றத்தையும், மக்களுக்குக் கிடைத்திருக்கும் வெளியுலக அனுபவத்தையும் காட்டுகிறது,” என்கிறார் அசோகா பல்கலைக்கழகத்தில் தமிழ்நாட்டில் வெளியான தலித் இதழ்கள் தொடர்பான ஆய்வுகளை மேற்கொண்டு வரும் ஆய்வு மாணவரான ஆர். யுவராஜ்.

தமிழ்நாடு பட்டியலின மக்களின் உரிமைகள் தொடர்பாக ஏற்பட்டு வரும் மாற்றங்களைக் கவனித்து வரும் அவர், “இதுபோன்ற கோவில் வழிபாட்டு உரிமைகள் அனைத்து இடங்களிலும் சாத்தியம் இல்லை,” என்றும் குறிப்பிட்டார்.

“பல சமூகத்தினர் சேர்ந்து வாழும் பகுதி என்பதால் இணக்கமாகச் செல்லும் சூழல் ஏற்படுகிறது. ஒரு தொழில்மயமாக்கப்பட்ட பகுதி என்றால் ஒரே தொழிலைச் சார்ந்து பல சாதிகளைச் சேர்ந்த மக்கள் வசிக்கும் பகுதியில், பழைய தீண்டாமை பழக்கவழக்கங்கள் எளிமையாக முடிவுக்கு வருகிறது. ஏனெனில் அவர்கள் தொழில் ரீதியாகவும், வாழ்வாதாரத்திற்கும் ஒருவரை ஒருவர் சார்ந்து வாழ்கின்றனர்.

ஆனால் ஒரேயொரு சாதி இந்து பிரிவைச் சேர்ந்தவர்கள் பெரும்பான்மையுடன், விவசாயம் மற்றும் விவசாயம் சார்ந்த தொழிலில் ஈடுபட்டு, வாழ்வும் வருமானமும் ஒரு எல்லைக்குள்தான் என்று வாழும் மக்களைக் கொண்ட பகுதிகளில் சாதிய கட்டுப்பாடுகள் இன்னும் இறுக்கமாகவே இருக்கின்றன,” என்பதையும் அவர் தெளிவுப்படுத்தினார்.

அதோடு, சமூக நீதிக்கான பயணம் மிக நீண்டது எனவும், சேலம் மாவட்டத்தில் நடைபெற்ற இந்தக் கோவில் பிரவேசம் ஓர் இளைப்பாறல் எனவும் யுவராஜ் கூறுகிறார்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு