Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
Physical Address
304 North Cardinal St.
Dorchester Center, MA 02124
மாரடைப்பு, பக்கவாத சிகிச்சையில் ‘கோல்டன் ஹவர்’ என்பது என்ன? உடனிருப்பவர் என்ன செய்ய வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சித்தரிப்புப் படம்எழுதியவர், மோகன்பதவி, பிபிசி தமிழ்ஒரு மணி நேரத்துக்கு முன்னர்
பிரபல தமிழ் திரைப்படி நடிகரான ராஜேஷ் சில தினங்களுக்கு முன்பு உடல்நலக் குறைவால் காலமானார். மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் முன்பே அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
ஊடகங்களிடம் பேசிய நடிகர் ராஜேஷின் சகோதரர் சத்யன் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல ஏற்பட்ட காலதாமதமே இறப்புக்குக் காரணம் எனத் தெரிவித்தார். மேலும் பேசிய அவர், “அதிகாலையே உடம்பு சரியில்லை என என்னையும் அவரது மகனையும் அவரின் அறைக்கு அழைத்தார். இரவு முழுவதும் தூக்கம் வரவில்லை, மூச்சுத் திணறல் இருந்தது எனக் கூறினார். நாடித் துடிப்பு மற்றும் ஆக்சிஜன் அளவை வீட்டிலேயே பரிசோதித்துப் பார்த்தார்.
நான் மருத்துவரை அழைத்து வரச் சென்றேன். ஆனால் பாதி வழியிலே உடல்நிலை சீராகிவிட்டது, வேண்டாம் என திரும்பி வந்துவிடச் சொன்னார். நான் வீட்டிற்கு வந்தபோது அவரின் நண்பரான சித்த மருத்துவர் ஒருவரிடம் நீண்ட நேரம் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேசிக் கொண்டே இரண்டு மணி நேரம் கால தாமதம் செய்துவிட்டார். அதன் பின்னர் மீண்டும் உடல்நிலை சரியில்லை எனக் கூறியதால் ஆம்புலன்ஸில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றோம். ஆனால் வழியிலே இறந்துவிட்டார். உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அவரை அழைத்துச் சென்றிருந்தால் காப்பாற்றி இருக்கலாம்” என்றார்.
இந்த நிகழ்வு மருத்துவ சிகிச்சையில் கோல்டன் ஹவரின் முக்கியத்துவம் பற்றிய விவாதங்களை எழுப்பியுள்ளது. இது போன்ற சூழ்நிலைகளில் உரிய நேரத்தில் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை வழங்கினால் உயிரைக் காப்பாற்றிவிடலாம் என மருத்துவர்கள் தொடர்ந்து தெரிவித்து வருகின்றனர்.
கோல்டன் ஹவர் என்றால் என்ன?
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சிகிச்சை வழங்குவதற்கான நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.ஒரு நோய் அல்லது மருத்துவம் தேவை என்கிற நிலை ஏற்படுகிற போது குறிப்பிட்ட நேரத்திற்குள் சிகிச்சை வழங்கிவிட்டால் பெரிய பாதிப்பு ஏற்படாமல் காப்பாற்றிவிட முடியும். சிகிச்சை வழங்குவதற்கான அந்த நேரம் தான் கோல்டன் ஹவர் என்று அழைக்கப்படுகின்றது.
Skip அதிகம் படிக்கப்பட்டது and continue reading
அதிகம் படிக்கப்பட்டது
End of அதிகம் படிக்கப்பட்டது
கோல்டன் ஹவர் என்பது ஒவ்வொரு நோய்க்கு ஏற்றவாறு மாறுபடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். கோல்டன் ஹவர் என்பது சாலை விபத்து தொடங்கி இதய நோய், பக்கவாதம் மற்றும் பிரசவம் வரை அனைத்துக்கும் பொருந்தும் என்கிறார் ஓய்வு பெற்ற பொது சுகாதாரத் துறை இயக்குநர் குழந்தைசாமி.
முதலுதவி வழங்குவதில் தொடங்கி முறையான சிகிச்சைக்கு பரிந்துரைப்பது வரை அனைத்துமே கோல்டன் ஹவர் என்று தெரிவித்தார் அவர்.
இதனை மேலும் விவரித்தவர், “கோல்டன் ஹவர் என்பது சுய விழிப்புணர்வில் இருந்தே தொடங்குகிறது. ஒருவர் தனக்கு உடல்நிலை மோசமடைகிறது என உணர்ந்தால் உடனடியாக மருத்துவ சிகிச்சை பெற வேண்டும். சுய பரிசோதனை அல்லது சிகிச்சை செய்வதை முழுவதும் தவிர்க்க வேண்டும்” என்றார் அவர்.
படக்குறிப்பு, பிபிசி தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்முதலுதவியின் முக்கியத்துவம்
பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, கோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளதுகோல்டன் ஹவர் என்பதில் முதலுதவி தான் முக்கியமான அம்சமாக உள்ளது என்கிறார் குழந்தைசாமி. “ஒருவருக்கு மாரடைப்பு வருகிறது என்று வைத்துக் கொண்டால் முதலாவதாக ஆம்புலன்ஸிற்கு தகவல் தெரிவிக்க வேண்டும். ஆம்புலன்ஸில் உள்ளவர்கள் தேவையான முதலுதவி சிகிச்சை அளிக்க வேண்டும். மருத்துவமனைக்கு முன்கூட்டியே தகவல் தெரிவித்து உடனடி சிகிச்சை அளிப்பதற்கான முன்னேற்பாடுகளைச் செய்ய வேண்டும். இவை அனைத்துமே கோல்டன் ஹவரில் தான் வருகின்றன.”
“இதனை மருத்துவத் துறையில் Right side error, Wrong side error என அழைப்பார்கள். ஒருவர் தான் நெஞ்சுவலி இருப்பதாக உணர்ந்து உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்து பார்க்கிறார். ஆனால் பரிசோதனை முடிவில் அவருக்கு எந்தத் தீவிரமான பாதிப்பும் இல்லை எனத் தெரியவந்தால் அது Right side error ஆகும். அவருக்கு பாதிப்பு ஏற்படவில்லை, ஆனால் அவர் முன்னெச்சரிக்கையாக செயல்பட்டுள்ளார். இதற்கு ஆகின்ற நேரம் மற்றும் செலவை விரயமாக கருதக்கூடாது.”
“அதே நேரம் ஒருவர் தனக்கு பெரிய பாதிப்பு இல்லை என எண்ணி சிகிச்சை எடுக்காமலோ அல்லது மருத்துவமனைக்குச் சொல்லாமலோ தவிர்த்து அதனால் ஏதாவது பாதிப்பு ஏற்பட்டால் அதனை Wrong side error என்பார்கள். முன்னெச்சரிக்கையாக செயல்பட்டிருந்தால் அசம்பாவிதத்தைத் தவிர்த்திருக்கலாம்” என்றார்.
உடன் இருப்பவர்களின் பங்கு என்ன?
உடல்நலக் குறைவு ஏற்படுகிறபோது பாதிக்கப்படுவரால் துரிதமாக முடிவெடுக்க முடியவில்லை என்றால் உடன் இருப்பவர்கள் விரைந்து செயல்படுவதும் கோல்டன் ஹவரில் தான் அடங்கும் என்றார் குழந்தைசாமி.
“உதாரணத்திற்கு ஒருவருக்கு நெஞ்சுவலி ஏற்படுகிறது என்றால் அவரை நடக்க வைக்கக்கூடாது. பரவலாக ஏற்படுகிற நோய் பாதிப்புகளின் போது என்ன செய்ய வேண்டும் என்கிற விழிப்புணர்வு தேவை. ஆம்புலன்ஸிற்கு அழைக்க வேண்டும். அது தாமதமாகிறது என்றால் உடனடியாக சொந்த வாகனத்தில் அழைத்துச் செல்ல முடியுமா என்பதைப் பார்க்க முடியும். எவ்வளவு விரைவாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல முடியுமோ செல்ல வேண்டும்” என்றார்.
பரவலாக மாரடைப்பு மற்றும் பக்கவாத பிரச்னைகள் ஏற்படுகிறபோது தான் கோல்டன் ஹவர் முக்கியமாகிறது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும்?
பட மூலாதாரம், Getty Images
பக்கவாதம் போன்ற நரம்பு சார்ந்த பாதிப்புகள் ஏற்படுகிற போது நான்கரை மணி நேரத்திற்குள் சிகிச்சை அளிக்க வேண்டும் என்கிறார் நரம்பியல் மருத்துவரான சதிஷ்குமார். “ஒவ்வொரு நிமிடமும் 1.9 மில்லியன் செல்கள் செயலிழக்கும். நான்கரை மணி நேரத்தில் சிகிச்சை அளிக்கவில்லை என்றால் பேச்சுத்திறன், சிந்திக்கும் திறன் பாதிப்படைந்துவிடும். இந்த நிலை தீவிரமடைந்தால் மூளை ரத்தக்கசிவு ஏற்படும் ஆபத்தும் உள்ளது. நான்கரை மணி நேரத்துக்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிட்டால் பாதிப்பு ஏற்படாமல் சரி செய்துவிட முடியும்.”
“அதற்கு முன் முழுமையாக சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகள் எங்கு இருக்கின்றன என்பதைத் தெரிந்து வைத்திருக்க வேண்டும். சில மருத்துவமனைகளில் அனைத்து வசதிகளும் இருக்காது. இதில் உடனடி மரணம் ஏற்படுவது அரிதென்றாலும் நாள்பட்ட பாதிப்புகள் உருவாகும். 30-40 வயது பிரிவில் உள்ளவர்களுக்கு இது அதிகம் ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உள்ளன. இதற்கான சுகாதாரப் பரிசோதனைகள் குறிப்பிட்ட கால இடைவெளியில் எடுத்துக் கொண்டு தொடக்க நிலையிலே கண்டறிந்தால் எளிதாக சரி செய்துவிட முடியும்” என்றார்.
மாரடைப்பு ஏற்பட்டால் என்ன செய்ய வேண்டும்?
மாரடைப்பு ஏற்படுகிறபோது ஒரு மணி நேரத்திற்குள் சிகிச்சை பெற வேண்டும் என்கிறார் இதயவியல் மருத்துவரான மதன் மோகன்.
மாரடைப்பு என்பது ரத்தக் குழாய் அடைப்பு ஏற்படுகிறபோது வருகிறது. இதனால் ரத்த ஓட்டம் தடைபடும். ரத்தம் செல்லாத சதைகளில் வலி உருவாகும். ரத்தத்தை உந்தி செலுத்தும் திறன் குறைந்து இதய தசைகள் இறந்துபோக ஆரம்பிக்கும். எனவே ரத்தக் குழாயில் ஏற்படும் அடைப்பை சரி செய்ய வேண்டும். இதற்குப் பல விதமான சிகிச்சை முறைகள் உள்ளன. மாரடைப்பு சிகிச்சைக்கான கோல்டன் ஹவர் என்பது அரை மணி நேரத்தில் இருந்து இரண்டு மணி நேரம் வரை அடங்கும்.
மாரடைப்பால் பாதிக்கப்பட்டவருக்கு ரத்தக் கட்டை முறிக்கிற மருந்து வழங்கப்பட வேண்டும். மிகவும் தீவிரமான நிலை என்றால் ஆஞ்சியோகிராம் வரை செல்லும். ஆனால் அதனை உடனடியாக செய்ய முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து அரசு மருத்துவமனைகளிலும் இதற்கான மருந்துகள் உள்ளன. ஒருவருக்கு மாரடைப்பு ஏற்படுகிறது என்றால் ஒரு மணி நேரத்திற்குள் மருத்துவமனைக்குச் சென்றுவிடுவது நல்லது” என்றார்.
– இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு