Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
ஹபறணை இலங்கையின் நாலாபக்கமுமான போக்குவரத்தின் மையமாக இருப்பது. மேற்படி சுற்று வட்டத்தின் மையத்தில் மேற்குப்புறம் பார்த்த வண்ணம் மகாசேனனின் சிலை நிறுவப்பட்டிருக்கிறது.
மேற்கு நோக்கி கொழும்பிற்கான பயணத்தின் தொடக்கத்தில், சந்தியிலிருந்து சொற்பதூரத்தில் தெருவின் இடதுபுறமாக சைவக் கோயிலொன்று நீண்ட காலமாக இருந்து வருவது.
1990களின் நடுப்பகுதியிலிருந்து கிழக்குப் பல்கலைக்கழக நுண்கலைத்துறையில் வேலை செய்யத் தொடங்கியதிலிருந்து கொழும்பு போய்வருவது வழமை.
பயங்கரமான சோதனைச் சாவடிகளைத் தாண்டி ஹபறணைச் சந்தியில் திரும்பிச் செல்லும் போது இச்சிறியதும் வித்தியாசமான அமைப்பும் கொண்டதுமான கோவிலிடம், அதிலிருக்கும் சில மனிதரைக் காணும்பொழுது மனதிலொரு ஆறுதல் மின்னி மறையும்.
இக்கோவிலின் முகப்பினில் சற்று அருகாக பெரிதும் கவனத்தைக் கோராதவொரு பேரூந்துத் தரிப்பிடமும் இருந்தது நினைவில் மெலிதாய் உண்டு.
2025இல் இப்பேரூந்துத் தரிப்பிடம் அதிநவீனமானதாக கோயில் முகப்பை மறைத்து பளிச்சிட்டுத் தோன்றுகிறது.
அதன் பின்னே கோவில் சிதையுண்டு பளிச்சிடும் பேரூந்து நிறுத்தத்தின் பின்னே மறைக்கப்பட்டு புதரும் மண்டிக் கிடக்கிறது. இக்கோயில் தனியாரான செட்டியார் ஒருவருக்குச் சொந்தமானது என அறியப்படுகிறது.
இக்கோயில் ஆன்மீக மையம் மட்டுமல்ல, இலங்கையின் பண்பாட்டு வரலாற்றிலும்; பொருளாதார வரலாற்றிலும் குறிப்பிடத்தக்க பங்குவகித்தவர்களும்; எண்ணிக்கையில் சிறுபான்மையினருமான செட்டிமார் சமூகப் பண்பாட்டு மரபுகளுக்குரியதும் ஆகும்.
பல்லின பன்மத பல்பண்பாடு கொண்ட இலங்கைத் தீவில் மேற்படி கோவிலைப் பேணுவது சமூகப் பண்பாட்டுப் பொறுப்புடமையாகும்.
அதன் உரித்தாளர் இல்லாது கவனிப்பாரற்ற சூழ்நிலை ஏற்படுமாயின் அதனைப் பொறுப்பெடுத்துப் பேணுவது அரசாங்கத்தின் கடமையும் பொறுப்பும் ஆகும்.
இதற்கெனவே அமைச்சுக்கள் அமைப்புக்கள் எனப் பல கட்டமைப்புக்கள் இயங்கிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில், இவற்றின் பொறுப்புகள் பற்றி கலந்துரையாட வேண்டி இருக்கிறது.
இவை எல்லாவற்றுக்கும் மேலாக இதுவொரு புத்த கோவிலாக இருந்தால் புதிதாக அமைக்கப்பட்ட பளிச்சிடும் பேரூந்து தரிப்பிடத்தின் பின்னே மறைக்கப்பட்டு புதர் மண்ட விடப்பட்டிருக்குமா?
பன்மைப் பண்பாடுகள் கொண்ட ஒரு தேசத்தின் போக்குவரத்து மையமாக அமையும் ஹபறணைச் சந்தியில் இருந்து வந்த கோயிலின் இருப்பை மீளவும் மலரச் செய்தல் எண்ணிக்கையில் சிறுபான்மையினரின் பண்பாட்டு மரபுரிமையை மதிப்பதுடன் இலங்கையின் உண்மையான சமூகப் பண்பாட்டு இருப்பையும் மரபுரிமைகளின் இருப்பையும் உறுதி செய்வதன், கொண்டாடுவதன் தாற்பரியமாக இருக்கும்.
அந்தச் சூழலில் வாழும் மனிதர்கள், வளரும் சிறுவர்கள், தினசரி கடந்து போய் வருவோர் மனதிலும் அறிவிலும் மேற்படி ஆலயத்தின் அழகிருப்பு இலங்கை நாட்டின் பன்மைப் பண்பாட்டின் அடையாளமாகவும் மரபுரிமையின் அம்சமாகவும் ஆன்மீகத் தளமாகவும் இருக்குமென்பது யதார்த்தம்.
பேராசிரியர் சி.ஜெயசங்கர்