Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
அணுகுண்டு தயாரிக்கும் கட்டத்தை இரான் நெருங்கிவிட்டதா? விரிவான அலசல்
பட மூலாதாரம், NurPhoto via Getty Images
படக்குறிப்பு, அணு குண்டு தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.எழுதியவர், டேவிட் கிரிட்டன்பதவி, பிபிசி27 நிமிடங்களுக்கு முன்னர்
இரானில் டஜன்கணக்கான இலக்குகளைத் தாக்கிய இஸ்ரேல், நடான்ஸில் உள்ள யூரேனியம் செறிவூட்டும் ஆலையைச் சேதப்படுத்தியதுடன் மூத்த படைத்தளபதிகளையும், அணு விஞ்ஞானிகளையும் கொன்றுள்ளது.
தங்கள் நாட்டில் ஆக்கப்பூர்வ பணிகளுக்காக உள்ள அணு உலைகளை இஸ்ரேல் ”பொறுப்பற்ற முறையில்” தாக்கியுள்ளதாக இரான் வெளியுறவுத்துறை அமைச்சர் கண்டித்துள்ளார். பதிலடியாக இரானும் இஸ்ரேல் மீது தாக்குதலைத் தொடங்கியது.
உலகளாவிய அணு சக்தி கண்காணிப்பு அமைப்பான, சர்வதேச அணு சக்தி முகமையின் (IAEA) மேற்பார்வையின் கீழ் நடான்ஸ் அணு உலை இயங்கி வந்ததாகவும், அங்குத் தாக்கியது ”கதிர்வீச்சு பேரழிவு” ஆபத்தை ஏற்படுத்தும் எனவும் அப்பாஸ் அராக்சி கூறினார்.
ஆனால், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலின் இருப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த” இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.
“இரானைத் தடுக்கவில்லை என்றால், அது குறுகிய நேரத்தில் அணுகுண்டை உருவாக்கக் கூடிய நிலைக்குச் செல்லும்” என கூறிய அவர், இதன் காரணமாகவே இஸ்ரேல் நடவடிக்கையில் ஈடுபட்டதாகக் கூறினார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
“அது ஒரு ஆண்டாக இருக்கலாம். சில மாதங்களுக்குள்ளேயும் இருக்கலாம்” என்றும் அவர் கூறினார்.
இஸ்ரேல் அணு ஆயுதம் வைத்திருக்கிறது என்று பரவலாக நம்பப்பட்டாலும், அதை அந்நாடு உறுதிப்படுத்தவோ அல்லது மறுக்கவோ இல்லை.
பட மூலாதாரம், Reuters
படக்குறிப்பு, இரானில் டஜன் கணக்கான இலக்குகளை இஸ்ரேல் தாக்கியதுஇரான் அணு குண்டு தயாரிப்பதற்கான ஆதாரம் உள்ளாதா?
அணு குண்டு வெடிப்பைத் தூண்டும் கருவி, யுரேனியம் உலோக கோர் போன்ற ஒரு அணுகுண்டுக்கான முக்கிய பாகங்களைத் தயாரிப்பதற்கான பணியில் இரான் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் அடைந்ததற்கான நம்பகமான உளவு தகவல்கள் கிடைத்ததாக இஸ்ரேல் கூறுகிறது.
“இரான் அணு அயுதம் தயாரிப்பதற்கு மிக நெருக்கமாக இருக்கிறது என நெதன்யாகு கூறினாலும் அதற்கான தெளிவான ஆதாரங்கள் எதையும் அவர் வழங்கவில்லை” என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட ஆயுதக் கட்டுப்பாட்டுச் சங்கத்தின் அணு ஆயுத பரவல் தடுப்பு கொள்கையின் இயக்குநர் கெல்சி டேவன்போர்ட் கூறினார்.
அணுகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொருட்களை ஏற்கனவே பெரும்பாலும் இரான் உருவாக்கிவிட்டது, பல மாதங்களாக இதே நிலையில்தான் இரான் உள்ளது என அவர் கூறினார்.
” இரானால் சில மாதங்களில் எளிய அடிப்படை வடிவிலான அணு குண்டை தயாரிக்க முடியும் என்ற கணிப்பும் புதிது அல்ல”
இரானின் சில நடவடிக்கைகள் அணு ஆயுதத்தை உருவாக்கப் பயன்படுத்தப்படலாம். ஆனால், அணு ஆயுதத்தை முழுமையாக உருவாக்குவதற்குத் தேவையான முக்கிய பணியில் இரான் இன்னும் ஈடுபடவில்லை என அமெரிக்க உளவுத்துறை நம்புவதாக அவர் கூறினார்.
இரான் யுரேனியத்தை இதுவரை இல்லாத அளவு அதிகம் செறிவூட்டியுள்ளது. அணு ஆயுதங்கள் வைத்திருக்காத ஒரு நாடு இப்படிச் செய்வது விசித்திரமானது என அமெரிக்காவின் தேசிய உளவுத்துறை இயக்குநர் துளசி கப்பார்ட் கடந்த மார்ச் மாதம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் கூறினார்.
ஆனால் இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை இன்னும் நம்புவதாக அவர் கூறினார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு, “இஸ்ரேலின் இருப்புக்கு அச்சறுத்தலாக இருக்கும் இரானைக் கட்டுப்படுத்த” இந்த நடவடிக்கை அவசியமாக இருந்தது என்று கூறினார்.இரான் அணு ஆயுதத்தை உருவாக்குவது மட்டுமே நெதன்யாகுவின் ஒரே கவலை என்றால், அது குறித்த உளவுத் தகவல்களை இஸ்ரேல் அமெரிக்காவுக்கு வழங்கியிருக்கலாம் மற்றும் தொடக்கத்திலேயே இரானின் அனைத்து முக்கிய அணு ஆலைகளைத் தாக்கியிருக்கலாம் என டேவன்போர்ட் கூறினார்.
இரான் 60% தூய தன்மையுடன் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை குவித்து வைத்துள்ளது என்றும் அணு ஆயுதம் தயாரிக்க 90% தூய தன்மை தேவைப்படும் நிலையில், அதற்கு மிக நெருக்கத்தில் இருக்கிறது என்றும், அது குவித்து வைத்திருக்கும் செறிவூட்டப்பட்ட யுரேனியத்தின் மூலம் 9 அணு ஆயுதங்கள் வரை தயாரிக்க முடியும் என்றும் கடந்த வாரம் சர்வதேச அணுசக்தி முகமை வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இது அணு ஆயுத பரவல் தடைக்கு அபாயங்களை ஏற்படுத்தும் என்பதால், இது மிகவும் கவலைக்குரிய விஷயம் என அந்த அமைப்பு கூறியது.
நல்ல விஷயங்களுக்காக மட்டுமே இரான் அணு சக்தியைப் பயன்படுத்துகிறது என தங்களால் சொல்ல முடியாது எனவும், செயற்கையாக உருவாக்கப்பட்ட யுரேனியத்தை ஆய்வாளர்கள் கண்டுபிடித்தது குறித்த விசாரணைக்கு இரான் ஒத்துழைக்க மறுப்பதாகவும் அந்த அமைப்பு கூறியது.
பட மூலாதாரம், Getty Images
இதுவரை தெரிந்தது என்ன?
தனது அணுசக்தி திட்டங்கள் ஆக்கப்பூர்வ விஷயங்களுக்கு மட்டுமே செயல்படுத்தப்படுவதாகவும், அணு ஆயுதங்களை உருக்க நினைத்ததில்லை எனவும் இரான் கூறுகிறது.
ஆனால், அணு ஆயுதங்களை உருவாக்குவதற்கான பணிகளில் இரான் ஈடுபட்டதற்கான ஆதாரங்களை இரானில் பத்தாண்டுகளாக விசாரணை நடத்திய சர்வதேச அணுசக்தி முகமை கண்டறிந்தது. பிராஜக்ட் அமத் எனும் ரகசிய அணு திட்டத்தை இரான் 2003-ல் நிறுத்தும் வரை, 1980களின் பிற்பகுதியிலிருந்து இந்த செயல்பாடுகள் இருந்தது.
2009 ஆம் ஆண்டு மேற்கத்திய நாடுகள் ஃபோர்டோ நிலத்தடி செறிவூட்டல் வசதியின் கட்டுமானத்தை வெளிப்படுத்தியது வரை, இரான் சில நடவடிக்கைகளைத் தொடர்ந்தது. ஆனால் அதன் பிறகு அணு ஆயுத மேம்பாடு குறித்த “நம்பகமான அறிகுறிகள் எதுவும் இல்லை” என்று சர்வதேச அணுசக்தி முகமை கூறியது.
2015ஆம் ஆண்டில், இரான் 6 உலக வல்லரசுகளுடன் ஒரு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது. அதன் கீழ் அதன் அணுசக்தி நடவடிக்கைகள் மீதான கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொண்டதுடன், சர்வதேச அணுசக்தி முகமையின் கடுமையான கண்காணிப்பை அனுமதித்தது. இதற்குப் பதிலாக அந்நாட்டின் மீது விதிக்கப்பட்டிருந்த பொருளாதார தடைகள் நீக்கப்பட்டன.
இந்த அணு சக்தி ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா விலகுவதாக 2018-ஆம் ஆண்டு தனது முதல் பதவிக் காலத்தில் அறிவித்த டிரம்ப், இரான் மீது மீண்டும் தடைகளை விதித்தார். இரான் அணு ஆயுதங்கள் தயாரிப்பதைத் தடுக்கும் அளவுக்கு இந்த ஒப்பந்தம் வலிமையாக இல்லை என அவர் கூறினார்.
இரான் கட்டுப்பாடுகளை, குறிப்பாக யுரேனியம் செறிவூட்டல் தொடர்பான கட்டுப்பாடுகளை மீறி இதற்குப் பதிலடி கொடுத்தது.
அணுசக்தி ஒப்பந்தத்தின் கீழ், ஃபோர்டோவில் உள்ள அணு உலையில் 15 ஆண்டுகளுக்கு எந்த செறிவூட்டலும் அனுமதிக்கப்படவில்லை. இருப்பினும், 2021 ஆம் ஆண்டில் இரான் 20% யுரேனியத்தை செறிவூட்டுவதை மீண்டும் தொடங்கியது.
வியாழக்கிழமை, சர்வதேச அணுசக்தி முகமையின் 35 நாடுகளின் போர்ட் ஆஃப் கவர்னர்ஸ் குழு, 20 ஆண்டுகளில் முதல் முறையாக இரான் அதன் அணு ஆயுதப் பரவல் தடையை மீறுவதாக அறிவித்தது.
‘பாதுகாப்பான இடத்தில்’ ஒரு புதிய யுரேனியம் செறிவூட்டல் வசதியை அமைப்பதன் மூலமும், ஃபோர்டோ ஆலையில் உள்ள பழைய யுரேனியம் செறிவூட்டல் இயந்திரங்களை புதிய மற்றும் வேகமாகச் செயல்படும் இயந்திரங்களாக மாற்றுவதன் மூலம் இதற்குப் பதிலடி தரப்படும் என இரான் கூறியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, ‘இரான் அணு ஆயுதத்தை உருவாக்கவில்லை எனவும், அந்நாட்டின் அதி உயர் தலைவர் காமனெயி 2003இல் நிறுத்தி வைத்த அணு ஆயுதத் திட்டத்தை மீண்டும் தொடங்க ஒப்புதல் வழங்கவில்லை எனவும் அமெரிக்க உளவுத்துறை நம்புகிறது’இஸ்ரேல் ஏற்படுத்திய பாதிப்பு என்ன?
வெள்ளிக்கிழமை இஸ்ரேலிய ராணுவம் தனது முதல் கட்ட வான்வழித் தாக்குதல்கள் நடான்ஸில் உள்ள நிலத்தடி அமைப்புகளையும், முக்கியமான உள்கட்டமைப்பையும் சேதப்படுத்தியதாகக் கூறியது.
நடான்ஸில் தரைக்கு மேலே உள்ள பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலை மற்றும் மின்சார உள்கட்டமைப்பு அழிக்கப்பட்டதாகச் சர்வதேச அணுசக்தி முகமையின் இயக்குநர் ஜெனரல் ரஃபேல் க்ரோஸி ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலில் தெரிவித்தார். நிலத்தடி கட்டமைப்பில் வெளிப்படையாகத் தெரியும் பாதிப்புகள் எதுவும் இல்லை. ஆனால், மின்சார துண்டிப்பு அங்குள்ள இயந்திரங்களைப் பாதித்திருக்கலாம் எனவும் அவர் கூறினார்.
பைலட் எரிபொருள் செறிவூட்டல் ஆலையின் அழிவு குறிப்பிடத்தக்கது, ஏனெனில் இந்த வசதி 60% செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை உற்பத்தி செய்வதற்கும் மேம்பட்ட மையவிலக்குகளை உருவாக்குவதற்கும் பயன்படுத்தப்பட்டது என அமெரிக்காவைத் தளமாகக் கொண்ட அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் கூறியது.
நடான்ஸில் நடந்த தாக்குதல்கள் அணு ஆயுதத்தை உருவாக்கும் இரானின் திறனைத் தாமதப்படுத்தும். ஆனால், இது எவ்வளவு பாதிப்புகளை ஏற்படுத்தும் என இப்போதே சரியாகக் கூற முடியாது என டேவன்போர்ட் கூறினார்.
” சர்வதேச அணுசக்தி முகமை அந்த இடத்தை ஆய்வு செய்ய அனுமதிக்கப்படும் வரை, எவ்வளவு விரைவாக இரான் அங்கு மீண்டும் பணிகளைத் தொடங்கும் அல்லது யுரேனியத்தை ரகசியமாக வேறு இடத்துக்கு மாற்றியதா போன்றவற்றை நமக்குத் தெரியாது” என்றார் டேவன்போர்ட்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.ஃபோர்டோ செறிவூட்டல் ஆலை மற்றும் இஸ்ஃபஹான் அணுசக்தி தொழில்நுட்ப மையத்தை இஸ்ரேல் தாக்கியதாக இரான் சர்வதேச அணுசக்தி முகமையிடம் தெரிவித்திருந்தது.
இஸ்ஃபஹானில் நடந்த தாக்குதல் மூலம் “யுரேனியத்தை உற்பத்தி செய்யும் வசதி, செறிவூட்டப்பட்ட யுரேனியத்தை மீண்டும் மாற்றுவதற்கான உள்கட்டமைப்பு, ஆய்வகங்கள் மற்றும் கூடுதல் உள்கட்டமைப்பு ஆகியவற்றை” தகர்த்ததாக இஸ்ரேலிய ராணுவம் கூறியது.
“ஃபோர்டோ செயல்பாட்டில் இருக்கும் வரை, இரான் இன்னும் அணு ஆயுத பெருக்க அபாயத்தை ஏற்படுத்துகிறது. அந்த இடத்தில் ஆயுத தர நிலைகளுக்குச் செறிவூட்டலை அதிகரிக்கவோ அல்லது யுரேனியத்தை ரகசிய இடத்திற்கு அனுப்பவோ இரானுக்கு வாய்ப்பு உள்ளது” என்று டேவன்போர்ட் கூறினார்.
“இந்த அச்சுறுத்தலை நீக்க எத்தனை நாட்கள் தேவையோ அவ்வளவு நாட்கள்” இந்த நடவடிக்கை தொடரும் என்றும் இஸ்ரேல் பிரதமர் கூறினார்.
ஆனால், இது அடைய முடியாத இலக்கு என்கிறார் டேவன்போர்ட்.
”தாக்குதல்கள் தளங்களை அழிக்கலாம், விஞ்ஞானிகளைக் குறிவைக்கலாம். ஆனால் இரான் அணுசக்தி குறித்து பெற்றுள்ள அறிவை அழிக்க முடியாது. இரானால் மீண்டும் கட்டமைக்க முடியும். யுரேனியம் செறிவூட்டலில் கடந்த காலத்தை விட மிக விரைவாக அதனால் கட்டமைக்க முடியும்”என்று அவர் கூறினார்
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு