Wednesday, August 20, 2025
Home பிபிசிதமிழிலிருந்துஅறிமுகமில்லாத புதிய நபர்களுடன் எளிதில் பேசிப் பழக உதவும் 5 வழிகள் – BBC News தமிழ்

அறிமுகமில்லாத புதிய நபர்களுடன் எளிதில் பேசிப் பழக உதவும் 5 வழிகள் – BBC News தமிழ்

by ilankai
0 comments

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடுவதற்கும் மகிழ்ச்சியாக உணர்வதற்கும் நேரடித் தொடர்பு இருப்பதாக விஞ்ஞானிகள் கூறுகின்றனர்எழுதியவர், மெர்வ் காரா காஸ்கா & அன்யா டோரோடெய்கோபதவி, பிபிசி உலக சேவை ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

உணவகத்தில் உள்ள ஓர் ஊழியரிடம் சிறிது நேரம் பேசுவது அல்லது சாலையில் சந்திக்கும் ஒருவரிடம் “வணக்கம்” சொல்வது போன்ற மிகச் சிறிய மனித உரையாடல்கள்கூட மக்களை மகிழ்ச்சியடையச் செய்கின்றன என்று அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.

துருக்கியில் நடத்தப்பட்ட சமீபத்திய ஆய்வின் முடிவுகள், மற்றவர்களுடன் பழகுவது மக்களின் நல்வாழ்வை எவ்வாறு மேம்படுத்துகின்றன என்பதைப் பற்றி அறிய உதவுகிறது.

banner

“உணர்வு ரீதியாக நமக்கு நெருக்கமில்லாதவர்களுடன் ஏற்படும் சாதாரண தொடர்புகள்கூட வாழ்க்கையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகின்றன என்பதை நாங்கள் கண்டறிந்தோம்,” என்று சபான்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்தவரும் இந்த சமூக அறிவியல் ஆய்வின் முதன்மை ஆசிரியருமான எஸ்ரா அஸ்கிகில் கூறுகிறார்.

அதில், பேருந்தில் இறங்கும்போது ஓட்டுநருக்கு நன்றி கூறுவது அல்லது தெரிந்தவர்களுக்கு வாழ்த்து தெரிவிப்பது போன்ற செயல்களும் அடங்கும் என அவர் விளக்குகிறார்.

ஆனால், உலகெங்கிலும் உள்ள பலர் அறிமுகமில்லாதவர்களுடன் உரையாடுவதை சங்கடமாக உணர்கிறார்கள். இது அர்த்தமற்றது, மோசமானது அல்லது பாதுகாப்பற்றது என்று நினைக்கிறார்கள் என்றும் ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

அறிமுகமில்லாத நபர்களுடன் சிறிது நேரம் பேசுவது மக்களின் மகிழ்ச்சிக்கு எவ்வாறு பங்களிக்கிறது? அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடலைப் பாதுகாப்பாகத் தொடங்குவதற்கான சிறந்த வழிகள் யாவை? இங்கு விரிவாகக் காண்போம்.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.அறிமுகமில்லாத நபர்களுடன் உரையாடுவதில் உள்ள நன்மைகள்

அறிமுகமில்லாத ஒருவருடன் பழகும்போது மனநிலை மேம்படுவதோடு, மக்கள் தங்கள் சுற்றுப்புறத்துடன் அதிக தொடர்பில் இருப்பதாக உணர்கிறார்கள் என்கிறார் பிரிட்டனின் சசெக்ஸ் பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த உளவியலாளர் முனைவர் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.

அறிமுகமில்லாத நபர்களுடன் சிறிது நேரம் உரையாடுவதன் நன்மைகள் பற்றிய உலகளாவிய ஆராய்ச்சியில் முன்னணி நபர்களில் ஒருவராகவும், துருக்கியில் நடைபெற்ற சமீபத்திய ஆய்வின் இணை ஆசிரியராகவும் உள்ளார் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.

தொடர்ந்து பேசிய அவர், “(அறிமுகமில்லாதவர்களுடன் தொடர்பு கொள்வது) சமூகத்துடன் நீங்கள் இணைந்திருப்பதைப் போலவும், மற்றவர்கள் ‘உங்களைக் கவனிக்கிறார்கள்’ என்று உணர்வதற்கும் பங்களிக்கிறது. இது மக்களுக்கான ஓர் அடிப்படைத் தேவை. இது நாம் எப்படி உணர்கிறோம் என்பதை மட்டுமல்ல, நம் உடலிலும், நமது உடல் ஆரோக்கியத்திலும் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது,” என்று விளக்கினார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு காபியை வாங்கியவுடன் கடைக்காரருக்கு “நன்றி” சொல்வது, நீங்கள் பரந்த சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் போல உணர உதவும்சாண்ட்ஸ்ட்ரோம் பத்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்தத் தலைப்பின் மீது ஆர்வம் கொண்டார்.

அவர் தன்னை ஒரு கூச்ச சுபாவமுள்ள நபர் மற்றும் மற்றவர்களுடன் அதிக நேரத்தைச் செலவிட விரும்பாதவர் என்று அழைத்துக்கொண்ட போதிலும் அறிமுகமில்லாத நூற்றுக்கணக்கான மக்களுடன் அவர் உரையாடியுள்ளார்.

அதனால் அவர் மற்றவர்களைப் பார்க்கும் விதம் மாறிவிட்டதாகவும், இது அவர் மக்கள் மீது நம்பிக்கை கொள்ளச் செய்ததாகவும் நம்புகிறார்.

“இது எப்போதுமே இனிமையானதாக உள்ளது. சில நேரங்களில் சிறப்பாக எதுவும் இருக்காது. ஆனால் நான் நிறைய விஷயங்களை கற்றுக் கொண்டேன், வேடிக்கையான கதைகளைக் கேட்டேன், ஆலோசனைகள் மற்றும் பரிந்துரைகளைப் பெற்றேன். இது நான் சமூகத்தின் ஒரு பகுதியாக இருப்பதைப் போன்ற உணர்வைத் தருவதோடு, என்னைப் பாதுகாப்பாக உணர வைக்கிறது,” என்கிறார் சாண்ட்ஸ்ட்ரோம்.

இதுபோன்று குறுகிய நேரத்தில் மேற்கொள்ளப்படும் சமூகத் தொடர்புகள், இந்தச் சமூகத்தோடு நாமும் இணைத்துள்ளோம் என்ற உணர்வை நேரடியாக வலுப்படுத்துவதாக ஜப்பானில் உள்ள ரிக்கியோ பல்கலைக்கழக ஆய்வாளர் இடாரு இஷிகுரோ ஒப்புக்கொள்கிறார்.

இவர் மேற்கத்திய சமூகங்களுக்கு வெளியே இந்தத் தலைப்பில் நடத்தப்பட்ட சில ஆய்வுகளில் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.

“நாம் ஏற்றுக்கொள்ளப் படுகிறோம் என்ற உணர்வு நமது நல்வாழ்வுக்கு சாதகமான பங்களிப்பைச் செய்கிறது,” என்று அவர் கூறுகிறார்.

அறிமுகமில்லாதவர்களுடன் பேசுவது ஏன் கடினமானதாக உள்ளது?

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மனித தொடர்புக்கு மிகப்பெரிய தடைகளில் ஒன்று பயம்சாண்ட்ஸ்ட்ரோமின் கூற்றுப்படி, அறிமுகமில்லாதவர்களுடன் சிறிது நேரம் உரையாடுவதற்கு பலன்கள் இருப்பதை மக்கள் பெரும்பாலும் உணரவில்லை, அது அர்த்தமற்றது அல்லது நேர விரயம் என்று கருதுகின்றனர். ஆனால் இதில் இருக்கும் மிகவும் பொதுவான தடை அச்சம்தான்.

“மற்றவர்கள் நிராகரிப்பதைவிட, பேசும்போது தீடீரென ஏற்படும் தவறுகள் அல்லது தயக்கம் குறித்தே மக்கள் அதிகமாகக் கவலைப்படுகிறார்கள் என்பதைத் தரவுகள் வெளிப்படுத்துகின்றன” என்று அவர் சுட்டிக்காட்டுகிறார்.

இதுகுறித்து மேலும் பேசிய இட்டாரு இஷிகுரோ, “இத்தகைய குறுகிய நேர உரையாடல்கள் கலாசார ரீதியாக ஏற்றுக்கொள்ளப்படுமா என்று பலர் கவலைப்படுகிறார்கள். அப்படி ஏற்றுக் கொள்ளும் நிலை ஒரே நாட்டிற்குள்கூட வெவ்வேறு பகுதிகளில் மாறுபடும்” என்றார்.

“உதாரணமாக, ஜப்பானின் டோஹோகு பகுதியில் உள்ள ஹிரோசாகி என்ற சிறிய நகரத்தின் தெருக்களில் நான் என் குழந்தையுடன் நடந்து செல்லும்போது, ​​பலர் எங்களிடம் வந்து ‘என்ன அழகான குழந்தை’ என்று கூறுவார்கள். இருப்பினும், நான் டோக்கியோ பெருநகரப் பகுதிக்குச் சென்றபோது இது அரிதாகவே நடந்தது” என்று விவரிக்கிறார் அவர்.

பாதுகாப்பு குறித்த பரிசீலனைகள்

பட மூலாதாரம், Getty Images

இப்படியான அச்சம் குழந்தைப் பருவத்தில் இருந்து ஏற்படும். இது குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பான பொது ஆலோசனைகளில் இருந்து உருவாகிறது.

ஆங்கிலம் பேசும் நாடுகளில், பல ஆண்டுகளாக அறிமுகம் இல்லாதவர்களுடன் பழக வேண்டாம் என்று குழந்தைகளை அறிவுறுத்தும் பிரசாரம் “அறிமுகமில்லாதவர் ஆபத்தானவர் (Stranger Danger)” என்று அறியப்பட்டது.

“இப்போது வழங்கப்படும் அறிவுரை மிகவும் நுணுக்கமானதாக உள்ளது. ஆம், அறிமுகமில்லாதவர்கள் ஆபத்தானவர்களாக இருக்கலாம். ஆனால் நமக்கு உதவி செய்யும் அறிமுகமில்லாத நபர்களும் உள்ளனர்” என்கிறார் கில்லியன் சாண்ட்ஸ்ட்ரோம்.

எடுத்துக்காட்டாக, பிரிட்டனில் குழந்தைகள் தாங்கள் நம்பக்கூடிய “பாதுகாப்பான அறிமுகமில்லாதவர்களை” அடையாளம் காண கற்றுக் கொடுக்கப்படுகிறார்கள்.

அதாவது அவர்கள் நம்பகத்தன்மையுடன் பழகக் கூடியவர்கள். உதாரணமாக மற்றொரு குழந்தையுடன் இருக்கும் பெற்றோர் அல்லது காவல்துறையினர், சூப்பர் மார்க்கெட் ஊழியர்கள் போன்ற சீருடை அணிந்தவர்களை அடையாளம் காண பழக்கப்படுத்தப்படுகிறார்கள்.

அதே நேரம் இளைஞர்கள் அறிமுகமில்லாதவர்களுடன் பழகுவதற்குப் பல்வேறு பாதுகாப்பான வழிகள் உள்ளன என்று சாண்ட்ஸ்டார்ம் நம்புகிறார்.

“இருண்ட தெருக்களில் உள்ளவர்களுடன் பேசுவதை நான் பரிந்துரைக்கவில்லை. ஆனால் பொது இடங்களில், மற்ற மனிதர்கள் சூழ்ந்திருக்கும் நேரங்களில், பிறருடன் சிறிது நேரம் பேசுவதைவிட, மக்கள் பெரும்பாலும் தனிமையை ஏன் தேர்வு செய்ய வேண்டும்?” என்கிறார் சாண்ட்ஸ்டார்ம்.

அறிமுகம் இல்லாதவர்களுடன் உரையாடலை தொடங்க உதவும் 5 வழிகள்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ஒரு ஓட்டுநர் நீங்கள் சொல்லும் “வணக்கத்தை” பாராட்டுவார்உங்களுக்குத் தெரியாத ஒருவருடன் எப்படி உரையாடலில் ஈடுபடுவது என்பது குறித்த உதவிக் குறிப்புகளை சாண்ட்ஸ்ட்ரோம் பகிர்ந்துள்ளார்.

உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பொதுவான ஒரு விஷயத்தை கண்டறிய வேண்டும். “அதனால்தான் மக்கள் வானிலை பற்றி அதிகம் பேசுகிறார்கள். ஏனென்றால், பெரும்பாலும் இதைத்தான் நாம் அனைவரும் ஒன்றாகப் பகிர்ந்து கொள்கிறோம். அல்லது நீங்கள் ஒரு பூங்காவில் இருக்கும்போது அங்கு பூக்கள் பூத்திருப்பதைப் பார்த்தால், அதை வேறு யாருக்காவது சுட்டிக்காட்டுங்கள்” என்கிறார்.ஆர்வத்துடன் இருங்கள், ஒரு கேள்வியைக் கேளுங்கள். “பெரும்பாலும் நான் ‘என்ன செய்கிறீர்கள்’ என்று மக்களிடம் கேட்பேன். கேமராவுடன் ஒரு நபர் சுவரைப் படம் எடுப்பதைக் கண்டு, ‘நீங்கள் என்ன செய்கிறீர்கள்?’ என்று கேட்பேன். அல்லது நீங்கள் ரயிலில் பயணிக்கும்போது, உடைமைகளுடன் யாராவது இருந்தால், ‘நீங்கள் எங்கு செல்கிறீர்கள்?’ என்று கேளுங்கள். இது பொதுவாக நம்மைச் சுற்றியுள்ள விஷயங்களை கவனிப்பதைச் சார்ந்துள்ளது.எதையாவது குற்றம் சாட்டும் விதமாக இல்லாமல், லேசான மற்றும் மகிழ்ச்சியான முறையில் நீங்கள் கேள்வி கேட்டால், பொதுவாக மக்களும் உங்களுடன் உரையாடும் விருப்பத்துடன் இருப்பார்கள்.அருங்காட்சியகத்தில், “பணியாளர் ஒருவரிடம் அவர்களுக்குப் பிடித்த விஷயம் என்னவென்று கேளுங்கள். நீங்கள் இதுவரை கவனிக்காத விஷயங்களில் அவர்கள் உங்கள் கவனத்தை ஈர்க்கலாம் அல்லது ஒரு சிறந்த கதையைக் கூறலாம். நீங்கள் கேட்டால், பரிந்துரைகள் மற்றும் உதவிக் குறிப்புகளைப் பகிர்ந்து கொள்வதில் மக்கள் மகிழ்ச்சியடைகிறார்கள். மறுபுறம் நீங்களும் அவர்களுக்கு உதவி அளிக்கலாம். நஷ்டத்தில் இருக்கும் ஒருவரைக் கண்டால், ‘உங்களுக்கு ஏதாவது உதவி தேவையா?’ என நீங்கள் கேட்கலாம்” என்கிறார் சாண்ட்ஸ்ட்ரோம்.மக்களைப் பாராட்டுங்கள். “ஒருவரின் உடல் தோற்றத்தைப் பற்றிப் பாராட்டுவதை நான் பரிந்துரைக்கவில்லை. அது அவர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தலாம். ஆனால் அவர்கள் அணிந்திருக்கும் நகைகள் அல்லது நீல நிறத்தில் முடிக்கு சாயம் பூசியிருப்பது போன்றவற்றைப் பற்றி நீங்கள் கருத்து தெரிவித்தால், அதைக் கேட்பது அவர்களுக்கு நல்ல உணர்வை ஏற்படுத்தும்” என்று பரிந்துரைக்கிறார் சாண்ட்ஸ்ட்ரோம்.- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

You may also like