Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
‘தோல்வியே தெரியாத தலைவன்’ – தென் ஆப்ரிக்காவின் கனவை நனவாக்கிய கேப்டன் பவுமா யார்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெம்பா பவுமா3 மணி நேரங்களுக்கு முன்னர்
உலக டெஸ்ட் சாம்பியன் பட்டத்தை வெல்லும் கனவு தென் ஆப்ரிக்காவுக்கு இன்று (ஜூன் 14) நனவாகியுள்ளது.
தென் ஆப்ரிக்க அணி 1998 நாக்அவுட் சாம்பியன் பட்டத்தைத் தவிர வேறு எந்த ஐசிசி பட்டத்தையும் 27 ஆண்டுகளாக வென்றதில்லை என்ற பெரிய ஏக்கத்துடன் இருந்தது. இன்று அது முடிவுக்கு வந்துள்ளது. இதில் அந்த அணியின் கேப்டன் டெம்பா பவுமாவின் பங்களிப்பு மிக முக்கியமானது.
தென் ஆப்ரிக்க அணியில் கேப்டன்ஷிப் மாற்றப்படுவதற்கு முன்பாக கடந்த 2 ஆண்டுகளில் முதல் 5 டெஸ்ட் போட்டிகளில் ஒன்றை மட்டுமே அந்த அணி வென்றிருந்தது. ஆனால் டெம்பா பவுமா கேப்டனாக வந்தபின் கடைசியாக ஆடிய (உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டி தவிர்த்து) 8 டெஸ்ட் போட்டிகளில் 7 வெற்றிகளை தென் ஆப்ரிக்க அணி பெற்றுள்ளது, ஒரு ஆட்டம் டிராவில் முடிந்துள்ளது.
இதுவரை கேப்டன் பவுமா தலைமையில் தென் ஆப்ரிக்க அணி டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியதில்லை என்ற நம்பிக்கை தென்னாப்ரிக்க அணிக்கு உலக டெஸ்ட் சாம்பியன் இறுதிப்போட்டியில் கூடுதல் உற்சாகத்தை அளித்தது என்றே கூறலாம்.
யார் இந்த டெம்பா பவுமா?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, பவுமா தலைமையில், 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது.“இன்றிலிருந்து 15 வருடங்களில் எம்பெக்கியுடன் (அப்போதைய தென் ஆப்ரிக்க அதிபர்) நான் கை குலுக்குவேன். அவரும் வருங்கால தென் ஆப்ரிக்க அணியை கட்டமைப்பதற்கு எனக்கு வாழ்த்து தெரிவிப்பார்.”
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
இதை டெம்பா பவுமா ஆறாவது படிக்கும்பொழுது எழுதிய கட்டுரையில் குறிப்பிட்டிருந்தார்.
இன்னும் சில வருடங்களில் நீங்கள் என்ன சாதிக்க விரும்புகிறீர்கள் என்ற கேள்வி பள்ளிகளில் நடக்கும் கட்டுரைப் போட்டிகளிலும் வேலைக்கான நேர்காணல்களிலும் அடிக்கடி கேட்கப்படும் ஒன்று. ஆனால் சிலர் மட்டும்தான் இந்தக் கேள்விக்கு அவர்கள் சொல்லும் பதிலை நிஜத்தில் நிகழ்த்திக் காட்டுவார்கள். அந்த சிலரில் ஒருவர்தான் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணியின் கேப்டன் டெம்பா பவுமா.
டெம்பா பவுமா தென் ஆப்ரிக்க அணியின் முழுநேர கேப்டனாக இருக்கிறார். அவர் தலைமையில் 2023 உலகக்கோப்பையில் தென் ஆப்ரிக்க அணி சிறப்பாக செயல்பட்டு அரையிறுதி வரை முன்னேறியது.
பவுமா கேப்டன் ஆனதன் பின்னணி என்ன?
2016ம் ஆண்டு ஜனவரி மாதம் அவர் அடித்த சதத்தின் மூலம் டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் என்ற பெருமையை பெற்றார். அதன் பின்பு, ஏழு வருடங்கள் கழித்து, 2023 மார்ச் மாதம் தனது இரண்டாவது டெஸ்ட் சதத்தை பவுமா அடித்தார்.
பவுமா, தென் ஆப்ரிக்காவின் கேப்டன் ஆனதற்கு அவர் கருப்பினத்தவர் என்பதுதான் காரணமென தொடர்ந்து விமர்சிக்கப்பட்டது. ஆனால், இது குறித்து கருத்து கூறுவதற்கு முன்பு அவர் எந்த சூழலில் தென் ஆப்ரிக்காவின் கேப்டனாக நியமிக்கப்பட்டார் என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.
2000ம் ஆண்டு முதல் 2010 வரையிலான காலகட்டத்தில் கோல்பாக் ஒப்பந்தத்தினால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் பெரும் பாதிப்பை சந்தித்தது. ஐரோப்பிய ஒன்றியத்தோடு ஒப்பந்தத்தில் உள்ள நாட்டைச் சேர்ந்த கிரிக்கெட் வீரர்கள் எந்தவொரு ஐரோப்பிய ஒன்றிய உறுப்பு நாட்டிலும் சென்று அந்த நாட்டு வீரராகவே கிரிக்கெட் விளையாடலாம் என்பதுதான் கோல்பாக் ஒப்பந்தம். அதன்படி தென் ஆப்ரிக்காவைச் சேர்ந்த பல வீரர்கள் இங்கிலாந்து அணியில் சேருவதற்காகச் சென்றனர்.
இந்த சிக்கலில் இருந்து தென் ஆப்ரிக்க அணி மீள்வதற்குள் அடுத்த சர்ச்சையில் சிக்கியது.
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, டெஸ்ட் போட்டியில் தென் ஆப்ரிக்காவிற்காக சதமடித்த முதல் கருப்பினத்தவர் பவுமா தான்2021 டி20 உலகக்கோப்பையின் போது இனவாதத்திற்கு எதிரான ‘Black Lives Matter’ முன்னெடுப்பின் ஒரு பகுதியாக கிரிக்கெட் வீரர்கள் போட்டி தொடங்கும் முன் முட்டியிட்டு ஆதரவு தெரிவிப்பார்கள்.
ஆனால், தென் ஆப்ரிக்க கிரிக்கெட் சங்கம் இந்த செயலை அதன் அணி வீரர்களுக்கு கட்டாயமாக்கியது.
ஆனால், அப்போதைய தென் ஆப்ரிக்க அணியின் கேப்டன் டி காக் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கேப்டன் பதவியில் இருந்து விலகினார்.
அதனைத் தொடர்ந்து தான் பவுமா டி20 அணியின் கேப்டனாக்கப்பட்டார்.
இந்த சர்ச்சையை பவுமா மிகவும் நிதானத்தோடு அணுகினார். அவரது தலைமைப்பண்பு இந்த விஷயத்தில் சோதனை செய்யப்பட்டது. அந்த சோதனையில் பவுமா வெற்றி பெற்றார்.
பட மூலாதாரம், Getty Images
இந்தப் பிரச்னை தீர்த்துவைக்கப்பட்டு டி காக் மீண்டும் அணிக்குத் திரும்பினார். டி காக் அதன்பின்பு பவுமா குறித்து பாராட்டியே பேசினார்.
டி காக், “பவுமா ஒரு மிகச்சிறந்த கேப்டன். மற்றவர்கள் இதை புரிந்துகொள்ளாமல் இருக்கலாம்” எனத் தெரிவித்தார்.
அதன்பின்பு பவுமாவிற்கு ஒருநாள் மற்றும் டெஸ்ட் அணியின் கேப்டன் பதவியும் வழங்கப்பட்டது. அதிலிருந்து, பவுமா தென் ஆப்ரிக்கா அணியின் முழுநேர கேப்டனாக செயல்பட்டு அணியை ஒரு நிலைக்கு கொண்டுவந்திருக்கிறார். மேலும் அணியை பல சிக்கல்களில் இருந்தும் வெளியே கொண்டுவந்திருக்கிறார்.
விமர்சனங்கள், கேலிகளை எதிர்கொண்டவர்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, 2021ம் ஆண்டு நடந்த மேற்கிந்திய அணிக்கு எதிரான போட்டியில் முட்டியிட்டு நிறவெறிக்கு எதிர்ப்பு தெரிவித்த பவுமாமுன்னதாக உலகக் கோப்பையில் கெப்லர் வெசல்ஸ், ஹான்சி குரோனியே, ஷான் பொல்லாக், கிரேம் ஸ்மித், ஏபி டி வில்லியர்ஸ், ஃபாஃப் டு பிளெசிஸ் ஆகியோர் தென் ஆப்ரிக்காவை வழிநடத்தியுள்ளனர்.
இந்த வீரர்கள் அனைவருக்கும் வெற்றிகரமான வீரர்கள் என்ற பட்டம் வழங்கப்பட்டது. இவர்கள் தென் ஆப்ரிக்காவை வழிநடத்திய போதுதான் தென் ஆப்ரிக்காவிற்கு ‘சோக்கர்ஸ்’ என்ற பட்டமும் கிடைத்தது. 2019ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடைபெற்ற உலகக் கோப்பையில் தென் ஆப்ரிக்கா அணி அரையிறுதிக்கு கூட முன்னேறவில்லை.
அந்த உலகக்கோப்பைக்கு பிறகு தென் ஆப்ரிக்கா அணி பெரிய மாற்றங்களுக்கு உட்பட்டது.
கோல்பேக் ஒப்பந்தம் காரணமாக பல வீரர்கள் இங்கிலாந்து அணிக்கு விளையாடும் வாய்ப்பிற்காக காத்திருந்தனர். எனவே, புதிய ஒரு அணியை உருவாக்கும் சவால் தென் ஆப்ரிக்க கிரிக்கெட் வாரியம் மற்றும் அணியின் கேப்டன் ஆகியோர் முன்பு இருந்தது.
இப்போது சிறப்பாக செயல்படும் இந்த அணியை கட்டமைத்ததில் கேப்டனாக பவுமாவின் பங்களிப்பு அதிகம். புதிய தென் ஆப்ரிக்க அணியை உருவாக்கி, உலகப் பட்டத்திற்கான வலுவான போட்டியாளராக மாற்றியதில் பெரும் பங்கு வகித்துள்ளார் பவுமா.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்இதற்கு முன், பவுமா அவரது சராசரி பேட்டிங்கிற்காகவும் அணி தேர்வில் உள்ள ஒதுக்கீட்டு முறைக்காகவும் அவரது உயரம் போன்ற பல்வேறு காரணங்களுக்காகவும் அடிக்கடி ட்ரோல் செய்யப்பட்டார். 2023 உலகக்கோப்பையில், தென் ஆப்ரிக்க அணி அரையிறுதியில் ஆஸ்திரேலியாவிடம் தோற்று வெளியேறிய நிலையில் மீண்டும் அவர் விமர்சனத்திற்கு ஆளானார்.
ஆனால், இன்று பவுமா தலைமையிலான தென் ஆப்ரிக்கா அணி உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் வெற்றிபெற்று வரலாற்று சாதனையை நிகழ்த்தி, அந்த விமர்சனங்களைப் பொய்யாக்கியுள்ளது.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு