இஸ்ரேல் – இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன?

பட மூலாதாரம், AFP via Getty Images

எழுதியவர், பௌயான் கலானி பதவி, செய்தியாளர்17 ஜூன் 2025, 01:28 GMT

புதுப்பிக்கப்பட்டது 53 நிமிடங்களுக்கு முன்னர்

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர்.

தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கனடிய பிரதமர் மார்க் கார்னேவை, மாநாட்டிற்கு முதல் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வழிகள் குறித்து மாநாட்டில் பேசலாம் என்று முடிவெடுத்தனர்.

இஸ்ரேல் – இரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் உள்ளே இழுத்து பெரிய அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading

அதிகம் படிக்கப்பட்டது

End of அதிகம் படிக்கப்பட்டது

இதுவரை மத்தியஸ்தம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை. இஸ்ரேல் இரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இரானிய ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை தாக்கியுள்ளன.

சமீபத்திய செய்திகளின் படி, இரானில் அமைந்திருக்கும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது.

இதுபோன்ற சூழலில் சண்டை நிறுத்தத்திற்கான நம்பிக்கை எங்கே உள்ளது? உலகத் தலைவர்கள் இதில் எத்தகைய பங்காற்ற இயலும்?

தற்போது நம்பிக்கை அளிப்பது இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் அறிக்கை மட்டுமே. அவர் “இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தினால், இரானும் தாக்குதலை நிறுத்தும். இரானின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கான எதிர்வினையே,” என்று தெரிவித்தார்.

இருப்பினும், இஸ்ரேல் தனது நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இரானில் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான செயல்திறனை அழித்து, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நீக்குவதே அதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.

காணொளிக் குறிப்பு, இஸ்ரேல் – இரான் மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது?அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்தியஸ்தம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதுண்டு. அவர் தற்போது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் தலையிடுவதற்கு பதிலாக இரான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அவர் பேசுகிறார்.

“எளிமையாக இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்தி இந்த மோதலை உடனே முடிவுக்குக் கொண்டு வர நம்மால் இயலும்,” என்று ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆனால் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போகிறது என்று அந்த நாட்டின் மீது இரான் குற்றம் சுமத்துகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் டிரம்ப், இரான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் துணை நிற்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்பிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலின், குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார். நெதன்யாகுவிடம் இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும், டிரம்பிற்கு கூடுதல் அனுகூலத்தை வழங்குகிறது இந்த நட்புறவு.

டிரம்பும், நெதன்யாகுவும் இரானின் அணு செறிவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதில் வெற்றி காண்பதற்கு இருவரும் வெவ்வேறு வழியை பின்பற்றுகின்றனர்.

ஞாயிறு அன்று அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பாஸ் அரக்சி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். “எங்களின் அணுசக்தி திட்டத்திற்கான முன்மொழிவை அமெரிக்கர்களிடம் இன்று நாங்கள் வழங்கியிருக்க வேண்டும். அது ஒப்பந்தத்தை உருவாக்க வழி வகுத்திருக்கும்,” என்று கூறினார். ஆனால் இரான் முன்மொழிந்த திட்டம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்கா (போர்) தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா.

இந்த நிலைப்பாடு, இரான் மீதான இரு நாடுகளின் அணுகுமுறையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தீர்மானிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அந்த நாட்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர் ஐரோப்பா

இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்கவில்லை. இரான் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன.

இருப்பினும், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்தி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிக்க ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தயாராக உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாட்ஃபுல் அறிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு முக்கிய நிபந்தனை என்று கருதுகிறார் அவர். மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இரான் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை இரான் நிரூபித்தால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று தெரிவித்தார் அவர்.

மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார். தற்போது நியாயப்படுத்த இயலாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி திட்டத்தில் முன்னேறுவது அந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்துவதை இரண்டு நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்திய மாதங்களில், ஃபிரான்ஸ் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இரு தரப்பினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மக்கள் மற்றும் நலனுக்காக ஃபிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

அதிபர் மக்ரோன், இரானுக்கு எதிரான தாக்குதலில் ஃபிரான்ஸ் பங்கேற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரான் பதில் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேலை ஃபிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத் தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார் ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் எதார்த்தமான அணுகுமுறையை இந்த விவகாரத்தில் கையாண்டுள்ளது பிரிட்டன். மத்தியக் கிழக்குக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், டைஃபூன் போர் விமானங்களும் வானில் இருந்தபடியே போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் விமானமும் அனுப்பப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற மோதல்களின் போது, இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போன்று இதுவும் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.

சனிக்கிழமை பிபிசியில் வெளியான செய்தி ஒன்றில், அங்கு நிலைமை வேகமாக மாறிவருகிறது என்று கியர் ஸ்டார்மர் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. பிரிட்டன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரான் – இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழலை “தணிப்பதே” அவரின் முதன்மை செய்தி என்பது தெளிவானது.

கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டின் போதும் அவர் இந்த பிரச்னை குறித்து பேசினார்.

மத்தியஸ்தம் செய்வதற்கு பதிலாக, இரான் தன்னுடைய அணு சக்தி செறிவூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அழுத்தம் தரும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுகிறது பிரிட்டன் என்பது தெளிவாகிறது.

பட மூலாதாரம், Reuters

படக்குறிப்பு, பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர் அரபு நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சௌதி அரேபியா மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் வந்து சென்ற ஒரே மாதத்தில் மத்திய கிழக்கில் புதிய போர் சூழல் உருவாவதை அவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

பாரிய அளவிலான முதலீடு, இந்த பிராந்தியத்தில் மிகவும் நிலைத்தன்மையற்று இருக்கும் சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குதல் போன்ற பல முன்னெடுப்புகளை கொண்டிருந்தது அவரின் வருகை.

ஐரோப்பிய தேசங்களைப் போன்றில்லாமல், அனைத்து வளைகுடா நாடுகளும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தன.

மிகவும் வலிமையான கருத்தை பதிவு செய்திருந்தது சௌதி அரேபியா. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில், “சௌதி அரேபியா, எங்களின் சகோதர நாடான இரான் இஸ்லாமியக் குடியரசின் மீது நடத்தப்பட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இரானின் பிராந்திய இறையாண்மையை மீறும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது,” என்று தெரிவித்தது.

இந்த கண்டனம் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிபுணர்களின் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்த நாடுகள் மறைமுகமாக பலவீனமான இரானை தங்களின் அண்டை நாடாக கொண்டிருக்க விரும்புகின்றன என்றும் அதேநேரத்தில் அவர்களின் சொந்த பிராந்தியங்களில் போர் பரவும் சூழலோ அல்லது அதன் பின்விளைவுகளோ தங்களை பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறது அவர்களின் மதிப்பாய்வுகள்.

இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ தளத்தை இரான் தாக்க முடிவெடுத்துவிட்டால் ஒரு பேராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.

இஸ்ரேலிடம் இருந்து விலகிக் கொண்ட சௌதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகளுடன் கை கோர்த்துக் கொண்டது.

அரபு வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு, கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மேம்பட்டு வருகின்ற சூழலில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியது போன்று இரானுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக செயலில் ஈடுபட வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதற்கு மாறாக இரான் பதில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, அவர்களின் நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, கோடிக்கணக்கிலான நிதி முதலீடு மற்றும் எண்ணெய் பொருட்களை வாங்கும் முக்கிய நாடுகளாக இருக்கும் முதன்மை நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சம ஆதரவை வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் ஒரு போர் சூழல் அவர்களின் நாடுகளுக்குள் நிகழ்வதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த சூழலில், சௌதி அரேபியா பன்முக அரசியல் விளையாட்டை விளையாடுவது போன்று தோன்றும். இஸ்ரேலுடனான சௌதியின் சமகால உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆனால் முழுமையாக அதில் வெற்றி பெற இயலவில்லை. அது மட்டுமின்றி, ஏமனின் ஹூத்திகளுடனான மற்றொரு பதற்றமான சூழல் ஏற்படுவதை தடுக்க சௌதி மேற்கொள்ளும் முயற்சிகளும் இதில் அடங்கும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ரஷ்யா

ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரானுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ரஷ்யாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளுடன் நல்ல உறவைத் தொடர்வதை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது தற்போதைய சூழல்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்ய இயலும் என்று சிலர் நம்புகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடம் பேசினார். சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தேவையான உதவிகளை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள வழிகளை அவர் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளைப் போன்றே, ரஷ்யாவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்க்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சனிக்கிழமை அலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதித்துள்ளார் புதின்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின் சீனா

இரானின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டது.

சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஜியோடன் சாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டையை தொடராமல் அரசியல் ரீதியாக தீர்வு காண இயலும் என்று வாங் கூறியுள்ளார்.

சர்வதேச அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்ற சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாங் உறுதியாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா, இரானின் ராணுவ திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும். ஒரு முழுமையான போர் வெடித்தால் என்னவாகும்?

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நிபுணர்களும், இரான் – இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறும் என்று கூறுகின்றனர்.

“மோசமான சாத்தியக்கூறாக இது இந்த பிராந்தியத்தில் இருக்கலாம். போர் பரவுவதை தடுக்க பல நாடுகளின் தலைவர்களும் வழி கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

ஒரு சாத்தியமான வாய்ப்பு என்னவென்றால் இரானின் கூட்டாளிகளான, பலவீனம் அடைந்த லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள், இராக்கில் உள்ள இரானின் ஆதரவுக் குழுக்கள் போன்றவை இந்த மோதலில் ஈடுபடலாம். இவர்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவை இந்த மோதலுக்குள் இழுக்கலாம்.

அப்படியான சூழலில் போர் புதிய திசை நோக்கி நகரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் இரான் மீது தாக்குதல் நடத்தலாம். இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக கயான் செய்தித்தாளின் ஆசிரியர்கள் கூறுவது போன்று இரான் ஒரு முக்கிய முடிவை எடுக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை மூடுவது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இது போன்ற சூழலில், அமெரிக்க தளங்களை இரான் தாக்குமானால், அமெரிக்காவின் செல்வாக்குட்பட்ட அரபு நாடுகள் இரானுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மோதலின் மற்றொரு பின்விளைவாக சைபர் போர் இருக்கும். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆதார கட்டமைப்புகள் உள்ளிட்டவையையும் போர் சேதமாக்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, இது போராக நீடித்தால் நாட்டில் இருந்து மக்கள் அதிகப்படியாக இடம் பெயர்வார்கள் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எல்லை தாண்டிய படைப்பிரிவினர் , “ஐரோப்பிய எல்லைகளில் தங்களின் தாக்குதல்களை நடத்தலாம்,” என்று மேற்கத்திய நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர்.

பதற்றம் நீடித்து, உள்கட்டுமானம் சீர்குலையும் எனில் இரானியர்கள் கூட்டம்கூட்டமாக பெரிய நகரங்களில் இருந்தும், நாட்டில் இருந்தும் மொத்தமாக வெளியேறுவார்கள். இது இடைக்கால இடம் பெயர்தலை உள் நாட்டிலும் அண்டை நாட்டிலும் ஏற்படுத்த வழிவகை செய்யும்.

சிரியப் போருக்குப் பிறகு தங்களின் நாடு மீண்டும் ஒரு சிறை போன்று மாறுவதை விரும்பவில்லை என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நீடிப்பது இஸ்ரேலுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது வான்வழி தாக்குதல் குறித்த ஒவ்வொரு எச்சரிக்கை ஒலியின் போதும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் அங்குள்ள எண்ணெய் சுத்தகரிப்பு மையங்களை அழிக்கும். மின்சாரம் தடைபடும். இதர சேவைகளில் தடை ஏற்படும். பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும்.

மோதலின் போது பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பல் நீரில் மூழ்கினாலோ அல்லது ஒரு ஏவுகணை மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானாலோ பேரழிவு தரும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் முழு அளவிலான போரை தடுக்க முயன்று வருகின்றனர்.

– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு