Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
வரலாற்று வெற்றியை நோக்கி தென் ஆப்ரிக்கா – கடைசி கட்டத்தில் ஆஸ்திரேலியா மாயாஜாலம் நிகழ்த்துமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சதம் அடித்த தென் ஆப்ரிக்க வீரர் மார்க்ரம்எழுதியவர், க. போத்திராஜ்பதவி, பிபிசி தமிழுக்காக18 நிமிடங்களுக்கு முன்னர்
உலக டெஸ்ட் கிரிக்கெட்டில் வரலாற்று சாதனையை தென் ஆப்ரிக்கா இன்று நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று நனவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இறுதிப்போட்டியில், 282 ரன்கள் சேர்த்தால் வெற்றி எனும் இலக்குடன் இரண்டாவது இன்னிங்சை தென் ஆப்பிரிக்கா தொடங்கியது. மூன்றாவது நாள் ஆட்டநேர முடிவில் தென் ஆப்ரிக்க அணி 2 விக்கெட் இழப்புக்கு 56 ஓவர்களில் 213 ரன்கள் சேர்த்துள்ளது.
களத்தில் உள்ள தென் ஆப்ரிக்காவின் பவுமா – மார்க்ரம் ஜோடி தங்களின் அணியை வெற்றிக்கு கொண்டு செல்ல இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகிறது. இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியா பந்துவீச்சில் ஏதேனும் மாயஜாலம் நிகழ்த்துமா அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும்.
ஸ்டார்க் அரைசதம்
ஆஸ்திரேலிய அணி முதல் இன்னிங்ஸில் 212 ரன்களுக்கும், தென் ஆப்ரிக்க அணி 138 ரன்களுக்கும் ஆட்டமிழந்தன. 74 ரன்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்ஸை ஆடிய ஆஸ்திரேலிய அணி 2வது நாள் ஆட்டநேர முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 144 ரன்கள் சேர்த்திருந்தது. மிட்ஷெல் ஸ்டார்க் 16, நேதன் லாயன் ஒரு ரன்னுடன் களத்தில் இருந்தனர்.
3வது நாளில் இருந்து ஆடுகளம் பேட்டர்களுக்கு நன்கு ஒத்துழைக்கும் என கணிக்கப்பட்டது. லேயான் 2 ரன்னில் ரபாடா பந்துவீச்சில் கால்காப்பில் வாங்கி வெளியேறினார். கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
ஸ்டார்க், ஹேசல்வுட் நல்ல பார்ட்னர்ஷிப் அமைப்பது முதல் முறை அல்ல. இந்தியாவுக்கு எதிராக இருவரும் 18 ஓவர்கள் களத்தில் இருந்தனர்.
ஸ்டார்க் 2019ல் ஓல்ட் ட்ராபோர்டில் முதல்முறையாக அரைசதம் அடித்தபின் 2வது முறையாக நேற்று அரைசதத்தை 131 பந்துகளில் அடித்தார். கடைசி விக்கெட்டுக்கு இருவரும் 59 ரன்கள் சேர்த்தனர். ஹேசல்வுட் 17 ரன்னில் மார்க்ரம் பந்துவீச்சில் விக்கெட்டை இழந்தார்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கடைசி விக்கெட்டுக்கு ஹேசல்வுட்டுடன் ஜோடி சேர்ந்த ஸ்டார்க், ஆடுகளத்தின் தன்மையைப் பயன்படுத்தி அரைசதம் அடித்தார்.ரபாடா 9 விக்கெட்
ஆஸ்திரேலிய அணி 2வது இன்னிங்ஸில் 207 ரன்களுக்கு ஆட்டமிழக்கவே, முதல் இன்னிங்ஸில் அந்த அணி முன்னிலை பெற்றிருந்த 74 ரன்களையும் சேர்த்து தென் ஆப்பிரிக்காவுக்கு 282 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப்பட்டது.
தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளையும், யான் சென் 4 விக்கெட்டுகளையும், லுங்கி இங்கிடி 3 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்கா தரப்பில் காகிசோ ரபாடா 2 இன்னிங்ஸ்களிலும் சேர்த்து 9 விக்கெட்டுகளை வீழ்த்தினார் தென் ஆப்ரிக்காவுக்கு தொடக்கமே அதிர்ச்சி
282 ரன்கள் இலக்கை துரத்தி தென் ஆப்ரிக்க அணி நேற்று 3வது நாளில் உணவு இடைவேளைக்குப் பின் ஆட்டத்தைத் தொடங்கியது. மார்க்ரம், ரிக்கெல்டன் ஆட்டத்தைத் தொடங்கினர். ஸ்டார்க் வீசிய 2வது ஓவரில் ரிக்கெல்டன் 6 ரன்னில் விக்கெட் கீப்பர் கேரெயிடம் கேட்ச் கொடுத்து வெளியேறிஅதிர்ச்சியளித்தார்.
அடுத்து வந்த முல்டர், மார்க்ரமுடன் சேர்ந்து வேகமாக ரன்களைச் சேர்த்தார். 12வது ஓவரிலேயே தென் ஆப்ரிக்கா 50 ரன்களை எட்டியது. இருவரின் பேட்டிங்கும் தென் ஆப்ரிக்காவுக்கு சற்று நம்பிக்கையளிக்கும் விதத்தில் இருந்தது.
ஆனால் 18வது ஓவரில் இந்த பார்ட்னர்ஷிப்பை ஸ்டார்க் பிரித்தார். ஸ்டார்க் பந்துவீச்சில் முல்டர் 27 ரன்னில் லாபுஷேனிடம் கேட்ச் கொடுத்து விக்கெட்டை இழந்தார். 2வது விக்கெட்டுக்கு இருவரும் 61 ரன்கள் சேர்த்துப் பிரிந்தனர்.
3வது விக்கெட்டுக்கு மார்க்ரம், கேப்டன் பவுமா ஜோடி சேர்ந்தனர். இருவரும் நிதானமாக பேட் செய்து நங்கூரம் அமைத்தனர். இருவரையும் பிரிக்க கேப்டன் கம்மின்ஸ் பல பந்துவீச்சாளர்களை மாற்றியும் பலன் அளிக்கவில்லை.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த மார்க்ரம், கேப்டன் பவுமா இருவரும் நிதானமாக பேட் செய்தனர். ஸ்மித் காயம்
பவுமா 2 ரன்னில் இருந்தபோது, அவருக்கு நெருக்கமாக ஸ்மித் முதல் ஸ்லிப்பில் பீல்டிங்கில் இருந்தார். பவுமா பேட்டில் இருந்து தெறித்த பந்தை ஸ்மித் கேட்ச் பிடிக்க முயன்ற போது பந்து அவரின் சுண்டுவிரலில் பட்டு சென்றது. இதில் ஸ்மித்தின் சுண்டுவிரல் எலும்பில் முறிவு ஏற்பட்டு கடும் வலியுடன் மைதானத்தைவிட்டு வெளியேறினார்.
மார்க்ரம் – பவுமா வலுவான பார்ட்னர்ஷிப்
பிற்பகல் தேநீர் இடைவேளைக்கு முன்பாக கேப்டன் பவுமாவுக்கு திடீரென தொடையில் தசைப்பிடிப்பு ஏற்பட்டது. உடனடியாக அதற்கான சிகிச்சை அளிக்கப்பட்டாலும், பெரும்பாலும் ரன்கள் ஓடாமல் விக்கெட்டை நிலைப்படுத்தும் விதத்திலேயே பேட் செய்தார். மார்க்ரம் 69 பந்துகளில் அரைசதம் அடித்தார்.
அரைசதம் அடித்தபோது மார்க்ரம் 4 பவுண்டரிகள் மட்டுமே அடித்திருந்தார். 25 ஓவர்களில் தென் ஆப்ரிக்க அணி 100 ரன்களை எட்டி வெற்றியை நோக்கி மெல்ல நகர்ந்தது.
இருவரையும் பிரிக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் கடுமையாகப் போராடியும்பலன் கிடைக்கவில்லை. ஆடுகளம் பேட்டர்களுக்கு சாதகமாக இருந்ததாலும், பந்து பேட்டை நோக்கி நன்கு வந்ததாலும் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் உழைப்புக்கு பலன் கிடைக்கவில்லை.
இருவரின் பார்ட்னர்ஷிப் 100 ரன்களை எட்டியது. மார்க்ரம், பவுமா இருவரும் நிதானமாக ஆட்டத்தை வெற்றியை நோக்கி நகர்த்தியதால், 25வது ஓவரில் 100 ரன்களை எட்டிய தென் ஆப்ரிக்கா, 52வது ஓவரில் தென் ஆப்ரிக்க அணி 200 ரன்களை எட்டியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, தென் ஆப்ரிக்க அணி கேப்டன் பவுமாமார்க்ரம் சதம்
முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரமின் ஆட்டத்தில் இம்முறை தீர்க்கமான எண்ணம் தெரிந்தது. தன்னுடைய ஒவ்வொரு ஷாட்டையும் நேர்த்தியாகவும், நிதானமாகவும் கையாண்டார். பெரிதாக அவசரப்படாமல் லென்த் பந்துகளை லீவ் செய்து மார்க்ரம் ஆடியதால், தவறு செய்யவைக்க ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் முயற்சி தோல்வியில் முடிந்தது.
முதல் இன்னிங்ஸில் டக்அவுட்டில் ஆட்டமிழந்த மார்க்ரம் இரண்டாவது இன்னிங்ஸில் 156 பந்துகளில் சதம் அடித்தார். ஹேசல்வுட் பந்துவீச்சில் பவுண்டரி அடித்து சதத்தை நிறைவு செய்தார். சதம் அடித்தவுடன் தனது ஹெல்மெட்டை கழற்றி, பேட்டை உயர்த்தி தனது மகிழ்ச்சியை மார்க்ரம் வெளிப்படுத்தினார். லார்ட்ஸ் மைதானத்தில் தென் ஆப்ரிக்க ரசிகர்கள் அதிகளவு இருந்ததால், மார்க்ரமின் சதத்தை கரகோஷத்துடன் கொண்டாடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
ஹேசல்வுட், ஸ்டார்க், கம்மின்ஸ் ஆகிய 3 வேகப்பந்தவீச்சாளர்களும் மார்க்ரத்தை வெளியேற்ற பல்வேறு உத்திகளைப் பயன்படுத்தி பந்துவீசியும் மார்க்ரம் அதை தவிடுபொடியாக்கி களத்தில் நங்கூரம் பாய்ச்சினார். மார்க்ரம் ஆஃப் சைடில் அருமையாக ஆடக்கூடியவர் என்பதால், ஆஃப் சைடில் விலக்கி வீசப்பட்ட பந்துகளை ரன்களாக மாற்ற அவர் தவறவில்லை, அவரின் சதத்தில் 65 ரன்கள் ஆஃப் சைடில் எடுக்கப்பட்டவை.
மார்க்ரம் கடைசியாக 16 இன்னிங்ஸ்களுக்கு முன் சதம் அடித்திருந்தார். அதாவது உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் சுற்று தொடங்கும்போது சதம் அடித்திருந்த மார்க்ரம் மீண்டும் முடியும்போது பைனலில் சதம் அடித்துள்ளார்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.யாருக்கு சாதகம்?
டெஸ்ட் சாம்பியன்ஷிப் வெற்றிக்கு தென் ஆப்ரிக்காவுக்கு இன்னும் 69 ரன்கள் மட்டுமே தேவைப்படுகின்றன. கைவசம் 8 விக்கெட்டுகள் இருக்கின்றன. இன்னும் 2 நாட்கள் மீதமிருப்பதால், ஆட்டம் தென் ஆப்ரிக்கா பக்கம் முடியவே அதிகமான வாய்ப்புகள் இருக்கின்றன.
ஆடுகளம் கடைசி இருநாட்கள் பேட்டர்களுக்கு ஒத்துழைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதால், இன்று முதல் செஷனிலேயே ஆட்டம் முடிந்தாலும் வியப்பில்லை.
தென் ஆப்ரிக்காவின் வரலாற்று சாதனை படைக்க எய்டன் மார்க்ரமின் அற்புதமான(102) சதம், கேப்டன் டெம்பா பவுவுமாவின்(65) பார்ட்னர்ஷிப் முக்கியக் காரணமாக இருக்கும். இருவரும் 38 ஓவர்கள் பேட்டிங் செய்து 143 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்து களத்தில் ஆடி வருகிறார்கள்.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, மார்க்ரம்”சோக்கர்ஸ்” ஆவார்களா தென் ஆப்ரிக்கா?
3வதுநாள் ஆட்டநேர முடிவு வரை ஆட்டம் தென் ஆப்ரிக்க பக்கம் முடியவே அதிகமான வாய்ப்பு இருப்பதாக கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதேசமயம், இதுபோன்ற இக்கட்டான கட்டங்களில் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு அபாரமாக இருக்கும் என்பது கடந்த கால வரலாறு. ஆதலால், கடைசி 2 நாட்களில் ஆஸ்திரேலிய வீரர்களின் பந்துவீச்சு ஆட்டத்தை மாற்றும் வகையில் அமைந்தாலும் வியப்பில்லை. குறிப்பாக ஸ்டார்க், ஹேசல்வுட், கம்மின்ஸ், நேதன் லேயான் ஆகியோரின் பந்துவீச்சு ஆட்டத்தை எந்த நேரத்திலும் திருப்பிவிடும்.
தென் ஆப்ரிக்க அணி கிரிக்கெட் வரலாற்றில் பல நேரங்களில் நெருக்கடியான, அழுத்தமான தருணங்களில் அதை சமாளிக்க முடியாமல் வெற்றியை கோட்டைவிட்ட “சோக்கர்ஸ்” என்று பெயரெடுத்துள்ளது. இதை சாதகமாக வைத்து ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் இன்று தங்கள் பந்துவீச்சில் விக்கெட்டுகளை வீழ்த்தி நெருக்கடியளித்தால், ஆட்டத்தின் முடிவு எப்படி வேண்டுமானாலும் மாறலாம். தென் ஆப்ரிக்காவின் வெற்றிக்கு தேவையான 69 ரன்களை சேர்க்கவிடாமல் ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் டிபெண்ட் செய்யவும் முயற்சிக்கலாம்.
தென் ஆப்ரிக்கா தரப்பில் ஸ்டெப்ஸ், பெடிங்ஹாம் ஆகிய இரு விக்கெட்டுகள் வீழ்ந்தாலே அடுத்துவரும் பேட்டர்கள் பெரிதாக பேட் செய்யக்கூடியவர்கள் இல்லை. ஆதலால், ஆஸ்திரேலிய பந்துவீச்சாளர்கள் என்ன உத்தியோடு களமிறங்கப் போகிறார்கள், தென் ஆப்ரிக்காவுக்கு எதிராக என்ன திட்டம் வைத்திருக்கிறார்கள் என்று இன்று தெரியும்.
இன்றைய 4வது நாள் ஆட்டத்தில் ஆஸ்திரேலியாவின் பந்துவீச்சு மாயஜாலம் வெல்லுமா, அல்லது தென்ஆப்ரிக்க பேட்டர்களின் தீர்க்கமான நம்பிக்கை வெல்லுமா என்பது தெரிந்துவிடும்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு